இலக்கியத்தில் சிறந்தது நாடகமே! (POST No. 2345)

kalidas-cinema-song-book

 

Compiled   by London swaminathan

Date: 20  November 2015

POST No. 2345
Time uploaded in London :– காலை 7-50
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(தமிழன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: யார் ஒரு கட்டுரையை எழுதினாரோ அவர் பெயரில்லாமல் அதை வெளியிடாதீர்கள். அதைவிடக் கொடுமை, அதை உங்கள் கட்டுரை போல வெளியிடாதீர்கள். இவ்வாறு செய்தால் தமிழ் செழிக்கும்; உங்கள் குலம் தழைக்கும்; சத்யமேவ ஜயதே! வாய்மையே வெல்லும்)

 

shakuntala-raja-ravi-varma

காவ்யேஷு நாடகம் ரம்யம்

தஸ்ய ரம்யா சகுந்தலா

தத்ராபி ச சதுர்தோங்க:

தத்ர ஸ்லோக சதுஷ்டயம்

 

பாட்டின் பொருள்:

“காவியங்களில் சிறந்தது (மனோ ரம்யமானது) நாடகம்; அந்த நாடகங்களில் சிறந்தது சாகுந்தலம்; சாகுந்தலம் நாடகத்தில் சிறந்த காட்சி நாலாவது காட்சியாகும். அந்தக் காட்சியிலும் சிறந்தது நான்கு ஸ்லோகங்கள்”.

 

உலகப் புகழ்பெற்ற காளிதாசன் ஒரு சொல் தச்சன்; ஒரு சொல் சிற்பி. ஒரு சொல் ஓவியன். ஆயிரம் உவமைகளுக்கும் மேலாக எழுதி உலகையே வியக்கவைத்த மாபெரும் கவிஞன். அவனுக்கு நிகராக இதுவரை யாரும் தோன்றவில்லை; இனிமேலும் தோன்றப் போவதுமில்லை.

 

காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் நாலாவது அங்கத்திலுள்ள 6, 18, 19, 22 எண்ணுள்ள ஸ்லோகங்களை ஏன் இப்படிப் புகழ்கின்றனர்? காளிதாசன் மிகப்பெரிய ‘ஸைகாலஜிஸ்ட்’ – அதாவது உளவியல் நிபுணன். சகுந்தலா என்னும் கானகப் பெண் (சகுந்தலா=பறவைப் பெண்) பறவைகளால் வளர்க்கப்பட்டவள். அவளுடைய வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி, இந்த நான்கு ஸ்லோகங்களில் மனித உள்ளத்தில் பீறிடும் உணர்ச்சிகளை வடித்துக் கொட்டுகிறார்.

 

ஒரு மணமான பெண் பிறந்தகத்தை விட்டு, மாப்பிள்ளையின் புக்ககத்துக்குப் போகும்போது தாயார் கண்ணீர் வடிக்கிறாள். இவ்வளவு நாள் ‘கிளி போல’ வளர்த்த பெண்ண இன்று ஒரு புதிய ஆண்மகனிடம் ஒப்படைக்கிறேனே, அவன் இவளை அன்பாகப் பாதுகாப்பானா? என்று அஞ்சுகிறாள்.

 

கண்வ மகரிஷியும் இப்படிக் கண்ணீர் விடுகிறார், சகுந்தலை என்னும் அப்பாவிப் பெண்ணுக்காக. அப்பொழுது அவர் கூறுகிறார். ‘’முற்றும் துறந்த முனிவனான எனக்கே இப்படி உணர்ச்சி கொந்தளிக்கிறதே; உண்மையில் பெற்றெடுத்த தாயும் தந்தையும் புதுமணப் பெண்ணை அனுப்பும்போது எப்படி பரிதவிப்பார்கள்’’ என்று கண்வ மகரிஷி புலம்புகிறார். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் எழுதிய காவியம்; சொல்லோவியம்.

 

பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மாகவி – நாடகாசிரியன்– இதைப் பார்த்து காட்டில் வாழும் மிராண்டா என்னும் அப்பாவிப் பெண்ணை ‘’புயற்காற்று’’ என்னும் நாடகத்தில் (டெம்பெஸ்ட்) இதே போல படைத்திருக்கிறான்.

சாகுந்தலத்தில் கீழ்கண்ட சொற்களில் துவங்கும் அந்த 4 ஸ்லோகங்களை, நாடகத்தில், கதையுடன் சேர்த்துப் படிக்கையில் இன்னும் ரசிக்கலாம். இனி சுருக்கமாகப் பொருள் காண்போம்.

 

kali stamps 1

1).யாஸ்யத்ய…………………….

2).பாதும் ந ப்ரதமம்……………………..

3).அஸ்மான் சாது……………………………

4).சுஸ்ரூஷஸ்வ………………………….

முதல் ஸ்லோகத்தின் பொருள்:

கண்வர் பேசுகிறார்:

இன்று சகுந்தலை புறப்படுகிறாள்; இதை நினைக்கும்போதே என் நெஞ்சம் கலங்குகிறது. கண்ணீர்த் துளிகள் பெருகி, என் தொண்டையை அடைக்கிறது. கவலையால் என் புலன்கள் மரத்துப் போய்விட்டன. முனிவனான எனக்கே அன்பினால் இப்படி உணர்ச்சிப் பெருக்கெடுக்குமானால், குடும்பத்திலுள்ள தந்தைமார்களுக்கு , மகள் வீட்டை விட்டு வெளியேறும்போது எவ்வளவு துயரம் இருக்கும்?

 

2-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

மரம், செடி, கொடிகளைப் பார்த்து கண்வர் புலம்பல்:

‘’உங்களுக்குத் தண்ணீர் விடாமல், அவள் தண்ணீர்கூட குடிக்கமாட்டாளே! அவளுக்கு அணிகலன்களை அணிவது விருப்பமென்றாலும் ஒரு இலையைக்கூட பறிக்கமாட்டாளே! செடிகள் பூக்கும் காலம் வந்தவுடன் , முதல் மலர் மலர்ந்த நாளன்று அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள். அப்பேற்பட்ட சகுந்தலை, இன்று தனது கணவனுடன் சேர்ந்து வாழ, அரண்மனைக்குப் போகிறாள்! நீங்கள் எல்லோரும் அதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.’’

 

செடிகொடிகளைப் பார்த்து அனுமதி கோருவதும், அவைகளை சகுந்தலை தம் குழந்தை போல போற்றி வளர்த்த்தும் பாரதீய சிந்தனையின் உச்சகட்டமாகும். பிற்காலத்தில் பாரதியார் “காக்கை, குருவி எங்கள் ஜாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – என்று பாடியதை, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காளிதாசன் பாடிவிட்டான்.

 kali stamp 2

3-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

சார்ங்ரவா! நீ அரசனிடம் சகுந்தலையை ஒப்படைக்கும் போது நான் கூறுவதாக இதைச் சொல்லு:

“தவ சிரேஷ்டர்களாகிய எங்களை மனதில் வைத்துக்கொள்; உன்னுடைய உயர்குடிப் பிறப்பையும் நினைவிற்கொள்: யாரும் சொல்லாமலேயே அவளே உன் மீது காதல்கொண்டு அன்பைக் காட்டியதையும் மறவாதே. மற்ற மனைவியரிடத்தில் நீ காட்டும் அதே அன்பை இவளிடமும் காட்டு. அவளுக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறக்கட்டும். பெண்ணின் வீட்டார் இதற்கு மேல் கேட்பது கூடாது.’’

 

4-ஆவது ஸ்லோகத்தின் பொருள்:

‘’பெண்ணே! கணவர் வீட்டில் மூத்தோர் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேள்; மற்ற மனைவியரை உன்னுடைய நெருங்கிய நண்பர்களாக நடத்து. உனது கணவன் உன்னிடம் இசகு பிசகாக நடந்தாலும் அவனுக்கு கீழ்படியாமல் இருந்துவிடாதே. வேலைக்காரர்களிடம் அன்பாக நடந்துகொள்; தலைக் கனத்துடன் தவறு செய்துவிடாதே. நீ நான் சொன்னபடி செய்தாயானால், இளம் வயது மனைவியரும், பெரும் கௌரவத்தைப் பெறுவார்கள்.கெட்ட மனைவியர்தான் குடும்பத்தில் பாய்ந்த விஷத்துக்குச் சமம்.”

 

காளிதாசன் 2000 ஆண்டுக்கு மு கூறிய கருத்துகள் இன்றும் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!

 

காளிதாசனைப் படியாதோர் படியாதவர்களே!

–சுபம்–