2 யானை மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி: ஸ்ரீ முத்தையா பாகவதர்! (Post No.4352)

Written by S.NAGARAJAN

 

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 5-19 am

 

 

Post No. 4352

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இசை இன்பம்

இரண்டு யானைகளின் மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி செய்த ஸ்ரீ முத்தையா பாகவதர்!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள். அவருக்கு எனது நன்றி. அவரது தந்தையார் திரு ராமசுப்ரமணியன் அவர்களின் பாட்டியும் (அப்பாவின் அம்மா), முத்தையா பாகவதரின் தாயாரும் ஸ்ரீ எஸ். ஜி. கிட்டப்பாவின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள். ஆகவே திரு ராமசுப்பிரமணியனின் சித்தப்பா தான் ஸ்ரீ முத்தையா பாகவதர்.

 

 

Picture of Sri Ramasubramaniam

21-10-2017 அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் அவர் தனது பழைய நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 97. தெளிவாக நுணுக்கமான விவரங்களை அவர் இடம், தேதி, பெயருடன் தெரிவித்தது ஒரு அபூர்வமான விஷயம். திரு சேஷாத்திரிநாதன் மிகவும் பத்திரமாக வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்ததோடு அவற்றை உடனடியாக போட்டோ எடுக்க விழைந்தேன். அந்த போட்டோக்களை திரு கார்த்திக் (சேஷாத்திரிநாதனின் புதல்வர்) நேர்த்தியாக எடுத்துத் தந்தார். அவருக்கும் நமது நன்றி.

 

 

2

 

ஸ்ரீ முத்தையா பாகவதர் (பிறப்பு : 15-11-1877 மறைவு : 30-6-1945)

20 ராகங்களை உருவாக்கியவர்.

 

1930ஆம் ஆண்டிலேயே மியூசிக் அகாடமியால் சங்கீத கலாவிதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். ஹரிகதா நிகழ்த்துவதில் வல்லவர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் ஹரிகதை செய்வதைக் கேட்பதற்காக மக்கள் திரள் திரளாகக் கூடுவது வழக்கம். பல வெளிநாடுகளுக்கும் அவர் கப்பலில் செல்வது வழக்கம். சிலோன், பினாங்கு, ரங்கூன் உள்ளிட்ட பல இடங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

 

 

3

மைசூர் மஹாராஜா ஒரு நாள் ஒரு நாதஸ்வர வித்வான் மைசூரில் முத்தையா பாகவதர் இயற்றிய வள்ளி நாயகனே என்ற பாடலை வாசிக்கக் கேட்டார். அப்போது அந்த நாதஸ்வர வித்வான் பாகவதரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் மன்னரிடம் கூற உடனே பாகவதருக்கு மைசூர் வருமாறு மன்னர் அழைப்பு விடுத்தார் மைசூருக்குச் சென்ற பாகவதர் மன்னரின் அன்புக்குப் பாத்திரராய் விளங்கினார்.

அங்கேயே வசித்து வந்தார் அவர். அவர் மறைந்ததும் மைசூரில் தான்.

 

 

அவருக்கு உரிய மரியாதை தருவதற்காக உப்பரிகையில் வீற்று கதை கேட்கும் மன்னர் தனக்குச் சமமான உயரத்தில் அவர் ஆசனம் இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான பெரிய இரு யானைகளை நிறுத்தி அவற்றிற்கு இடையே மேடையை அமைத்து அதில் முத்தையா பாகவதர் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்த அளவுக்கு அவர் மைசூர் ராஜாவின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

 

 

அவரது நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்ட மஹாராஜா அவருக்கு யானைக்குட்டி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைத் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்ற முத்தையா பாகவதரால் அது அடிக்கும் ‘லூட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

கூடக் கூட்டிச் செல்லும் போது தெரு வீதிகளில் அது ஓடுமாம். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தக் ‘கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்வராம்.

 

வீட்டிலோ தம்புரா உட்பட்ட அனைத்துமே யானையால் உடைபட்டது.

 

பொறுக்க முடியாத முத்தையா பாகவதர் மன்னரிடம் சென்று அந்த அன்புப் பரிசு அன்புத் தொல்லையாக இருப்பதைத் தெரிவித்து யானைக் குட்டியைத் திருப்பிக் கொடுத்தாராம்.

மைசூர் மன்னர் சாமுண்டீஸ்வரி கோவிலில் அவரே பூஜை செய்வது வழக்கம். சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பல கீர்த்தனைகளை முத்தையா பாகவதர் இயற்றியுள்ளார். மன்னர் பூஜை செய்யும் போது முத்தையா பாகவதர் அந்தப் பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களையும் பாடுவது வழக்கம்.

 

திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வழக்கமாக வரும்.

முத்தையா பாகவதர் சங்கீத உலகிற்கும் ஹரிகதா ப்ரவசன கலைக்கும் ஆற்றிய தொண்டு போற்றுதற்குரியது. அவரைப் பற்றிய பல நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

 

 

4

முத்தையா பாகவதர் மதுரையில் ஒரு சங்கீத பாடசாலையை ஆரம்பித்தார். மதுரை மணி ஐயர் உள்ளிட்ட பிற்கால பிரபலங்கள் பலரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்களே.மதுரை பள்ளிக்கு சங்கர சேர்வை என்பவர் முதல்வராக இருந்தார். அவரது தம்பி முருக பூபதி பிரபலமான மிருதங்க வித்வான். அந்தப் பள்ளியில் தான் திரு டி.என்.சேஷகோபாலன் பயின்றார்.

முத்தையா பாகவதரின் தம்பி ஹரிஹர பாகவதர் அவருடைய ஹரிகதா காலக்ஷேபத்திற்குப் பின்பாட்டுப் பாடுவார். அவர் இறந்தவுடன் அவரது குமாரர் வைத்தியலிங்கம் (மூக்காண்டி என்பது அவரின் செல்லப் பெயர்) அவர்களை முத்தையா பாகவதர் தத்து எடுத்து வளர்த்தார். பாகவதர் இறந்தவுடன் அவரது அந்திமக் கிரியைகளை இவரே செய்தார். சித்தூர் இசைக் கல்லூரியை வைத்தியலிங்கம் நிர்வகித்து வந்தார்.

 

(எனது சம்பந்த்தியின் தந்தையார்) திரு ராமசுப்பிரமணியனின் தமக்கையாரின் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தி டோலக் வாத்தியத்தை வாசிப்பதில் பெரும் நிபுணர். டோலக் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாய் மாமன் முத்தையா பாகவதர்.

 

அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நிகழ்ச்சிகளுக்கு காசி ஐயர் ஹார்மோனியம் வாசிப்பார். டோலக்கை திரு கிருஷ்ணமூர்த்தி வாசிப்பார். அவரது இசை நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து நோட்டீஸ்களும் கூட போட்டோ எடுக்கப்பட்டது. (இணைப்பு காண்க)

 

 

 

5

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெரிய அளவில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.

 

விசேஷ துண்டு பிரசுரங்கள் கச்சேரிகளுக்கென வெளியிடப்பட்டன.(இணைப்பில் காண்க)

சங்கீதமும் ஹரிகதை உபந்யாசமும் தேசபக்தி எழுச்சிக்கும் விடுதலைக்கும் எப்படி வித்திட்டன என்பதை தனியே ஆராய வேண்டும். அவ்வளவு விஷயங்கள் அதில் உள்ளன.

 

 

ஹரிகதா சக்கரவர்த்தி ஸ்ரீ முத்தையா பாகவதர் பற்றிய விஷயங்களை அறிந்த  மகிழ்ச்சியுடன் பெரியவர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

***