அகநானூறு கூறும் பார்ப்பானின் கதை ! (Post No.3395)

Written by S Nagarajan

 

Date: 28 November 2016

 

Time uploaded in London: -5-25 AM

 

Post No.3395

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 13

இந்தக் கட்டூரையில் அகநானூற்றில் வரும் 337 ஆம் பாடலில் ஒரு அந்தணன் பற்றி வரும் செய்தி இடம் பெற்றுள்ளது.

 

அகநானூறு கூறும் பரிதாபத்திற்குரிய பார்ப்பானின் கதை !

 

                        ச.நாகராஜன்

 

அகநானூறு

 

எட்டுத்தொகை நூல்களில் உள்ள அகநானூறில் வரும் 181ஆம் பாடலில் சிவனையும் நான்மறையையும்  பற்றிய குறிப்பைப் பற்றி சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 3இல் கண்டோம்.

அதே அகநானூறு நல்ல காரியம் செய்ய விழைந்த ஒரு பார்ப்பானின் பரிதாபத்திற்குரிய கதையை பாடல் எண் 337இல் விவரிக்கிறது.

 

பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் பாலை பற்றிப் பாடுதலில் சிறந்த கவிஞர்.

அந்தக் காலத்தில் அந்தணர்கள் வேதம் ஓதுவது, யாகம் முதலியன இயற்றுவது தவிர போரை நிறுத்துவது, நல்ல காரியம் நடப்பதற்காக தூது செல்வது போன்ற நற்பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்படி தூது செல்லும் நற்பணியில் ஈடுபட்ட பரிதாப்பத்திற்குரிய ஒரு பார்ப்பான் மிகுந்த ஏழை. அவன் வற்றிய உடலைப் பார்த்தாலே அது தெரியும். அவன் கையிலே வெள்ளோலை என்பப்படும் தூதுச் செய்தி அடங்கிய ஓலையைக் கொண்டு செல்கின்றான்.

 

 

அதைப் பார்த்த  மழவர்கள் அவன் ஏதோ ப்ரிசுப் பண்ம் தான் கொண்டு வருகிறான் என்று அவனை இடைமறித்துக் கொல்கின்றனர். ஒரே குத்து. குடல் வெளியே வருகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி அவனிடம் பணம் இல்லை. ஓலை தான் இருக்கிறது. கையைச் சொடுக்கி தம்மை நொந்து கொண்டு  மழவர் செல்ல, உருவிக்  குடல் சரியச் செத்துக் கிடக்கும் பார்ப்பனனை ஆண் நரி ஒன்று அணுகுகிறது. அது அந்தக் குடலைத் தின்ற படியே க்ள்ளி மரத்தின் நிழலில் ஓலமிட்டுக் கூக்குரலிடுகிறது.

 

இந்த கடுமையான் காட்டு வழி நிகழ்வின் வர்ணனையை பாலை பாடிய பெருங்கடுங்கோ அழகுற மொழிகிறார்.

இந்தச் சம்பவம் பாடலில் ஏன் வருகிறது?

 

தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து  முன்னொரு  காலத்தில் ஊரை விட்டுச் சென்று பொருள் ச்மபாதித்து வருகிறான். இப்போதும் அது போலச் செல்ல எண்ணும் போது தன் நெஞ்சைப் பார்த்துச் சொல்லும் பாடலாக இது அமைகிறது.

வெம்மை மிகுந்த காட்டு வழியில் பார்ப்பானுக்கு நேர்ந்த கதியை அவன் நினைவில் கொண்டு வருகிறான். காதலி படவிருக்கும் துயரை எண்ணுகிறான். தான் செல்லும் எண்ணத்தை கை விடுகிறான்.

 

பாடலை முழுதுமாகப் படித்து கருத்தை அறிந்து இன்புறலாம்.

பார்ப்பனர்கள் வெள்ளோலை ஏந்தி அஞ்சாது காட்டு வழியே தூது செல்வதையும் இடை வ்ழியில் ஏற்படும் ஆபத்தில் தன் இன்னுயிரை விடுவதையும் படிக்கும் போது நெஞ்சம் உருகுகிறது.

 

பாடல் இதோ:

 

சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

மாரி ஈர்ந் தளிர் அன்ன  மேனிப்

பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய               

ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

அவணதாகப் பொருள் என்று உமணர்

கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்                       

தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்                            

படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது                         

பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே                       

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்                          

திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்                       

செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்                          

கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ                         

வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை                                

வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்                                

கள்ளி நீழற் கதறுபு வதிய                                     

மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை                         

எமியம் கழி தந்தோயே – பனி இருள்                 

பெருங்கலி வானம் தலை இய                                  

இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே

 

 

பொருள்

மலைச்சாரலிடத்தே ஆச்சா மரத்தின் உச்சிக் கிளைகளில் மழை காலத்தில் துளிர்த்த தண்மையான தளிரை ஒத்த மேனி உடையவள் தலைவி. அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் வருந்தி தன் அழகு கெடுமாறு இந்த இடத்திலேயே நம்மைப் பிரிந்து அவள் தனித்து இருக்கும்படி நாம் செல்லுதல் இனிதல்ல. ஆதலால் நெஞ்சே! நீ க்ருதும் பொருளான அதனை அடைதலை நாம் விரும்போம்.(சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

மாரி ஈர்ந் தளிர் அன்ன  மேனிப்

பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய               

ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

அவணதாகப் பொருள் என்று)

 

 

   உப்பு வாணிகரின் பொதிகளைச் சுமந்து செல்லும் கழுதைகளைப் போல குறும்பாறைகள் வரிசையாக அமைந்திருக்கும் இடத்தினூடே , வழக்கமாகத் தூது செல்லும் பார்ப்பான் தன் மடியிலே வெள்ளிய ஓலைச் சுருளுடன் வருகிறான். அவன் வருவதை மழவர்கள் நோக்குவர். ‘உண்ணாமல் இருப்பதினால் வாடிய விலா எலும்பு தெரிய இருக்கின்ற இவன் கையில் இருப்பது பொன்னாக இருக்கும் போலும்’ என்று அவர்கள் கருதுவர். உடனே அவனை வீணாகக் கொன்று வீழ்த்துவர்.கையில் சிவப்புத் தடிகளையும் அம்புகளையும்  உடைய அவர்கள் அந்தப் பார்ப்பானுடைய வறுமையை நோக்கித் தன் கைகளை நொடித்துக் கொண்டு அங்கிருந்து செல்வர்.

 

 

(உமணர்

கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்                      

தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்                           

படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது                         

பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே                       

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்                         

 திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்                       

செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்)

 

 

நீள  ஒழுகுகின்ற இரத்தத்துடன் சரிந்து கிடக்கும் அப்பார்ப்பானின் குடலை வரிகளை கொண்ட் வெண்மையான கண்ணைப் பறிக்கும் கூழாங்கற்கள் மின்னும் வழியினூடே ஆண் நரி ஒன்றுக் கடித்துத் தின்றபடியே கள்ளி மரத்தின் நிழலின் கீழ் கூக்குரலிட்டுத் தங்கி இருக்கும்

 

மழையே இல்லாமல் வெம்மை மிகுந்திருக்கும் அந்தக் காட்டு வழியில் முன்பொரு காலத்தில் நடுங்க வைக்கும் இராப் பொழுதில் ஆரவர்ரம் கொண்ட மேகத் திரள் திரண்டு மழை பொழிய, குளிரோடு கூடிய வாடையும் வீச அப்போது நம் தலைவி நம்மை நினைத்து வருந்துவாளே! ஆகவே நீ செல்ல வேண்டாம்!

 

 

(கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ                         

வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை                               

வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்                                

கள்ளி நீழற் கதறுபு வதிய                                     

மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை                         

எமியம் கழி தந்தோயே – பனி இருள்                 

பெருங்கலி வானம் தலை இய                                  

இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே)

 

பொருள் ஈட்ட விழையும் ஒரு தலைவனை காட்டு வழியும் அங்கு அந்தணன் ஒருவனுக்கு நேர்ந்த கதியும் கலங்க வைக்கிறது. அவன் அந்த வழியே முன்பொரு முறை சென்றவன் தான். என்றாலும் கடும் வழியை எண்ணியும் பிரிவை எண்ணியும் அவன் தான் செல்லுகின்ற எண்ணத்தை விடுகிறான்.

நமக்குக் கிடைப்பது, அஞ்சாது காட்டு வழியே சென்று தூதுப்பணி ஆற்ற விழைந்த அந்தணனின் சோகமான முடிவும் தலைவன் தலைவி காதலும் தான்!

 

இன்னும் ஒரு அகநானூறு பாடல் தரும் செய்தியை அடுத்துப் பார்ப்போம்!

********