காதல் முக்கோணத்தில் சிக்கிய புலவன்/அரசன்! (Post No.5214)

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

Written by London swaminathan

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London – 7-42 am  (British Summer Time)

 

Post No. 5214

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?”– —பத்ரகிரியார் புலம்பல்

 

பர்த்ருஹரி என்ற பெயரில் புலவர்களும் அரசர்களும் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தனர். பத்ரகிரியார் என்ற தமிழ் சித்தரும் பர்த்ருஹரியும் ஒரே கதை உடையவர்கள் அவருடன் பட்டினத்தாரும் சம்பந்தப்படுத்தப் படுகிறார்; ஒரே குழப்பம்!!! ஆனால் இதற்குள் ஒரு சுவையான கதை இருக்கிறது!

 

முதலில் கதையைப் படித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

 

உஜ்ஜைனி நகரத்தில் பர்த்ருஹரி என்று ஒரு அரசர் இருந்தார். அவரை ஒரு பிராஹ்மணன் சந்தித்து ஒரு அற்புத பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுவோர் நீண்ட காலம் வாழ்வர் என்றார்.

 

பர்துருஹரியின் பல மனைவியரில் இளையவர்தான் அவரது மனதைக் கவர்ந்த பேரழகி; அவள் பெயர் பிங்களா. ஆகையால் அன்புக் காதலி பிங்களாவுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்து “அன்பே! ஆருயிரே! தேனே! கற்கண்டே! இதை சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று ஒரு பெரியவர் சொன்னார். என் இதய ராணியான உனக்காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பகர்ந்தார்.

அவர் நாதா! உங்கள் அன்பே உலகில் பெரியது என்று சொல்லி, அதை ஒளித்து வைத்து, அவளது கள்ளலக் காதலன் போலீஸ் அதிகாரி மஹிபாலனுக்கு அளித்தாள். அவனுக்கோ பிங்களாவை விட ஒரு பேரழகி காதலி இருந்தாள் அவள் பெயர் லாகா.

 

“உலகிலேயே நீதான் அழகி” என்று சொல்லி அவளை ஏமாற்றிவிட்டு, அதை லாகாவிடம் கொடுத்தான். அவளுக்கோ மன்னர் மீதூ தீராக் காதல்! ஆறாக் காதல்! ஆகையால் அந்தப் பழத்தைக் கொண்டு வந்து

பர்த்ருகிரியாரே நீர்தான் என் இதய ராஜா; இது ஒரு அற்புத பழம். இதை ஒரு பெரியவர் எனக்குக் கொடுத்தார். இதைச் சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று சொல்லி பர்த்ருஹரியிடம் கொடுத்தாள்.

 

அவர் நொந்து போனார்; வெந்து போனார்; உளவாளிகள் மூலம் முக்கோணக் காதலை அறிந்தார். இந்த உலகில் நிலைத்தது காமமும் அல்ல; நமது உயிரும் அல்ல என்ற ஞானோதயம் பிறந்தது; தனது

சஹோதரனான விக்ரமாதித்யனிடம்  ஆட்சியை ஒப்படைத்து துறவியானார்.

 

இவர்தான் புகழ் பெற்ற 300 ஸம்ஸ்க்ருதப் பாடல் இயற்றிய பர்த்ருஹரியா என்பது அறிஞர்கள் விவாதிக்கும் விஷயம் ஆகும். அந்த பர்த்ருஹரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் நீதி சதகம் 100, ச்ருங்கார சதகம் 100, வைராக்ய சதகம் 100 என்று 300 பாடல்களை ஸம்ஸ்க்ருதத்தில் மழைபோலப் பொழிந்து உலகப் புகழ் பெற்றவர்.

 

இது தவிர வாக்படீயம் முதலிய இலக்கண நூல்களை இயற்றிவர் ஒருவரும் உளர். ஆக  காலத்தால் வேறுபட்ட பர்த்ருஹரிக்கள் யார் யார், அவர்தான் பத்ர்கிரியார் எனப்படும் தமிழ் சித்தரா என்று காலாகாலமாக அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர்.பல விக்ரமாதித்யன்கள்; பல பர்த்ருஹரிக்கள்; கொஞ்சம் குழப்பம்தான்.

 

எது எப்படியாகிலும் சுவையான கதையுடன் ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிய செய்தியும் கிடைக்கிறது. ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரோ ஸம்ஸ்க்ருதப் புலவரோ இல்லை.

xxx

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

 

நாட்டுப் புற பாடல்களில் பர்த்ருஹரி

வட இந்தியா முழுதும், குறிப்பாக ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதலிய மாநிலங்களில் பிச்சை எடுக்கும் ஆண்டிப் பண்டாரங்கள் இந்த பர்த்ருஹரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவர். அவரது பெயர் துறவியானவுடன் கோபிசந்த் ஆனது. அவர் கோரக்நாதர் என்பவரின் சீடர் என்றும் செப்புவர்

 

தமிழ் பத்ர கிரியாருக்கு பட்டினத்தார் குரு; வட இந்திய பர்த்ருஹரிக்கு குரு– கோரக் நாத். 500 ஆண்டுக் கால இடைவெளியில் பல பர்த்ருஹரிக்கள் இருந்தாலும் சுவை குறையாமல் பாடிச் சென்றுவிட்டனர்.

 

XXXX

தமிழ் சித்தர் பத்ரகிரியார்

பத்ரகிரியார் ஒரு புகழ் பெற்ற சித்தர். அவர் ஒரு அரசனாக இருந்ததாகவும் பட்டினத்தார் அவரை துறவியாக மாற்றியதாகவும்

ஒரு வரலாறு உண்டு. அவர் எழுதியது பத்ரகிரியார் புலம்பல் எனப்படும்.  சில இடங்களில் திருமூலரின் தாக்கம் தெரியும். இது ஒரு தத்துவப் பாடல் ஆகும்.  இவரது பார்வை ஏனைய சித்தர்களைப் போலத்தான். இவர் சிவ வாக்கியர் போல ஜாதிகளில் நம்பிக்கை அற்றவர்.  சம்த்துவத்தைப் போற்றும், ஜாதிகளை  எதிர்க்கும் கபிலர் அகவலை பத்ரகிரியாரும் குறிப்பிடுவார். அதே போல பத்திரகிரியாரை பிற்காலத்தில், ராமலிங்க சுவாமிகள் முதலானோர் பாடல்களில் போற்றுவர்.

 

இவரது காலம் பட்டினத்தார் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

 

பத்ரகிரியார் பாடலில் சில சுவையான பகுதிகள்

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?

 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொல்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

 

ஆசாரம் நேயம் அநுஷ்டானமும் மறந்து

பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்?

 

மனத்தை வில்லாக்கி வான் பொறியை நாணாக்கி

எனது அறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

 

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?

 

–பத்ரகிரியார் புலம்பல்

ஓவியங்கள்

நாடுப்புறப் பாடல்களில் மட்டுமின்றி ஓவியங்களிலும் பர்த்ருஹரியின் தாக்கத்தைக் காணலாம்.

 

மொகலாயர் கால ஓவியங்களில் பர்த்ருஹரி பிச்சை எடுக்கும் காலத்தில் தனது பழைய மனைவியைச் சந்தித்த ஓவியமும் உளது.

 

-subham–