அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்! (Post No.3483)

Written by S NAGARAJAN

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:- 5-42 am

 

Post No.3483

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்!

 

ச.நாகராஜன்

 

சில வருடங்களுக்கு முன் தன்னைப் பேரழகி என்று அழைத்துக் கொண்ட ஒரு இளம் பெண் தான் உலகின் மிகச் சிறந்த அழகி என்பதால் உலகின் மிகப் பெரிய பணக்காரனை மணந்து கொள்ள விருப்பப்படுவதாகவும் அது நியாயமான ஆசை தான் என்றும் கூறினாள். அதற்கு ஒரு கோடீஸ்வரர் அருமையாக பதில் அளித்தார்.

 

 

பல ஆண்டுகளாக இந்தக் கடிதம் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது.

 

இப்போது இண்டர்நெட் யுகம் என்பதால் இந்தச் சம்பவம் ஆண்டுகொரு முறை புதிய ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் எத்தனை முறை படித்தாலும் அழகிகளும் சரி, ஏனையோரும் சரி இதை விரும்பத்தான் செய்கின்றனர்.

அழகி பகிரங்கமாகத் தன் கருத்துக்க்ளைத் தெரிவித்து எழுதிய கடிதம் இது:

 

 

“நான் மிகவும் நியாயமாகச் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். எனக்கு 25 வயது பிறந்து விட்டது. நான் ஒரு பேரழகி. மயக்கும் ஸ்டைலைக் கொண்டவள். விதவிதமான டேஸ்டும் உண்டு. என் அங்க லாவண்யங்களில் மயங்காதோர் நிச்சயம் இருக்க முடியாது.

 

 

ஐம்பது லட்சம் டாலரோ அல்லது அதற்கு மேலுமோ வருடாந்திர சம்பளத்தைப் பெறும் ஒருவரை மணக்க ஆசைப்படுகிறேன். வெறும் பத்து லட்சம் டாலர் சம்பளத்தைப் பெறுபவர் நியூயார்க்கைப் பொறுத்த மட்டில் மத்திய தர வர்க்கத்தினராகவே கருதப்படுகிறார்.

 

 

எனது ஆசை மிகவும் பேராசையான ஒன்று அல்ல. ஐம்பது லட்சம் டாலர் சம்பளம் பெறுகின்ற யாராவது ஒருவர் என்னை மணக்க ஆசைபப்டுகிறீர்களா?

 

 

இதுவரை நான் டேடிங் செய்த வாலிபர்களுள் அதிக பட்சமாக ஒருவர் 25 லட்சம் டாலர்களையே சம்பளமாகப் பெற்றுள்ளார். ஆனால் எனக்கு இது போதுமானதல்ல.

 

ஆகவே நான் சில விஷயங்களைத் தெரிந்து  கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து தெரிந்தவர்கள் இதற்கு பதிலை அளியுங்கள்.

 

 

  • நல்ல பணக்கார வாலிபர்கள் எஙகு வருகிறார்கள்? தயவுசெய்து ஜிம், ஹோட்டல், கிளப் என்று சரியான முகவரியைத் தாருங்கள்

 

  • எந்த வயதினரைச் சந்தித்து நான் கவர முடியும்?

 

  • மிகப் பெரிய பணக்காரர்களின் மனைவிமார்கள் ஏன் சுமாரான அழகுடனேயே இருக்கிறார்கள்? நான் சந்தித்த சில பெண்கள் அழகிகளே இல்லை. பார்க்க சுமாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களை மண்ந்து கொண்டிருக்கின்றனர்!

 

 

4) எப்படி நீங்கள் உங்கள் வருங்கால மனைவியைத் தீர்மானிக்கிறீர்கள்? உங்கள் கேர்ள்ஃப்ரண்டாக நீங்கள் யாரை எப்படி எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?”

இப்படிக்கு

 

பேரழகி

 

 

ஜே.பி. மார்கன் என்ற பிரபல நிறுவனத்தின் சொந்தக்காரரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோடீஸ்வரர் பேரழகிக்கு இப்படி பதில் அளித்தார்.

அன்புள்ள பேரழகிக்கு,

 

உனது கடிதத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். உன்னைப் போலவே ஏராளமான இளம் பேரழகிகள் இதே கேள்விகளுடன் இருக்கின்றனர்.

 

உனது நிலையை ஆய்ந்து பார்த்து இங்கே பதில் அளிக்கிறேன். நான் முதலீட்டுத் துறையின் தலை சிறந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி என்பதை நீ நினைவில் வைத்துக் கொள்!

 

எனது வருடாந்திர சம்பளம் நீ விரும்புகின்ற அதே ஐம்பது லட்சம் டாலர் தான்! ஆகவே உனது நேரத்தை நான் வீணடிப்பதாக  நினைக்க வேண்டாம்..

 

 

வணிக நோக்கில் பார்த்தால் உன்னை மணப்பது என்பது ஒரு மோசமான முடிவாகவே இருக்கும். ஏன் என்பதை இங்கே விளக்குகிறேன்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் உனது ‘பேரழகை’ இன்னொருவரின் ‘பணத்திற்கு’ மாற்ற விருப்பப்படுகிறாய்! அதாவது ‘ஏ’ என்பவரின் அழகுக்கு ‘பி’ என்பவர் பணம் தருகிறார்!

மிகச் சரியான பேரம் தான்!

 

என்றாலும் கூட இங்கு ஒரு மிக மோசமான பிரச்சினை எழுகிறது. உனது பேரழகு ஒரு நாள் போய் விடும். ஆனால் எனது பணமோ அசம்பாவிதமாக ஏதாவது நடந்தால் ஒழிய அழியாது.

 

 

உண்மை என்னவென்றால் எனது வருமானம் வருடா வருடம் அதிகரிக்குமே தவிர குறையாது.

 

 

ஆகவே பொருளாதார நோக்கில் பார்த்தால் நான் அதிகரித்துக் கொண்டே போகும் சொத்து. நீயோ தேய்ந்து கொண்டே போகும் ஒரு சொத்து. நீ சாதாரணமாக தேயும் சொத்து இல்லை. பல ம்டங்கு அதிகரித்துத் தேயும் சொத்து. உனது அழகு தான் உனது சொத்து என்றால் அது பத்து வருடங்கள் கழித்து மிக மோசமான நிலையில் அல்லவா இருக்கும்!

 

 

இங்கு வால் ஸ்ட்ரீட்டில் ஒவ்வொரு விற்பனைக்கும்  நிலை எனப்படும் ஒரு பொஸிஷன் உண்டு. உன்னுடன் டேடிங் செய்வதும் கூட ஒரு வகை பொஸிஷன் தான்!

 

வணிக மதிப்பு குறைந்து விட்டது என்றால் பொருளை நாங்கள் உடனே விற்று விடுவோம். அதை நீண்ட காலம் வைத்திருபப்து ஒரு நல்ல முடிவு இல்லை.

 

 

இதே தான் உன்னை  மணப்பதிலும் ஏற்படுகிறது.. ஒரு சிறந்த வணிகர் மோசமாகத் தேய்ந்து வரும் ஒரு சொத்தை ஒன்று லீஸுக்கு விடுவார் அல்லது விற்று விடுவார்.

 

ஐம்பது லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஒருவர் முட்டாள் இல்லை. அவர் உன்னை டேடிங் செய்ய ம்ட்டுமே விரும்புவார். மணக்க விரும்ப மாட்டார்.

 

 

உனக்கு ஒரே ஒரு சின்ன புத்திமதியைத் தான் என்னால் தர முடியும். ஒரு பெரிய பணக்காரனை மணக்க எந்த வித உபயோககரமான குறிப்பையும் என்னால் தர முடியாது. அதை மறந்து விடு என்பது தான்!

 

நீயே ஐமபது லட்சம் டாலர் சம்பாதிக்கும் வழியை ஆராய்ந்து அதை சம்பாதிக்க முயற்சி செய்! ஒரு பணக்கார முட்டாளைப் பிடிப்பதில் உனது வேலையை இது சுலபமாக்கும்.

இந்த பதில் உனக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

 

அன்புள்ள

ஜே.பி,மார்கன்

 

இன்றளவும் பேராசைப்படும் பேரழகிகளுக்கு பயனுள்ள ஒரு அறிவுரையாக இது அமைகிறது!

**********

.
.