நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

நட்சத்திர அதிசயங்கள்

 சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதையைப் பார்த்தோம்.மஹாபாரதம் கூறும் கதையின் விளக்கத்தைப் பார்ப்போம்!

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

ச.நாகராஜன்

 

மஹாபாரதக் கதையின் உட்பொருள்

மஹாபாரதம் “ரோஹிணி சில காலம் அனைவரின் பார்வையிலிருந்து மறைந்து மீண்டும் தன் பழைய இடத்தில் தோன்றினாள்” என்று கூறுவதன் பொருள் என்ன?

ப்ரஜாபதி ரோஹிணி நட்சத்திரத்தின் அதி தேவதை.அத்தோடு ரிஷிகள் செய்யும் யாகங்களுக்கும் அதிகாரி!தேவர்களின் நாளும் மனிதர்களின் நாளும் வேறு வேறு. தேவர்களின் இரவு நேரத்திற்கு அதிபதி ப்ரஜாபதி தான்.இரவு நேரத்தில் இருக்கின்ற ஒரே வெளிச்சம் சந்திரனின் வெளிச்சம். யாகத்திற்கு இந்த சந்திர ஒளி தேவையாக இருந்தது.ஆகவே தான் சந்திரனே ப்ரஜாபதி என்று கூறப்பட்டான்.

தைத்திரீய பிராமணம், “ப்ரஜாபதி சிந்தனையில் ஆழ்ந்தார்.அவர் தனது வயிறு காலி ஆவதை உணர்ந்தார். உடனடியாகத் தவத்தை மேற்கொண்டார்.எதையாவது படைக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.புதிய விராட்டை அதாவது அண்டத்தை சிருஷ்டித்தார்.தேவர்களையும் அசுரர்களையும் அழைத்து இந்தப் புதிய அமைப்பை ஏற்குமாறு வேண்டினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்” என்கிறது. அந்த விராட் தான் ரோஹிணி! ப்ரஜாபதியின் புதிய அமைப்பில் ரோஹிணிக்கு முதல் இடம் கிடைத்தது. அதாவது மேல் ஸ்தானம் கிடைத்தது.

 

இதை அறிவியல் ரீதியாகப் பார்ப்போம். வானத்தின் சுழற்சி கடிகார முள் இடமிருந்து வலமாகச் சுழலுவது போன்ற சுழற்சி!க்ளாக்வைஸ் சுழற்சி என்று சாதாரணமாக இதைக் கூறுகிறோம்.இடைவிடாது சுழலும் வானச் சுழற்சியில் மாறாத நட்சத்திரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை அடையாளமாக வைத்துக் கொண்டே வானத்தின் திசையைக் கணிக்க வேண்டியதாக இருக்கிறது.ஆனால் இந்த துருவ நட்சத்திரம் கூட  சுழற்சியில் மிக மிகச் சிறிய அளவில் இடம் பெயர்கிறது.

துருவ நட்சத்திரத்தை முதலில் பார்த்த அதே இடத்தில் பார்க்க சரியாக 25710 ஆண்டுகள் ஆகிறது, (கணித சௌகரியத்திற்காக 26000 ஆண்டுகள் எனக் கொள்வோம்)செலஸ்டியல் ஈக்வேஷன் எனப்படும் வானத்து ரேகை ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் ஒவ்வொரு கால கட்டத்தில் போகும்.கி.மு 2700ல் இந்த வானத்து ரேகை ரோஹிணியின் வழியே சென்றது.இந்தக் கால கட்டத்தில் தான் நட்சத்திரங்களை ஒரு புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஆகவே படைப்பு உந்துதல் உண்டான ப்ரஜாபதி ரோஹிணியை ‘பழைய இடத்திற்குச் செல்ல’ வைத்தார்.பல காலம் களை இழந்திருந்த ரோஹிணி வெட்கத்தால் சிவந்து புதிய பொலிவுடன் கவர்ச்சியுடன் போனாள்.மஹாபாரதம் கூறும் கதையின் உட்பொருள் வானியல் ரீதியாக இது தான்!

 

இப்படி வானவியல் கணிதம், வானச் சுழற்சி, புதிய அமைப்பை மனித குல நன்மைக்காக செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை பாமரனுக்கு எப்படி உணர்த்துவது?அறிஞர்களும் கூடத் திணறும் அற்புத கணிதம் இது. ஆகவே தான் இதை எளிமைப் படுத்தி இதிஹாஸங்களும் புராணங்களும் சுவையான கதையாக அனைத்தையும் விவரித்தன! புராணக் கதைகளை ஒரு சிறந்த வானவியல் நிபுணர் மட்டுமே அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.

 

முதல் தர ஒளியுடைய நட்சத்திரம்

அல்டிபெரான் எனப்படும் ரோஹிணி 65 ஒளி வருட தூரத்தில் உள்ளது.106 மாக்னியூட்டில் அமைந்துள்ள முதல் தர நட்சத்திரமாகும் இது! சகட அமைப்பில் இதைக் காணலாம் என அறிவியல் கூறுகிறது. ஆக விஞ்ஞானமும் புராணமும் ஒரே விஷயத்தை தங்கள் தங்கள் வழியில் விரிவாகக் கூறுவதைப் பார்க்க முடிகிறது!

 

சிவந்த மணி பெற்ற நீல ரத்னம்!

ரோஹிணி நட்சத்திரத்தின் பெருமை எல்லையற்றது.பல் வேறு மொழிகளில் ஏராளமானவர்கள் அதைப் புகழ்ந்து பாடல்களை எழுதியுள்ளனர்.ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம். ரோஹிணி நட்சத்திரத்தை கண்ணன் தன் பிறப்புக்காகத் தேர்ந்தெடுத்ததை உலகம் நன்கு அறியும்.அதனால் ரோஹிணியின் பெருமை உச்சத்திற்குச் சென்று விட்டது. ரோஹிணியையும் சுவாதி நட்சத்திரத்தையும் பில்வமங்களர் க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் ஒப்பிட்டு மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்கிறார்.

க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 65வது பாடலாக அமைந்துள்ள இப்பாடலை ராமகிருஷ்ண மடம் அண்ணாவின் பதம் பிரித்துத் தந்துள்ள அர்த்தத்துடன் பார்ப்போம்:

 

ஸ்வாதீ ஸபத்னீ கிலதாரகாணாம் முக்தாபலானாம் ஜனனீதி ரோஷாத் I               ஸா ரோஹிணீ நீல-மஸூத ரத்னம் க்ருதாஸ்பதம்    கோபவதூ குசேஷ¤ II

தாரகாணாம் – நட்சத்திரங்களின்                                              ஸபத்னீ – சக்களத்தியாகிய                                                   ஸ்வாதீ – ஸ்வாதீ என்பவள்                                            முக்தாபலானாம் – முத்துக்களுக்கு                                               ஜனனீ கில இதி – தாயாகி விட்டாள் அல்லவா என்ற                           ரோஷாத் – கோபத்தால்                                                        ஸா ரோஹிணீ – நட்சத்திரங்களில் ஒருத்தியாகிய அந்த ரோஹிணீ                 கோபவதூ குசேஷ¤ – இடைப் பெண்களின் மார்பகங்களின் மத்தியில்                      க்ருத ஆஸ்பதம் – இடம் பெற்று விளங்கும்                                       நீலம் ரத்னம் – கிருஷ்ணனாகிற நீல ரத்னத்தை                                   அஸூத – பெற்றாள்

 

ஸ்வாதி நட்சத்திரம் தோன்றும் போது விழும் மழைத்துளிகளைத் தம்முள் ஏந்தி சிப்பிகள் முத்தை உருவாக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி ஸ்வாதிக்கு போட்டியாக நீல ரத்னத்தை ரோஹிணீ பெற்றுப் பெருமை அடைந்தாள் என்று கூறும் இந்தச் செய்யுள் மிகச் சுவையானது; ஆழ்ந்த பொருளைக் கொண்டது!

நீல ரத்னத்தைப் பெற்ற சிவந்த மணியான ரோஹிணியைப் போற்றி வணங்குவோம்!

************

Leave a comment

Leave a comment