சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி சமைக்க அரிசி இல்லாமல் அடுத்த வீட்டில் கடன் வாங்கி வந்தாள். அரிசியைக் கண்ணில் கண்ட பாரதி அதே நேரத்தில் முற்றத்தில் குருவிகளையும் கண்டார். உடனே செல்லாம்மவிடமிருந்து தானியத்தை வாங்கி குருவிகளுக்காக இரைத்தார். செல்லம்மாவின் முகம் வாடியது. குருவிகள் உண்டது கண்டு பாரதியின் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது!

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும்
மலையும் எங்கள் கூட்டம் என்று பாடிய கவிஞனுக்கு,

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்று பாடிய கவிஞனுக்கு,
யார் பாடம் கற்பிப்பது?

பலர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார்கள். பாரதியோவெனில் இயற்கையின் சிரிப்பில் இறைவனைக் கண்டான். சிட்டுக் குருவி யிடமிருந்து ஆன்மீக பாடங்களையும் கற்றான். அவரது ஆன்மீக தாகத்தைக் காட்டும் பாடல் இதோ:

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு— (விட்டு)

பெட்டையினோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாதொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு—(விட்டு)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதை சொல்லித் தூங்கிப்பின்
வைகறை ஆகு முன் பாடிக் களிப்புற்று (விட்டு)

தத்தாத்ரேயர் என்ற ரிஷி இயற்கையில் தான் கண்ட எல்லாவற்றிலும் ஒரு நல்ல பாடத்தைக் கற்றதை பாகவதம் எடுத்துக்கூறும். (Please read my article Let Nature Be Your Teacher: William Wordswoth and Dattatreya in my blogs). வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞனும் ஏட்டுப் படிப்பு எதற்கும் உதவாது. புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வாருங்கள் என்கிறான். இவை எல்லாவற்றையும் பாரதி செயலிலேயே செய்து காட்டிவிட்டான்.

குரு கோவிந்த சிம்மன் கதை

சீக்கியர்களில் கடைசி குருவான குரு கோவிந்த சிங் மாபெரும் வீரன். மொகலாயப் பேரரசன் அவுரங்க சீப்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் அவைகளைத் துச்சமாக மதித்தவன். அந்த குரு கோவிந்த சிம்மன் ஒரு சிட்டுக் குருவியைக் கூட பருந்தாக்கிக் காட்டுவேனென்று வீர முழக்கம் செய்தார். கால்சா என்னும் சீக்கிய வீரர்களின் அமைப்பை நிறுவி வீரப் படைகளை நிறுவினார். அவர் கூறிய வாசகங்களை பாரதியார் குரு கோவிந்த சிம்மனைப் பற்றி பாடிய பாடலில் ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்று சிம்ம கர்ஜனை செய்கிறார்.

குரு கோவிந்தன் உண்மையிலேயே இப்படிச் செய்து காட்டினார். அவர் கால்சா வீரர்களுக்காக செய்த அமிர்தம் ஒரு சில துளிகள் கீழே சிந்திவிட்டன. அதைச் சுவைத்த குருவிகள் உடனே வீறு கொண்டெழுந்து வானில் சீறிப் பாய்ந்தன. கழுகுகளை ஓட ஓட விரட்டின. இதைக் கண்ட வீரர்கள் குருவின் மகத்தான சக்தியை உணர்ந்தனர்.

கோவிந்த சிம்மன் எப்போதும் ஒரு வெள்ளைப் பருந்தை வைத்திருந்தார். ஒரு முறை அவர் ஒரு முஸ்லீம் கனவானின் தோட்டத்துக்குப் போனார். அந்த ஆள் ஒரு கறுப்பு பருந்தை வைத்திருந்தார். கோவிந்த சிம்மனின் வெள்ளைப் பருந்தின் மீது ஆசை வந்தது. ஒரு தந்திரத்தின் மூலம் அதைக் கைப்பற்ற எண்ணினான். இரண்டு பருந்துகளுக்கும் போட்டிவைப்போம். தோல்வி அடைந்தவர் அவரது பருந்தை மற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டார்.
குரு கோவிந்தருக்கு எதிராளியின் உள்நோக்கம் புரிந்தது. உடனே பருந்து என்ன? குருவிகளை அனுப்புகிறேன் அதனோடு உங்கள் பருந்து போடியிடட்டும் என்றார். அந்த முஸ்லீம் கனவானோ உம்முடைய குருவிகள் என் பருந்துக்கு உணவாகிவிடும் என்று சொல்லி சிரித்தார்.
கோவிந்த சிம்மன் மரத்தில் இருந்த இரண்டு சிறிய குருவிகளைப் பிடித்து பருந்தை விரட்ட அனுப்பினார். இரண்டு குருவிகளும் பருந்தை படுகாயப் படுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு விரட்டிச் சென்றன. படு காயம் அடைந்த பருந்து கீழே விழுந்து இறந்தது. அப்போது குரு கோவிந்தர் சொன்ன சொற்கள் சீக்கியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சொற்களாகும்.
சிட்டுக் குருவிகளைப் பருந்துகளாக்கி சண்டையிட வைப்பேன். அப்போதுதான் என்பெயர் கோவிந்த சிம்மன். ஒன்றே கால் லட்சம் பேர் வந்தாலும் அவை எதிர்த்துப் போராடும் என்றார்:
சிடியான் சே பாஜ் பனாவோ

சவா லாக் சே ஏக் லடாவோ
தப் குரு கோவிந்த நாம் சுனாவோ

இதையே சீக்கிய குரு கூறிய சொற்களிலேயே காணலாம்:

சிரியோன் சே மே பாக் லராவுன்
தபே கோவிந்த சிம் நாம் கஹாவுன்

தமிழ் திரைப் படங்களில் சிட்டுக் குருவி

தமிழ் திரைபடங்களும் சிட்டுக் குருவிகளைப் பற்றி பாடல்கள் பாடி அவைகளின் மூலம் கருத்துக்களைப் பரப்பியுள்ளன. சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கெது சொந்த வீடு, உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர் வலம் வந்து விளையாடு (படம்: சவாலே சமாளி) என்ற பாடலில் பாரதி பாடலின் தாக்கத்தைக் காண்கிறோம்.
ஏ குருவி குருவி (படம்: முதல் மரியாதை), சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ( படம்: நல்லவனுக்கு நல்லவன்), சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்ன விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல்லே ( படம்: டவுன் பஸ்), சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே (படம்: புதிய பறவை) ஆகிய பாடல்கள் தமிழர்களின் னினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்டன.

பஞ்சதந்திரக் கதைகளிலும் கூட குரங்குக்கு புத்திமதி சொன்ன குருவிகளின் கூட்டுக்கு நேர்ந்த கதி மூலம் ஒரு நீதி புகட்டப்படுகிறது. சங்க இலக்கியத்திலும் குருவிகளைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

இப்படி 2000 ஆண்டுகளுக்கு நமக்கு ஊற்றுணர்ச்சி தரும் சிட்டுக் குருவி இனம் வெகு வேகமாக அழிந்துவருவது கவலை தருகிறது. சிட்டுக் குருவிகளை காப்பது நம் கடமை.
**************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: