12.ராமாயண வழிகாட்டி
அத்தியாயம் – 12 ச.நாகராஜன்
சினம் காக்க!
இலங்கையைக் கொளுத்திய பின்னர் அனுமன் சற்று சிந்திக்கிறார்.
ஆஹா! என்ன காரியம் செய்து விட்டேன் என்று நினைத்த அவருக்கு மனதில் பயம் உண்டாயிற்று. அப்போது அவர் கூறிய நான்கு ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் ஐம்பத்தைந்தாவது ஸர்க்கத்தில் 3,4,5,6வது ஸ்லோகங்களாக அமைகின்றன.
தன்யாஸ்தே புருஷ ச்ரேஷ்டோ யே புத்யா கோபமுத்திதம்
நிருந்தந்தி மஹாத்மானோ தீப்த மக்னி மிவாம்பஸா
யே – எவர்கள்
உத்திதம் கோபம் – சீறி வரும் சினத்தை
புத்யா – அறிவைக் கொண்டு
தீப்தம் அக்னி –பற்றி எரியும் தீயை
அம்பஸா – நீரைக் கொண்டு
இவ – எப்படி அணைக்கிறார்களோ அப்படியே
நிருந்தந்தி – அடக்கிக் கொள்கிறார்களோ
தே – அவர்களே
தன்யா: – தன்யர்கள்
புருஷ ச்ரேஷ்டா – புருஷ ச்ரேஷ்டர்கள்
மஹாத்மான: – மஹாத்மாக்கள்
எவர்கள் சீறி வரும் சினத்தை அறிவைக் கொண்டு பற்றி எரியும் தீயை ஜலத்தால் அணைப்பது போல அடக்கிக் கொள்கிறார்களோ அவர்களே தன்யர்கள்; புருஷர்களில் உயர்ந்தவர்கள்; மஹாத்மாக்கள்.
க்ருதத: பாபம் ந குர்யாத்க: க்ருத்தோ ஹன்யாத் குரூநபி
க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூநதிக்ஷிபேத்
க்ருதத: – கோபத்திற்காளாகிய
க: – எவன் தான்
பாபம் – பாவத்தொழிலை
ந குர்யாத் – செய்யாதிருப்பான்?
க்ருதத: – கோபம் கொண்டவன்
குரூன் அபி – பெரியோர்களையும் கூட
ஹன்யாத் – கொலை புரிவான்
க்ருதத: – கோபத்திற்காளான
நர: – புருஷன்
பருஷயா – கடுமையான
வாசா – மொழியால்
சாதூன் – சாதுக்களை
அதிக்ஷிபேத் – எடுத்தெறிந்து பேசுவான்
கோபத்திற்காளாகிய எவன் தான் பாவத் தொழிலைச் செய்யாதிருப்பான்? கோபம் கொண்டவன் பெரியோர்களைக் கூடக் கொலை செய்வான். கோபத்திற்காளான புருஷன் கடுமையான மொழியால் சாதுக்களை எடுத்தெறிந்து பேசுவான்,
வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித்
நாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித்
ப்ரகுபித: – கோபம் தலைக்கேறியவன்
வாச்யாவாச்யம் – எது சொல்லத் தகுந்தது எது சொல்லத்தகாதது என்பதை
கர்ஹிசித் – எப்பொழுதும்
ந விஜானாதி – பகுத்தறிய முடியாது
க்ருத்தஸ்ய –கோபம் கொண்டவனுக்கு
அகார்யம் – தகாத செயல் என்பது
ந அஸ்தி – இல்லை
க்வசித் – இந்த ஸ்திதியில்
அவாக்யம் – தகாத சொல்லென்பதும்
ந வித்யதே – கிடையாது
கோபம் தலைக்கேறியவனுக்கு எது சொல்லத் தகுந்தது எது சொல்லத் தகாதது என்பதைப் பகுத்தறியவே முடியாது. கோபம் கொண்டவனுக்குத் தகாத செயல் என்பது இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் தகாத சொல் என்பதும் அவனுக்குக் கிடையாது,
ய ஸமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி
யதோரக ஸ்த்வசம் ஜீர்ணாம் ஸவை புருஷ உச்யதே
ய: – எவனொருவன்
ஸமுத்பதிதம் – தலைக்கு மேலேறிய
க்ரோதம் – சினத்தை
க்ஷமயா – பொறுமையைக் கொண்டு
உரக: – சர்ப்பம்
ஜீர்ணாம் – ஜீர்ணமான
த்வசம் – தோலை
யதா – எப்படி விடுகிறதோ அப்படி
நிரஸ்யதி – விட்டு விடுகிறானோ
ஸ: வை – அவன் தான்
புருஷ: ஏவ – ஆண்பிள்ளையென
உச்யதே – சொல்லப்படுகிறான்
எவனொருவன் தலைக்கு மேலேறிய கோபத்தை பொறுமையின் மூலம் சர்ப்பம் ஜீரணமான தோலை எப்படி விட்டு விடுகிறதோ அதே போல விட்டு விடுகிறானோ அவனே ஆண்பிள்ளை என்று சொல்லப்படுகிறான்.
கோபத்தைப் பற்றிய அனுமனின் இந்த சிந்தனை மனித குலத்திற்கே உரியது அல்லவா!
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்அல்லிடத்துக்
காக்கின் என்? காவாக்கால் என்? (குறள் 301) என்று எங்கு கோபம் செல்லுபடியாகுமோ அங்கே தான் முக்கியமாக சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது பொருள் பொதிந்ததல்லவா!வெகுளாமை அதிகாரத்தில் அவர் கூறும் 10 குறள்களும் கருத்தூன்றிப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டியவை.
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)
சினம் காக்கப்படாவிட்டால் அது தன்னையே அழித்து விடும் என்பது வள்ளுவரின் எச்சரிக்கை.
இலங்கையில் அனுமன் சினம் பற்றி நன்கு சிந்தித்து அதன் பாதகங்களை நன்கு தெளிவாக்குகிறான்!
அனுமனின் சிந்தனை மனித குலத்திற்கான பொதுவான சிந்தனை அல்லவா!
**********