ராமருக்குச் சீதை சொன்ன ஆயுதம் பற்றிய கதை!

ram sita jungle

Post no.888 Dared 5th March 2014
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 19

ச.நாகராஜன்

ராமாயணத்தின் நாயகியான சீதை பெரும் மேதை என்பதை வால்மீகி ராமாயணத்தை நுணுகிப் படிப்போர் புரிந்து கொள்ள முடியும். பாரம்பரியம் பாரம்பரியமாக வரும் பழைய கதைகளையும் அருமையான சமுதாயத்தின் வழக்கு மொழிகளையும் அவர் ஆங்காங்கே எடுத்துக் கூறுவதே இதற்குச் சான்றாகும்.

யுத்த காண்டத்தில் சீதை கூறிய கரடி கதையை முன்னர் பதினொன்றாம் அத்தியாயத்தில் பார்த்தோம். இன்னொரு கதையை அவர் ராமருக்கு எடுத்துக் கூறுவது ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது ஸர்க்கத்தில் அழகுற அமைந்துள்ளது. அதைப் பார்ப்போம்.

ஸுதீக்ஷ்ண முனிவரால் விடை கொடுக்கப்பட்டு தண்டகை என்று பெயரிடப்பட்டுள்ள காட்டிற்குச் செல்லும் போது சீதை தண்டகாவனத்திற்கு எழுந்தருளத் தனக்கு இஷ்டமே இல்லை என்று ராமரிடம் கூறி, “ராக்ஷஸர்களைக் கண்டதுமே தேவரீர் பாணப் பிரயோகம் செய்வீர்; ஆயுதம் எடுத்தல் தகாது”, என்று கூறி ஒரு கதையைக் கூற ஆரம்பிக்கிறார்.

ram in jungle

“ மஹா பாஹுவே! முன்னொரு காலத்தில் உண்மையையே பேசுபவரும் பரிசுத்தருமான ஒரு முனிவர் பரிசுத்தமாய் இருப்பதும், களிப்புற்ற மான்களையும் பறவைகளையும் கொண்டதுமான ஒரு வனத்தில் வசித்து வந்தார். சசி தேவியின் மணாளனான இந்திரன் அவரது தவத்திற்கு இடையூறை செய்வதற்கென்றே கத்தியைக் கையில் கொண்டு போர் புரியும் வீர உருவத்தைக் கொண்டு அவரது ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்தில் அப்போது புண்ணிய தவத்தில் ஆஸக்தியுடைய அவருக்கு கூர்மையானதும் சிறந்ததுமான அந்தக் கத்தியானது பாதுகாப்பு திரவியம் என்ற முறையில் கொடுக்கப்பட்டது.

அவர் அந்த ஆயுதத்தை ஏற்றுக் கொண்டு பாதுகாப்புப் பொருளாக அதைப் போற்றி தனது அடைக்கலப் பொருளான அதைக் கையில் எடுத்துக் கொண்டே எப்போதும் வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் பொருளில் மனதைச் செலுத்தி அவர் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கொண்டு வர எங்கு சென்றாலும் அந்தக் கத்தியின்றி போவதில்லை. அந்த முனிவர் சதா ஆயுதத்தைத் தரிப்பவாய் இருந்து காலக் கிரமத்தில் தவத்தில் ஊக்கத்தை விடுத்து தனது புத்தியை குரூரமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆயுதத்தினுடைய சேர்க்கையால் அந்த முனிவர் சுய நிலை தவறி கொடுமையில் ஈடுபட்டு தருமம் க்ஷீணிக்கப்பெற்று அதனால் நரகத்தை அடைந்தார்.

ஆயுத சகவாசத்தால் விளைவது இப்படித்தான் ஆகும் என்பதாய் உள்ள இது ஒரு பழங்கதை” (ஒன்பதாவது ஸர்க்கம் 16 முதல் 23வது ஸ்லோகம் முடிய சீதை கூறும் இந்தக் கதையைக் காணலாம்)

சீதையின் கதையைக் கேட்ட ராமர் சீதையைப் போற்றி, “ தேவீ! க்ஷத்திரியர்களால் வில்லானது கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு இருக்கக் கூடாது என்கிற காரணத்தால் தரிக்கப்படுகிறதென்ற இந்த நியமனமானது உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது. நான் அதைத் தவிர வேறு இல்லை என்று பதில் கூறுகிறேன்” என்கிறார்.

ramas arrow

ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-
கிம் து வக்ஷயாம்யஹம் தேவி த்வயைவோக்தமிதம் வச: I

க்ஷத்ரியைதார்யதே சாபோ நார்தஷப்தோ பவேதீதி II

(பத்தாவது ஸர்க்கம் மூன்றாவது ஸ்லோகம்)

தேவி – தேவீ
க்ஷத்ரியை: – க்ஷத்திரியர்களால்
சாப: – வில்லானது
ஆர்த ஷப்த: – கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு

ந பவதே இதி – இருக்கக் கூடாது என்கிற காரணத்தால்
தார்யதே – தரிக்கப்படுகிறதென்கிற
இதம் வச: – இந்த நியமனமானது
த்வயா ஏவ – உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது.
அஹம் கிம் து – நான் அதைத் தவிர வேறு இல்லை என
வக்ஷயாமி – பதில் கூறுகிறேன்

ஆயுதம் ஆபத்தையே விளைவிக்கும் என்ற இந்த சாசுவதமான மொழியை சீதை கூறுவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இந்தக் காலத்துக்குக் கூடவே பொருந்தும்.

பழமையான இதிஹாஸமான ராமாயணம் உலகின் ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. அதில் பழங்கதை என சீதை கூறுவதை நோக்கும் போது நமது ஹிந்து நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியது என்று கூறுவதில் தடை என்ன இருக்கிறது?

ஆரண்ய காண்டம் ஒன்பதாவது ஸர்க்கமும் பத்தாவது ஸர்க்கமும் சுவாரசியமான ஸ்லோகங்களைக் கொண்டுள்ளவை என்பதோடு அனைவரையும் கவர்வதுமாகும்.

(This article is written by my elder brother S Nagarajan: swami)
Contact swami_48@yahoo.com

*****************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: