மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!– பகுதி-1

tamil poets
Images of Tamil Poets

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1291; தேதி: 16 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது நாலாவது கட்டுரை.

மகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் பெயர்கள் இதில் அதிகம் பயிலப்படுவதால் இது அக்காலத்தை ஒட்டியது என்பதும், இதை எழுதியவர் தமிழராகவோ அல்லது தமிழர்களை நன்கு அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்றும் கருத இடம் உண்டு. நான் இப்படிக் கூறுவதற்கு கீழ்கண்ட 27 (27 reasons) விஷயங்களே காரணங்கள்:

சங்க இலக்கியத்தில் உள்ள பெயர்களும் சொற்களும் கதைகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெயர் அளவு அல்லது கதை அளவு ஒற்றுமைதான். சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–

1.கபிலன்
சங்க காலத்தில் கபிலன் என்ற பிராமணப் புலவர் தான் அதிக செய்யுட்களைச் செய்தார். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்டார். பாரி என்ற ஒரு சிற்றரசனுக்காக மூவேந்தரையும் பகைத்து நின்றார். மூவேந்தர்களும் பாரியை வஞ்சனையால் கொன்றனர். ஜாதி மதங்களை உதறிவிட்டு பாரியின் இரண்டு மகள்களையும் தன் சொந்த மகளாகக் கருதி ஊர் ஊராக அழைத்துச் சென்று கெஞ்சிக் கதறி திருமணம் செய்துவிட்டார். மூவந்தருக்கு அஞ்சிய பயங்கொள்ளிகள் அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய பயந்து நடுங்கினர்.

தமிழ் மொழியைக் கிண்டல் செய்த யாழ் பிரம்மத்தன் என்ற வடக்கத்தியானுக்குத் தமிழ் கற்பித்து அவனையும் சங்கப் பாடலை பாடச் செய்து அதையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தார். பிறகு தீயில் பாய்ந்து உயிர் நீத்தார். வாழ்க்கையில் தாம் செய்யவேண்டியதை செய்தாயிற்று என்ற நிறைவு கண்டவுடன் இந்துக்கள் இப்படி உயிர்துறப்பது வழக்கம். (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை))

கபிலருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரில் கபிலதேவ நாயனார் என்பவர் தோன்றி பாடினார். அவர்தம் பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டன. இவ்வளவு புகழுடைய கபிலன் என்ற பெயர் மக வம்சத்திலும் வருகிறது. ஆயினும் இவர் சங்க கால கபிலர் அல்ல. பெயரளவு ஒற்றுமைதான்.

2.பரணன்
கபில-பரணன் என்று இணைத்தே சொல்லும் அளவுக்குச் சங்க காலத்தில் கொடிகட்டப் பறந்த பரணரும் ஒரு பிராமணர். அவர் ஒரு பெரிய வரலாற்று அறிஞர். “வரலாறு எழுதிய முதல் தமிழன்” — (First Tamil Historian) என்ற எனது கட்டுரையில் அவரது சாதனைப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியை உவமையாகப் பயன்படுத்துவார். இவரைப்போல ஒவ்வொரு இந்தியக் கவிஞரும் செய்திருந்தால் இன்று நம் வரலாறு இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும். வன்பரணர் என்ற ஒருவரைத் தவிர பிள்ளையார்பட்டி பாண்டியர்காலக் கல்வெட்டில் ஒரு பரணரைக் கண்டுள்ளேன்.

இந்தப் பெயரும் மஹாவம்சத்தில் வருவது சிறப்புடைத்து. அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். பெரும் வீரன். கி.மு.வில் இலங்கையை ஆண்ட ஏலாரா காலத்தவன் இவன். அதாவது சங்க காலத்தை ஒட்டியவன்.

3.உதியன்
இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது!!!

4.கல்லாடன்
கல்லாடம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். இதை எழுதியவர் கல்லாடர். இதே போல சைவத் திருமுறைகளில் எழுதிய கல்லாடரும் உண்டு. அந்தப் பெயரில் மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் இருப்பது வியப்புக்குரியது. சங்கத் தமிழ் நூல்களில் 20 பெயர் “நாகன்” என்ற பெயரில் பாடி தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

athiyaman

Tamil poetess Avvaiyar with Chieftain Athiyaman

5.நாகன்
நாகன் (Naga, Nagan) என்ற பெயர் ஒரு மர்மமான பெயர். காஷ்மீர் முதல் கண்டிவரை காணப்படும் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்தர்கால கல்வெட்டுகளில் பல நாகர்கள் பெயர்கள் வருகின்றன. பலர் படைத் தலைவர்கள். இலங்கையில் பல “நாகன்” பெயர் மன்னர்களின் பெயரில் வருகிறது. இதுபற்றிப் பல ஆராய்ய்சிக் கட்டுரைகள் வந்த போதிலும் நிச்சயமாக ஒன்றும் சொல்ல இயலவில்லை.

6.இளநாகன்
மருதன் இளநாகன் என்ற புலவன் சங்ககாலத்தில் சக்கைப்போடு போட்ட புலவர்களில் ஒருவர். கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை Accidental Coincidence –“கோஇன்சிடென்ஸ்”– என்று ஒதுக்க முடியாது (காண்க:– அத்தியாயம் 35)

perunthalai saaathanaar and kumanan

Tamil chieftain Kumanan with the Tamil poet

7.குமணன் கதை
புறநானூற்றில் பாடல் 158 முதல் 165 வரை குமணன் கதை வருகிறது. குமணன் என்ற சிற்றரசனை அவன் தம்பி இளங்குமணன் விரட்டிவிட்டு நாட்டை ஆள்கிறான். அது மட்டுமல்ல. அண்ணன் தலையைக் கொண்டு வருவோருக்கு பெரும் பரிசு தருவேன் என்றும் அறிவிக்கிறான் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இதுகண்டு வருத்தம் அடைகிறார். இருவரிடையே சமரசம் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார்.

காட்டில் வாழ்ந்த பெரிய குமணனைச் சந்தித்துப் பாடுகிறார். அவன் இந்தப் புலவர் காசுக்காகப் பாடும் புலவன் என்று எண்ணி, “அன்பரே, பொருள் அற்ற நிலையில் வாடுபவன் நான். இதோ இந்த வாளை எடுத்துக் கொள்ளும். இதனைக் கொண்டு என்னைக் கொல்லும். அப்படிக் கொன்றபின் என் தலையை என் தம்பி இளம் குமணனிடம் கொடுத்தால் உமக்குப் பெரும் பொருள் கிட்டும்” — என்கிறான். என்னே! தமிழர்களின் பெருந்தன்மை! தான் இறந்தாலும் புலவருக்குப் பணம் கிடைத்து வறுமை நீங்கினால் போதும் என்று எண்ணுகிறான்.

அந்தப் புலவர் ஒரு பெரிய வாழை மரத்தின் அடிப்பகுதியை வெட்டி அதில் செந்நிறச் சாயம் பூசி, ஈரமான வெள்ளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து இளங் குமணனிடம் சென்று பாடுகிறார். “பார், உன் அண்ணனின் பெருந்தன்மையை” கையில் வாளைக் கொடுத்து தலையைச் சீவச்செய்து அதைக்கொடுத்து உன்னிடம் பரிசு பெறச் சொன்னான் என்கிறார். வாளையும், வாழைத் தண்டையும் கண்டு அண்ணன் இறந்தானே என்று கண்ணீர் வடித்து தன் தவறை உணர்கிறான். “அது அண்ணன் தலை அல்ல, வெறும் வாழை மட்டையே, வருந்தற்க” என்றவுடன் மனம் மாறி அண்ணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைக்கிறான்.

மகாவம்சம் அத்தியாயம் 36-ல் சங்க கால குமணன் கதை போலவே ஒரு கதை வருகிறது. கோதகாபயன் என்ற மந்திரி திடீர்ப் புரட்சியில் இறங்கி படை எடுக்கவே சங்கபோதி என்னும் அரசன் தப்பி ஓடுகிறான். அப்போது வழியில் தனக்கு உணவு கொடுத்த ஒரு வழிப்போக்கனிடம் என் தலையைச் சீவி கோதகாபயனிடம் கொடு; உனக்கு நிறைய பொருள் கிடைக்கும் என்கிறான். ஆனால் வழிப்போகன் மறுத்துவிடுகிறான். அவனுக்கு உதவுவதற்காக அரசன் அங்கேயே அமர்ந்து உயிர்விடுகிறான். உடனே அந்த வழிப்போக்கன் , சங்கபோதியின் தலையை கோதகாபய னிடம் கொடுக்கவே நிறைய பொருள் கிடைக்கிறது. இறந்துபோன மன்னனுக்கு உரிய ஈமச் சடங்குகளை கோதகாபயன் செய்தான்

8.மனுநீதிச் சோழன் கதை
அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்துவந்த ஏலாரா இலங்கையை 44 ஆண்டுகளுக்குச் சீரும் சிறப்புடனும் ஆண்டான். அவன் சயன அறையில் ஆராய்ச்சிமணி தொங்க விட்டிருந்தான். குறை தீர வருவோர் அதை அடிக்கலாம்.. ஏலாராவின் மகன் ஒருநாள் ஒரு ரதத்தை ஓட்டிச் சென்ற போது அதில் ஒரு பசுங்கன்று அடிபட்டு இறந்தது. உடனே தாய்ப்பசு அரண்மனைக்கு வந்து நீதிகோரி ஆராய்ச்சி மணியை அடிக்கவே மன்னன் தனது மகனை தேர்ச் சக்கரத்தின் அடியில் கொல்கிறான்.

இந்தக் கதை அப்படியே மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் உள்ளது. நாம் திருவாரூரில் இது நடந்ததாகக் கூற, மகாவம்சமோ தீசவாபியில் நடந்ததாகச் சொல்லும். ஆனால் இருவரும் சோழ வம்சத்தினர். இது வியப்பான ஒற்றுமை. மேலும் ஆராய வேண்டிய விஷயம். ஏலாராவைத் துட்டகாமினி கொன்ற பின்னரும் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறான். அவன் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த இலங்கை மன்னர் ஒவ்வொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி மரியாதை செய்வது மரபாகிவிட்டது. நீதி நேர்மை தவறாது ஆண்ட மாபெரும் தமிழன் ஏலாரன் (அத்தியாயம் 25ல் காண்க).

elara
Stories of Elara of Sri Lanka and Manu Neethi Choza of Tamil Nadu are similar.

9.மலய மலை/ சந்தனக் கட்டை
பல இலங்கை மன்னர்கள் மலய மலையில் வந்து தங்கி படை திரட்டிச் சென்றதை மகாவம்சத்தில் காணலாம். அதே போல பொதியம், மலயம் ஆகியவற்றின் சந்தனமும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. (உ.ம்: அத்தியாயம் 28 மற்றும் 36, 37)

10.பறவைகள் அரிசி கொணர்தல்
அத்தியாயம் 5 & 11:– அசோகன் மற்றும் தேவனாம்ப்ரிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பறவைகள் அரிசி கொண்டுவந்தன என்பது கபிலர் காலத்தில் நடந்தது போல இருக்கிறது. மூவேந்தர்களும் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டுவந்தார் என்று சங்க இலக்கியம் கூறும்.

11.பாரா நட்பு
கோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் (வடக்கிருத்தல்) இருந்தபோது பிசிராந்தையார் என்னும் கிழப் புலவருக்கு ஒரு இடம் ஒதுக்கச் சொன்னார். “யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள்!! மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார்!! அதேபோல இலங்கை மன்னன் தேவனாம்ப்ரியன் காலத்தில் ரத்தினங்களும் விலை உயர்ந்த உலோகங்களும் கிடைத்தன. அவற்றை இதுவரை பார்த்தே இராத அசோகனுக்கு அனுப்புகிறார்!

siva_kuthirai

12.குதிரை வியாபாரிகள்/ மாணிக்கவாசகர்
அத்தியாயம் 21-ல் சேனன், குட்டகன் என்ற இரண்டு தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு வருகிறது. இவர்கள் குதிரை வியாபாரிகளின் பிள்ளைகள். இதைப் படிக்கையில் மாணிக்கவாசகரின் கதை நினைவுக்கு வரும். அவரது காலமும் சம்பந்தருக்கு முந்தியது என்று நான் கட்டுரையில் நிரூபித்திருக்கிறேன்.

13.தேர் விழா
சிலப்பதிகாரத்தில் சமணர்களின் தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். மகாவம்சத்தில் புத்தமத தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். போதிமரத்தைத் தேரில் வைத்து ஊர்வலம் விடுகின்றனர். பிரபல பிராமணர் கிராமம் வந்தவுடன் அதைத் தரையில் இறக்கி மன்னன் மரியாதை செலுத்துகிறான்.

14.கார்த்திகை விழா
கார்த்திகை விழா சங்க இலக்கியத்திலும் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இதை இலங்கை மன்னரும் கொண்டாடியதை அத்தியாயம் 17-ல் காணலாம்.

karaikal
Karaikal Ammaiyar walking on head

15.மந்திர மாங்கனி
காரைக்கால் அம்மையார் என்ற சைவப் பெரியார் காலத்தால் சம்பந்தர் முதலிய நால்வருக்கும் முந்தியவர். இவர் திருமணம் ஆனபின் மந்திர மாங்கனி வரவழைத்ததும் இவரது கணவர், மனைவியின் அமானுஷ்ய சக்திகளைக் கண்டு பயந்து ஒதுக்கி வைத்துவிடுகிறார். பின்னர் அப்பெண்மணி சிவனடியாராக மாறி அற்புதமான திருவந்தாதிகளைப் பாடி தமிழில் அந்தாதி இலக்கியம் தோன்ற படி அமைத்துத் தருகிறார்.

மகா வம்சத்தில் 15ஆம் அத்தியாயத்தில் ஒருதேரர், மாம்பழத்தச் சாப்பிட்டு கொட்டையைப் போடவுடன் அது உடனே மீண்டும் வளர்ந்து கனிகள் நிறைந்த மா மரமாயிற்று!

16.உண்பது நாழி
உண்பது நாழி உடுப்பவை இரண்டே (புறம் 189) — என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரின் கூற்று. இந்த அருமையான சொல் மகாவம்சம் 36 ஆம் அத்தியயத்தில் வருகிறது. குஜ நாகன் தம்பி குஞ்சநாகன் ஆட்சிக்க்காலத்தில் ஏக நாழிகைப் பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் கூறும் மகாவம்ச உரை நாழி என்பது கையளவைக் குறிக்கும் ஒரு அளவை என்றும் ஒரு கவளம் சோறு இது என்றும் கூறும். ஒரு கவளம் கூடச் சோறு கிடைக்காத காலம் ஏக நாழிப் பஞ்சம் என்று அழைக்கப்பட்டது. நாழி என்னும் சொல்ல் இப்போது புழக்கத்தில் இல்லை.

05FR-KARAIKKAL_29905g

Magic mango incident of Karaikal ammaiyar

27 காரணங்களில் 16 காரணங்களை இங்கே பட்டியலிட்டேன். அடுத்த கட்டுரையில் மிக முக்கியமான, பாண்டிய ராஜகுமாரி—விஜயன் திருமணம், யானையை விட்டு குழந்தையைக் கொல்ல முயன்றது, கஜபாகு என்னும் மன்னனால் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கண்டறிந்தது, சோழ நாட்டுப் புத்த பிட்சு இலங்கையில் போர்க்கொடி உயர்த்தியது, நாகர்களின் பட்டியல் முதலியவற்றைக் காண்போம்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: