Written by London swaminathan
Date: 24 FEBRUARY 2017
Time uploaded in London:- 18-29
Post No. 3666
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
“அழுதால் உன்னைப் பெறலாமே” என்று மாணிக்கவாசகர், திருவாசகத்தில் சொன்னார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பிற்காலத்தில் இதையே சொன்னார். இதற்கு அவர் சில சுவையான எடுத்துக்காட்டுகளையும் தருகிறார்.
ஒரு பக்தர் பரமஹம்சரிடம் கேள்வி கேட்டார்: கடவுள் தரிசனத்தை எப்படிப் பெறுவது?
ராமகிருஷ்ண பரமஹம்சர்:
“உருகிய உள்ளத்துடன் உன்னால் அழமுடியுமா? மனைவி, மக்கள், பணம் இவற்றுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் கடவுளைக் காணவேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடும் வரை தாயார், சமையல் முதலிய வேலைகளைச் செய்கிறாள். இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டு பொம்மைகள், குழந்தையின் பசியைப் போக்குவதில்லை; எனவே அவைகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் குழந்தை ‘கோ’வென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், சாதம் பாதி வடித்துக் கொண்டிருந்தாலும் கூட அதை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்”.
இத்தகைய அன்பு, இறைவனிடத்திலும் இருக்கவேண்டும் என்பார் பரமஹம்சர். அப்படியிருந்தால், அழும் குழந்தையிடம் தாயார் ஓடிவருவதுபோல இறைவனும் ஓடிவருவார் என்கிறார்.
அன்பு இருந்தால் அழுகை வரும் என்று வள்ளுவனும் கூறுவான்:
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71)
பொருள்:
அன்பை பிறர் பார்க்கமுடியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் ஏதேனும் உலகில் உண்டா? அன்புள்ளவரி ன் கண்களிலிருந்து மளமளவென்று பெருகும் கண்ணீர்த் துளிகளே, அந்த அன்பை பிறருக்குப் பறைசாற்றிவிடும்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் மேலும் சொல்கிறார்:
“கண்ணபிரானின் சரித்திரத்தையும் லீலைகளையும் நடித்துக்காட்டும் நாடகசாலைகளில், நாடகம் துவங்கும்போது, மேளத்தைக் கொட்டி, ஏ! கிருஷ்ணா! ஓடிவாடா! என்ற பாட்டை உரத்த குரலில் பாடி ஆரம்பிக்கிறார்கள். கிருஷ்ண வேஷத்தைப் போட்டுக்கொண்ட ஆளோ, இதையெல்லாம் கொஞ்சமும் கவனியாது, திரைக்குப் பின்னே வம்பளந்துகொண்டும், சுருட்டு பிடித்துக்கொண்டும் இருக்கிறான். ஆனால் இந்தச் சப்தம் நின்றுபோய், இனிமையான குரலில், மிருதுவான இசையுடன் நாரதர் , நாடக மேடையில் பிரவேசித்து, பக்திப் பரவசராய், கிருஷ்ணனை அழைக்கும்போது, கிருஷ்ண வேஷதாரி, இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று, அவசரமாக நாடக மேடையில் பிரவேசிக்கிறான். ஈஸ்வரா, ஈஸ்வரா! என்று வாயால் மட்டும் கூவும் பக்தர்களிடம் அவன் வருவதில்லை. அவன் வரும்போது, பக்தனுடைய இதயம் திவ்வியப் பிரேமையினால் இளகிப் போகும்; பேச்சு அடங்கிவிடும். மிகுந்த பக்தியோடும் உள்ளன்போடும் அழைக்கும் பக்தர்களிடம் வருவதற்கு ஈஸ்வரன் ஒருபோதும் கால தாமதம் செய்வதில்லை.
இதோ மாணிக்கவாசகரின் கதறல்:–
யானே பொய் என் நெஞ்சும்
பொய் என் அன்பும் பொய்
யானால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்துறுமாறே
பொருள்:-
“தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை அடையலாமா?”
இந்தப் பாட்டில் கேள்வி கேட்பது போல உரை எழுதப்படிருந்தாலும், அழுதால் உன்னைப் பெறலாம் என்றே பொருள் கொள்ளவேஎண்டும் ஏனெனில் இரண்டு பாடல்களுக்கு முந்தியுள்ள பாட்டில்
அழுதேன் நின்பால் அன்பாய்
மனமாய் அழல் சேர்ந்த
மெழுகேயன்னார் – என்ற வரிகளில் தான் தனித்து நின்று அழுவதாய்ப் பாடுகின்றார்.
எனது பழைய கட்டுரை
அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)
Posted on 28 December 2016
–subham-