வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி! (Post No.8306)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8306

Date uploaded in London – – –8 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொங்குமண்டல சதகம் பாடல் 92

வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி!

ச.நாகராஜன்

கொங்கு நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது.

நீர்ச் செழிப்புற்ற நதியை அடுத்திருந்த ஊர் ஸ்கந்தபுரம். இங்கிருந்து கொங்கு நாட்டை ஆண்டு வந்த அரசனது செல்வ மகள் கர்ப்பமுற்றாள். பிரசவ காலம் வரவே சூல் முதிர்ந்து அவளுக்கு வயிற்றுவலி கண்டது. அரசனது ஆணைக்கு இணங்கி கை தேர்ந்த மருத்துவர் பலர் உடனே  வந்தனர். அவர்கள் அவளைச் சோதனை செய்து தலை திரும்பி விட்டது என்றனர்; ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டுத் திரும்பிச் சென்றனர்.

மன்னன் திகைத்தான்.

‘பிண்டத்திற்குச் சற்று தலை பெரியதாக இருக்கிறது. சாதாரணமாக குழந்தை வெளி வராது. குழந்தையும் தாயும் இந்த பேராபத்திலிருந்து மீள்வது அரிது’ என்ற கருத்தை மருத்துவர்கள் கூறினர்.

சிசுவை மாய்த்து தாயை மட்டும் காப்பாற்றலாம் என்று சிலர் சொன்னார்கள்.

ஆனால் மன்னனோ, “கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் என் மகளையும் யார் பிழைக்க வைக்கிறார்களோ அவர்கள் கேட்ட பரிசை நான் அளிக்கத் தயார்” என்று அறிவித்தான்.

ஒருவரும் முன்வரவில்லை. மன்னன் வேதனையுற்றான்.

அப்போது நறையூர் நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கலை (கொங்கு நாவிதச்சி) மன்னனை அணுகினாள். அவள் ஆயுர்வேதக் கலையில் கை தேர்ந்தவள், பிரசவம் பார்ப்பதில் மிக்க அனுபவமுள்ளவள்.

“ஓ, மன்னா! வயிற்றில் பிண்டமிருக்க ஒருத்தி மரணமடைந்தால் அவள் வயிற்றைக் கீறி பிண்டத்தை எடுத்த பின்னரே அவளை இடுகாட்டில் (கனனம்) செய்வர்; அல்லது சுடுகாட்டில் தகனம் செய்வர். இதுவே மரபு. ஆகவே உங்களால் முடிந்தவரையில் தேர்ந்த அரச மருத்துவரை வைத்து முடிந்த வரை பாருங்கள். யாராலும் இயலவில்லை என்று சொல்லிவிட்டால் நான் பார்க்கிறேன்” என்றாள் அவள்.

அவள் மேலும் விளக்கிக் கூறினாள் “அடி வயிற்றைப் பீறி வழி கண்டு சிசுவை வெளியே எடுக்கிறேன். இரண்டு உயிர்களையும் உயிரோடு இருக்க வைப்பேன்” என்றாள்.

மன்னனும் மருத்துவர்களும் சம்மதித்தனர்.

ராஜகுமாரியை உரிய விதத்தில் கீழே கிடத்தி அவள் அடி வயிற்றைக் கீறி, மிகக் குறைந்த நேரத்திலேயே பிரசவத்தை அற்புதமாக முடித்து குழந்தையை உயிரோடு வெளியே எடுத்தாள் மருத்துவி. ராஜகுமாரியும் பிழைத்தாள்.

அரசன் மகிழ்ந்தான். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டனர்.

உடனே மன்னன் மங்கலைப்பட்டி என்னும் ஊரை இறையிலியாக அவளுக்குக் கொடுத்தான்.

அந்தக் காலத்திலேயே சிசேரியன் அறுவைச் சிகிச்சை ( C Section) யில் தேர்ந்தவர்கள் இருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று.

நறையூர் நாடு என்பது தாராபுரமும் சில ஊர்களும் சேர்ந்த ஒரு பகுதியாகும்.

1886ஆம் ஆண்டு வெளியான சாசன பரிசோதனைப் புத்தகம் தொகுதி 1 B -127ஆம் பக்கம் பழனி என்ற பாகத்தில் கொங்கு மண்டலம் நறையூர் நாடு வஞ்சிலாடபுர சீர்மையில், வைகாபுரி நாட்டில் பழனி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கொற்றனூர் சிவாலயத்திலும், பழனிக்கு அடுத்த பெரியாவுடையார் கோவிலிலும் விஜயமங்கலம் No 582,1905 எண்கள் உள்ள சாசனங்களிலும் இப்பெயர் காணப்படுகின்றன.

இராஜமா நகரமான ஸ்காந்தபுரத்தைப் பற்றி தமிழ் நூல்களில் எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை.

கொங்கு அரசர்கள் தானம் செய்த பட்டயங்களிலிருந்து ஸ்காந்தபுரம் என்பது வெளியாகிறது.

இங்கு வந்த மேலை நாட்டு யாத்ரீகர்கள் எழுதியுள்ள குறிப்புகளில், நதிக்கரையில் நஞ்சை நிலத்தின் நடுவில் இருப்பதாக குறிப்பிட்டிருப்பதால் தாராபுரம் அல்லது கரூராக இது இருக்கலாம்.

தாராபுரத்தில் இடிந்த கோட்டை ஒன்று இருக்கிறது. கரூருக்கு வந்த தாலமி அதை ராஜாங்கப்பட்டணம் என்று குறிப்பிடுகிறார்.

பெரிய புராணம், கரூரை சோழாமாநகரங்களுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.

ஆகவே தாராபுரம், கரூர் ஆகிய இரு ஊர்களில் ஒன்று ஸ்காந்தபுரமாக இருக்கலாம்.

இன்னும் நன்கு ஆராய்ச்சி செய்தால் ஸ்காந்தபுரத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தை கொங்கு மண்டல சதகம் பெருமையுடன் 92ஆம் பாடலில் விவரிக்கிறது.

பாடல் இதோ:-

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொருநல்

லிறை மக ளார்மக வீனப் பொறாதுட லேங்கவகிர்

துறைவழி யேற்று மகிழ்வூட்டு மங்கலை தோன்றிவளர்

மறைவழி தேர்நறை யூர்நாடு சூழ்கொங்கு மண்டலமே

பொருள் :-

நிறைந்த தெள்ளிய நீருற்ற ஆற்றினை அடுத்த காந்தபுரத்தை ஆளும் வேந்தன், தனது பெண் கர்ப்ப வேதனையுற்று கரு உயிர்த்தற்கு இயலாது துன்புறுவதைக் கண்ட மருத்துவி அந்தப் பெண்ணின் வயிற்றைப் பீறிக் குழந்தையை எடுத்து சந்தோஷமுறச் செய்தாள். அப்படிப்பட்ட மருத்துவி பிறந்து வளர்ந்த நறையூர் நாடு சூழ்ந்தது கொங்கு மண்டலமே.

tags – C SECTION,சிசேரியன் அறுவைச் சிகிச்சை, ஸ்கந்தபுரம்.

***

Leave a comment

Leave a comment