
Post No. 9123
Date uploaded in London – –9 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 2
ச.நாகராஜன்
2. பரமபதம் அடைவது எப்படி?
பரமபதம் அடைவது எப்படி என்பதை துருவ சரித்திரத்தில் நாரதர் விளக்குவதைக் கண்டோம். மஹாகவி பாரதியாரின் கவிதைப் பகுதி இதே கருத்தை வலியுறுத்துவதை இங்கு கண்டு மகிழலாம்.
எங்கள் மதம் (உயிர் பெற்ற தமிழர் பாட்டு)
தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்
துன்பத்தோடின்பம் வெறுமையென்றோதும்
மூன்றில் எது வருமேனும் – களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி
3. நமது துக்கத்திற்குக் காரணம்!
நமது துக்கத்திற்குக் காரணம் என்ன என்பதை துருவனின் தாயான ஸுநீதி அவனிடம் கூறுகிறாள்:
“அப்பா! பிறர் மேல் அபராதத்தை நினைக்காதே! எவன் பிறருக்குத் துக்கத்தை விளைவிக்கின்றானோ, அவன் தானும் அந்த துக்கத்தையே அனுபவிப்பான். நாம் ஜன்மாந்தரங்களில் எவருக்கு என்ன துக்கத்தை விளைவித்தோமோ, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கின்றோம். ஆகையால் இது நம்முடைய பாவத்தின் பலனேயன்றி வேறன்று. இதற்கு நாம் பிறர் மேல் தோஷத்தை நினைக்கலாகாது.”
பாகவதம் சதுர்த்த ஸ்கந்தம் எட்டாம் அத்தியாயத்தில் இடம் பெறுவது இந்த உரையாடல்.
4. முக்தி அடைய உள்ள மூன்று யோகங்கள்!

தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 37ஆம் அத்தியாயத்தில் வருவது இது:
தேவியானவள் பர்வதராஜனுக்குக் கூறுவது : “மோக்ஷத்தை அடைவதற்குச் சொல்லப்பட்ட வழிகள் மூன்று. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவையே அவை. இம்மூன்றும் எப்போதும் சுலபமாக சுவாதீனம் செய்து கொள்ளலாம்.
5. மூவகை பக்தி
தேவியானவள் மேற்கொண்டு பக்தியின் மூன்று வகைகளை விளக்குகிறாள் இப்படி:-
மனிதர்களின் குண பேதங்களால் பக்தி யோகமானது தாமஸ பக்தி என்றும், ராஜஸ பக்தி என்றும் சாத்விக பக்தி என்றும் மூவகைப்படும்.
தாமஸ பக்தியாவது : பிறர் வருந்தவேனும், டம்பமாகவேனும் மாச்சரியத்தினாலும், குரோதத்தினாலும் என்னிடம் விஸ்வாசம் வைத்துச் செய்யும் செயல்களாம்.
ராஜஸ பக்தியாவது : பிறருக்குத் துன்பம் செய்யாமல் தனக்கு மாத்திரம் நன்மையான செயல்களைச் செய்து கொண்டும் ஏதேனும் ஒரு இச்சையை நாள்தோறும் எண்ணியும் புண்ணிய பலன்களை அனுபவிக்கும் பொருட்டும் பேத புத்தியினால் என்னை உபாசித்தல் ஆகும்.
சாத்விக பக்தியாவது : பாவ நிவர்த்தியின் பொருட்டு எல்லாச் செயல்களையும் ஈஸ்வரார்ப்பணமாகச் செய்வதாகும். இச்செயல் வேதோக்தம் என்பதால் இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிற நிச்சய புத்தியை உடையவனாக ஆதல், ஆண்டான் அடிமை என்கிற பேத புத்தியோடு தெய்வத்தினிடத்தில் பிரியம் உடையவனாக இருத்தல் முதலியனவாம்.
6. தேவியின் ஒரு இமை கொட்டும் காலம், மனிதர்களின் காலத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு?
தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்கந்தம் அத்தியாயம் எட்டில் வரும் அற்புதமான கால அளவைகள் கீழே தரப்படுகின்றன.
மனிதர்களுக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். மனிதர்களுக்கு முன்னூற்றறுபது யுகம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஒரு யுகமாகும்.

எழுபத்தோரு தேவ யுகம் ஒரு மன்வந்தரமாகும்.
அது இந்திரனுடைய காலத்துக்குச் சமமாகும்.
இருபத்தெட்டு இந்திரகாலம் கழிந்தால் அது பிரம்மாவுக்கு ஒரு நாளாகும்.
நூற்றேட்டு வயதானால் பிரம்மாவுக்கு ஆயுள் முடிந்து விடும்.
அப்போது பிராகிருத பிரளயம் ஏற்படுகிறது. பூமி ஜலத்தினால் மூடப்பட்டு விடும்.
மும்மூர்த்திகளும், மஹரிஷிகளும், சகல ஞானிகளும் சத்ய ரூபமான சிதாத்மாவில் ஐக்கியமாகின்றனர்.
பிரகிருதியும் சிதாத்மாவில் லயமடையும் காலமானது தேவிக்கு இமை கொட்டும் காலமாகும்.
இவ்வாறு அசைவில்லாத பிரம்மாண்டங்கள் லயித்துப் போகின்றன.
மறுபடியும் தேவி சிருஷ்டிகிரமத்தால் ஒரு நிமிஷ காலத்துக்குள் சிருஷ்டித்து விடுகிறாள்.
இப்படி சிருஷ்டிலயம் கற்பங்கள் எத்தனையோ நடந்து விட்டன.
இதன் கணக்கையும், பிரம்மாண்டங்களின் கணக்கையும் எவர் அறிவார்?!
***
tags- புராணத்துளிகள், மூன்று யோகங்கள்