உலக இந்து சமய செய்தி மடல் 7-2-2021 (Post No.9240-B)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9240-B

Date uploaded in London – –7 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று FEBRUARY 7 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.6 கோடி நிதி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தொகை ரூ.6 கோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சீபுரம் சங்கர மடத்தில் பொதுமக்கள் அனைவரும் காணிக்கை செலுத்துவதற்காக இரு பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் காலையிலிருந்தே கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் வரிசையாக நின்று காணிக்கைகளை உண்டியல்களில் செலுத்தினார்கள். மொத்தமாக சேர்ந்த நிதியை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையிடம் வழங்கும் விழா மாலையில் சங்கரமட வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு காஞ்சீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து அருளாசியுரை வழங்கினார். உடுப்பி பேஜாவர் மடத்தின் பீடாதிபதி விஷ்வப்பிரசன்னதீர்த்த சுவாமிகள் முன்னிலை வகித்தார். பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி எஸ்.ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தஞ்சாவூரை சேர்ந்த எம்.ஜி.வி.மோகன் என்ற கல்வியாளர் ரூ.5 கோடியும், சென்னை எம்.எஸ்.மூர்த்தி ரூ.25 லட்சம், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.வேதாந்தம் ரூ.19 லட்சம், சென்னை ஜெயசங்கர் ரூ.14 லட்சம், புனே சங்கர மடம் சார்பில் ரூ.5 லட்சம், ஹைதராபாத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத சங்கர மடத்தின் பக்தர் ரூ.25 லட்சம், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளரான கோவிந்த தேவ்கிரி சுவாமிகள் சங்கர மடத்தின் பக்தர் என்பதற்காக அவர் ரூ. 11 லட்சம் என பலரும் காணிக்கையாக தனித்தனியாக வழங்கினார்கள்.

இவர்களைத் தவிர சங்கரா கலை அறிவியல் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் ரூ.1.50 லட்சம் உட்பட பொதுமக்கள் வழங்கிய தொகை ரூ.1 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.6 கோடி நிதி அயோத்தி கோயில் கட்டும் பணிக்காக சங்கரமடம் பக்தர்கள் சார்பில் காணிக்கையாக வழங்கப்பட்டது.

விழாவினை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் பிருந்தாவனம் வெள்ளி வேலுடன் கூடிய வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Xxxxxx

இந்து கடவுள்களை தொடர்ந்து அவமதிப்பதாக கூறி எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வக்கீல்; பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு

கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக இருந்து வருபவர் கே.எஸ்.பகவான் (வயது 75). இவர் சமீபகாலமாக இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. ராமர் ஒரு குடிகாரர் என்று கூறி கே.எஸ்.பகவான் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் அவர் தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கே.எஸ்.பகவான் மீது போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் இந்து மதம் என்று எதுவும் இல்லை. இந்து மதம் அவமானகரமானது. கண்ணியம் உள்ளவர்கள் இந்து மதத்தில் இருக்க கூடாது என்று கே.எஸ்.பகவான் கூறி இருந்தார். இதையடுத்து இந்துக்களை அவமதித்ததாக கே.எஸ்.பகவான் மீது, வக்கீல் மீரா ராகவேந்திரா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி 03 நடந்தது.

முகத்தில் கருப்பு மை பூச்சு

இந்த வழக்கில் ஆஜராக கே.எஸ்.பகவான், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த பெண் வக்கீலான மீரா ராகவேந்திரா, இந்து மதத்தை அவமதிப்பது குறித்தும், இந்து கடவுள்களை தொடர்ந்து இழிவாக பேசி வருவது குறித்தும் கே.எஸ்.பகவானிடம் கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த கருப்பு மையை எடுத்து கே.எஸ்.பகவான் முகத்தில் பூசினார்.

இதனை சற்றும் எதிர்பாராத கே.எஸ்.பகவான் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் வக்கீல் மீரா ராகவேந்திராவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு உண்டானது.

தானே ஒரு வழக்கறிஞர் என்பதால் நீ தித் துறையை மதிப்பதாகவும் கே.எஸ் பகவான் போன்றோருக்கு பாடம் கற்பிக்கவே இவ்வாறு கருப்பு மை பூசியதாகவும்  மீரா கூறினார்

2 பிரிவுகளில் வழக்கு

இந்த சம்பவம் குறித்து வக்கீல் மீரா ராகவேந்திரா மீது அல்சூர்கேட் போலீசில் கே.எஸ்.பகவான் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மீரா ராகவேந்திரா மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 341 (தவறான நோக்கத்திற்காக தடுப்பது) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பது, பொது அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்து கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வந்ததால் எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மையை பூசினேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள வக்கீல் மீரா ராகவேந்திரா, கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய வீடியோவையும் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

xxxx

சென்னையில் திருப்பதி பத்மாவதி கோவில்- நடிகை காஞ்சனா நன்கொடை

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட சென்னை ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும்.



சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது.


இதேபோல திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோவிலையும் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.

இப்போது ஜி.என்.செட்டி ரோட்டில் கோவிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும். அதை அவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

மொத்தம் 14 ஆயிரத்து 880 சதுர அடியில் கோவில் கட்டப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.



கோவில் ரூ.6 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது.

கோவிலுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவாகும் என முதலில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் அலங்கார செங்கல் கொண்டு கட்டுவதாக முடிவு செய்து இருந்தனர்.

அதன் பிறகு ஐதராபாத், குருஷேத்ரா ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் போல கிரானைட் மூலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அதன் மதிப்பீடு தொகை ரூ.6 கோடியே 85 லட்சமாக உயர்ந்துள்ளது.

xxxxx

திருவானைக்காவல் கோவிலில் பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுப்பு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுமார் 3 அடி, 2 அடி உயரத்தில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த சிவலிங்கங்கள் பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன.

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்தநிலையில் இந்த கோவிலின் 3-வது பிரகாரத்தில் குபேர லிங்கேஸ்வரர் சன்னதி அருகே உள்ள சுற்றுச்சுவரை இடித்து புனரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சுற்றுச்சுவர் அருகே இருந்த புதரில் நேற்று காலை சுமார் 3 அடி, 2 அடி உயரத்தில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன.


தற்போது அந்த சிவலிங்கங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அதனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில் வளாகத்திலுள்ள நெற்களஞ்சியம் அருகே தங்ககாசு புதையல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Xxxx

சதுரகிரி கோவிலுக்கு 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை, கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தை அமாவாசை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைெயாட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.


இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தை அமாவாசைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வத்திராயிருப்பு வழியாக உள்ள தாணிப்பாறை மலைப்பாதை, மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் வாழைத்தோப்பு மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

xxxxx

பெரம்பலூர் அருகே களிமண்ணால் அம்மாயி- பாட்டன் பொம்மை செய்து கிராம மக்கள் நூதன வழிபாடு

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் அம்மாயி-பாட்டன் மூதாதையர்கள் வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு பின்பு நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன அடையாளம் தெரியாத மூதாதையர்கள் கரடுமுரடான நிலங்களை திருத்தியும், நெருப்பு, சக்கரம் உள்ளிட்ட உபகரணங்களை கண்டுபிடித்தும் தற்போது வாழும் வாழ்க்கையை செம்மைப்படுத்தி உள்ளனர்.

அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூதாதையர் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு அம்மாயி-பாட்டன் நூதன வழிபாடு பிப்ரவரி மூன்றாம் தேதி  நடந்தது. கிராம மக்கள் மூதாதையர்களின் உருவம் போன்று களிமண்ணால் பொம்மை செய்து, அவற்றை கன்னிப்பெண்களின் தலையில் சுமந்து வரச்செய்து, ஊரின் நடுவில் பந்தல் அமைத்து அதில் வைத்து நள்ளிரவில் வழிபட்டனர்.


மூதாதையர்களின் உருவ பிரதிமைகளுக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். பின்னர் விடியும் வரை காவல் காத்து காலையில் சூரிய ஒளியில் தென்பட்டவுடன் உருவபொம்மைகளை நீர்நிலைகளுக்கு மேளதாளங்கள் முழங்க ெகாண்டு சென்று, கரைத்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதனையொட்டி பெண்கள் குலவையிட்டு, கும்மி பாட்டுக்களை பாடி கோலாட்டம் ஆடினர். நாட்டுப்புறப்பாடல்களும் பாடப்பட்டன.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags-  tamilhindunews, 7221

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: