புத்த பூமி ஹாங்காங்! (Post No.11,111)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,111

Date uploaded in London – –    17 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

புத்த பூமி ஹாங்காங்!

ச.நாகராஜன்

12-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலகின் அழகிய நகரம்

தென் கிழக்கு ஆசியாவில் சீனாவின் விசேஷ நிர்வாகப் பகுதியாக இப்போது விளங்கும் நகரம் ஹாங்காங்.

1841 வாக்கில் பிரிட்டிஷார் வசமான ஹாங்காங் ஒருவழியாக அவர்கள் பிடியிலிருந்து 1997இல் மீண்டது. இடையில் 1941 முதல் 1945 வரை ஜப்பான் வசம் இருந்தது.

420 சதுரமைல் பரப்பளவைக் கொண்ட ஹாங்காங்கில் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். சுமார் 200 தீவுகளைக் கொண்டுள்ளது இது.

இங்கு வாழும் பண்பாடுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரியது; சராசரி ஆயுள் 81 வயது. வெப்ப நிலை குறைந்த பட்சம் 14 டிகிரி செல்ஸியஸ். அதிக பட்சம் 31 டிகிரி செல்ஸியஸ்.

ஸ்கைஸ்க்ரேபர்ஸ் எனப்படும் வானளாவிய  கட்டிடங்கள் உலகிலேயே அதிகமாக உள்ள இடம் ஹாங்காங் தான்!  7687 அடுக்கு மாடி கட்டிடங்களும் 303 ஸ்கைஸ்க்ரேபர்களும் இங்கு உள்ளன. இவற்றின் உச்சியிலிருந்து ஹாங்காங்கை எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகு தான்! பன்னாட்டு வணிக வளாகம் 1607 அடி உயரம் உள்ளது. இது தான் இங்கு உயரமான கட்டிடம்.

பொதுவாகவே உலகின் அழகிய நகரங்களுள் சிறந்தது ஹாங்காங் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. ஒரு புறம் காடுகள் அடர்ந்த மலை, இன்னொரு பக்கம் வானளாவிய கட்டிடங்கள், இன்னொரு புறம் நீலத் திரைகடல் ஓரம் அமைந்துள்ள விக்டோரியா துறைமுகம் என இப்படி பல்முக பரிமாண அழகு கொண்டது இந்த நகரம்.  

ஃப்ராக்ரண்ட் ஹார்பர்

ஹாங்காங் துறைமுகத்தை மணம் வீசும் துறைமுகம் (Fragrant Harbour) என்ற செல்லப் பெயரால் உலக மக்கள் அழைக்கின்றனர்.

ஏனெனில் சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு ஹாங்காங் நகரின் சுற்றுப்புறம் எங்கும் மணம் வீசும் ஈகிள்வுட் அல்லது அகர்வுட் எனப்படும் அகுயிலரியா வகை மரங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இவற்றின் பிசினால் மணம் வீசும் பத்திகள் தயாரிக்கப்பட்டன. ஒரு கிலோ பிசின் சுமார் ஆறு லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பித்து அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. சீன காண்டோனீஸ் மொழியில் ஹாங் மற்றும் காங் என்பது மணம் வீசும் வாசனை ஹார்பர் என்பதற்கான சொற்கள். இதுவே ஹாங்காங் என்ற பெயர் வரக் காரணம் ஆனது.

இப்போது இந்த வகை மரங்களை வெட்டக்  கூடாது என்று அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் இப்போது ஹாங்காங்கில் சுமார் 300 மரங்களே எஞ்சி உள்ளன!

ஹாங்காங்கைப் பார்ப்பதற்கு பல்வேறு பயணத் திட்டங்கள் உள்ளன.

ஓரியண்டேஷன் டூர் என்று போனால் நகரை ஒரு நாளிலோ இரு நாளிலோ சுற்றிப் பார்த்து விடலாம். குங் பூ ரசிகர் என்றால் குங் பூ டூரை மேற்கொள்ளலாம். புத்தரின் எல்லையற்ற கருணையைப் பெற வேண்டுமெனில் புத்தா டூரை மேற்கொள்ளலாம்.

புதன்கிழமை மியூஸியங்கள்

முதலில் இங்குள்ள பல மியூஸியங்களைப் பார்த்து விட வேண்டும். புதன்கிழமையன்று மட்டும் அனுமதி இலவசம். ஆகவே கூட்டமும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் அனுமதிக் கட்டணமும் குறைவு தான். 10 ஹாங்காங் டாலர் தான்! (ஒரு ஹாங்காங் டாலரின் இந்திய மதிப்பு பத்து ரூபாய் எட்டு பைசா!) ஹாங்காங் ஹெரிடேஜ் அருங்காட்சியகம், கலைக் காட்சியகம், டாக்டர் சன் யாட் சென் அருங்காட்சியகம், கடற்கரை பாதுகாப்பு அருங்காட்சியகம், வரலாற்று அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் என ஏராளமானவை பார்க்க உள்ளன.

க்ரூஸ் சொகுசு கப்பல் பயணம்

இங்கு ‘ஏழு நாட்கள் சொகுசுக் கப்பல் பயணம் என்ற திட்டத்தில் அழகிய கப்பல் பயணத்தை மேற்கொண்டு இயற்கையை ரசிக்கலாம். கட்டணம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் நூறு ஹாங்காங் டாலர் ஆகும்.

புத்தா டூர்

ஹாங்காங் புத்த பூமி என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான எட்டு புத்த ஆலயங்கள் இங்கு உள்ளன.

மான் மோ ஆலயம் இங்குள்ள மிகப் பழம் பெரும் ஆலயம்.

வாங் தாய் சின் ஆலயம் பிரமிக்க வைக்கும் வரலாற்றைக் கொண்டது. வாங் தாய் சின் என்பவர் அபூர்வ தெய்வீக சக்தி கொண்ட புத்த துறவி.  அவர் பெயரால் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் யார் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடக்கும் என்பது வழி வழியாகச் சொல்லப்பட்டு வரும் மரபு வாக்கியமாகும்.

சீ குங் ஆலயம் என்பது சாங் வமிசத்தில் ராணுவ தளகர்த்தராக இருந்த சீ குங் என்பவரின் பெயரை கௌரவப்படுத்தும் ஒரு ஆலயம். அவர் காலரா உள்ளிட்ட வித விதமான வியாதிகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தினார் என்பது வரலாறு, பல போர்களில் வென்றவர் அவர். அவர் மறைந்த போது அவரை கௌரவிக்கும் வண்ணம் இந்த ஆலயம் நிறுவப்பட்டது.

அருகில் உள்ள லண்டாவ் தீவில் டியான் டான் ஆலயம் உள்ளது. இங்கு அமர்ந்த நிலையில் புத்தர் காட்சி தருகிறார். துன்பத்தைப் போக்கும் வண்ணம் அவரது வலது கை இருக்க சந்தோஷத்தைக் குறிக்கும் வண்ணம் அவரது இடது கை உள்ளது. 34 மீட்டர் உயரத்தில் உள்ள  250 டன் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட  இந்த சிலை அமைக்க

பத்து ஆண்டுகள் ஆனது; 1993ஆம் ஆண்டு இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.

லண்டாவ் தீவிற்கு கேபிள் கார் சவாரி மூலமாகவோ அல்லது கார், பஸ் மூலமாகவோ போகலாம். ஹாங்காங்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இதை அரை மணி நேரத்தில் சென்று அடைய முடியும்.

பத்தாயிரம் புத்தர் ஆலயம்

அடுத்து வியக்க வைக்கும் பத்தாயிரம் புத்தர் ஆலயம் நம்மை பிரமிக்க வைக்கும். ஆம், பத்தாயிரம் புத்தர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ள ஆலயம் இது. ஹாங்காங் நகரிலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் பாய் தா கிராமத்தில் ஷா டின் என்ற இடத்தில் உள்ளது இது. மடாலயம் என்று இது அழைக்கப்பட்டாலும் கூட, இங்கு துறவிகள் யாரும் வசிப்பதில்லை. சுமார் 430 படிகள் வழியே உச்சியை அடையும் போது ஆங்காங்கே மலை மற்றும் மலை சார்ந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்து மகிழ்வதோடு போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம். பத்தாயிரம் புத்தர்கள் நிஜமாக இருக்கிறார்களா என்று எண்ணிப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் எண்ணிப் பார்த்தவர்கள் பதிமூன்றாயிரத்திற்கும் அதிகமான புத்தர் சிலைகள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வெவ்வேறு வடிவங்களில் இருப்பதை உறுதிப் படுத்தி இருக்கின்றனர். 1951இல் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்களில் முடிக்கப்பட்டது. தங்கத்தினால் ஆன புத்தர் சிலைகளும் இங்கு உண்டு.

இந்த புத்த மடாலயம் ஹாங்காங் நூறு டாலர் நோட்டின் பின்புறம் இருப்பதால் உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் உங்கள் கையில் அந்த பழைய நோட்டு (1985-2002 காலத்தியது) இருந்தால் பார்க்க முடியும்.

குங் பூ டூர்

ஹாங்காங் என்றவுடனேயே அனைவரின் நினைவுக்கும் வருவது ப்ருஸ் லீயின் பெயரும் எண்டர் தி ட்ராகன் திரைப்படமும் தான்.

குட்டி டிராகன் என்று அழைக்கப்பட்ட ப்ரூஸ் லீ மின்னல் வேக அதிரடி மன்னன். சீன ஜோதிடத்தின் படி ட்ராகன் ஆண்டில் ட்ராகனைக் குறிக்கும் மணி நேரத்தில் பிறந்தவர்.

அவரது சிலை ஹாங்காங்கில் நிறுவப்பட்டிருக்கிறது. அவர் எண்டர் தி ட்ராகனை எடுத்த விக்டோரியா ஹார்பர் உள்ளிட்ட பல இடங்களும் இந்த குங் பூ டூரில் இடம் பெறும்.

உலகின் அதிவேக மின்னல்தாக்கு வீரனான ப்ரூஸ் லீ (பிறப்பு 27-11-1940 மறைவு 20-7-1973) பற்றிய ஏராளமான அறிவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ஒன் இன்ச் பஞ்ச் என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து அவரை வீழ்த்தும். இந்த ஒரு அங்குல இடைவெளியிலிருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமான அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர்.

தன் வாழ்நாளில் ப்ரூஸ் லீ யாரிடமும் தோற்றதில்லை. தனக்கென சில விசேஷமான கொள்கைகளை அவர் வகுத்திருந்தார்; அதைக் கடைசி வரைக் கடைப்பிடித்தார். அதைக் கடைப்பிடிப்போருக்கு வெற்றி என்பதையும் உறுதிப் படுத்திச் சொல்லி வந்தார்.

வாழ்க்கையில் வெற்றி பெற அந்த மின்னல் மன்னன் தந்த கொள்கைகளின் சுருக்கம் இதோ:

 “பத்தாயிரம் முறை உதையைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபொதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் அவர்.

ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும் என்றார் அவர்.

தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது.

“ஒரே வடிவில் இருக்க வேண்டாம்; அதை ஆரம்பமாகக் கொண்டு முன்னேறுங்கள். உங்களுக்கு உரியதைக் கட்டமையுங்கள். அது வளரட்டும்; தண்ணீர் போல  இருங்கள்” என்று வெற்றிக்கான வழியைக் கூறிய அவர், ‘சூழ்நிலைகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; நான் வாய்ப்புகளை உருவாக்குவேன்’ என்றார்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிரடி படங்களைத் தயாரித்தவர் சர் ரன் ரன் ஷா. 107 வயது வாழ்ந்து 2014இல் மறைந்த இவரது தயாரிப்பில் உருவான படங்கள் அனைவராலும் பேசப்படும் படங்கள்! அவரால் ஆதரிக்கப்பட்ட அதிரடி மன்னன் ஜாக்கிசானின் ஊரும் ஹாங்காங் தான்!

ப்ரூஸ் லீ மற்றும் குங் பூ படங்கள், பயிற்சி மையங்கள் பற்றிய அனைத்தையும் குங் பூ டூரில் அறியலாம்.

கடை வீதிகள்

ஹாங்காங்கில் ஏராளமான கடைவீதிகள் உண்டு. பிரசித்தி பெற்ற இரவு நேரக் கடை வீதியில் இரவில்  சென்று வாங்க முடியும். அங்கு அவர்கள் கேட்ட விலையையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நன்கு பேரம் செய்து வாங்கலாம்.

ஹாங்காங் சென்றவர்கள் பல்வேறு உணவு வகைகளை ருசித்துப் பார்க்கலாம். உலகில் உணவு விடுதிகளுக்குப் பெயர் பெற்ற இடம் ஹாங்காங் தான்! விதவிதமான தயாரிப்புகள், சுவையோ சுவை!

பன்னாட்டு விமான நிலையம்

ஹாங்காங் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நினைக்க வேண்டாம். 24 மணி நேரமும் இயங்கும் உலகின் மிக சுறுசுறுப்பான இந்த நிலையத்தைப் பற்றி வர்ணிக்கப் போதுமான வார்த்தைகளே கிடைக்காது. 180 நகரங்களை 100 ஏர்லைன்ஸ் கம்பெனிகளின் மூலம் இணைக்கும் இந்த விமான நிலையத்திற்கு வருடத்திற்கு சுமார் 7 கோடி பயணிகள் வருகின்றனர்.

இங்கு நான் காலடி வைத்த ஐந்து நிமிடங்களுக்குள் எனக்கு விமான நிலையத்திலிருந்து இணையதள இணைப்பு சேவை (இலவசம் தான்) கிடைத்தது. அனைவருடனும் தொடர்பு கொள்ள முடிந்தது. சுமார் நான்கு மணி நேரம் சுற்றிப் பார்த்தேன். அவ்வளவு பிரம்மாண்டமான அழகான நிலையம். தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஒரு வரியில் ஹாங்காங்

ஹாங்காங் பற்றி ஒரு வரி சொல்லுங்களேன் என்றால் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தைத் தான் அனைவரும் சொல்வர்- அது இது தான் ;

ஹாங்காங்கை விட்டு நீங்கள் பிரிந்தாலும் அது உங்கள் நினைவை விட்டு ஒருபோதும் பிரியாது!

***

tags- ஹாங்காங்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: