அருணகிரிநாதரும் தமிழும்! – 4 (Post No.11,396)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,396

Date uploaded in London – –    30 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 4 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

31) திருத்தணிகை

விரித்து அருணகிரிநாத னுரைத்த தமி ழெனுமாலை

   மிகுத்த பலமுடனோத – மகிழ்வோனே

 பாடல் எண் 299 : வரிக்கலையின் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அருணகிரிநாத என்ற இந்த பக்தன் விரிவாக உரைத்த, தமிழினால் ஆன இந்த திருப்புகழ் மாலையை நிரம்பிய ஆற்றலுடன் பாட உள்ளம் மகிழ்பவனே!

32) திருத்தணிகை

வெடித்தமணர் கழுவேற ஒருத்தி கண வனுமீள

  விளைத்ததொரு தமிழ்பாடு – புலவோனே

 பாடல் எண் 299 : வரிக்கலையின் எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சமணர்கள் உடல் வெடித்துக் கழுமரத்தில் ஏறவும் ஒப்பற்ற மங்கையர்க்கரசியின் கணவனாகிய பாண்டியன் சமணமெனும் படுகுழியிலிருந்து உயிர் மீளவும், அற்புதங்களை விளைத்த தேவாரத் தமிழ் மறையைப் பாடிய ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே!

33) காஞ்சீபுரம்

 இணக்கிப்பத் திமைச்செச்சை பதத்தைப்பற் றுகைக்குச் சொற்

 றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் – திரிவேனோ

பாடல் எண் 326 : கடத்தைப் பற்று எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உனது திருவடியைப் பற்றி உய்வதற்கு, சொல்லத்தக்க தமிழ் மொழி கொண்டு உனது வீரத் திருப்புகழைச் சொல்லித் திரியும் பாக்கியம் எனக்கு அமையுமோ?

 34) காஞ்சீபுரம்

திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்

 திருக்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே

பாடல் எண் 327 : கருப்பற்றி பருத்து எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் விளங்கும், சிறப்பு வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே!

35) காஞ்சீபுரம்

காந்தக்கலு மூசியு மேயென

  ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு

    காஞ்சிப்பதி மாநகர் மேவிய – பெருமாளே

பாடல் எண் 351 : வாய்ந்தப்பிடை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணாக்கருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற மேன்மை பொருந்திய காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

 வரலாறு : இந்த அடிகளில் குறிப்பிடப்படும் வரலாறு இது:

காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகராக இருந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் கந்தபுராணத்தை இயற்றினார். அந்தப் புராணத்தின் ஏட்டை தினமும் இரவில் முருகனின் திருவடியில் அவர் வைப்பது வழக்கம். மறுநாள் காலையில் அதில் சில திருத்தங்கள் காணப்படும். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிக் குறிப்பிடும் ஒன்று என்று கொள்ளலாம்.

 36) திருவானைக்கா

துஞ்சலி லாதச டக்ஷரப்பிர

   பந்தச டானன துஷ்டநிக்ரக

     தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய – பரிபாலா

 பாடல் எண் 353 : அஞ்சன வேல்விழி இட்டு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே, (மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல் இசை நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே

 வரலாறு : இங்கு மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய்த் தோன்றி தமிழைப் பரிபாலித்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.

37) திருவானைக்கா

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்

  சோதிவளர் காவைப் – பெருமாளே

பாடல் எண் 356 : ஆரமணிவாரை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளியுடன் பொழுது போக்கிக் காவல் இருப்பவனே, தமிழ் மறையாகிய தேவாரத்தை (திருஞானசம்பந்தராகத் தோன்றி) அருளிய ஜோதி மூர்த்தியே, வளரும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே!

 38) திருவானைக்கா

அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்

 அனற்கே புனற்கேவ – ரைந்த ஏடிட்(டு)

   டறத்தாயெனப் பேர் படைத்தாய்

பாடல் எண் 358 : உரைக்காரிகை எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞானசம்பந்தராகச்) சென்று அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரம்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய்.

 வரலாறு: இங்கு திருஞானசம்பந்தர் அனலிலும் புனலிலும் ஏட்டினை இட்ட வரலாறு சொல்லப்படுகிறது. முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்ற கருத்தைப் பல இடங்களிலும் அருணகிரிநாதர் இப்படி வலியுறுத்திக் கூறுகிறார்.

39) திருவருணை

 இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித்

   திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் – தருவாயே

பாடல் எண் 399 : இரவு பகற்பலகாலும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : இரவும், பகலும், பல முறையும் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக!

 40) திருவருணை

தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்

  கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்

   தகுமாமிட றொலியாரித ழாஞ்சுலை தேன் கனியின் – சுவை சேருந்

பாடல் எண் 427 : தமிழோதிய குயிலோ எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ, காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ என்னும் படி குரலை உடைய மிக்க செம்மையான தக்கதான சிறந்த கண்டத்து ஒலியை (புள் குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச்சுளை, தேன், பழம் ஆகியவற்றின் சுவை சேர்ந்ததாகும்.

***

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

புத்தக அறிமுகம் – 98

விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-1)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. காஸினியின் சனி கிரக பயணம்! 

 2. கென்னடி கண்ட கனவு

 3. விண்வெளி வீரர்கள்   

 4. விண்வெளிக் கலம்    

 5. சந்திரனில் மனிதக் குடியிருப்பு   

 6. செவ்வாயில் வயல்வெளிகள் உருவாக்குவோம்   

 7. செவ்வாயில் வீடுகள்! 

 8. கிரகங்களின் ராஜா வியாழன்!    

 9. மர்ம கிரகம் புதனை நோக்கி..

10. வித்தியாசமான வெள்ளி    

11. உயிர் கொடுக்கும் சூரியன்  

12. இலக்கிய மணம் கமழும் யுரேனஸ்!   

13. நெப்ட்யூனை நோக்கிய நீளமான விண்வெளிப்பயணம்!  

14. ஸ்க்ராம் ஜெட்டின் பயணம் 

15. விண்வெளியில் பறக்கலாம் வாங்க!    

16. சூர்ய மண்டலத்தை நினைவில் கொள்ள எளிய உத்தி!  

17. டைடனில் தரை இறங்கிய ஆய்வுக்கலம்    

’18. டீப் இம்பாக்ட்’ திரைப்படம்  

19. சூரியனைச் சுற்றும் வால் நட்சத்திரத்தில் இறங்கும் ரொஸெட்டா!  

20. ரஷிய விண்வெளி நிலையம் மிர் 

21. சந்திரனில் சீன டைகோனெட்!    

22. பன்னாட்டு விண்வெளி நிலையம் (1)   

23. பன்னாட்டு விண்வெளி நிலையம் (2)   

24. விண்ணில் சுற்றும் உளவுக் கண்கள்   

25. விண்வெளியில் சீன ஆதிக்கம்    

26. சாட்டிலைட் புரட்சி    

27. வானிலிருந்தே உதவிகள்!   

28. 60 நாட்களில் செவ்வாய் சென்று திரும்பலாம்!

29. ஸ்டார் ட்ரெக் பயணம் சத்தியமா?

30. சொல்லித் தெரிவது மன்மதக்கலை!    

31. வானமெங்கும் வைரமும், தங்கமும்!   

32. வாடகைக்குக் கிடைக்கும் சாட்டிலைட் 

33. விண்வெளியில் செக்ஸ் சாத்தியமா?   

34. புதிய சோதனை நடத்திய விண்வெளி வீரர்  

35. டெலிபதியும் டெக்கில்பதியும்!

36. விண்வெளி அறிவியல் ஏற்றம் தந்த ஸ்டார் வார்ஸ்!   

37. புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தும் ஸ்டார் வார்ஸ்    

38. விண்வெளியில் எத்தனை பரிமாணங்கள்!    

39. விண்வெளியில் டீப் இம்பாக்ட் மோதல்!

40. டிஸ்கவரி சாதனை    

41. கொலம்பியா விபத்து  

42. கொலம்பியாவின் சோதனையும் டிஸ்கவரியின் சாதனையும்! 

43. கல்பனா சாவ்லாவும் ஜலீன் காலின்ஸும்   

44. நாஸாவின் கவலை தீர்த்த டிஸ்கவரி!  

45. விண்வெளிக்கொடி

46. பரபரப்பூட்டும் பத்தாவது கிரகம்   

47. சந்திரனில் குடியேறி பூமியைக் காப்போம்   

48. விடாதே பிடி, விண்கல்லை!

49. மாக்னிபிஷண்ட் டெஸொலேஷன்

*

இந்த நூலுக்கு எனது நண்பரும் மிகப் பெரிய விஞ்ஞானியுமான திரு வி. தேசிகன் அவர்கள் வழங்கிய அணிந்துரை :

நான் டி ஆர் டி ஓ-விலிருந்து (DRDO) ஓய்வு பெற்ற விஞ்ஞானி. மதுரையில் 1990ஆம் ஆண்டு சுந்தரம் இண்டஸ்ட்ரீஸில் (டிவிஎஸ் நிறுவனம்) ஒரு பெரிய இண்ஸ்ட்ருமென்டேஷன் வேன் எனப்படும் அதி நவீன சாதனங்களைக் கொண்டுள்ள வாகனம் ஒன்றைக் கட்டும் போது முதன்முதலாக திரு நாகராஜனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது திரு நாகராஜன் அங்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக (Research and Development Manager) வாகனக் கட்டுமானப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். குதூகலமான காலங்களை இருவரும் சேர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில் கொண்டிருந்தோம். வேலக்கு இடையே இருக்கும் ஓய்வு நேரங்களில், நாகராஜனைப் பற்றிய மறு பக்கத்தை நான் அறிய நேர்ந்தது. தன்னுடைய எழுத்தாற்றலினாலும் தனித்துவம் வாய்ந்த சிந்தனையாலும், தொடர்ந்து எதையும் கற்க விரும்பும் ஞான தாகத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மிக்க எளிமையாலும் அவர் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து விண்வெளியில் மனித சாதனைகள் என்ற புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து என்னை ஒரு அணிந்துரை எழுதுமாறு வேண்டிக் கொண்டார்.வெவ்வேறு உணர்ச்சிகளின் கலவையாக அது எனக்கு அமைந்தது – சாதனை புரிய வேண்டும் என்ற மகத்தான உற்சாகத்துடன் விளங்கிய அந்த நாட்களின் விஞ்ஞானிகள், வானவியல் விஞ்ஞானிகள், விண்வெளி வீர்ர்கள், பொறியியல் வல்லுநர்களை நான் போற்றி வியந்ததும் என்னை அவர் முன்னுரை எழுதத் அணுகியதும் என்னை எப்படி பல்வேறு விஷயங்களைக் கொண்ட ஒரு பெரிய நூலுக்கு ஒரு சிறிய முன்னுரை எழுத முடியும் என்று என்னைக் கவலை கொள்ளச் செய்தது.

 இந்த நூலில் உள்ள பொருளடக்கத்திற்கு வரும் முன்னர் மனிதனிடம் இதுவரை தெரிந்து கொள்ளாத எல்லைகளை அறிந்து கொள்ளத் தொன்று தொட்டு இருந்து வரும் தூண்டுதலைப் பற்றி உங்களுக்கு ஒரு  உடனடியாகப் புரிந்து கொள்ளும் சுருக்கம் ஒன்றைத் தர விழைகிறேன்.

மனிதர்கள் தமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி அறிந்து கொண்டு அதைக் காண விழைய ஒரு பெரும் தூண்டுதல் உணர்வைக் கொண்டவர்கள்.

 உணவு, நீர், உறைவிடம் ஆகியவற்றிற்காக குகையில் வாழ்ந்த மனிதன் நாடெங்கும் மலையெங்கும் சுற்றி அலைந்தான்.

பின்னர் மனிதன் படகுகளையும் கப்பல்களையும் கட்டக் கற்றுக் கொண்டான். முன் பின் தெரியாத இடங்களுக்குப் பயணித்து கடலை அளந்தான். ரயில் பாதைகள், நீராவிக் கப்பல்கள் அதன் பின்னர் சாலையில் செல்லும் வாகன ங்கள் ஆகியவை மனிதனின் பயணத்தைச் சுலபமாக்கின. 1901இல் ஆரம்பித்த விமானப் பயணம் கடைசி முன்னேற்றத்தையும் தந்தது.

 60 ஆண்டுகளுக்குள்ளாகவே பயணிகள் செல்லும் கப்பல் கடந்த கால கலைப்படைப்பாக ஆகி விட்டது.விமானப் பயணமோ பூமியின் மேலிருந்து பூமிப் பரப்பைப் பார்த்து வரைபடங்களை அமைக்க வழி வகுத்தது.

நிலத்தையும் கடலையும் அளந்த பின்னர், வானத்தின் பக்கம் மனிதனின் கவனம் திரும்பியது. விண்ணோ எல்லையற்றது. அளக்கமுடியாதது.

டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அறிவியலில் பழைய காலத்திலிருந்து இருந்து வரும் ஒன்றான வானவியல் 17ஆம் நூற்றாண்டில் பெரும் முன்னேற்றத்தை அடைந்து முதிர்ந்தது.

20 ஆம் நூற்றாண்டில், தொழில் நிபுணத்துவம் உடையதாக ஆன வானவியல்  பார்த்து ஆராயும் ஒன்றாகவும் கொள்கை ரீதியான ஒன்றாகவும் இரு கிளைகளாகப் பிரிந்தது. பார்த்து ஆராயும் ஆப்ஸர்வேஷனல் அஸ்ட்ரானமி வானிலுள்ள பொருள்களைப் பார்த்து தரவுகளைக் கொள்வதில் கவனம் செய்தது. அந்த்த் தரவுகள் பின்னர் கொள்கை ரீதியான கிளைகளில் இயற்பியலின் அடிப்படை கொள்கைகளைப் பயன்படுத்து பகுத்துப் பார்க்கப்பட்டன.

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கிய மிகப் பெரிய விஞ்ஞான கொடைகளுக்குப் பின்னர் விண்வெளி பற்றிய அறிவியல்ரீதியிலான அறிவு வெகு வேகமாக வளர்ந்தது. ( காற்றில்லா வெற்றிடத்தில் ஒளியின் வேகம் பார்ப்பவரின் நகர்தலின் பாதிப்பிற்கு உள்ளாகாமல் தனித்த ஒரு நிலை எண்ணாகவே இருக்கும் என்றது அவரின் சிறப்பு ஒப்புமைத் தத்துவம்)

விண்வெளி பற்றிய அறிவு வளர்ந்த பின்னர், விண்வெளியில் பயணிக்க இப்போது மனிதனுக்கு ஒரு வாகனம் தேவையாக இருந்தது. விண்வெளியை அளக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் முன்னணியில் இருந்தனர்.

இன்று வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் R 7 மற்றும் சோயுஸ் கலங்களை அமைக்க காரணமாக இருந்த செர்ஜி கொரோலியவ் விண்வெளிக்கான ஒரு ஓட்டப்பந்தயத்தை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் பாப் கில்ருத்தை நாஸாவின் தலைவராகக் கொண்டு விண்வெளி ஆய்வில் முன்னணிக்கு வந்தனர்.  கில்ருத் மனிதனால் இயக்கப்பட்ட 25 விண்கலப் பயணங்களுக்கு பாதை வகுத்து இயக்கினார். ஜான் எப்.கென்னடிக்கு அவர் தான் சந்திரனை அடைவதற்கான துணிச்சலான முடிவை எடுக்க ஆலோசனை தெரிவித்தார்.

“விண்வெளியில் மனித சாதனைகள்” நூலானது வானவியல், விண்வெளி வீர்ர்கள், விண்வெளிப் பயணங்கள் மற்றும் இவற்றிற்குப் பின்னணியில் இருந்தோர் பற்றிய எல்லாவற்றையும் கலந்து தரும் ஒன்று.

மற்ற கிரகங்களில் மனிதனின் குடியேற்றத்திற்கான ஆர்வமூட்டும் சாத்தியக்கூறுகளையும், பிக் பேங் பற்றிய ஒரு சிறிய சுருக்கத்தையும் நீங்கள் இதில் படிக்கலாம்.

இந்த நூலானது விண்வெளிக் கொள்கை ஒப்பந்தம் பற்றியும் மனிதன் கற்பனையில் தோன்றிய சுவையான பல சிறிய கதைகளையும், ஒரு விண்வெளி வீராங்கனை தனது ஒப்பனைப் பொருள்களை விண்வெளிப் பயணத்தின் போது கொண்டு சென்றது போன்ற துணுக்குச் செய்திகளையும் கூட த் தருகிறது.

  இறுதியாக வாசகர்களுக்கு எனது  எச்சரிக்கை ஒன்றும் உண்டு: இந்த நூலானது வெறும் பொழுதுபோக்குக்காகப் படித்து முடிக்கக்கூடிய ஒரு நூல் அல்ல.

சர் பிரான்ஸிஸ் பேகன் புத்தக வகைகளைப் பற்றி மிகவும் பொருத்தமாகத் தான் இப்படிச் சொன்னார்:

“சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; மற்றவற்றை முழுங்க வேண்டும், ஆனால் 

குறைந்த சில புத்தகங்களை மட்டுமே அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்”

இந்தப் புத்தகம் மூன்றாவது வகையில் நிச்சயமாகச் சேர்கிறது/

இந்த புத்தகத்தை அசை போட உங்களுக்கு என் இனிய வேண்டுகோள்.

வணக்கம்.

பங்களூரு                                                   V. தேசிகன்

12-3-2012                                                                          

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

A wonderful collection of articles published as a series in Bhagya Weekly Magazine, took the form as a book! Besides being an encyclopedia about Space, this book explains how the development of science and technology helped in exploration of space! This work explain many unknown facts which you may never heard in a well presented manner about such as the voyage of man to The Moon, the qualities required to become an astronaut, the training needed, the structure of a space ship, man’s plan to step in asteroids and finally man’s initiatives to set habitats in the land of The Moon and The Mars.

‘பாக்யா’ வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடர் நூலாகப் பூத்திருக்கிறது! விண்வெளி பற்றிய கலைக்களஞ்சியமாகத் திகழ்வதோடு, அறிவியல் முன்னேற்றம் எப்படி விண்ணை அளாவி உயர்ந்து வருகிறது என்பதையும் விரிவாக விளக்கும் நூல்! சந்திரனுக்கு மனிதன் மேற்கொண்ட பயணம், விண்வெளி வீரராவதற்கான தகுதிகள், பயிற்சிகள், விண்கல அமைப்பு, விண்கற்களில் இறங்க மனிதனின் திட்டம், சந்திரன், செவ்வாய் ஆகியவற்றில் மனிதன் கால் பதித்துக் குடியிருப்புகள் அமைக்க எடுத்து வரும் முயற்சிகள் போன்ற, இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாத அதிசயமான விண்வெளித் தகவல்களைச் சுவைபட விளக்கும் இந்த நூல் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 1’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

* 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: