கோவிந்தபுரத்தில் பகவந்நாம போதேந்திராள் அதிஷ்டானம் (11,842)

Anjaneyar temple at theAdhistanam

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,842

Date uploaded in London – –  26 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சம்பிரதாய பஜனை செய்வோர் அனைவருக்கும் தெரிந்த மகானின் பெயர் பகவந் நாம போதேந்திராள் . இவருடைய அதிஷ்டானத்துக்குச் செல்லும் பாக்கியம் பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது கிடைத்தது. முதலில் கும்பகோணத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவிசை நல்லூருக்குச் சென்று கங்கை நதி பெருக்கெடுத்த ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றையும் கோவில் போன்று அருள்பொங்கும் மடத்தையும் தரிசித்துவிட்டு திருவிடை மருதூருக்கு அருகிலுள்ள கோவிந்தபுரத்துக்கு வந்தோம். ஒரு புறம் விட்டல் மந்திர் ; அதன் எதிர்ப்புறம் ஆயிரம் பசு மாடுகளைக் கொண்ட கோ சாலா. அருகிலேயே எல்லா சாமியார்களின் மடங்கள். அவற்றில் நாம் தரிசிக்கப்போவது போதேந்திராள் அதிஷ்டானம். அதாவது அவர் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவில் போன்ற புனித இடம்.

கோவிந்தபுரம் புனித மணம் கமழும் இடம் என்பதால் ., பல சாமியார்களை பின்பற்றுவோரும் அங்கு மடம் அமைத்து , பிரசாரம் செய்து வருகின்றனர்.

Bhavannama Bodhendral Adhistanam

பகவந்  நாம போதேந்திராள் (1638- 1692) , காஞ்சி காமகோடி மடத்தின் 59ஆவது பீடாதிபதியாக விளங்கிய மஹான். அவர் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். திருவிசை நல்லூர் ஸ்ரீதர ஐயாவாளின்  சமகாலத்தவர்.இறைவனை அடைய அவருடைய நாமத்தைச் சொல்லி ஆடிப்பாடினாலே போதும்; பக்திதான் முக்கியம் என்று வலியுறுத்தியவர். போதேந்திராள்.. இதில் ஜாதி, இன  வேறுபாடுகள் கிடையாது..

போதேந்திராள் அதிஷ்டானத்தில் பெரிய, உயரமான ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது. நாங்கள் சென்றபொழுது, நைவேத்தியம் செய்து தயிர்சாதம் வழங்கினர்.அதிஷ்டானத்தில் கோ சாலையும் இருக்கிறது..

XXX

FOLLOWING MATTER IS ALREADY POSTED IN THIS BLOG BY S.NAGARAJAN

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58வது பட்டம் பெற்று அந்தப் பீடத்தை அலங்கரித்தவர்  ஸ்ரீ விஸ்வாதிகேந்த்ர ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் கேசவ பாண்டுரங்கர் என்ற ஒரு பிராமணர் கைங்கரியம் செய்து வந்தார். அவருக்கு வெகுகாலம் வரை மகப்பேறு இல்லாமல் இருந்தது. இறைவனை வேண்டஇறைவனின் திருவருளால் அவருக்கு ஒரு ஆண் குழந்தை 1610 ஆம் ஆண்டு பிறந்தது. காஞ்சியில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு புருஷோத்தமன் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கேசவ பாண்டுரங்கர் தம் குருநாதரிடம் காட்டக் கொண்டு வந்தார். குழந்தையை ஆசீர்வதித்த ஆத்ம போதேந்திரர் அந்தக் குழந்தையை  ஸ்ரீமடத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி கேசவரிடம் கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். ஆனால் தன் மனைவியைக் கேட்கவில்லையே என்ற அவர் மனதில் ஒரு தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் வந்து நடந்ததைச் சொன்ன போது பதிவிரத சிகாமணியான அவரது மனைவி சுகுணா, ‘அது நமது பாக்கியமே என்று கூற அவர் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தை புருஷோத்தமன் பக்தியோடு வளர்ந்ததுதனது சேவையைச் செய்ய ஆரம்பித்தது. 15 வயதிற்குள் வேததர்மசாஸ்திரங்களை முற்றுமாகக் கற்றுத் தேர்ந்தார் புருஷோத்தமர்.

சில வருடங்கள் கழிந்தன. அப்போது  ஸ்ரீஜகத்குரு காசிக்கு யாத்திரையாகச் சென்றார். புருஷோத்தமனும் காசிக்கு யாத்திரை சென்று குருநாதரை தரிசிப்பது என்று தீர்மானம் செய்து கொண்டார். தனது நெருங்கிய நண்பரான ஞானசாகரனையும் காசிக்கு அழைத்தார்அவரும் உடன் வர இணங்கினார். அவர்கள் இருவரும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டனர். “காசிக்குச் செல்லும் போது இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால்அடுத்தவர் அவருக்கு ஈமக்கிரியைகளைச் செய்து விட்டு தானும் தனது உயிரைத் தியாகம் செய்து விட வேண்டும் – இப்படி இருவரும் முடிவு செய்தனர். துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ஞானசாகரன் இறந்து விடவேஅவருக்கு உரிய கிரியைகளைச் செய்த புருஷோத்தமன் காசி சென்று தன் குருநாதரை தரிசித்து நடந்ததைச் சொல்லி தான் தனது உயிரை கங்கை நதியில் தியாகம் செய்யப் போவதாகவும்அதற்கு குருதேவரின் அனுமதி வேண்டும் என்றும் வேண்டினார்.

ஆசார்யாள்புருஷோத்தமன் சொல்வது அனைத்தையும் கேட்டு விட்டுப் பின்னர், “நீ பிராண தியாகம் செய்ய வேண்டாம். எப்போது ஒருவன் சந்யாசம் வாங்கிக் கொள்கிறானோ அப்போதே அவன் மறு ஜென்மம் எடுத்ததாக ஆகி விடுகிறது. அப்போது தர்ம சாஸ்திரத்தை ஒட்டி உனது சத்தியத்தைக் காப்பாற்றியதாக் ஆகி விடுகிறது என்று கூறி அருளினார். உடனே புருஷோத்தமனும் அதை ஏற்று சந்யாசம் மேற்கொண்டார். அவர் பகவன் நாம போதேந்திராள் என்ற யோகபட்டத்தையும் பெற்றார்.

ஆசார்யரின் ஆக்ஞைப் படி அவர் காஞ்சிக்குத் திரும்பிச் சென்றார்.

போதேந்திரரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் அந்தக் காலத்தில் நடைபெற்றது. இஸ்லாமியரின் ஆதிக்கமும் அட்டூழியமும் நிறைந்த காலம் அது. தக்ஷிண தேசத்திலிருந்து ஒரு பிராமணர் தன் மனைவியுடன் வட தேச யாத்திரைக்குக் கிளம்பினார். வழியில் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் இரவு தங்கினர். நள்ளிரவில் பிராமணரின் மனைவியாகிய அந்த அழகிய பெண்ணை இஸ்லாமியன் ஒருவன் வாயைப் பொத்தி கூக்குரலிட முடியாதபடி செய்து தூக்கிச் சென்று விட்டான். காலையில் மனைவியைக் காணாது திகைத்து அழுது புலம்பிய பிராமணர் தன் யாத்திரையைத் தொடர்ந்தார்காசிக்குச் சென்றார்.

முரடர்களிடம் உள்ள பயத்தினால் அந்தக் கிராம மக்கள் எதையும் அந்த பிராமணரிடம் சொல்லவில்லை. காசிக்குச் சென்று தன் யாத்திரையை முடித்த அந்த பிராமணர் மீண்டும் திரும்பி வரும் போது அதே கிராமத்திற்கு வந்தார். அந்த ஊரில் காலையில் ஒரு குளத்தில் குளித்து விட்டு குளக்கரையில் தனது அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது  அங்கு முஸ்லீம் ஆடை அணிந்து வந்த ஒரு பெண்மணி அவரிடம் வந்து கதறி அழுதாள். “நான் தான் உங்கள் மனைவி. ஒரு மஹாபாவி என்னை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டான். அவன் வருவதற்குள் நாம் தப்பி ஓடி விடலாம் என்றாள் அவள். அத்தோடு தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு வேலைக்காரியாகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் அழுது புலம்பினாள். அவளது நிலையைக் கண்டு வருந்திய பிராமணர்இந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று பார்க்கலாம் என்றார். அங்குள்ள சிலர் அதே ஊரில் இருக்கும் ஜகந்நாத கவியைச் சந்தித்துக் கேட்டால் அவருக்கு தக்க விடை கிடைக்கும் என்றனர். ஜகந்தாத கவியைச் சந்தித்த தம்பதி நடந்ததைக் கூறஜகந்நாதர் மூன்று  முறை ராம ராம ராம என்று கூறினால்

போதும்அவளை ஏற்றுக் கொண்டு விடலாம் என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜகந்நாத கவியின் அன்னையார் அங்கு வந்தார். அவர் அத்வைத மகரந்தம் உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற பண்டிதரான லக்ஷ்மிதரர் என்னும் பிரசித்தமான கவிஞரின் மனைவி. அவர் தனது மகனான ஜகந்நாத கவியிடம், “ மூன்று முறை வேண்டாமே! எத்தனை பாவமானாலும் ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்தாலே போதுமேஅனைத்துப் பாவங்களும் தீருமே என்றார்.

வழிப்போக்கராக அந்த கிராமத்திற்கு வந்து இதையெல்லாம் திண்ணையிலிருந்து கேட்டு கொண்டிருந்த பகவந்நாம போதேந்திரர் ஜகந்நாதரிடம் இதற்கு ஆதாரம் உள்ளதா என்றார்.

உடனே ஜகந்நாதர் தனது தந்தையான லக்ஷ்மிதரர் இயற்றிய ‘பகவந்நாம கௌமுதி என்ற நூலை ஆதாரமாகக் காட்டினார்.

பொழுது விடிந்தது. அங்கு வந்த பிராமணர் தனது மனைவியைக் குளத்தில் இறங்கி ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னார். அவரது மனைவியும் ஸ்நானம் செய்து கொண்டே ராம நாமத்தை உச்சரித்தார். என்ன ஆச்சரியம்!  முன்போலவே காதில் தோடு அணிந்தும்நெற்றியில் குங்குமப் பொட்டுடனும்பழையபடி புடவையை உடுத்தியும் அவரது மனைவி காட்சி அளித்தாள். கண் எதிரே பிரத்யக்ஷமாக ராம நாமத்தின் மஹிமையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அன்றே அவள் கையினாலேயே பிக்ஷையை வாங்கிக் கொண்ட போதேந்திரர் பகவந்நாம கௌமுதி நூலின் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு காஞ்சி வந்து சேர்ந்தார்.

குருவான ஆத்ம போதேந்திரர் தனது சீடரான பகவந்நாம போதேந்திரரை பீடாரோகணம் செய்வித்தார். அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக பீடம் ஏறினார். சுமார் 50 வருடங்கள் பகவந்நாம மஹிமையை உலகெங்கும் உபதேசித்து அனைவரையும் நாம சங்கீர்த்தனம் செய்யச் செய்தார் போதேந்திரர்.

ஸ்ரீஜகத்குரு போதேந்திராளும் அவரது குருவும் இராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டனர். அப்போது கெடில நதி தீரத்தில் குரு சித்தி அடைந்தார். அவரது சமாதி இருப்பதை வடவாம்பலம் கிராமத்தில் காஞ்சி காமகோடி பெரியவாள் 68வதுபீடாதிபதி  ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது தீர்க்க திருஷ்டியால் கண்டு பிடித்து 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிருந்தாவன பிரதிஷ்டை செய்வித்தார்.

போதேந்திரர்தனது குருவின் மனோரதமாகிய இராமேஸ்வர யாத்திரையை பூர்த்தி செய்தார். திரும்பி வரும் போது திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டு திருவிசைநல்லூர் ஐயாவாளின் மஹிமையை அறிந்து கொண்டார். அவருடன் அறிமுகம் ஏற்பட இருவரும் பகவன் நாம கீர்த்தனையை செய்து ஆனந்தமாய் அதைப் பரப்பிய வண்ணம் இருந்தனர்.

பிறகு இருவரும் ஒரு முறை பிரம்பூர் என்ற கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கினர். அங்கு ஒரு ஊமைப் பையன் இருந்தான். அவனைப் பேசும்படி அருள் பாலித்து அவர்அவனைப் பேசச் செய்தார். அந்தப் பையனும் இராம பஜனை செய்யத் துவங்கினான். அந்த ஊரில் அவர் ஒரு ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்வாமிகள் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஸ்ரீமடத்தின் பொறுப்பை தனது சீடரான அத்வைதாத் பிரகாசகரிடம் ஒப்படைத்து அவரை 60வது பீடாதிபதியாக ஆக்கினார். நாம சங்கீர்த்தன மஹிமையை உலகிற்கு போதிப்பதில் அதிகம் ஈடுபட்டார்.  ஸ்வாமிகள்  ஸ்ரீதர ஐயாவாளின் மறைவுக்குப் பின்னர் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். திருவிடைமருதூரில் சில காலம் வசித்தார். அருகிலுள்ள கோவிந்தபுரமும் அவரைக் கவர்ந்தது. ‘பகவன் நாம ரஸோதயம் உள்ளிட்ட எட்டு நூல்களை அவர் இயற்றியுள்ளார். தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ராம நாமத்தை உச்சரிப்பது அவரது அன்றாடப் பழக்கம்.

ஸ்வாமிகள் காலத்தில் பல அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்வாமிகள் எப்போதும் தனிமையில் இருப்பார். மாலை நேரத்தில் காவேரிக் கரையில் சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் விளையாடுவார். அந்தச் சமயத்தில் பல அதிசயங்களை அவர் செய்வார். அதைப் பார்த்து சிறுவர்கள் மகிழ்வர்.

கோடை காலத்தில் குழி தோண்டி மண்ணை வண்டி வண்டியாக எடுப்பது மக்களின் வழக்கம். அப்போது அந்தக் குழியில் அமர்ந்து சிறுவர்களை விட்டு மண்ணைப் போட்டு மூடச் சொல்வது போதேந்திரரின் வழக்கம். ‘யாரிடமும் சொல்லாதீர்கள்நாளை வந்து பாருங்கள் என்று அவர்அந்தச் சிறுவர்களை அனுப்பி விடுவார். மறுநாள் சிறுவர்கள் குழியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த போதேந்திரர் வெளியே வருவார். அடிக்கடி இப்படி நடந்தது. ஒரு நாள் ஸ்வாமிகளைக் காணாத ஊர் மக்கள் அவரைத் தேடத் தொடங்கவே சிறுவர்கள் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் கூறி ஆற்றுக்கு அழைத்துச் சென்றனர். ஊர் மக்கள் குழியிலிருந்த மண்ணை அகற்ற முற்பட்டனர். ஆனால் அப்போது ஒரு ஒலி எழுந்தது: “நாம் இவ்விடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவன் முக்தராக யோக சக்தியால் உலக நலனுக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்போம். இதற்கு விக்னம் செய்ய வேண்டாம். இந்த இடத்தில் எவர் ஒருவர் தினமும் லட்சத்து எண்ணாயிரம் தரம் நாம ஜபத்தைச் செய்கிறாரோ அந்த பக்குவமுடைய பக்தருக்கு நாம் தரிசனம் தருவோம். இந்த இடத்தில் பிருந்தாவனம் அமைத்து ஆராதித்தும் வரலாம்.

இந்த அருளுரைப்படியே அவர் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது.

கோவிந்தபுரம் கிராமத்தில் சாலிவாஹன சகாப்தம் பிரஜோத்பத்தி வருடம் ப்ரோஷ்டபத மாதம் பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி அடைந்து  பிரம்ம ஸ்வரூபமாய் விளங்க ஆரம்பித்தார்அது 1692ஆம் ஆண்டாகும்.

புரட்டாசி மாதம் மாளய பக்ஷத்தில்  ‘யதி மஹாளயம் என்று கூறப்படும்  கிருஷ்ண பக்ஷ துவாதசியில்  வருடந்தோறும் போதேந்த்ராளின் ஆராதனை இன்றளவும் நடை பெற்று வருகிறது. பக்தர்கள் அவருடைய ஆராதனையை அங்குள்ள பிருந்தாவனத்தில் கூடி சிறப்பாக இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

இன்று அங்குள்ள அதிஷ்டானத்திற்கு செல்வோர் பாரம்பரிய முறைப்படி மேலாடை இன்றி பயபக்தியுடன் உள்ளே சென்று வணங்குவது மரபாக இருக்கிறது.

another saint samadhi in govindapuram adhistanam

இந்த அதிஷ்டானத்தில் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான ஸ்ரீ விட்டல் ருக்மிணி மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.சேங்காலிபுரம் ப்ரஹ்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பேரனும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளின் சீடருமான ப்ரஹ்ம ஸ்ரீ விட்டல் தாஸ் ஜயகிருஷ்ண தீக்ஷிதர் அவர்களின் அரும் முயற்சியால் இந்த பிரம்மாண்டமான ஆலயம் அமைக்கப்பட்டது. இந்தக் கோவிலையும் அதிஷ்டானத்தையும் தரிசிக்க கோவிந்தபுரத்திற்கு பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர். ‘கலௌ சங்கீர்த்ய கேசவம் என்ற அருள் மொழிக்கு இணங்க கலியுகத்தில் கடைத்தேற நாம சங்கீர்த்தனம் ஒன்றே சுலபமான வழி என்பதை போதிக்க அவதரித்துள்ள மகான்களில் போதேந்திரர் மிகவும் பூஜிக்கத் தகுந்த சிறப்பான மகான். அவரை வணங்கி நாம ஜபம் செய்வோம்நலம் பெறுவோம்

— SUBHAM— 

 tags- சம்பிரதாய பஜனை, பகவந் நாம போதேந்திராள் .,கோவிந்தபுரம்

Leave a comment

1 Comment

  1. Sampath T P

     /  March 28, 2023

    Thanks; Learnt much from your posting.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: