
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,980
Date uploaded in London – May 8 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ராமாயண வழிகாட்டி!
லக்ஷ்மணரிடம் ஶ்ரீ ராமரின் ப்ரதிக்ஞை!
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் ஶ்ரீ ராமர் லக்ஷ்மணரிடம் செய்யும் பிரதிக்ஞை குறிப்பிடத் தகுந்த ஒன்று.
இது ஆரண்ய காண்டத்தில் 24ஆம் ஸர்க்கத்தில் இடம் பெறுகிறது.
கொடிய பராக்கிரமுள்ள கரன் வரும் போது ஏராளமான துர்சகுனங்களை ராமர் பார்க்கிறார்.
உடனே அவர் லக்ஷ்மணனைப் பார்த்துக் கூறுகிறார் :-
“மேகங்கள் ஆகாயத்தில் விகாரமான சப்தங்களை இட்டுக்கொண்டு ரத்த தாரைகளை உடையவனவாய் செம்பட்டை நிறமுற்றனவாய் கொடியவைகளாகத் திரிகின்றன. லக்ஷ்மண! எனது பாணங்கள் புகைகின்றன. யுத்தத்தில் உற்சாகம் கொண்டவையாக இருக்கின்றன. எனது வில்கள் துடிக்கின்றன. வனத்தில் உள்ள பறவைகள் இம்மாதிரியாகக் கூவுகின்றன. நமக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் வீரனே! எனது இந்தக் கை இடைவிடாமல் துடிப்பதாய், சமீபத்தில் நமக்கு வெற்றியையும் எதிரிக்கு தோல்வியையும் ஏற்படுவதை உணர்த்துகிறது.
ஆபத்தை எதிர்பார்க்கின்றவனும் வெற்றியைக் கோருகிறவனும் புத்திமானுமான ஒரு மனிதனால் முன்னேற்பாடு தான் செய்யத் தக்கது.”
இப்படிக் கூறிய ஶ்ரீ ராமர் லக்ஷ்மணனுக்கு ஒரு கட்டளையை இடுகிறார்:
“ஆகவே, கையில் அம்பு கொண்டு வில் தரித்தவனாய், வைதேஹியை அழைத்துக் கொண்டு மலையினது மரங்கள் அடர்ந்து புக முடியாமல் இருக்கும் குகையை அடைவாயாக!”
பின்னர் தன் பிரதிக்ஞையை அவர் கூறுகிறார் இப்படி:
ப்ரதிகூலிதுமிச்சாமி ந ஹி வாக்யமிதம் த்வயா |
ஷாபிதோ மம பாதாப்யாம் கம்யதாம் வத்ஸ மா சிரம் ||
இதம் வாக்யம் – இந்தச் சொல்லை
த்வயா – உன்னால்
ப்ரதிகூலிதும் ஹி – மறுத்துரைக்கவும்
இச்சாமி ந – நான் உடன்பட மாட்டேன்.
மம – எனது
பாதாப்யாம் – இரு பாதங்களின் மீதும்
ஷாபித: – நீ ஆணையிடப்பட்டு இருக்கிறாய்.
வத்ஸ – குழந்தாய்
மா சிரம் – தாமதம் வேண்டாம்!
கம்யதாம் – செல்லப்படட்டும்.
இரு பாதங்களின் மீதும் ஆணையிடப்பட்டு ஶ்ரீ ராமர் இந்தக் கட்டளையை இடுகிறார்.
“சீதையை அழைத்துக் கொண்டு குகையை அடைந்து அங்கு இருக்க வேண்டும்.”
அவ்வளவு தான், வேறு வழியின்றி லக்ஷ்மணர் ராமரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று.
ஆரண்ய காண்டத்தின் அடுத்த 25ஆம் ஸர்க்கத்தில் கர சைன்ய வதம் கூறப்படுகிறது.
பிரதிக்ஞை வரிசையில் ஶ்ரீ ராமரது இந்த பிரதிக்ஞையும் சேர்கிறது.
***