எட்டும் இரண்டும், காயத்ரீ மந்திரமும் ; திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 7 (Post.13227)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,227

Date uploaded in London – –   10 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மாணிக்கவாசகர் யாத்த திருவாசகத்திலும் திருமூலர் இயற்றிய திருமந்திரத்திலும் ஒரு சுவையான வரி எட்டும் இரண்டும்.இது பற்றி நிறைய விளக்கங்கள் உள்ளன. .8+2 என்றால்  பள்ளிக்கூட குழந்தைகளும் 10 என்று பதில் எழுதி விடும். ஆனால் நாம் நினைக்கும் 10 அல்ல இது. தமிழில் 8 என்பதை அ என்று எழுதுவார்கள்; 2 என்பதை உ  என்று எழுதுவார்கள் ;10 என்பதை ய என்று எழுதுவார்கள். இதை வைத்து உரைகாரர்கள் சொற் சிலம்பம்  ஆடுகிறார்கள் .

திருவாசகம்  திருச்சதகம்

   கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு

    இட்ட அன்பரொ டியாவருங் காணவே

    பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

    எட்டினோடிரண்டும் அறியேனையே.

பட்டிமண்டபம்-வாத சபை..

திருப்பெருந்துறையில் திருவருள் பெற்று அமர்ந்திருந்த அடியார்களிடையே, தம்மையும் ஒருவராக்கி அமர்த்தியமையை நினைக்கின்றார் அடிகளார். சிவஞானம்(பர ஞானம்) கைவரப்பெற்ற அவர்கள் எங்கே? உலக ஞானம்(அபர ஞானம்) கூடப் பெறாத தாம் எங்கே?

இந்த நினைவு வந்தவுடன் தம்முடைய அறியாமைக்கு ஓர் எல்லை வகுக்கும் முறையில் எட்டும், இரண்டும் எவ்வளவு என்று அறியாத தாம் என்கிறார்.

எட்டினோடு இரண்டும் என்ற தொடருக்கு அகர(8) உகரம்(2) என்றும், இவை இரண்டும் கூட்டிய பத்துக்கு யகரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். இவ்வாறு எல்லாம் பொருள் கொள்ள இடந்தந்து நிற்பதுதான் அடிகளாரின் பாடற்சிறப்பு (தமிழ் எண் வடிவில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். பத்து என்பதை யகரம் போன்ற எழுத்துக் குறிக்கும்).

இன்னும் ஒரு உரை

பொ-ரை: பாசங்களை ஒழித்து என்னை ஆட்கொண்டு, கண்கள் பார்த்து மகிழும்படியாக நீஎன்னை ஏற்றுக் கொண்டாய். திருநீறிட்ட பேரன்பரோடு எல்லோரும் பார்க்கும்படியாகவேநாயனைய என்னை உனது திருவோலக்க மண்டபத்தில் ஏற்றுவித்தாய். அகர உகரமாகிய சிவம் சக்தி இயல்பு அறியேனாகிய என்னை ஏற்றுவித்தாய். இது நீதியோ?  

 Cutting off all my worldly ties, Thou brought me into the forefront alongside Thy ash- smeared devotees, for all the world to see. And elevated me into Thy congregation. This Thoudidst to me, although I have come to know nothing of the scriptures.

பத்து என்பதற்கு தசகாரியம் என்றும் பொருள் சொல்லுவார்கள்

1. (Śaiva Philosophy) The ten spiritual experiences of the soul in its path towards final deliverance, viz.,

tattuvarūpam, tattuvataricaṉam, tattuvacutti, āṉmarūpam, āṉmataricaṉam, āṉmacutti, civarūpam, civataricaṉam, civayōkam, civapōkam;

தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவ ரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்ற ஆன்மாநுபவ நிலைகள்.

xxxxx

இப்போது திருமூலர் சொல்லுவதைக் காண்போம்

985. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி

நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து

ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்

தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

பொருள் : எட்டும் இரண்டும் அகர உகரம். இவை உயிரும் இறையும் என்று கூறப்படும். எட்டும் இரண்டும் கூடுங்கால் பத்தாகும். பத்தென்பது யகரம். அஃதுயிர், உயிர் சிவத்துடன் ஒன்றி ஒரு மனப்பட்டு நாடப்படும் நந்தியை நாடித் திருவடியுணர்வினுள் வைத்தால் வாடுதலைச் செய்விக்கும் ஐம்புலனும் சிவத்தைத் தேடுதலுக்குத் துணை செய்யும். இங்ஙனம் தேடு நிலையைத் தெளிந்துணர்க.

xxxxxx
986. எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்

பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொருள் : எட்டும் இரண்டும் பத்து. இதன் அடையாளம் ய யகரம் உயிர். உயிரின் அடையாளக் குறி. இவற்றை யாவரும் இனிதறிய மாட்டார். இதை யறிவல்ல அறிவிலார் இருமூன்று நான்கு கூட்டும் கணக்குப் போல் பத்தென்பர். சிவபெருமான் திருவடியே பத்தென்பதாகும். செந்நெறியில் கூறப்படும் பருமை நுண்மையாகிய திரு ஐந்தெழுத்து பத்தாகும். (சிவக்குறி – சிவக் கொழுந்து – சிவலிங்கம்)

xxxxxxxx

“எட்டும் இரண்டும் அறியாத என்னை

எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி

எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்

எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.”- திருமந்திரம்

காயத்ரி மந்திரம் ஜபித்தால் மறுஜென்மம் கிடையாது

ஆறெழுத்தாவது ஆறு (1)மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. 994.

994: Six Letters Aum are the Six Faiths and Savitri Mantra

The Six Letters are the Six religions,

The Six Letters multiplied by four,

Into four-and-twenty proliferated,

That the Letters of Savitri mantra art;

Savitri has the Letter First (that is Aum)

They whom separate meditate on it,

Have no more the birth-travail.

பொருள் : ஆறு எழுத்துக்களால் ஆயது ஆறு சமயங்கள் என்பர். ஒவ்வோர் எழுத்தையும் நான்கு பாகுபாடு செய்ய ஆறுக்கும் இருபத்து நான்கு எழுத்தாகும். இவ் இருபத்து நான்கு எழுத்தும் காயத்திரி என்ப. காயத்திரியின் முன் சேர்ந்து மொழியும் எழுத்து ஓங்காரம். அவ் ஓங்காரத்து அறிவதாகிய உண்மை காண வல்லார் பிறவா பெருவாழ்வு எய்துவர். (சாவித்திரி – காயத்திரி. 24 எழுத்துக்கள் கொண்டது. தலை எழுத்து – பிரணவம். பேதிக்க. பிரித்தறிய.)

ஒப்பிடுக – திருவாசகம் – சிவபுராணம்- மாணிக்கவாசகர்

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

Xxxxxx

எட்டும் இரண்டும்,  காயத்ரீ மந்திரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 7 , திருமூலர்

Leave a comment

Leave a comment