புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 3 (Post No.3331)

Picture of a Brahmin from a German book

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8  November 2016

 

Time uploaded in London: 5-16 AM

 

Post No.3331

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 6

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 224,361,362,400 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 3

 

                        ச.நாகராஜன்

                            

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு சோழ மன்னன் கரிகாலன். இவனது அறிவுத் திறனும் சிறு வயதிலேயே நீதியை நிலை நாட்டிய நிகழ்வும் தமிழ் வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்கபட்டவை.

இவனைப் புகழ்ந்து கருங்குழல் ஆதனார் பாடிய பாடல் 224ஆம் பாடலாக புறநானூற்றில் இடம் பெறுகிறது. மன்னன் கரிகாலன் வேள்விகளை இயற்றி வேதமுறைப்படி அரசாண்டதை நினைவு கூர்கிறார் புலவர்.

பாடல் வரிகள் இதோ:

பருதி உருவின் பல் படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்  (வரிகள் 7 முதல் 9 முடிய)

 

சூரியனைப் போன்ற வட்ட வடிவமான (பருதி உருவின்) பல சுவர்களை அமைத்து (பல் படைப் புரிசை) பருந்துகள் நுகரும்படியான (எருவை நுகர்ச்சி) பல யூபத் தூண்களை நாட்டி (யூப நெடுந்தூண்) வேதம் அறைந்த வழியில் வேள்விகளைச் செய்தவன் (வேத வேள்வித் தொழில்  முடித்ததூஉம்) என்று புலவர் இவனைப் புகழ்கிறார்.

தூய்மையான மகளிர் சுற்றி இருத்தல், அறநெறி வழுவாத நடுநிலைமையுடன் கூடிய நீதி வழங்கு நெறிமுறை கொண்டிருத்தல், வேத வேள்வியை இயற்றுதல் ஆகியவை கொண்டவன் என புலவர் சொல்வதால் சங்க கால மக்களின் வாழ்வில்  மிகுந்த மேன்மையுடையவை என கற்பு, நீதி, வேத முறை ஆகியவை போற்றப்பட்டதை அறியலாம். வேள்வியை முறைப்படி செய்து முடிக்கும் அந்தணரும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றனர்.

 

அடுத்து 361, 362 ஆகிய இரு பாட்லகளைப் பார்ப்போம். க்யமனார் என்னும் புலவர் பாடிய பாடலாக இடம் பெறுகிறது பாடல் எண் 361.

பாட்டுடைத் தலைவன் யாரெனத் தெரியாவிட்டாலும் கூட, அவன் கூற்றுவனுக்கு அஞ்சா நல்லவன் என்பது புரிகிறது. அவன் தாயின் நல்லன்.

வேத வேள்வியைச் செய்யும் கேள்வி முற்றிய அந்தணருக்கு  தொன்று தொட்டு இருந்து வரும் நடைமுறைப்படி கையில் நீர் வார்த்து ஏராளமான பொன்குவியலை அள்ளிக் கொடுத்தவன். அவன் பெருமையை அள்ளித் தெளிக்கிறார் இந்தப் பாடலில் பெரும் புலவர்.

நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகை (வரிகள் 3 முதல் 5 முடிய)

 

அடுத்து வரும் 362ஆம் பாடலைப் பாடியவர் சிறுவெண் தேரையார்.

பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ர்ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். (சந்திரனைப் போன்று திகழும் முத்து மாலை மார்பில் அணிந்தவன்.)

பாடலில் வரும் சில வரிகளைப் பார்ப்போம்: .

 

தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப    (வரிகள் 8 முதல் 12 முடிய)

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அதாவது materialism குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத ஒன்று.

அடுத்து வரும் வரி அற்புதமான வரி!

Brahmin doing Pranayama (Breathing exercise)

மருள் தீர மயக்கம் ஒழிய அந்தத் தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப”

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அடேயப்பா!எத்துணை பேருக்கு அவன் நீர் வார்த்திருந்தால் ஒரு கடல் உருவாகி இருக்கும்.!

தமிழர்களின் நெஞ்சங்களில் வேரூன்றி இருக்கும் நேர்மையான கற்பனைத் திறனைத் தூண்டி விடும் புலவர் அவன் அந்தணரை ஓம்பி அறம் காத்த பான்மையைச் சிறப்பாகச் சொல்லி விடுகிறார்!!

புலவர் ஒரு கோடிட்டுக் காட்டி அவன் அறம் வளர்த்த பான்மையைச் சொற்களால் சுற்றி வளைத்துக் காட்டுகிறார்.

வாழ்க அந்தணர்! வாழிய அறம் வளர்த்த மன்னர் குலம் !!

 

அடுத்து இறுதியாக 400ஆம் பாடலைப் பார்ப்போம்.

பாடலைப் பாடியவர் மிக அற்புதமான அரும் புலவரான கோவூர் கிழார். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ புகழ் பெற்ற சோழன் நலங்கிள்ளி!

கேட்கவா வேண்டும். சொற்கள் கும்மாளம் போட்டுக் குதித்து வருகின்றன. பாடலைப் படிப்பதே ஒரு தனி சுகம்.

 

சோழன் நலங்கிள்ளி இருக்கிறானே அவன் உலகு காக்கும் உயர் கொள்கையாளன். பலர் துஞ்சும் போது (உறங்குகையில்) தான் துஞ்சான் அவன் தன் எதிரிகளை மட்டும் கடிதல் அல்லன்.

 

அவன் தன் எதிரிகளை வெல்வதோடு பசிப்ப்கையையும் வெல்பவன். அவனது நாட்டில் பசி என்று சொன்னால் அந்தப் பகைவனை உடனே அவன் வென்று விடுவான். பசியைக் கொன்று விடுவான்.

இத்துணை சிறப்புடைய அவனைப் பற்றி புறநானூற்றில் மட்டும் 12 பாடல்கள் இருப்பதில் வியப்பில்லையே!!

 

Pranayama step 2

அவன் கேள்வி மலிந்த வேள்வியையும் செய்பவன். பாடல் வரிகள் இதோ:

கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்துத்
துறை தொறும் பிணிக்கும் நல்லூர்
உறைவின் யாணர் நாடு கிழவோனே. (வரிகள் 19 முதல்23 முடிய)

கேள்வி மலிந்த வேள்விக்கான பல தூண்கள் நிறுவப்பட்டு யாகஙகள் நடை பெறும் நாடு.

ஆர்கலி கப்பல்கள் அகன்ற நீர்ப்பரப்பின் முகவாய் வழியே வருகின்ற நாடு.

அது தேறு நீர்ப்பரப்பை நனகு சுத்தம் செய்ய கடற்கரையில் அழகிய நகரங்கள் உள்ள நாடு.

அந்த நாட்டை ஆளும் அற்புதன் யார்?

யாணர் நாடு கிழவோன்! வளம் கொழிக்கும் நாட்டின் மன்னன் அவனே நலங்கிள்ளி!

இப்படிப்பட்ட பாடல்களை முழுதுமாக நாமே பாடிப் பொருளை நன்கு ஓர்ந்து உணர்ந்து அறிந்தால் தமிழ் நாடு வேத தேசமாக இருந்ததை நன்கு அறிந்திடுவோம்; மகிழ்ந்திடுவோம்.

இங்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை நினைவு  கூர்ந்து மகிழலாம். தென்னகத்தில் இருக்கும் ராமநாதபுரம் சேத்பதி மன்னர் முதல் கர்நாடகத்தில் இருக்கும் மைசூர் மஹாராஜாவிலிருந்து வடக்கே நெடும் தொலைவில் இருக்கும் ராஜஸ்தானில் உள்ள மன்னர்கள் வரை இன்றும் வேத வேள்விகளை வளர்த்து அந்தணர்களைப் போற்றி வருகின்றனர்.

இது அழியாத பரம்பரையின் ஒரு தொடர்ச்சி அல்லவா!

இன்னும் சில புறநானூறுப் பாடல்கள் உள்ளன. (கட்டுரைத் தொடரில் சொல்லப்பட்டு இதுவரை விளக்கப்பட்ட ஒன்பது பாடல்களைத் தவிர) அவற்றையும் பார்க்காமல் விட்டு விட முடியுமா என்ன? தொடருவோம்!

-தொடரும்