பாம்பும் பார்வதியும்- அப்பர் நகைச்சுவை! (Post No.4325)

Written by London Swaminathan

 

Date: 22 October 2017

 

Time uploaded in London- 6-59 am

 

 

Post No. 4325

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய நயத்துக்காக , இயற்கைக் கட்சிகளுக்காக, தமிழர் வரலாற்றுக்காக படிப்பது மற்றொரு ரகம். இதில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவன் நான். அந்தக் காலத்தில் தர்மபுர ஆதீனம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பு முதல் இந்தக் காலத்தில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட அத்தனை பதிப்புக ளையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கும்போது புதுப் புது கருத்துகள் கிடைக்கும்; எனக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான்!

 

அது மட்டுமா? போகிறபோக்கில் மாணிக்கவாசகர், தனக்கு முன் வாழ்ந்தவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக் கொடுத்தது, மாமன்னன் மஹேந்திர பல்லவன் தன்னைக் கொடுமைப் படுத்தியது — எனப் பல வரலாற்றுக் காட்சிகளையும் நம் முன் அப்பர் படைக்கிறார். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது தேவாரம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருவாசகம்; எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் இன்ப மழை பொழியும்; அமிர்த தாரை வழியும்; பருகுவார் பருகலாம்.

 

 

பார்வதியைக் கண்டு பாம்பு பயந்ததாம்; பாம்பைக் கண்டு பார்வதி பயந்தாளாம்; இதை எல்லாம் வேடிக்கை பார்த்த சிவன் முடியில் உள்ள பிறைச் சந்திரன் ஏங்கியதாம்; இத்தனையையும் தன் தலையில் தாங்கிய சிவபெருமானுக்கு ஒரே சிரிப்பாம்! ஆனால் வாய் விட்டு கெக்கென்று சிரித்தால் காட்சி மறை ந்துவிடக் கூடுமல்லவா?ஆகையால் புன்முறுவல் பூத்தாராம் அகில புவனங்களையும் தன் ஆட்டத்தினால் (நட ராஜ)அசைவிக்கும் எம்பெருமான்!

 

இது அப்பர் கண்ட காட்சி; சிவ பெருமானை தினமும் பாடும் அப்பர், சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னால் நமக்கு எல்லாம் ‘போர்’ (BORE) அடிக்கும் அல்லவா? ஆகையால் அவரும் அழகாக கற்பனை செய்கிறார்.

நிறையக் கொடுத்தால் திகட்டிவிடும்!

 

இதோ அப்பர் தேவாரத்தின் நான்காம் திருமுறையில் இருந்து இரண்டே பாடல்கள்:–

 

 

கிடந்தபாம்பு அருகுகண்டுஅரிவை பேதுறக்

கிடந்தபாம்பு அவளையோர் மயிலென்று ஐயுறக்

கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே

-திருவதிகை வீரட்டானப் பதிகம், நாலாம் திருமுறை

 

பொருள் சிவன் திருமுடியில் தவழும் பாம்பானது, சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமா தேவியாரைக் (பார்வதி) கண்டு அஞ்சுகின்றது; ஏனெனில் அவள் மயில் போல இருக்கிறாள். உமாதேவியோ பாம்பைக் கண்டு பயப்படுகிறாள்; ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா? இதைப் பார்க்கும் சிவன் முடியிலுள்ள பிறை ஏங்குகின்றதாம்; கிரஹண காலத்தில் நிலவை விழுங்குவது பாம்பு அல்லவா? இதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிவனோ மென்முறுவல் பூக்கிறார்.

 

சிறுவர்களிடம் அச்சம் உண்டாக்க நாம் சில பொம்மைகளைப் போட்டுவிட்டு அவர்கள் பயப்படும்போது,  கண்டு ரசிக்கிறோம் அல்லவா? அது போல சிவனும் சில விஷமங்களைச் செய்கிறார். ஆனால் குழந்தைகளைப் பயமுறுத்திய தாய் பின்னர் எப்படி குழந்தைகளை அனைத்து பயப்படாதே அவை வெறும் பொம்மை என்று ஆறுதல் சொல்லுவது போல ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருளும் சிவன் எல்லோரையும் காப்பான்.

 

அப்பர் இதை ஒரு சிறிய நகைச் சுவை தோன்ற அமைத்து இருக்கிறார். இது போல சங்க இலக்கியப் பாடல்களிலும் நகைச் சுவை உண்டு. உண்மையான நவாப் பழங்களை (நாகப் பழம்) வண்டு என்று பயப்படும் குரங்குகளையும், வண்டுகளை நாகப்பழம் என்று  நினைத்து வாயருகே கொண்டுபோகும் குரன்குகள், திடீரென்று அஞ்சி அவைகளை விட்டெறிவதையும் தமிழ்ப் பாடல்களில் கண்டு ரசிக்கலாம்.

இதோ இன்னும் ஒரு தேவரப் பாடலிலும் அப்பர் இதே கருத்தைச் சிறிது மாற்றிப் பாடுகிறார்:-

 

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்சை யென்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென்று அஞ்சி

ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

–திருவாரூர்ப் பதிகம்

 

பொருள்:-

சிவபெருமான் திருமுடியில் தரித்திருக்கும் நாகத்தைக் கண்டு, கங்கையானவள் அஞ்சுகிறாள்; அந்த நங்கையை மயில் என்று கருதி நாகப் பாம்பு அஞ்சுகின்றது! சிவபெருமான் போர்த்தி இருக்கும் யானையின் தோல் கருப்பு நிறத்தில் மேகம் போலக் காட்சி தருகிறது. அதில் பிறைச்சந்திரன் பளிச்சென்று மின்னியவுடன் பாம்பு அதை இடி மின்னல் என்று நினைத்து அஞ்சுகின்றது (‘இடி கேட்ட நாகம் போல’ என்பது தமிழ்ப் பழமொழி) இத்தன்மையுடன் விளங்கும் பெருமானே ஆரூரில்  வீற்று இருக்கிறான்.

மயில்- பாம்பு பகைமை, இடி- பாம்பு பகைமை, மனிதன்-பாம்பு பகைமை ஆகியவற்றைக் கொண்டு நயம்படப் பாடியிருக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரச நாயனார்.

 

சுபம்–

 

Leave a comment

Leave a comment