அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

 

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 14-14

 

 

Post No. 4344

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இறைவனின் புகழ்பாடுவோர் எல்லோரும் ஒரே விஷயத்தை அழகு தமிழில்- பழகு தமிழில் – சொல்லுகின்றனர். சிலர் நெற்றியில் மூன்று படுக்கைக் கோடுகளை (விபூதி) வரைகின்றனர்; மற்றும் சிலர் நெற்றியில் நெடுக்கைக் கோடு (நாமம்) வரைகின்றனர். எல்லாம் பூமியிலிருந்து கிடைப்பனவே; வேஷம் வேறானாலும் சொல்ல வந்த விஷயம் ஒன்றே; இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களுடன் ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்த பாசுரங்களை ஒப்பிடுகையில் அறியலாம்.

இதோ ஓரிரு படல்கள் மட்டும்!

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்

 

அறிவைக் கொடுக்கும் தமிழ் நூலை இயற்றிய நான் , அன்பு அகலாகவும்,ஆர்வம் நெய்யாகவும் இனிய மனத்தைத் திரியாகவும், மெய்யுணர்வு மயமான உள்ளுயிர் கிளர்ந்தெரியும் விளக்கை நாராயணனுக்கு ஏற்றினேன்

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்

 

பொருள்:-

இந்த உலகமே ஒரு அகல்; அதைச் சூழ்ந்த கடலே அதிலுள்ள நெய்;செங்கதிரே/சூரிய ஒளியே தீச்சுடர் என்று ஒளி பொருந்திய திருமாலின் (ஆழியானின்) திருவடிகளுக்கு இடர்கள் நீங்க, நான் பாமாலை சூட்டினேன்

 

இடர் ஆழி= துயரக் கடல்

 

ஆழ்வார் பாடல்களை அப்பர் பாடலுடன் ஒப்பிடுங்கள்; அழகு புரியும்.

உடம்பெனும் மனையகத்து  உள்ளமே தகளியாக

மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே

–நாலாந் திருமுறை

 

பொருள்-

உடம்பு என்னும் வீட்டில் உள்ளத்தை அகல் சட்டியாக்கி, அதில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி, உயிரையே திரியாக வைத்து, ஞானத்தீயை ஏற்றினேன். கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் தந்தையான சிவனைக் காண்பதற்கான வழி இது.

 

உடலான வீட்டில், சிவமான பொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது; விளக்கேறிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக்கொள்ள, அச்சிவஞானப் பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான   பொருளைக் காணலாம்.

கடம்பமர் காளை தாதை= கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரானின் தந்தை

 

திருமங்கை ஆழ்வார்

 

ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே என்பார் அப்பர் எனும் திருநாவுக்கரசர்

 

 

வாடினேன், வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து

 

கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி

 

 

ஓடினேன்; ஓடி உய்வது ஒரு பொருளால் உணர்வு எனும் பெரும்பதம் திரிந்து

 

நாடினேன்; நாடி நான் கண்டுகொண்டேந் நாராயணா என்னும் நாமம்

என்பார் திருமங்கை ஆழ்வார். இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.

சுபம்

 

 

Leave a comment

Leave a comment