தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

Inmates in Mumbai Prison

தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

சமூக சேவை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. தாதியர்/ நர்ஸ்கள் என்றால் உடனே ப்ளரன்ஸ் நைட்டிங்கேலை நினைக்கிறோம். குற்றம் புரிந்தோரை நல்ல மனிதர் ஆக்கியவர் என்றால் மணிமேகலையை நினைக்க வேண்டும். யார் அந்தப்பெண்மணீ?

சிறைச் சாலையில் சமூக சேவை செய்து கைதிகளைத் திருத்தி நற்குடி மக்களாக மாற்றும் புரட்சிகர கருத்தை முன்வைத்தவர் மணிமேகலை என்றால் மிகையாகா. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்த மதக் கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டது மணிமேகலை. ‘’நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார’’த்துடன் இரட்டைக் காப்பியங்களகத் தொன்றியது இந்நூல். சீழ்தலைச் சாத்தனாரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த மணிமேகலையின் காவியத்தலைவி–,கதாநாயகி மணிமேகலை என்னும் இளம் பெண் ஆவார்.

மாதவியின் மகளாக அவதரித்துப் பேரெழிலுடன் விளங்கிய மணி, ஒரு கட்டத்தில் சிறைச் சாளைக்கு விஜயம் செய்து அங்குள்ள கைதிகளைச் சந்திக்கிறார். அமுதசுரபி என்னும் வற்றாத உணவளிக்கும் அற்புத பாத்திரம் மூலம் அங்குள்ள கைதிகளுக்கு அறுசுவை உணவு படைக்கிறார். வயிற்றுக்குச் சோறிட்டதோடு நில்லாமல் மனதுக்கும் ஆறுதல் தரும் அன்பு மொழிகளையும்  நல்ல வாழ்க்கை நடத்தத் தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறார். அற்புதம்! அனைவரும் மனம் மாற்றம் அடைந்துவிடுகின்றனர். இதை அறிந்த சோழ மன்னன் அவளை அரண்மனைக்கு அழைக்கிறார். சிறைக் கைதிகளை உடனே விடுவிக்கும் படியும் சிறச்சாலைகளை சாது சந்யாசிகள தங்கும் திரு மடங்களாக மாற்றவும் ஆலோசனை வழங்குகிறார். மன்னனும் அதை ஏற்று செயல் படுத்துகிறான்.

சிறைக் கைதிகள் சீர்திருத்தம் Prisoners rehabilitation என்பது மேலை நாட்டில் புதிதாகப் பின்பற்றப்படும் கருத்து. இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டியவர் மணிமேகலை!

பெரிய புராண, மஹா பாரத தண்ணீர் பந்தல் கதைகள்

12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி பற்றி வேதங்கள் முதல் திருவிளையாடல் புராணம் வரை பிரஸ்தாபிகின்றன. அத்தகைய காலங்களில் அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி என்ற அற்புத கலயங்களும் சின்னங்களும் இந்திய மக்களைக் காப்பாற்றி வந்துள்ளன. இதை நம்பாதோரும் கூட கஷ்ட காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை மலர்ந்த பூமி இப் புனித பாரதம் என்பதையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.

பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹாபாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நால்வரில் ஒருவர். சம்பந்தராலும் போற்றப்பட்ட புனிதர். ஆனால் அந்தணர் அல்ல. அவர் திங்களுர் சென்றபோது அவர் பெயரில் திருமடங்களும் தண்ணிர் பந்தலகளும் இருந்ததைக் கண்டு வியந்தார். யார் என்று வினவியபோது அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் இவ்வாறு செய்ததை அறிந்தார். அவரிடமே சென்று ஏனைய்யா இப்படி அப்பர் பெயரை வைத்தீர்? அவர் என்ன சாதனை செய்து கிழித்துவிட்டார் என்று வினவ, அப்பூதி அடிகள் புலி எனச் சீறி அப்பர் தம் பெருமையை விளக்கி வந்தவரை விரட்டப் பார்த்தார். தாம்தான் அப்பர் என்று அவர் தம்மையே அறிமுகப் படுத்தியபோது அப்பூதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. நாம் இங்கே கவனிக்கவேண்டியது தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் 1300 ஆண்டுகளாக இன்றும் தமிழகத்தில் நீடித்திருக்கும் ஒரு சமூகப் பணி என்பதாகும்.

இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத காலத்தில் இப்படி ஒரு கதை வருவதைப் பார்த்தால் இமயம் முதல் குமரி வரை 5000 ஆண்டுகளாக இப்படி நற்பணி நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். பாண்டவ சகோதரர் நகுலன் சகாதேவனின் மாமன் மாத்ர தேச அதிபதி சல்லியன். மாபாரத போருக்கு முன் இவனை தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டவர்களும் கவுரவர்களும் முனைப்புக் காட்டினர். கள்ளத்தனத்தில் கெட்டிக்காரன் துரியோதணன். சல்லியன் வரும் வழியில் தண்ணீர் பந்தல்கள் வைத்து அவன் தாக சாந்தி செய்யவே அவனிடம் உதவி கேட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா? அவனும் அப்படியே உதவி தருவதாக வாக்களித்தான். கர்ணனின் தேரோட்டியாக அமர்ந்த சல்லியன், 18ஆம் நாளில் உயிர் துறக்கிறான். வாக்கிற்குக் கட்டுப்பட்ட சத்திய சீலன்!

ஆக தண்ணிர் பந்தல், அன்ன தானம் என்பன பாரதீய வாழ்வில் இரண்டறக் கலந்த அம்சங்கள். வட இந்தியாவில் காளி கம்பளவாலா சத்திரங்கள் என்று வழி நெடுகிலும் உண்டு. அந்தக் காலத்தில் இமய மலையின் புனிததலங்களுக்குச் செல்லுவோருக்கு கம்பளி ஆடைகளை கொடுத்துதவிய ஒரு தர்மாத்மாவின் பெயரில் அமைந்த சத்திரங்கள் அவை. நம் தமிழ் நாட்டிலும் வழி நெடுகிலும் அன்ன சத்திரங்கள் இருந்த காலம் ஒன்று உண்டு.

எறும்புக்கும் கொசுவுக்கும் கூடத் தீங்கு செய்யாத சமண சமயத்தினர் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவ மனை நடத்திய நாடு இது!

Prisoners in Amritsar Women’s Prison

சிறுகுடிக் கிழான் பண்ணன்

பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் நிலம் தானம் கொடுத்த ஆயிரக் கணக்கான கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் உள்ளன. புலவர்களுக்கு பொற்காசுகளையும் உணவையும் கொடுத்த சங்க கால மன்னர்களையும் வள்ளல்களையும் நாம் அறிவோம். இவை சமூக சேவை ஆகா. பலனை எதிர்பார்த்தோ, துதி பாடலை எதிர்பார்த்தோ செய்யப்பட்ட உதவி இவை. ஆயினும் ஜாதி மதம் இனம் , குலம் கோத்திரம் என்று பாராது உணவு படைதோரும் உண்டு. சோழமன்னன் கிள்ளிவளவனும் போற்றிய ஒரு வள்ளல் சிறுகுடிக் கிழான் பண்ணன். புறநானூறு 173ஆம் செய்யுளில் எறும்பு முட்டை கொண்டு சாரை சாரையாக செல்லுவது போல பண்ணன் வீட்டை நோக்கிமக்கள் செல்லுவதைப் படித்து இன்புறலாம்.

விருந்தோம்பல், தேவதானம், புலவரை ஆதரித்தல் என்பது வேறு. சமூக சேவை என்பது வேறு. தண்ணீர் பந்தல் கதைகளும் மணிமேகலை சிறைச் சாலைச் சேவைகளும் தனி ரகம். பாரதத்தின் வழி தனி வழி. எல்லோருக்கும் முன் உதாரணமாகத் திகழும் தனி வழி!

Contact swami_48@yahoo.com