சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

Balinese_rite_of_Suttee_in_Houtman_1597_

Suttee in Bali in 1597 (Wikipedia picture)

சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

சதி என்று அழைக்கப்படும் வழக்கம் பழங்கால இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இருந்தது. கணவன் இறந்தவுடன், அவனுடன் சிதைத் தீயில் ஏறி உயிர் விடுவது ‘’சதி’’ என்றும் ‘’உடன்கட்டை ஏறுதல்’’ என்றும் அழைக்கப்படும். இதை ஆரிய வழக்கம் என்று பிதற்றியோருக்கு புற நானூறும் பிற்கால இலக்கியமும் பதில் கூறுகிறது.

சதி என்பது ராமாயண, மஹாபாரத காலங்களில் கூட கட்டாயம் இல்லை. விரும்பினால் உடன்கட்டை ஏறலாம். அதீத அன்பினால் நடைபெறும் ‘தற்கொலை’ இது. தசரதன் இறந்தபோது அவன் அன்பு மனைவியர் உடன்கட்டை ஏறவில்லை. பாண்டு இறந்தபோது முதல் மனைவியான குந்தி தேவியும் உடன்கட்டை ஏறவில்லை. இரண்டாவது மனைவியான மாத்ரீ மட்டுமே உடன்கட்டை ஏறினாள். ஆக இது அந்தக் காலத்திலும் கூடப் பெருவாரியாக நடக்கவில்லை.

sati2

வெளிநாடுகளிலும் கூட அன்பின் காரணமாகவோ, பயம் காரணமாகவோ கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதையும், அல்லது ஒருவர் இறந்தவுடன் அடுத்தவர் தற்கொலை செய்து கொள்வதையும், பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப் படிக்கையில் அவர்களின் அன்பைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். இது போலவே முன்காலத்திலும் சதி மூலம் இறக்கும் பெண்களை பத்தினித் தெய்வமாக வணங்கி கோவில் எழுப்பி வழிப்பட்டனர். தமிழ் நாட்டில் நடுகல் வைத்து வீரர்களை வணங்கியது போல, வட இந்தியாவிலும் கர்நாடகத்திலும் கை சின்னத்துடன் கோவில்கள் வைத்து பத்தினிகளை வழிப்பட்டனர்.

சதி என்பது ஆரிய வழக்கம் என்று பிதற்றிய பி எச். டி.வாலாkகளும் வெள்ளைத்தோல் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’ உள் நோக்கத்தோடு இந்தியா பற்றி அவதூறுகளைக் கிளப்பினர். பெண்களை தீயில் தூக்கி எறிவது போல படங்கள் போட்டு கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஆரிய வழக்கம் என்று முத்திரை குத்தப்பட்ட நூற்றுக கணக்கான வழக்கங்கள் இமயம் முதல் குமரி வரை இருப்பதோடு உலகில் ஆரியர்கள் வாழ்ந்ததாக ‘’அறிஞர்கள்’’ கூறும் வேறு எவ்விடத்திலும் இல்லை!! ஆரியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் சைபிரீயவிலோ மத்திய ஆசியாவிலோ ஒரே இடத்தில் வசித்திருந்தால் நூற்றுக் கணக்கான ’’ஆரிய’’ பழக்க வழக்கங்கள் அங்கே இல்லதது ஏனோ??

சங்கத் தமிழ் நூல்களில் உள்ள வழக்கங்கள் வடக்கிலும் 2000 ஆண்டுகளுக்கு மேல் இருந்தன. ஆரிய- திராவிட வேறுபாடு அல்லது அத்தகைய இனச் சொல்லாட்சி எங்கனும் இல்லை. சங்க காலத்தில் வாழ்ந்த 461 கவிஞர்கள் எழுதிய 2389 பாடல்களில் உள்ள 27,000 வரிகளைக் கரைத்துக் குடித்தோருக்கு ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை நகைப்பைத் தரும். அது ஒரு பொய்மை வாதம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக தெரியும். இதற்குப் பின்னும் விளங்கவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் “விளங்காதவர்களே”!

ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை வைத்து ‘’திராவிடங்கள்’’ கோடிக் கணக்கில் பணம் குவித்ததையும், ஹிட்லர், முசோலினி போன்றோர் கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததையும் உலகம் அறியும்.

sati 3

சங்க இலக்கியத்தில் குரங்கு கூட ‘’சதி’’ செய்ததை அறிகிறோம். இதோ புற நானூறு முதல் நற்றிணை வரை சில ‘’சதி’’ பற்றிய பாடல்கள்:–

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

sati3

புறநானூறு பாடல் 373:– கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் :–

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மெந்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ……………………………………………..
…………………………………………….. அணியப் புரவி வாழ்க என,
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர –(வரிகள் 10-15)

பொருள்:– ‘’நல் இல் புலம்ப, கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார்’’— என்ற வரிக்கு உரைகார்கள் சொல்லும் பொருள்:தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டி தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து……………………………… (காண்க- புறநானூறு உரை, வர்த்தமானன் பதிப்பகம்)

அலாவுதீன் கில்ஜி என்ற வெறியன் உலக மஹா அழகி சித்தூர் ராணி பத்மினியை எப்படியும் அடைய வேண்டும் என்று வந்தபோது, அந்த மஹா உத்தமி ஆயிரம் பெண்களுடன் தீப்பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தாள். வரலாற்றில் அழியாத இடம் பெற்றாள். அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறது கோவூர் கிழாரின் பாடல்.

குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)
கருங்கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே — குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

பொருள்: ஆண் குரங்கு இறந்தது.– விதவையாக இருக்க விரும்பாத பெண் குரங்கு,— ஒன்றும் பயிலாத தன் குட்டியை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டை உடையவனே!

குரங்கு கூட அன்பின் மிகுதியால் மலையில் இருந்து பாய்ந்து உயிர் நீத்தது. இது பற்றி எழுதிய மு. வரதராசனார் இதை ‘சதி’ என்றே எழுதியமை குறிப்பிடத்தக்கது. (காண்க:– Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

பஞ்ச தந்திரக் கதையில் புறாக் கூட தீப்பாய்ந்த கதை வருகிறது. கணவன் புறாவை வேடன் பிடித்துச் சாப்பிட்டவுடன் மனைவி புறாவும் அவனுக்கு உணவாக தீயில் பாய்ந்தது சதி என்னும் வழக்கத்தினால் வந்ததன்றோ!!

ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் உள்ள சில பாடல்கள் ‘’சதி’’ என்னும் வழக்கத்தைக் குறிப்பிடுவதகச் சொல்வர் வெளி நாட்டோரும் பி. எச். டி. வாலாக்களும்— அதே பத்தாவது மண்டலத்தை நீங்கள் வேறு எதற்காவது மேற்கோள் காட்டினால் அது பிற்காலச் சேர்க்கை என்பர். வெளி நட்டோரும் அவர்களுக்கு அடிவருடும், ஒத்து ஊதும் நம்மவர்களும் அரை வேக்காடுகள் மட்டும் மல்ல, பாம்பு போல இரட்டை நாக்கினர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா? உங்களுக்கே புரியாதா?

எல்லை மீறிய அன்பு, பாசம் தொடர்பான கதைகளையும் நாவல்களையும் படித்தோருக்கு உடன்கட்டை ஏறும் பழக்கம் வியப்பைத் தருமேயன்றி அருவருப்பைத் தராது. எனினும் ஆதிகால வழக்கத்தைப் பலரும் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட காலையில் ராஜாராம் மோஹன்ராய் போன்ற பெரியோர்கள் முன்னின்று பிரம்ம சமாஜம் மூலம் அதற்குத் தடை போட்டதும் சரியே!

Leave a comment

1 Comment

  1. கட்டுரையில் ராஜாராம் மோகன் ராய் பற்றி தாங்கள் குறிப்பிடுவதில் எமக்கு இதை கேட்க தோன்றுகிறது. ராஜாராம் மோகன்ராய் கிருஸ்தவராக மதம் மாறி இந்தியாவை தூஷித்து இங்கிலாந்தில் குடியேறி அங்கேயே மறைந்து சமாதியும் உள்ளதாக கூறப்படுகிறதே! சமூக சீர்திருத்தவாதிகள்’ போர்வையில் ஆரம்பித்த பிரம்ம சமாஜத்தில் தாகூர், கேஷப் சந்திரசென், ராஜாராம் போன்றவர்கள் வெள்ளையனை அல்லவா புகழ்ந்து வாழ்ந்துள்ளனர்.

Leave a comment