சங்கீத ரகசியம்: இளமையில் கல்

Picture: My Friend Violinist Nagaraju’s son

சங்கீத ரகசியம்: இளமையில் கல்

 

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

ஞாபக சக்தி வளர வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

வயதான போதும் இளமை திரும்ப வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

அதுவும் இளமையில் இசையைக் கற்கவேண்டும்!!!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘நியூ சை ன்டிஸ்ட்’ New Scientist பத்திரிக்கை ஒரு நல்ல சுவையான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ‘சைன் டிFபிக் அமெரிக்கன்’, ‘நேச்சர்’ Nature, Scientific American ஆகிய பத்திரிக்கைகளிலும் நியுரோ சை ன்டிஸ்ட்’ பத்திரிக்கைகளிலும் இதே கருத்து வெளியாகி இருக்கிறது.

பார்ப்பனச் சிறுவர்களை ஐந்து வயதிலேயே வேதத்தின் ஒரு ஷாகையயும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= சடங்கு) கற்க அனுப்பியதால், அவர்கள் பெரிய அறிவாளிகளாக விளங்கினர். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஞாபக சக்தியுடனும் விளங்கினர். இதே முறையை சங்கீதப் பயிற்சிக்கும் பின்பற்றினர். வேதமும் இசையை அடிப்படையாக உடையது. இரண்டும் பய பக்தி கலந்த, மரியாதை மிக்க குரு குல வாச முறையில் பயிலப் பட்டன.

பள்ளிக்கூடத்தில் சேர வருவோருக்கு கணிதமும் சங்கீதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கிரேக்க அறிஞர் பிளாட்டோ வலியுறுத்தினார்.

இசை என்பது காதோடு மட்டும் நிற்பதல்ல. இசையின் நுண்ணலைகள் நம்முள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்ததவை.

முதலில் புதிய செய்தியைப் பார்ப்போம்:

சங்கீதத்தில் புகழ்பெற்ற, திறமைமிக்க 36 பேர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் பாதிப்பேர் ஏழு வயதுக்கு முன்னரே இசையைக் கற்கத் துவங்கினர். மீதி பாதிப்பேர் ஏழு வயதுக்குப் பின்னர் இசையைக் கற்கத் துவங்கினர். எல்லோரையும் எம்.ஆர். ஐ. ஸ்கேன் (Magnetic Resonance Imaging Scan) செய்து பார்த்தனர். ஒரு அதிசயமான உண்மை அம்பலத்துக்கு வந்தது.

மனிதர்களின் மூளையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதை இணைக்கும் வெள்ளைத் திசுவுக்கு கார்ப்பஸ் கல்லோசம் என்று பெயர். நாம் ரேடியோ அல்லது கம்ப்யூட்டர் ஆகியவற்றைப் பிரித்துப் பார்த்தால் பினபக்கத்தில் ஏராளமான இணைப்புகளைப் பார்க்கலாம். அது போல முளையின் இரண்டு பகுதிகளை இணக்கும் பகுதியே கார்பஸ் கல்லோசம். யார் சின்ன வயதிலேயே இசையைக் கற்கச் சென்றார்களோ அவர்களுக்கு இந்தப் பகுதி நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. ஏழு வயதுக்குப் பின்னர் பயின்றவர்களுக்கு இசைப் பயிற்சி இல்லாதவர்களின் அளவுக்கு இந்த வெண்ணிறப் பகுதி இருக்கிறது.

இந்த வெண்ணிறப் பகுதியின் வளர்ச்சி எதைக் காட்டுகிறது? இடது கையும் வலது கையும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. சங்கீதம் கற்பவர்கள் ஒரு கருவியைக் கற்கவோ கைகளால் தாளம் போடவோ இது மிகவும் அவசியம்

இதை ஜெர்மனியில் லைப்சிக் நகரில் இருக்கும் மூளை, மனித அறிவு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. இதை கிறிஸ்டோபர் ஸ்டீல்,

( மாக்ஸ் பிளன்க் நிறுவனம் Max Planck Institute for Human Cognitive and Brain Sciences, Leipzig, Germany) அறிவித்தார். இளமையில் சங்கீதம் கற்போர் மற்றவர்களை விஞ்சிவிடுவர் என்பது இந்த ஆய்வின் துணிபு.

நம் முன்னோர்கள் “இளமையில் கல்” என்றும் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்றும் சொன்னது எவ்வளவு உண்மை?

****

இசையும் செயல்பாடும்

இதோ இன்னொரு செய்தி:

வெளிநாடுகளில் இருந்து மூன்று பிரபல விஞ்ஞானப் பத்திரிக்கைகள் வருகின்றன.: New Scientist, Nature, Scientific American. இந்த மூன்று பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளுக்கு தனி மதிப்பு உண்டு.

பாட்டுக் கேட்டாலே போதும். மூளை வளர்ச்சி பெறும் என்று இந்த செய்தி கூறுகிறது! சங்கீதம் கற்போருக்கு பல மொழிகளைக் கற்கும் திறன் அதிகரிக்கும் என்றும் பெரும் இரைச்சலில் இருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் சக்தி அதிகம் என்றும் இந்த ஆய்வுகள் காட்டின. 45 பேரைத் தேர்ந்தெடுத்து  பல உரையாடல்களை பயங்கர இரைச்சலுக்கு இடையே ஒலிபரப்பினர். சங்கீதம் கற்றோர் மற்றவர்களை விட உரையாடல்களை நன்கு கேட்க முடிந்தது.  Journal of Neuroscience இந்தச் செய்தியை வெளியிட்டது.

பிரபல இசை மேதை மோசார்ட்டின் இசையை ரசிப்போருக்கு சில விஷயங்களில் அறிவும் திறமையும் கூடுதலாக இருப்பதாக 1993ல் நேச்சர் பத்திரிக்கை ஒரு ஆய்வை வெளியிட்டது. இளம் வயதில் சிறிது இசைப் பயிற்சி பெற்றாலும் வயதான பின்னரும் அவர்களின் கேள்வி ஞானம் சிறப்பாக இருக்கிறது என்று நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) 2012ல் இதை உறுதி செய்துள்ளது. (A Little Music Training Goes a Long Way: Practicing Music for Only Few Years in Childhood Helps Improve Adult Brain)

 

வயது ஆக ஆக ஆக மூளையின் செயல்பாடு குறையும் என்பது பொது விதி. ஆனால் சங்கீதம் கற்றுத் தொடர்ந்து பயிற்சி செய்வோரிடம் இந்த தேய்மானம் அந்த வேகத்தில் இல்லை. ஞாபக சக்தித் தேர்விலும், வேகமாக எதையும் புரிந்து கொள்ளும் தேர்விலும் சங்கீதக்காரர்கள் அதிகம் மதிப்பெண் பெறுகிறார்கள் (ஆதாரம்: 2012 July issue of Frontiers in Human Neuroscience).

*****

இதை எழுதும்போது, எனக்கு 1960களில் என் பெரிய அண்ணன் செய்த ஒரு செயல் நினைவுக்கு வருகிறது. மதியம் ஒலிபரப்பாகும் ‘விவித் பாரதி’ ஹிந்தி பாட்டுகளைக் கேட்டுகொண்டேதான் பாடங்களைப் படிப்பான். அவன் ஏமாற்றுவதாக அம்மாவும் சகோதரர்களும் அவனைக் கேலி செய்வோம். இப்போது நிறைய பேர் காதில் ‘இயர் போனை’ வைத்து பாட்டுக் கேட்டுக்கொண்டு பாடப் புத்தகங்களைப் படிப்பதைப் பார்க்கிறோம். இதிலும் பலன் உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது!

மோட்சார்ட் இசையைக் கேட்ட பின்னர் புத்திசாலித்தன (ஐ.க்யூ) சோதனைய்ல் மானவர்கள் அதிகம் மதிப்பெண் பெற்றதாக முதலில் கலிபோர்னியா பல்கலைகழகம் செய்தி வெளியிட்டது ஆனால் பின்னர் மற்ற பல்கலைகழகங்கள் இதே சோதனையைச் செய்து பார்த்தபோது அந்தப் பல்ன்கள் கிடைக்கவில்லை . ஆகவே இந்த சோதனை ஒத்துக்கொள்ளப் படவில்லை.

*****

இசையும் பிராணிகளும்

25/05/1983ல் ஹிந்து நாளேடு வெளியிட்ட செய்தி என் கோப்பில் இருக்கிறது. அதில் பக்திப் பாடல்கலைக் கேட்ட பசு மாடுகள் அதிகம் பால் சுரந்ததாக ஆராய்ச்சி முடிவு வெளியானது. இன்று வரை அது நடக்கிறதா என்று தெரியவில்லை. அன்னமாசார்யா கீர்த்தனைகள், வெங்கடேஸ்வர சுப்ரபாதம் ஆகியன பாடப்பட்டபோது பால் உற்பத்தி அதிகரித்தது.

சங்க இலக்கியத்தில் தினைப்புனத்தை மேயவந்த யானை கூட இசைக்குக் கட்டுபட்டு நின்ற செய்தி உளது. பிருந்தாவனத்தில் ஆநிரைகள் கண்ணனின் புல்லாங்குழலுக்குக் கட்டுப்பட்டு மெய்மறந்து நின்றதையும் நினைவு கூறுவோமாக.

Contact London Swaminathan at swami_48@yahoo.com