கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன புனிதர்!!!

Anayar

இசை மூலம் இறைவனை அடைந்த ஆனாய நாயனார்
எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—982; தேதி— 16th April 2014.

அறுபத்து மூன்று சிவனடியார்களின் கதைகளைக் கவிதை வடிவில் தந்தது பெரிய புராணம். இதை நமக்குத் தந்தவர் சேக்கிழார் பெருமான். இதில் வரும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், கண்ணப்பர், நந்தனார் முதலிய கதைகள் பலருக்கும் தெரியும். ஆனால் சேக்கிழார் பாடிய இன்னும் சிலரைப் பற்றி பலருக்கு அதிகம் தெரியாது. குறிப்பாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டே சிவலோகம் சென்ற ஆனாயர் பற்றி பலருக்கும் தெரியாது. புல்லாங்குழலில் நமசிவாய மந்திரத்தை இசைத்தவுடன் சிவனே பூவுலகிற்கு வந்து ஆனாய நாயனாரை புல்லாங்குழல் ஊதிக் கொண்டே அழைத்துச் சென்ற அற்புதமான வரலாற்றை சேக்கிழார் மிக அழகாகப் பாடியுள்ளார். இது உலகில் வேறு எங்கும் நடக்காத அதிசயம்!!

flute, anayanar2

மேல் மழநாடு என்பது சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி. அங்கே திருமங்கலம் என்று ஒரு ஊர். மங்கலம் என்றால் பிராமணர்கள் வாழும் ஊர் என்பது பொருள். ஆனால் அந்த ஊரில் வாழ்ந்த ஒர் மாடு மேய்க்கும் இடையர் பற்றிய கதை இது. அவர் பெயர் ஆனாயர். அவருக்கு தெரிந்தது மாடு மேய்க்கும் தொழில் ஒன்றுதான். கிருஷ்ண பரமாத்மாவின் ஜாதி. ஆனால் கண்ணனுக்கோ உலகில் தெரியாத விஷயம் இல்லை. ஆனாயருக்கு மாடு மேய்க்கும் தொழிலோடு வேறு இரண்டே விஷயங்கள் மட்டும் தெரியும். ஒன்று புல்லாங்குழல் வாசிப்பது, இரண்டு பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பது. அதையும் புல்லாங்குழலிலேயே வாசித்து மகிழ்வார்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்த அவரது கவனிப்பில் ஆடு மாடுகள் எல்லாம் சாப்பிட்டுப் பல்கிப் பெருகின. ஒரு நாள் ஒரு கொன்றை மரத்தைப் பார்த்துவிட்டார். அதன் பூக்கள் சரம் சரமாகத் தொங்கியதைக் கண்டவுடன் சிவ பெருமான நினைவில் மூழ்கிவிட்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. ஒரு பச்சைப் பசேல் என்று பச்சைக் கம்பளம் விரித்தார் போன்ற வயல் வெளியில் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தார். தூரத்தில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. ஒரு பக்கம் பச்சை வயல்; மறுபக்கம் நீல மேகம்; இந்தப் பிண்ணனியில் வெள்ளை நிறக் கொக்குகள் சிறகடித்துப் பறந்தன. இந்த அற்புதமான இயற்கை எழிலைப் பார்த்தவுடன் அவருக்கு இவற்றை எல்லாம் படைத்த இறைவன் நினைவுக்கு வரவே வயல் வரப்பிலேயே சமாதி நிலைக்குப் போய்விட்டார். அவருடன் வந்தவர்கள் அவரை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டி இருந்தது. அவர் சமாதி கலைந்து சுய நினைவுக்கு வர சில நாட்கள் ஆயின!!

aanaayanar

நாமாக இருந்தால் இந்த அற்புதமான காட்சியை உடனே மொபைல் போனில் புகைப் படம் பிடித்து அதை பேஸ் புக்கில் போட்டு பெருமைப் பட்டிருப்போம். ஆனால் ஆனாய நாயனார், ராம கிருஷ்ண பரமஹம்சர் போன்றோருக்கு சத்யம் – சிவம்—சுந்தரம் மூன்றும் இறைவனின் படைப்பு. எங்கெங்கெல்லாம் சுந்தரம் (அழகு) இருக்கிறதோ அது எல்லாம் அவர்களுக்கு இறைவனையே நினைவுபடுத்தும்.

கொன்றை மரத்தையும் அழகிய பூங்கொத்துக்களையும் கண்ட ஆனாயர் எடுத்தார் புல்லாங்குழலை, இசைத்தார் நமசிவாய மந்திரத்தை! இதைத் தொடர்ந்து அவரைச் சுற்றியிருந்த உலகமெல்லாம் ஆடாது அசங்காது நின்றன. இதோ சேக்கிழார் பாடல் வாயிலாகவே அதைக் காணுங்கள்:

“வள்ளலார் வாசிக்கும்
மணித் துளை வாய் வேய்ங்குழலின்
உள்ளுறை அஞ்செழுத்து
ஆக, ஒழுகி எழும் மதுர ஒலி
வெள்ளம் நிறைந்து எவ்வுயிர்க்கும்
மேல் அமரர் தருவிளை தேன்
தெள் அமுதின் உடன் கலந்து
செவி வார்ப்பது எனத் தேக்க”.

அதாவது அவர் வாசித்தது அமிர்தத்தையும் கற்பக மரம் ஒழுக்கும் தேனையும் கலந்து கொடுத்தது போல இருந்ததாம் (அமரர் தரு= கற்பக விருட்சம்).

அடுத்தாற்போல பசுக்களும் கன்றுகளும் மான் முதலிய காட்டு விலங்குகளும் என்ன செய்தன என்று படியுங்கள்:–

ஆன் நிரைகள் அறுகு அருந்தி
அசைவிடாது அணைந்து அயரப்
பால் நுரை வாய்த் தாய்முலையில்
பற்றும் இளம் கன்றினமும்
தான் உணவு மறந்து ஒழிய
தட மருப்பின் விடைக் குலமும்
மான் முதலாம் கான் விலங்கும்
மயிர் முகிழ்த்து வந்து அணைய.”

பொருள்:– பசுக்கள் சாப்பிட்ட உணவை அசைபோட மறந்தன. கன்றுகள் பாதியில் பால் குடிப்பதை நிறுத்தின. காளைகள் வந்து குழுமின. மான் முதலிய விலங்குகள் மயிர்க்கூச்சம் அடைந்தன.

anayar color

மயில் முதலிய பறவைகள் என்ன செய்தன என்பதையும் நம் கண் முன்னே படம் போலக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்:

ஆடு மயில் இனங்களும் அங்கு
அசைவு அயர்ந்து மருங்கு அணுக
ஊடு செவி இசை நிறைந்த
உள்ளமொடு புள் இனமும்
மாடு படிந்து உணர்வு ஒழிய
மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்.
கூடியவன் கோவலரும்
குறை வினையின் துணை நின்றார்

பொருள்:– மயில்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு ஆனாயரைச் சூழ்ந்து நின்றன. பறவைகள் அவரைச் சுற்றி கூடு கட்டின. இடையர்கள் பாதி வேலைகளைப் போட்டுவிட்டு அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பூமிக்கடியில் வாழும் நாகர்கள், வானத்தில் சென்று கொண்டிருந்த தெய்வ மகளிரான அரம்பையர், வித்யாதரர், சாரணர், கின்னரர், தேவர்கள் ஆகியோர் விமானங்கள் எல்லா வற்றுடனும் அங்கே கூடிவிட்டனர்.

பணி புவனங்களில் உள்ளார்
பயில் பிலங்கள் அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர்
மருங்கு மயங்கினர் மலிர்ந்தார்
தணிவு இல் ஒளி விஞ்சையர்கள்
சாரணர் கின்னரர் அமரர்
அணி விசும்பில் அயர்வு எதி
விமானங்கம் மிசை அணைந்தார்.

இந்தப் பாடல்கள் புல்லாங்குழல் இசையின் மகிமையையும் பாடுவதால் அப்படியே பாடல் வடிவில் படிப்பது இன்பம் பயக்கும்.

மரங்கள் அசையவில்லை. ஆறுகள் ஓடவில்லை, அருவிகள் நீர் ஒழுக்கு இன்றி அப்படியே நின்றன. கடல் அலைகள் வீசவில்லை என்று சேக்கிழார் பாடிக்கொண்டே போகிறார். இப்படி ஸ்தாவர, ஜங்கமப் பொருட்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் சிவனும் உமையும் இந்த இசையில் மயங்கி காளை வாகனத்தில் ஏறிப் புறப்பட்டனர்.

ஆனாயர் குழல் ஓசை
கேட்டருளி அருள் கருணை
தான் ஆய திரு உள்ளம்
உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணர் ஆம்
கண்ணுதலார் விடை உகைத்து
வான் ஆறு வந்து அணைந்தார்
மதி நாறும் சடை தாழ

“உடனே எம்முடன் வருக. வீட்டுக்குள் போய் ‘’ட்ரஸ்’’ எல்லாம் ‘சேஞ்ச்’ (’மாற்ற) பண்ண வேண்டாம். அப்படியே எம்முடன் வருக”– என்று சிவனும் உமையும் கூறினர்:–

“இந்நின்ற நிலையே நம்பால்
அணைவாய் என, அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார்
ஐயர் திருமருங்கு அணைந்தார்”

உடனே விண்ணவர்கள் மலர் மாரி பொழிந்தனர். முனிவர்கள் வந்து வேதம் ஓதினர். ஆனாயர் புல்லாங்குழலை நிறுத்தவே இல்லை. வாசித்துக் கொண்டே சிவனுடன் சென்று விட்டார். இவ்வாறு இசைக் கருவியை வாசித்துக் கொண்டே சிவலோகம் போன ஒரு தொண்டரைப் பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. நாமும் கதையை முடித்தோம். நமசிவவாய ஓம்!!

விண்ணவர்கள் மலர் மாரி
மிடைந்து உலகம் மிசை விளங்க,
எண்ணில் அரு முனிவர் குழாம்
இருக்கு மொழி எடுத்து ஏத்த’
அண்ணலார் குழல் கருவி
அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப்
பொன் பொதுவினிடைப் புக்கார்.

சுபம்! Contact swami_48@yahoo.com