
WRITTEN BY S NAGARAJAN
Date: 9 November 2016
Time uploaded in London: 5-26 AM
Post No.3335
Pictures are taken from various sources. Thanks.
Contact: swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 16
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 73.
யூனானுக்கு வந்த பின்னர் ஸு யுன் புத்த சங்கத்தை (Buddhist’s Association) விரிவு படுத்தலானார். ஏராளமான கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. தொலைதூரங்களிலிருந்து லாமாக்கள் அவரைப் பார்க்க வர ஆரம்பித்தனர். புத்த தர்மத்தின் சார்பில் பள்ளிகளும், மருத்துவ மனைகளும் ஆரம்பிக்கப்ப்ட்டன.
ஒரு விசித்திரமான சம்பவமும் நடைபெற்றது. புத்த சங்கத்திற்கு ஒரு கிராமத்தான் நன்கொடையாக ஒரு அண்ட்ங்காக்கையை அளித்தான்.
அது பறக்க முடியாத நொண்டிப் பறவை. முதலில் அதன் வழக்கப்படி அது மாமிச உணவை உண்டது. ஆனால் அமிதாப புத்தரின் நாமம் இடைவிடாது ஒலிப்பதைக் கேட்டவுடன் அதுவும் புத்த நாமத்தைச் சொல்லத் தொடங்கியது. அதிலிருந்து மாமிச உணவு சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட்டது.
நாள் முழுவதும் புத்த நாமத்தை அது சொல்லிக் கொண்டே இருந்தது.
ஒரு நாள் அதை ஒரு பருந்து தூக்கிச் சென்றது. மேலே பறக்கும் போது கூட அது தீவிரமாக புத்தரின் நாமத்தைக் கூவிக் கொண்டிருந்தது.
சாதாரண ஒரு பறவை. ஆபத்துக் காலத்தில் புத்தரின் நாமத்தை அது கூவிக் கொண்டிருந்தது. ஆறறிவு படைத்த மனிதர்கள் அந்தப் பறவையை விட இழிந்தவர்களா? ஏன் அவர்கள் புத்த நாமத்தைச் சொல்லுவதில்லை? ஸு யுன் இப்படி சிந்திக்கலானார்!
ஸு யுன்னுக்கு இப்போது வயது 74.
புத்த சங்கத்தின் விரிவாக்க வேலைகள் யூனானில் ஜரூராக நடைபெற்று வந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த லோ யுங் ஜியான் என்ற அதிகாரி எதையும் செய்ய விடாமல் ஏதாவது தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். கவர்னர் கெய் ஓ புத்த சங்கத்திற்கு ஆதரவாக அவ்வப்போது தலையிட வேண்டியிருந்தது.
ஸு யுன்னை அனைவரும் சந்தித்தனர்.. உடனே பீஜிங்கிற்கு சென்று இந்த விஷயத்தை சரி செய்யுங்கள் என்று கோரிக்கை வரவே ஸு யுன் பீஜிங் சென்றார். அங்கு பிரதம மந்திரி ஜியாங் ஜி லிங்கைச் சந்தித்து விவரங்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்.
உடனடியாக அவர் லோ யுங் ஜியானை பீஜிங்கிற்கு மாற்றி அங்கு வந்து சேருமாறு உத்தரவிட்டார். பிரச்சினை தீர்ந்தது. அவருக்குப் பதிலாக ரென் கி க்விங் சிவில் கவர்னராக யூனானுக்கு நியமிக்கப்பட்டார். ரென்னோ மிக நல்லவர். புத்த தர்மத்தின் பால் அதிக பற்றும் பக்தியும் கொண்டவர். தனது நல்லாதரவை அவர் நல்கி வரவே அனைத்தும் சுமுகமானது.
.
ஸு யுன்னுக்கு இப்போது வயது 75.
ஸு யுன் காக் ஃபுட் மவுண்டனுக்குத் திரும்பத் தீர்மானித்தார். புத்த சங்கத்தின் நிர்வாக வேலைகளை கமிட்டியிடம் ஒப்படைத்தார். அங்கு திரும்பிய அவர் மடாலய வேலைகளையும் புனருத்தாரண வேலைகளையும் செய்யலானார்.
அந்த வருடம் ஒரு துக்ககரமான சம்பவம் நிகழ்ந்தது. ஸு யுன் அப்போது லாங் ஹுவா மவுண்டனில் தங்கியிருந்தார்.
திடீரென ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் அடியோடு இடிந்து தரைமட்டமாயின. தப்பித்தது யூ பாவோ மடாலயம் மட்டும் தான்!
பூமி இரண்டாகப் பிளக்கவே அங்கிருந்தோர் அதனுள் விழுங்கப்பட்டனர். தப்பித்து மேலே வரும் போது பூமி மூடியது. ஆகவே அவர்கள் உடல்கள் சிதைந்து போயின. சிலரின் தலைகள் மட்டும் கோரமாக பூமியின் மேல் காணப்பட்டன.
சொல்லமுடியாத இந்தத் துயரத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்.
அந்த சம்பவம் நடந்த போது அதிச்யம் ஒன்றும் நடைபெற்றது. அங்கு ஜில்டிங் ஷாப் என்று ஒரு கடை இருந்தது. அதை மட்டும் பூகம்பம் ஒன்றும் செய்யவில்லை. அதை நடத்தி வந்தவர் பரம்பரை பரம்பரையாக புத்த தர்மத்தில் ஈடுபட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்.
அவரது இரண்டு குடும்பங்களில் தலா பத்து பேர் இருந்தனர். யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. அவர்களது தர்மப் பணியே அவர்களைக் காப்பாற்றியது என்பதை அறிந்த ஸு யுன் பெரிதும் மகிழ்ந்தார்.
பெரிய சோகத்தில் ஒரு சின்ன ஆறுதல்!
நாட்கள் நகரலாயின!
– தொடரும்.
.