லண்டனில் நான் கற்ற பாடம் Post No.4022)

Written by London Swaminathan
Date: 21 June 2017
Time uploaded in London- 15-12
Post No. 4022
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

1987 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி லண்டனில் தரை இறங்கினேன். பி.பி.சி. ( B B C Wold Service) தமிழோசை ஒலிபரப்புக்காக பிரிட்டிஷ் அரசு என்னை அழைத்தது (உலக சேவை அரசின் நேரடி பார்வையில் உடையது. சாதரண பி.பி.சி.(BBC One, BBC Two) மக்கள் தரும் லைசென்ஸ் பணத்தில் ஓடும் அமைப்பு).

 

இந்தியாவில் 25 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். முதலிய அமைப்புகளில் இருந்தும்கூட லண்டனில், — புதிய நாடு, புதிய தட்ப வெப்ப நிலை, புதிய சூழ்நிலை காரணமாக — ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது போல தடுக்கி விழுந்தால் தமிழர்களைக் காணும் காலம் அல்ல அது. தமிழர்களும், வெஜிட்டேரியன் உணவும் தேடிக் கண்டு பிடித்த காலம் அது. இப்பொழுது தோழான், துருத்தி அகதி, சகதி எல்லோரும் வரலாம்.

 

 

1993 முதல்தான் நிறைய பொதுப் பணிகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. நாலு சங்கங் களில் பொறுப்பு வகித்து சுமார் பத்து அமைப்புகளுக்கு இரண்டு லட்சம் பவுன்களுக்கு மேலாக நிதி சேகரித்து அளித்தேன். அதில் ஒரு அனுபவம்:—

 

பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் தேனியில் இருந்து சுவாமி ஓம்காரானந்தா வந்தார். அவர் இரு முறை லண்டனுக்கு வந்த போதும் நான் சார்ந்திருந்த அமைப்புகள் மூலம் பல இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்தேன் அவர் பெரிய தத்துவ வித்தகர். உண்மைச் சாமியார்; நான் கூட்டம் ஏற்பாடு செய்த கோவில்களில் ஒன்று லூயிஷாம் என்னும் இடத்திலுள்ள சிவன் கோவில்; இலங்கைத் தமிழர்களால் சிறப்பாக நடத்தப்படும் கோவில்.

 

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அதற்கு முதல் நாள் அவர்களுக்கு நினைவுபடுத்தி “எப்போது அழைத்து வரலாம், எவ்வளவு நேரம் பேச வேண்டும், என்ன வயதுக்கார ர்கள்? எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்? என்றெல்லாம் விசாரித்து பேச்சாளர்களுக்கு சொல்லுவது என் வழக்கம். அதன்படி சிவன் கோவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை டெலிபோனில் அழைத்து விசாரித்தேன்.

“தம்பி நாளை காலை பத்து மணிக்கு சுவாமிகள் பேசலாம். பின்னர் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லட்டும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந், தால் போதும்; அப்புறம் கோவில் நிர்வாகிகளும் குருக்கள்களும் மரியாதை செய்வார்கள் என்றார். யார் வருகிறார்கள் என்று கேட்டேன்.

“அதுவா, நம்ம தமிழ் ஸ்கூல் பிள்ளைகள்தான். ஆரம்ப வகுப்பு முதல் பள்ளி இறுதிப் படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர். ஆனால் பெருமளவு சின்னக் குழந்தைகள்தான்” என்றார்.

 

எனக்கு தூக்கிவாரி போட்டது. டெலிபோனில் அதைக் காட்டவா முடியும்? பெரிய பதட்டத்துடன் “அடக் கடவுளே, அவர் பெரிய அறிஞர். வேதங்கள், உபநிஷத்துகள், கீதை பற்றி பெரியோர்களுக்காக பேசக்கூடியவர். அரிய வாய்ப்பை நழுவவிடுகிறீர்களே” — என்றேன்.

அவரோ நிதானமாக ,

“தம்பி; நீங்கள் அவர் ஒரு நல்ல , உண்மையான சந்யாசி என்று சொன்னதால்தான் இப்படி செய்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் பார்ப்பது எல்லாம் சினிமாவில்—தெய்வீகத்  திரைப்படங்களில் வரும் நடிப்பு சந்யாசிகளைத் தான் பார்த்திருக்கிறார்கள்; நிஜ வாழ்விலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் சொல்லினால் விளக்கி புரியவும் வைக்க முடியாது. ஆகையால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள் அவரைப் பார்த்தால் போதும். அவர் எதுவும் பேசலாம்; ஆசியைகளுக்கும் கோவிலுக்கு வரும் மற்ற பெரியோர்களுக்கும் அறிவித்திருக்கிறோம் அவர்களும் வருவார்கள்” என்றார்.

என் கண்களில் நீர் வராத குறைதான். அவருடைடய அணுகுமுறை என் உள்ளத்தை உருக்கிவிட்டது. நானும் ஒரு பாடம் கற் றேன். ஒரு தனி மனிதன் நல்லவனாக இருந்தால், ஆன்மீக வாதியாக இருந்தால் அவருடைய தோற்றம் எத்தனை இளம் உள்ளங்களின் அடி மனதில் — பிஞ்சுப் பருவத்தில் – பதியும் என்று அந்த கோவில் நிர்வாகிக்கு இருந்த அனுபவ அறிவு எனக்கு இல்லாததை உண ர்ந்தேன்.

சுவாமிகளும் எல்லா வயதினரையும் வசப்படுத்தும் — பரவசப்படுத்தும் — அருளுரை வழங்கினார்.

 

இதை நான் சென்ற சனிக்கிழமை லண்டன் மித்ர சேவா அமைப்பில் பேசியபோது சொன்னேன்; எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்தும் இருக்கிறேன்.

 

ஆக நமக்கு வேண்டியது எல்லாம் உதாரண புருஷர்களே; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ரமண மகரிஷி போன்று ஏழைக் குடிசையில், ரிஷி முனிவர் போல, வாழ்பவர்கள் காலில் உலகமே விழும்; சரண் அடையும்.

 

(( இப்பொழுது என் மனதில் ஓடும் எண்ணங்களையும் எழுதுகிறேன்:

நடிகர்கள் என்பவர்கள் வெறும் நடிகர்களே; சுய வாழ்வில் யோக்கியர்கள் அல்ல. நடிப்புக்கு பணம் வாங்குதலிருந்து எல்லாமே திரை மறைவு வேலைகள்தான். அவர்கள் உலகிற்குப் பாடம் கற்பிக்க முடியாது. இதே போல திருக்குறளை மேடையில் முழக்கி நாம் எல்லோரும் தமிழர்கள் என்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை நூறு முறை சொல்லி ஏமாற்றும் மேடைப் பேச்சாளர்களையும் நாம் அறிவோம்.

இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. எங்கு சத்தியம் இல்லையோ அது அழிந்தே தீரும் இது நானோ ஒரு சந்யாசியோ போடும் சாபம் அல்ல. இயற்கை நியதி. பாரதியார் பாஞ்சாலி சபதத்தின் இறுதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்”.

–SUBHAM–

Leave a comment

1 Comment

  1. vijiraju's avatar

    very nice article.

    2017-06-21 19:42 GMT+05:30 Tamil and Vedas :

    > Tamil and Vedas posted: ” Written by London Swaminathan Date: 21 June 2017
    > Time uploaded in London- 15-12 Post No. 4022 Pictures are taken from
    > various sources such as Face book, Wikipedia and newspapers; thanks. 1987
    > ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி லண்டனில் தரை இறங்கினேன்”
    >

Leave a comment