
WRITTEN by London Swaminathan
Date: 10 DECEMBER 2017
Time uploaded in London- 10–31 am
Post No. 4476
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
கம்பன் வாழ்ந்த காலம் பற்றி பல வேறு கருத்துக்கள் உண்டு. சிலர் 9-ஆம் நூற்றாண்டு என்றும் இன்னும் சிலர் 10ஆம் நூற்றாண்டு என்றும், மற்றும் சிலர் 12ஆம் நூற்றாண்டு என்றும் பகர்வர். எது எப்படியாகிலும் அவருக்கு முந்தைய காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டை இருந்தது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் இருந்து தெரிகிறது. கம்பன் இவர்களுக்குப் பின்னால் வாழ்ந்தவன் என்பது அவரது சமரசப் போக்கில் இருந்து அறியப்படுகிறது.

Siva and Vishnu in one form in SANKARANARAYANA idol.
சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்கு, கிட்கிந்தா காண்டத்தில் போகிறபோக்கில் பதில் சொல்லுகிறான். அவன் பாடும் இடமோ சீதையைத் தேட, வழி சொல்லும் கட்டம் ஆகும்; முழுக்க, முழுக்க பூகோள வருணனை. அதற்கிடையில் சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்குப் பதில் தருகிறான். இப்படி வாதாடுபவர் எல்லோரும் ‘முட்டாள்கள்’ என்று முதல் வரியிலேயே ஒரு ஒரு போடு போடுகிறான்.
இதோ பாடலைப் பாருங்கள்:-
அரன் அதிகம் உலகு அளந்த அரி அதிகன்
என்றுரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடைவரிய பரிசேபோல்
புகல் அரிய பண்பிற்றாமால்
கரநதியின் அயலது வான்தோய் குடுமிச்
சுடர்த் தொகைய தொழுவோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி யாம்
நெடுமலையை வணங்கி அப்பால்
—நாடவிட்ட படலம்

பொருள்:-
சிவனே உயர்ந்தவன், உலகை அளந்த திருமாலே உயர்ந்தவன் என்று
சொல்லும் அறிவில்லாதவர்கள், நல்ல கதியை அடைதல் அருமையானது போல, புகுவதற்கு அரிய தன்மையுடைய வானத்திலுள்ள சுரநதியின் அருகில் உள்ளதும், வானளாவிய சிகரங்களில் சூரிய, சந்திரர்களின் சேர்க்கை உடையதும், வணங்கியவர்க்கு வேண்டிய வரங்களைத் தருவதுமான அருந்ததி என்னும் மலையைத் தொழுத பின்னர் அப்பால் செல்லுங்கள்.
அதாவது மூடர்கள் எப்படி மோட்சத்தை அடைவது கடினமோ, அவ்வளவு கடினமானது அருந்ததி மலையை அடைவது! அவ்வளவு வானளாவிய சிகரங்கள் உடைய மலை!
கம்பன் சொல்ல வந்தது– அருந்ததி மலையை அடைவது கடினம்; அங்கும் சென்று சீதையைத் தேடிவிட்டு அப்பால் செல்லுங்கள்.
இந்த வழிகாட்டும் படலத்தில் இடையே சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா என்ற வாதத்தை நுழைத்து அப்படி வாதிடுவோர் மூடர்கள் என்கிறார்.
இதற்கு முன்னர் கம்பன் சொன்ன வேறு ஒரு கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தக் கடவுள் விஷயத்தில், கம்பன் என்ன கருத்து உடையவன் என்பது புலப்படும்.

கம்பன் கூறுகிறான்,
ஒன்றே என்னின் ஒன்றே ஆம்:
பல என்று உரைக்கின் பலவே ஆம்:
அன்றே என்னின் அன்றே அம்:
ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்:
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!
(கடவுள் வாழ்த்து, யுத்தகாண்டம்)
பொருள்:–கடவுளை உண்டு என்பவனுக்கு அவன் உண்டு. இல்லை என்பவனுக்கு அவன் இல்லை. ஒரு கடவுள்தானென்றால் ஒரே கடவுளாகவே காட்சி தருவான். பல கடவுள் என்றால் பல கடவுளராக காட்சி தருவான். இன்றே காட்சி தருவன் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அவன் வருவான்.
ஆக, மேம்போக்கான காரணங்களை வைத்து, தோற்றங்களைக் கொண்டு அதுதான் உண்மை என்று வாதம் செய்யாதே. முழு உண்மையையும் உணர். அல்லது அப்படி உணர்ந்த பெரியோர்கள் கூறுவதையாவது நம்பு!
இவ்வளவு கஷ்டப்பட்டு கம்பன் போன்றோர் பாடிய கருத்தை நம் கிராமத்து பாட்டிமார்களும் தாத்தாமர்களும் ஒரே வரியில் சொல்லி விடுகின்றனர்:-
அரியும் சிவனும் ஒன்னு; அரியாதவன் வாயில மண்ணு-– என்று.
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்கள் அவர்கள்!
–சுபம் –