பில்லியன் டாலர் பிறந்த நாள் விழா: இந்துக்கள் கண்டுபிடிப்பு!

baba-birthday-1

Sri Sathya Sai baba’s Sahasra Chandra Darsana Festival

Research paper No 1672; Dated 24th February 2015

Written by London swaminathan

நாகரீகம் வாய்ந்த ஒரு சமுதாயம்தான் “ரோட்டி, கப்டா, அவர் மகானு”க்கு (உணவு, உடை, உறைவிடம்) மேல் சிந்திக்க முடியும். 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேத இலக்கியங்களைப் படைத்து அவற்றை வாய்மொழி மூலமாகவே பாதுகாக்க வேண்டும் என்றால் அது எத்தகைய ஒரு உயரிய சிந்தனை உடைத்தாயிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ‘பெர்fயூம்’ செய்வது எப்படி என்று (வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா) நூல் எழுத வேண்டுமானால் அவர்கள் நாகரீகத்தில் எவ்வளவு முன்னேறி இருக்க வேண்டும்?

இதே இந்துக்கள்தான் பிறந்த நாள் கொண்டாடும் வழக்கத்தையும் உலகிற்குக் கற்பித்தார்கள். இன்றோ, அது மேல் நாட்டில் பில்லியன் டாலர் ‘பிஸினஸ்’ ஆகிவிட்டது. பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், பிறந்த நாள் ‘கேக்’, திடுக்கிடும் ‘சர்ப்ரைஸ் பார்ட்டி’கள், பிறந்த நாள் பலூன், உணவு படைப்பு என்று இப்படி எத்தனையோ தொழில்கள் வளர்ந்துவிட்டன. எப்படி ‘பெர்Fயூம்’ (ஸெண்ட்) செய்வது நம் நாட்டில் துவங்கி இன்று பிரான்ஸ் நாட்டில் பில்லியன் டாலர் வணிகம் ஆனதோ அதே போல இந்த பிறந்த நாள் வைபவ விஷயங்களும் மேலை நாடுகளில் பெரும் வணிகம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் மூல காரணம் இந்துக்கள் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

நாம் எப்படி துவக்கினோம்?

கிருஷ்ண ஜயந்தி

ராமர் ஜயந்தி (ராம நவமி)

ஹனுமன் ஜயந்தி

சங்கர ஜயந்தி, ராமானுஜ ஜயந்தி, ரமண ஜயந்தி, ராமகிருஷ்ண ஜயந்தி, மத்வ ஜயந்தி என்று ஆரம்பித்து வைத்தோம். மாற்று மதத்தினரும் இதைப் பிடித்துக் கொண்டார்கள்.

புத்த ஜயந்தி

ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)

முகமது ஜயந்தி (மிலாடி நபி)

என்று அவரவர் கொண்டாடத் துவங்கினர். நாம் இதற்கும் மேலாக ஒரு படி போனோம்:

(ஜயந்தி என்றால் பிறந்த நாள்)

தேவர் ஜயந்தி

காந்தி ஜயந்தி

நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)

ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)

என்று மனிதர்களுக்கும், புனித மகான்களுக்கும் கொண்டாடத் துவங்கினோம்.

Sahasra_Chandra_Darshanam_Yagnam_Mahotsavam

புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா!!!

பின்னர் இதற்கும் மேலாகப் போனோம்:

கீதா ஜயந்தி என்று பகவத் கீதை உலகில் தோன்றிய நாளையும் கொண்டாடத் துவங்கினோம். உலகில் புத்தகத்துக்கு ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடும் ஒரே இனம் இந்துக்கள்தான்!

பிறந்த நாள் கொண்டாடுவது 40 சம்ஸ்காரங்களில் ஒன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஆண்டு நிறைவில் ஆயுஷ் ஹோமம் என்று பெரிய ஹோமம் நடத்துவோம் அல்லது கோவிலுக்கு குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விசேட அபிஷேக ஆராதனைகளை செய்வோம். இப்போதெல்லாம் மேலை நாடுகள் போல ‘கேக்’கும் வெட்டத் துவக்கி விட்டோம்.

ஆனால் இந்துக்கள் இத்தோடு நிற்கவில்லை. தினமும் பிராமணர்கள் சொல்லும் வேத மந்திரத்தில் நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், மோதாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்…..) என்று சொல்வதால் 100 ஆண்டுகள் வரை என்ன என்ன பிறந்த நாள் விழா என்று சாத்திரங்கள் பட்டியலே போட்டுக் கொடுத்துவிட்டன. உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய அதிசயத்தைக் காண இயலாது.

bday-cake1

ஜயந்தி நாட்கள்

கிருஷ்ண ஜயந்தி (ஸ்ரீ ஜயந்தி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி)— சிராவண மாத கிருஷ்ண பக்ஷ எட்டாம் நாள்(அஷ்டமி)

ராம ஜயந்தி (ராம நவமி)–சித்திரை மாத சுக்ல பக்ஷ ஒன்பதாம் நாள் (நவமி)

சங்கர  ஜயந்தி- வைகாசி மாதம் சுக்லபக்ஷ பஞ்சமி

கீதா ஜயந்தி- மார்கசீர்ஷ சுக்லபக்ஷ ஏகாதசி

ஹனுமன் ஜயந்தி – சித்திரை மாத பௌர்ணமி (சித்ரா பௌர்ணமி)

ராமானுஜ ஜயந்தி — சித்திரை திருவாதிரை நட்சத்திர நாள்

மத்வ ஜயந்தி —- விஜய தசமி நாள் (ஆஸ்வீன சுக்ல பக்ஷ தசமி)

புத்த ஜயந்தி – வைகாசி மாத பௌர்ணமி (வைகாசி விசாகம்)

ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)- டிசம்பர் 25

காந்தி ஜயந்தி- அக்டோபர் 2

நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)- நவம்பர் 14

ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)- செப்டம்பர் 5

முக்கியமான பெரியோர்கள் ஏப்ரல்/மே மதாம் வரும் (சித்திரை/வைகாசி) தேதிகளில் பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால் ஆங்கில தேதி மாறி மாறி வரும்)

card-display

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்

போன வாரம் லண்டன் முருகன் கோவிலில் நடந்த ஒரு சதாபிஷேகத்துக்குப் போனேன். அங்கு லண்டன் முருகன் கோவில் தலைமை குருக்கள் திரு.நாகநாத சிவம் நல்ல சொற்பொழிவு ஆற்றி ஒரு நூலையும் எல்லோருக்கும் கொடுத்தார். அது விக்ரமசிங்கபுரம் செல்ல மணி பட்டர் எழுதியது. அவர் சொல்லும் அபூர்வ விஷயங்களைக் காண்போம்:

61- ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி

70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி

81- ஆவது பிறந்த தினம் – சதாபிஷேகம்

100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம்

இது மட்டுமல்ல. இதற்கிடையில்

பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம்

உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம்

சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம்

பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம்

ரத சாந்தி – 72 – ஆவது பிறந்த தினம்

விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம்

ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர்.

சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர்

ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம்

100 வயது –பூர்ணாபிஷேகம்.

இதற்கான காரணம், முறைகள் ஆகியவற்றையும் செல்லமணி பட்டர் விளக்கி இருக்கிறார்.

Greetingcardsretaildisplay

சுருக்கமாக சதாபிஷேகம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். கிருஷ்ணர் வணங்கக் கூடிய ஆறு பேர் யார் யார் என்று நேற்று நான் எழுதிய கட்டுரையில் சஹஸ்ர சந்திர தர்ஸி என்பதை விளக்கி இருந்தேன். யார் ஒருவர் மூன்றாம் பிறை சந்திரனை ஆயிரம் முறை பார்க்கிறார்களோ அவர் கிருஷ்ணர் வணங்கக்கூடிய அளவுக்கு பெரிய மஹான். சத்ய சாய் பாபாவும் பெரிய அளவில் சஹ்ஸ்ர சந்திர தர்சன – சதா பிஷேக விழாவைக் கொண்டாடினார். அவர் நமக்கெல்லாம் இதன் அருமை பெருமை புரிய வேண்டும் என்று அதைச் செய்தார்.

29 நாட்களுக்கு ஒரு முறையே பிறை தரிசனம் கிடைக்கும் ஆதலால் 1000 முறை தரிசிக்க 80 ஆண்டு எட்டு மாதம் ஆகிவிடும். இந்த பிறந்த நாள் விழாக்களில் சஷ்டிதம அப்த பூர்த்தியின் போது மீண்டும் ஒரு முறை மனைவிக்கு தாலி கட்டுவதும் உண்டு. இந்து முறைப்படி ஆண்டுகள் எண்ணிக்கை 60. இதற்குப் பின்னர் மீண்டும் 60 ஆண்டுகள் வாழ்வது லட்சியம். மஹாத்மா காந்தியும்கூட நா

ன் இந்து முறைப்படி 120 ஆண்டுகள் வாழ விருப்பம் என்று சொல்லி இருந்தார்.

ஆக எல்லா ஜயந்திகளையும் நாம் கொண்டாட முடியவிட்டாலும் 60, 80, 100 ஆகிய ஆண்டுகளில் கொண்டாடலாம். உலகம் இந்துக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. நாம் கற்பித்த இந்த விழாவை இன்று உலகில் உள்ள எல்லா மதத்தினரும் கொண்டாடுகிறார்கள்.

baba

நூறாண்டுக் காலம் வாழ்க!

நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

மன்னிக்க வேண்டுகிறேன்! மரங்களே!

deodar-tree1

Deodar (Deva+ Taru) trees of the Himalayas (English word Tree came from Sanskrit Taru)

Research Paper written by London swaminathan

Research Article No.1664; Dated 21 February 2015.

இயற்கையை மதிக்கக் கற்றுக் கொடுப்பது பாரதப் பண்பாடு! இயற்கையை ‘மிதி’க்கக் கற்றுக் கொடுப்பது மேற்கத்தியப் பண்பாடு!

எங்கள் லண்டனில் அண்டர்கிரவுண்ட் (மெட்ரோ) ரயில்களில் “கால்களை உட்காருமிடத்தில் வைக்காதீர்கள்” – என்று எழுதிப் போட்டிருக்கும். ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் எதிரே இருக்கும் ஆசனத்தில் கால்களை வைத்தே உட்காருவர். அவர்கள் உட்காந்திருக்கும் இடத்தையும் யாரோ ஒருவன் இப்படி அசுத்தம் செய்திருக்கிறான் என்பதை ஏன் அவர்கள் அறிவதில்லை?

ஏன் என்றால் இயற்கையை மதிக்கும் “விஷ்ணு பத்னி நஸ்துப்யம்” – போன்ற விஷயங்களை அவர்கள் தாய் தந்தையர் கற்பிக்காததுதான்.

ebony-tree2

கருங்காலி (எபனி) மரம்

அந்தக் காலத்தில் எல்லா இந்துக்களும் காலையில் எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்று காலையில் நினைவுகூற வேண்டிய நல்ல விஷயங்களைப் பாடல் வடிவத்தில் நினைவு கூறுவர். அதில் ஒரு ஸ்லோகம்:

ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே – என்று சொல்லும்

பொருள்:–நீராரும் கடலுடுத்த நிலமடந்தையே! என் கால்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதைப் பொறுத்தருள்க – என்று சொல்லிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருப்பர்.

சிறு வயது முதலே, இந்துக்கள் — நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவைகளை “உயிர் வாழத் தேவையான அளவு மட்டுமே” பயன்படுத்த வேண்டும் என்ற பெரிய தத்துவத்தைப் போதித்தனர். மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த — ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரமான – “ஈஸாவாஸ்யம் யத் ஸர்வம்” – என்ற மந்திரமும் இதே கருத்துடைத்தே!

kadamba

கடம்ப மரம்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிகிரர் எழுதிய, அற்புதமான ஸம்ஸ்கிருத என்சைக்ளோ பீடியா – பிருஹத் சம்ஹிதா — வில் இறைவனின் திரு உருவங்களைச் சமைப்பதற்கு மரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதில் உள்ள சில சுவையான விஷயங்களை மட்டும் தருகிறேன்.

2_vilvam_tree

வில்வ மரம்

1.இறைவனின் திரு உருவத்தைச் செதுக்க தெரிந்தெடுக்கப்பட்ட மரத்தை முதலில் பூக்களால் பூஜித்து வழிபடவேண்டும் .உணவு படைக்க வேண்டும்.

2.பிராமணர்கள் கோவில் கட்டுவதானால் தேவதாரு, சந்தனம், வன்னி மரம், மதூக மரம் ஆகிய மரங்களால் சிற்பம் செய்யலாம்;

க்ஷத்ரியர்களாக இருந்தால் அரச மரம், கடிர மரம், வில்வ மரம், அரிஷ்ட மரம்

வைஸ்யர்களாக இருந்தால் ஜீவக (வேங்கை), சிந்து, கடிர ,ச்யாந்தன மரங்கள்

சூத்திரர்களாக இருந்தால் திண்டுல்க, கேசர, அர்ஜுன (மருத மரம்), சார்ஜ, மாமரம், சால (ஆச்சா) மரங்களால் சிற்பம் செய்யலாம்

(இதிலிருந்து அக்காலத்தில் நான்கு ஜாதியினரும் கடவுள் சிற்பங்களை நிர்மாணித்து வழிபட்டது தெரிகிறது.)

vengai3

வேங்கை மரம்

  1. வெட்டுவதற்கு முன்பாக மரத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பால், சாதம், கஞ்சி, ஊதுபத்தி, சாம்பிராணி முதையவற்றைப் படைத்துவிட்டு மரத்தில் வசிக்கும் தேவர், அசுரர், பேய்கள், சிவ கணங்கள், முன்னோர்கள், கணபதி, சிவன் ஆகியோரை வழிபட்டுவிட்டு மரத்தைத் தொட்டுக்கொண்டே கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்:

“ஓ, மரமே! ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்குவதற்காக உன்னைத் தெரிந்தெடுத் துள்ளோம். உனக்கு நமஸ்காரம். சாஸ்திர விதிகளின்படி செய்வதால் இதை தயவுசெய்து ஏற்றுக் கொள்வாயாக.உன்னிடத்தில் வசிக்கும் அனைவரும் நான்படைத்த படையல்களை ஏற்றுக் கொண்டு வேறு ஒரு மரத்திற்குச் சென்று வசிப்பார்களாக. எங்களை மன்னித்துவிடு. உன்னை வணங்குகிறேன்”

–அத்தியாயம் 59,பிருஹத் சம்ஹிதா

jamblon_03

ஜம்பூ (நாவல் மரம்); ஜாம்பூத்வீபம் = நாவலந்தீவு

naval

நாவல் பழம்

எவ்வளவு பணிவு பாருங்கள்! இது மூட நம்பிக்கை அல்ல. சங்க இலக்கியச் சன்றுகளை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். ஒரு பெண் பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்த மரத்தின் கீழ் காதல் செய்ய மறுக்கிறாள். ஏனெனில் அது அவளுடைய சகோதரியாம். இதே போல உலக மஹா கவிஞன் காளிதாசனும் சகுந்தலாவுக்கும்- இயற்கைக்கும் உள்ள உறவு முறையை சாகுந்தலத்தில் வருணித்திருப்பதையும் முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் தந்து விட்டேன். சகுந்தலா என்றாலே – பறவைப் பெண் – என்று சம்ஸ்கிருதத்தில் பொருள். இது பாரதீய சிந்தனையின் மகத்தான உயர்வைப் பிரதிபலிக்கிறது. இமயம் முதல் குமரி வரை இது எதிரொலிப்பது என் காதுகளில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கிறது.

shami-puja

வன்னி மரத்துக்கு (ஷாமி மரம்) பூஜை;சுவாமி கணப்தி சச்சிதானந்தா

வனஸ்பதி சிவ பெருமான்

பாரதீயனுக்கு எப்போது இந்த சிந்தனை மலர்ந்தது என்பதை எண்ணும் போது இன்னும் வியப்பு மேலிடுகிறது. மோசஸ் பத்து கட்டளைகளைப் பெறுவதற்கு முன், ஹோமர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதும் முன், சரஸ்வதி நதி தீரத்திலும், கங்கை நதி தீரத்திலும், அகத்தியன் மூலமாக காவிரி நதிதீரத்திலும் ஒலித்த யஜூர் வேதத்தில் – பிறவா யாக்கைப் பெரியோன் ஆன சிவ பெருமானை “வனங்களின் அதிபதி” (வனானான் பதி) என்றும் மரங்களின் அதிபதி என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போதே இந்த சிந்தனை பூத்துவிட்டது.

இமயம் முதல் குமரி வரையுள்ள – கங்கை முதல் காவிரி வரையுள்ள — சிவன் கோவில்களில் தினமும் நடக்கும் அபிஷேகத்தின்போது ருத்ரம்-சமகம் என்ற யஜூர்வேத மந்திரத்தைச் சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செய்வர். அதில்தான் மேற்கூறிய மந்திரங்களும் ஓம் நம சிவாய என்ற அற்புத மந்திரமும் வருகிறது. மேலும் சிவனையே காடாக வருணித்து அவன் தலை முடியெல்லாம் பசுமையாகக் காட்சியளிப்பதாகவும் மந்திரம் சொல்லுவர். அதில் அவனை உயிரினங்களனை த்துக்கும் இறைவன் என்னும் “பசுபதி” என்ற சொல்லும் வரும்.

gsv_vanni

வ்ருக்ஷானாம் ஹரிகேசேப்ய: பசூனாம் பதயே நம:

என்றும் நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேசேப்யோ என்றும் போற்றுவர். இன்னும் பல இடங்களில் நீ பச்சிலை, நீ செடி,கொடி புதர் என்றும் சொல்லுவர்.

விஷ்ணுவையும் இப்படி வருணிப்பர். புகழ் பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நீ ஆலமரம், அரசமரம், அத்தி மரம் என்று போற்றுவர் (ந்யக்ரோதோ அஸ்வத்த உடும்பரா).

gsv_paraay

Following is taken From Face book posting by Akila Kalaichelvan: Compare this with point No.2

சிற்பங்கள் செய்யப்பட்ட மரங்கள்
பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, துவளை, மருக்காரை, பல முள்ளிப் பாலை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகியன இரண்டாம் வகை மரங்களாகும். வெட்பாலை, மராமரம் அல்லது ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளைக் கருங்காலி, அசோகம், கருவேம்பு ஆகியவை மூன்றாம் பிரிவு மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, செண்பகம், மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியன நான்காம் வகையைச் சேர்ந்த மரங்களாகும். இத்தனை வகை மரங்கள் கூறப்பட்டிருப்பினும் பெரும்பான்மையாக இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ளமருது ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

மரங்களை வளர்ப்போம்!! மரங்களை மதிப்போம்.

acacia catechu_tree (1)

அகேசியா கடேச்சு

சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1653; Dated 16th February 2015.

சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25  கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.

50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதனால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை–  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால்  — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.

InscriptH506

மக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா? முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.

சிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.

Indus_script.jpg3

இதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.

இப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது!

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்

பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்

இதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.

இதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்)  என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.

ammonite-king.jpgthree generations

இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.

பெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.

kassite weapon 1275 BCE

அயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்”  (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்”  (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.

அயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.

indus1

உலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத மண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).

inscription

ஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.

லண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா! எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே! எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா! அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே! என்று ஏங்குவேன்.

rosettastone-detail

Rosetta Stone in Ancient Greek, Demotic and Hieroglyphs, displayed in British Museum,London.

முடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்முலாவை Formula பயன்படுத்துங்கள்.

வாழ்க தமிழ் (வலக் கண்)! வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)!!

swami_48@yahoo.com

தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

sangam-map1

தமிழ் பூமி- தமிழ் நாடு

Research Paper written by London swaminathan

Research Article No.1652; Dated 15th February 2015.

தமிழ் நாட்டுக்குத் தெற்கே இப்பொழுதுள்ள கன்யாகுமரியைத் தாண்டி ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததும், அது அடுத்தடுத்து வந்த இரண்டு சுனாமி கடல் எழுச்சியால் அழிந்து போனதும் மறுக்க முடியாத உண்மைகள். இதற்கு இலக்கியச் சான்றுகள் இருப்பதோடு கடலியல், பூகர்ப்பவியல் சான்றுகளும் உள.

இந்து மகாசமுத்திர கடலுக்கடியில் உள்ள மலைகள் படத்தை நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் (மாத இதழ்) சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதிலும் ஒரு புறம் லட்சத் தீவுகள் வரையிலும் மறுபுறம் அந்தமான் நிகோபர் தீவுகள் – இந்தோ நேஷியத் தீவுகள் வரையும் கடலடி மலைகள் இருப்பதைக் காண முடிகிறது. மிகவும் பழங்காலத்தில் ஆஸ்திரேலியா வரை நிலமும் கடலும் விட்டு விட்டு இருந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம்- ஒருவேளை நாகரீகம் மிக்க மனித இனமே தோன்றாத காலத்து இருந்திருக்கலாம்.

நாம் அறிந்த – தென் தமிழ் நாட்டை மூழ்கடித்த சுனாமி எல்லாம் 2300 அல்லது 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவையே. இதை மொழி இயலும் மெய்ப்பிக்கிறது.

மூன்று தமிழ் சங்கங்களும் சுமார் 300 அல்லது 500 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க முடியும் என்பதை எனது மூன்று தமிழ் சங்கம் பற்றிய கட்டுரையில் எழுதிவிட்டேன். அதாவது இரண்டாவது தமிழ் சங்க காலப் பாடல்கள் என்று நாம் எதை எதை அறிந்திருக்கிறோமா அவை எல்லாம் அதிக மொழி வேற்றுமை உடையன அல்ல. ஆகவே ஏறத்தாழ ஒரே காலத்தில் உருவானவையே.

south_east_asia_map

தமிழ்க் கொடி பறந்த நாடுகள்

சிலப்பதிகாரமும் கலித்தொகையும்

தென் மதுரை, கபாடபுரம் ஆகிய பாண்டியத் தலைநகர்களை கடல் அழித்தது பற்றி சிலம்பும் கலியும் செப்புவது என்ன?

“வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை;

ஊழிதோறு ஊழி உலகம் காக்க;

அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி!

(காடுகாண் காதை,சிலப்பதிகாரம்)

—இளங்கோ தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் தொகை) சொல்கிறார்:

map-5

கர்நாடக பிரதேசம்

மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேல் சென்று மேவார் நாட்டு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த புகழ் கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்

(முல்லைக் கலி, கலித்தொகை)

அதாவது கடல் கொண்ட பகுதிகளுக்கு நஷ்ட ஈடு கோருவதுபோல இமயம் வரை உள்ள பூமியை வென்றான் தென்னவன் (பாண்டியன்). சுனாமிக்கும், வட இமய விஜயத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் புகழ்ச்சிக்காக இப்படிப் பாடுவதுண்டு. வட திசையை வென்றதும் உண்மை- தென் திசையை கடலுக்குப் பலி கொடுத்ததும் உண்மைதான். கவிஞர்கள் இணைத்துப் பாடுவது மட்டுமே செயற்கையானது.

பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டுக் கொடுத்ததால் மலையாள பூமிக்குப் ‘’பரசுராம க்ஷேத்திரம்’’ — என்ற பெயர் உண்டு. இதுவும் பழைய சுனாமியின் போது கடல் பின்னாலுக்குப் போனவுடன் வெளிவந்த பூமியாக இருக்கலாம். ஆயினும் இதை நிரூபிக்க நமக்கு உறுதியான சான்றுகள் வேண்டும்.

Chola_dynasty_map_-_Tamil

தமிழர்கள் இழந்த பூமி பற்றி அடியார்க்கு நல்லார் , தனது சிலப்பதிகார உரையில் நமக்குத் தெரியாத செய்திகளைச் செப்புகிறார்:

“அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடஎல்லை ஆகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிந்தது”.

அடியார்க்கு நல்லார் பொய் சொல்லவோ எட்டுக்கட்டி கதை எழுதவோ தேவை இல்லை. அவர் சொல்வது எல்லாம் உண்மை என்பது அர்த்தசாஸ்திரத்தில் (கி.மு.300) பாண்டிய கவாடம் என்னும் முத்து பற்றிக் குறிப்பதாலும், வால்மீகி ராமாயணம் கபாடபுரம் என்னும் இரண்டாம் தமிழ் சங்க ஊர் பற்றிக் குறிப்பிடுவதாலும், ராமனுக்கு நினவுப் பரிசாக இலங்கை அரசன் விபீஷணன் ஏழு தங்கப் பனைமர பொம்மைகளைக் (ஏழ்குறும் பனைநாடு) கொடுத்ததாலும், பரசுராமன் காலத்தில் கேரள பூமி கடலுக்கு மேலே வந்ததாலும் உண்மை என்று உறுதியாகிறது.

அடியார்க்கு நல்லார் 700 காதம் என்பதை சிலர் 7000 சதுர மைல் என்பர். அது மிகப் பெரிய நிலப்பரப்பு. அவ்வளவு இருக்க முடியாது. இரண்டு முறை அடுத்தடுத்து சுனாமிப் பேரலைகள் தாக்கியதால் பாண்டிய மன்னன் இருமுறை தலை நகர்களை மாற்றினான். ஆகவே 700 சதுர மைல்களாவது கடலுக்குள் போயிருக்கலாம்.

2000px-India_Tamil_Nadu_locator_map.svg

பஃறுளி என்ற ஆறு வட எல்லையாக இருந்தது. குமரி ஆறு தென் எல்லையாக இருந்தது. இதன் இடையே இருந்த தென் மதுரையைக் கடல் விழுங்கியதால் முதல் தமிழ் சங்கத்தை இழந்தோம். அதன் பிறகு கபாடபுரம் தலை நகரமானது. 200 அல்லது 300 ஆண்டுகளுக்குள் அதையும் கடல்கொண்டது. பின்னர் தற்போதைய மதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது. தலைநகர் மாற்றம் பற்றி ரோமானிய யாத்ரீகர்களும் சொல்லுவதால் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்த கபாட புரம் அதற்குப் பின் கடலுக்குள் போனதாகவும் ஊகிக்கலாம்.

இந்துமத நூல்கள் 7 கடல், 7 மலை, 7 தீவுகள் என்று ரிக் வேத காலம் முதல் கூறிவருகிறது. இதே போல தமிழர்களும் ஏழு , ஏழாக நாடுகளைப் பிரித்திருப்பது பொருள் பொதிந்ததே. மேலும் கங்கை முதல் காவிரிவரையுள்ள 700 காதம் என்று ஒரு தமிழ் கல்வெட்டு கூறுவதால் நமக்கு அடியார்க்கு நல்லார் கூறும் “700 காவத” விஷயமும் உண்மையே எனக் காட்டும். (நாடு என்பது சங்க காலத்தில், ஒரு தாலுக்கா அல்லது ஜில்லா (வட்டம்/மாவட்டம்) அளவுடைய நிலப்பரப்புகள்).

historical_map_of_Tamil_Nadu

பழந்தமிழ் நாடு

தமிழர் இழந்த நூல்கள்

தமிழ் தாத்தா உ.வே சாமிநாத அய்யர் என்ற ஒருவர் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்து, நமக்குக் கொடுத்திராவிடில் தமிழர்களின் வரலாறு முற்றிலும் அழிந்திருக்கும். பழைய உரைகளில் இருந்து இது வரை தமிழர்கள் இழந்த நூல்கள் என்ன என்ன என்பதை அறிய முடிகிறது. ஆனால் அடியார்க்கு நல்லார் சொல்லும் பாண்டிய மன்னன் பெயரும் (சயமா கீர்த்தி), கீழேயுள்ள பல நூல்களும் சம்ஸ்கிருதச் சொற்களுடன் இருப்பதையும் நோக்குதல் வேண்டும். தொல் பழங்காலத்தில் மொழிக் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதை இது காட்டும்:

u-v-2

அகத்தியம், அவிநயம், இசை நுணுக்கம், மயேச்சுரம், மாபுராணம், பூதபுராணம் ( தமிழ் புலவர்கள் வேண்டுகோளை எல்லாம் புறக்கணித்து கணவன் சிதைத் தீயில் பாய்ந்து உயிர்நீத்த பாண்டியன் மனைவி “பூத”ப்பாண்டியன் தேவி என்று புறநானூறு சுட்டுவதையும் நினைவிற்கொள்க), பனம்பாரம், பல்காப்பியம், பன்னிருபடலம், முதுகுருகு, முதுநாரை, முறுவல், சயந்தம், பரதம், செயிற்றியம், பெருங்கலம், பஞ்சமரபு, இந்திரகாளியம், காக்கைபாடினியம், நற்றத்தம், வாய்ப்பியம், வியாழமாலை, பரத சேனாபதீயம், சிற்றடக்கம், பெரும்பொருள் விளக்கம், வெண்டாளி, களரியாவிரை, வாமனம், வையாபிகம், சிகண்டியம், பஞ்சபாரதீயம், குணநூல், மதிவாணம், கழாரம்பம், சங்கயாப்பு, துராலிங்கம் – முதலிய நூல்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

உரைகாரர்கள் மேற்கோள் காட்டியதன் பெயரில் இந்த நூல்களின் பெயர்களும் அவற்றில் உள்ள சில செய்யுட்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

வாழ்க தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

தமிழ் திரைப்படங்களில் ராமர்! -1

rama_sita_lakshman_and_hanuman

Research article written by S Nagarajan

Research Article No. 1626: dated 6th February 2015

 

by ச.நாகராஜன்

பாரதத்தின் தேசீய வீரனாகவும் தெய்வமாகவும் திகழ்பவர் ஸ்ரீ ராமர்.

தமிழ் திரைப்படங்கள் பாரதப் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் தமிழ் திரையுலகில் ராமர் சித்தரிக்கப்பட்டிருப்பதை ஏராளமான படங்களும் பாடல்களும் சுட்டிக் காட்டுகின்றன.

வால்மீகி முனிவர் ராமரின் சரித்திரத்தை 24000 ஸ்லோகங்களில் விவரித்து ராமாயணமாகப் படைத்தார். அதை பாரதம் தேசீய நூலாக ஏற்றுக் கொண்டுள்ளது. ராமரின் வரலாறை அன்றாடம் கேட்பதே ஒரு பாக்கியம் என்பது தான் ஒரு சாதாரண இந்தியனின் மனோபாவமாக இருந்து வருகிறது.

‘ஏகைகம் அக்‌ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்’ – அதில் ஒரு எழுத்தைச் சொன்னாலும் கூட அது மஹா பாதகத்தையும் போக்கி விடும் என்பதே வால்மீகி முநிவரின் வாக்கு. அதுவே நம் அனைவரது நம்பிக்கையும் கூட.

ஒரு ஸ்லோகம் என்பது நான்கு பாதங்களைக் கொண்டிருக்கும். இப்படி அமைக்கப்பட்டுள்ள 24000 ஸ்லோகங்களில் ஒரு  பாதத்தையும் கூட மாற்ற முடியாது, இடைச் செருகல் செய்ய முடியாது என்பதை அதில் ஊறி அனுபவித்த மஹாகவி கம்பன் கூறுகிறான் இப்படி:


sita rama

“வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்       ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்”

மாற்ற முடியாதபடி சொற்கள் உள்ள வால்மீகியின் பாதங்கள் அமைந்த ராமாயணத்தை அவன் இனிய கவிதைகளால் தேவரும் பருகும்படி செய்தான். அப்படிப்பட்ட மஹாமுனி புகழ்ந்த கோசல நாட்டை அன்பெனும் கள்ளைக் குடித்து விட்டு ஊமை உளறுவது போல மொழிய ஆரம்பித்து விட்டேன் என்பது இதன் திரண்ட பொருள்.

எப்படிப்பட்ட உலகின் தலையாய மஹாகவி கம்பன்! அவனது அவையடக்கச் செய்யுள் இது! அவனே வியக்கும் அரும் கவி வால்மீகி.

பாரத மக்கள் அனைவருடைய லட்சிய புருஷராக ஒருவரை வால்மீகி மையப்படுத்திக் காட்டுவது சாதாரண விஷயமல்ல. அந்த ராம சரித்திரம் இன்று வரை மங்காமல் நாளுக்கு நாள் மெருகேறிப் புகழோங்கி வழங்கப்பட்டு வருகிறது.

அதைத் தமிழ் திரையுலகம் தமிழ் மக்களின் மேன்மைக்காகவும் ரசிப்பிற்காகவும் அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது.

சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1968ஆம் ஆண்டு மலர்ந்த படம் லக்ஷ்மி கல்யாணம். ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெற்றது. சிவாஜி கணேசன். எஸ்.வி.ரெங்காராவ், பாலாஜி, சோ, சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா என ஏராளமான நட்சத்திரங்கள். எம்.எஸ். விசுவநாதன் இசை அமைத்த இந்தப் படத்தில் பெண் பார்க்கும் படலம் ஒன்றில் அழகிய வீணையை மீட்டி வெண்ணிற ஆடை நிர்மலா பாட அதை பெண் பார்க்க வந்த பாலாஜி மெய்மறந்து கேட்க அருகில் சிவாஜி கணேசன்,வி.எஸ்.ராகவன். வி.கே.ராமசாமி, பழம் பெரும் காமடி  நடிகர் கருணாநிதி, சோ  உள்ளிட்ட அனைவரும் ரசிக்க பாடல் மலர்கிறது.

பாடலை எழுதியவர் ராம பக்தியில் தோய்ந்த ஒருவர் – கண்ணதாசன். பாடலின் கடைசி வரிகளில் லட்சோப லட்சம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தார். முதல் வரிகளிலோ அற்புத பட்டியல் ஒன்றை சித்தரித்து விட்டார். பாடல் இதோ:

rama-lakshmana-sita-and-hanuman-HF35_l

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடிஅவன்
நல்லவர் வணங்கும் தேவனடிதேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்டகல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்தசீதாராமன்
அரசாள வந்த மன்னன்ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்தசுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்றகோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்டதசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும்கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும்ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

 



வம்சத்திற்கொருவன்ரகுராமன்
மதங்களை இணைப்பவன்சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன்ஸ்ரீராமன்
முடிவில்லாதவன்அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!

 
அற்புதமான இந்தப் பாடலின் ஏற்றத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன்,  சுந்தரராமன்,  கோசலராமன்,தசரதராமன்,கோதண்டராமன்,


ramasita

ஸ்ரீஜெயராமன்,ரகுராமன்,சிவராமன் என்று அடுக்கிக் கொண்டே போன கவிஞர் எண்ணிக்கையற்ற தன்மையை நினைத்து அனந்தராமன் என ராமன் அனந்தம் என்று முத்தாய்ப்பாகக் கூறுவது நூல்களின் முடிந்த முடிபல்லவா!  ராமஜெயத்தை நம்பியோர்க்கு ஏது பயம் என்றும் கூறி அனைவரும் அவரது அபய்மாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் கவிஞர். பி.சுசீலா தனக்கே உரித்த மென்மைக் குரலில் உருகிப் பாடும் இந்தப் பாட்டில் 18 முறை ராமர் வருகிறார்!

ஏராளமானோர் பங்கு பெறும் இந்தக் காட்சியில் பெண்பார்க்கும் படலத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தை சிருஷ்டித்து விட்டனர் கலைக் குடும்பத்தினர்.

இப்படிப்பட்ட ராமர் பாடல்களைப் பாடுவது நமது வாழ்க்கை முறை என்பதைப் படம் சித்தரிக்கிறது!

இந்த ராமனை மனதில் ஏற்றிக் கொண்டு தமிழ் திரைப்படங்களில் ராமரைத் தேடி யாத்திரயைத் தொடங்குவோம்.

 

            -தொடரும்

 

swami_48@yahoo.com

திருவண்ணாமலை கோவிலில் சில விநோதச் சடங்குகள்

OLYMPUS DIGITAL CAMERA

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண் -1623; தேதி 5 பிரவரி 2015

இந்துக்களின் கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. அவை கலா கேந்திரங்கள்; பல்கலைக் கழகங்கள்; காலாகாலமாக இருந்துவரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் அகியவற்றின் மூல ஆதாரங்கள். உள்ளூரில் வசித்த சாது சந்யாசிகளின், புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகங்கள்.

தமிழ் நாட்டுக் கோவில்கள் வரலாற்றுப் பதிவேடுகள். அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகள்தான் தமிழக வரலாற்றின் ஆதாரங்கள். இசை, நடனம், தமிழ் பக்தி இலக்கியங்கள், சிற்பகலைக்கு அஸ்திவாரமாக விளங்குபவை. விழாக்கள் மூலம் மக்களை ஒன்று சேர்க்கும் சமுதாயச் சீர்திருத்தக் கூடங்கள். சுற்றுலாப் பயணிகளையும் யாத்ரீகர்களையும் வெளிநாட்டுப் பயணிகளையும்  ஈர்க்கும் காந்தங்கள் —- என்று இப்படி கோவில்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.

ஒவ்வொரு கோவிலிலும் உள்ள விநோதச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மக்களுக்கு எவ்வளவோ பாடங்களைப் போதிக்கின்றன. திருவண்ணா மலையிலும் இரண்டு பாடங்களைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகள் உண்டு.

வீரவல்லாளன் (1291-1343) என்ற மாமன்னன் இந்து மதத்தின் காவலனாக விளங்கினான். அவன் ஒரு ஹோய்சாள மன்னன். அவனுக்கு மூன்றாம் வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலைக்கு வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்ர வீர வல்லாளன் பட்டணம் என்று அந்த ஊருக்குப் பெயர் சூட்டி அதை ஹோய்சாள ராஜ்யத்துக்கு இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கினான். அருணகிரிநாதர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம்சுரத் குமார் போன்ற எத்தனையோ மகான்களைக் காந்தமாக இழுத்தது அண்ணாமலை. ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னதாக அங்கு சென்றவன் ஹோய்சாள மாமன்னன் வீர வல்லாளன்.

Hoysala_emblem

ஹோய்சாளர் சின்னம்: சிங்கத்தை வீழ்த்தும் வீரன்

பஞ்சபூதத் தலங்களில் அக்னியின் அம்சமாக விளங்குவது திரு அண்ணாமலை. சிவன் அடியார்களால் பாடல் பெற்ற தலம். அக்கோவிலுக்கு வீர வல்லாளன் எவ்வளவோ திருபணிகளைச் செய்தான். வீர வல்லாளன் திருவாசல் என்று அழைக்கப்படும் பெரும் கோபுரத்தையும், மதில் சுவரையும் பல மண்டபங்கலையும் அவன் கட்டினான. அவனது 9 கல்வெட் கள் கோவிலில் இருக்கின்றன. அவை அவனது நீண்ட விருதுகளையும் பட்டங்களையும் அவனும் ராணியின் அளித்த தான தருமங்களையும் எடுத்துரைக்கின்றன.

வல்லாளன் கன்னட, ஆந்திர, தமிழகப் பகுதிகளை ஆண்ட காலம் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலம். வடக்கே டில்லியில் இருந்த சுல்தான்களின் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காலம். கோவில்களை அழித்து அதன் செல்வங்களைச் சூறையாடுவது அவர்கள் வழக்கம்.

அலாவுதீன் கில்ஜியின் அடிமைச் சேவகன் — தளபதி மாலிக்காபூர் திடீரென படை எடுத்து வந்த போது வல்லாளன் அவனது தலைநகரில் இல்லை. அவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் பங்கேற்க வந்திருந்தான். தலைவன் இல்லாத் தலை நகரம் சூறையாடப்பட்டது. பீன்னர் ஒருவாறாக சமாதானத்தின் பேரில் அவனுக்கு நாட்டைத் திரும்பித் தந்தான் அலவுதீன் கில்ஜி. பின்னர் முகமது பின் துக்ளக் படையெடுத்தான். இதற்குப் பின்னர் மதுரையை ஆண்ட உடௌஜி என்பவன் போர்தொடுத்தான். ஆனல் அவன் மர்மமாக வந்த ஒரு அம்பினால் மாய்ந்தான். இனி அமைதியான ஆட்சி எண்ணி இருந்த தருவாயில் மதுரையை ஆண்ட சுல்தான் கியாஸ் உதீன் தம்கானி என்பவன் தாக்கினான். ஆறு மாத முற்றுகையின் போது, சமாதானம் செய்வதாகச் சொல்லி முன்வந்து, எதிர்பாரத தாக்குதல் நடத்தினான் சுல்தான். இது கண்ணனூர் குப்பம் என்ற இடத்தில் நடந்தது. இந்தத் தாக்குதலில் வீர வல்லாளன்  சிறைப் பிடிக்கப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்பட்டான.

வல்லாளனின் தலையை மதுரைக் கோட்டைச் சுவரில் தொங்கவிட்டான். அப்போது மதுரைக்கு யாத்திரை வந்த இபின் பட்டுடா என்னும் அராபியப் பயணி இந்த தலை தொங்குவதைப் பார்த்து குறிப்பேட்டில் எழுதிவைத்தான்.

வல்லாளனின் முடிவு பரிதாபமான முடிவு என்றாலும் அவன் புகழ் திருவண்ணாமலை கோபுரம் அளவுக்கு இன்றும் உயர்ந்து நிற்கிறது. 700 ஆண்டு காலமாக புகழ் பரப்பும் அக்கோபுரம் இன்னும் ஆயிரம் ஆண்டுக்கும் அவன் புகழைப் பரப்பும். அவனுடைய சிலைகள் கோவிலில் பல உருவங்களில் பல இடங்களில் உள்ளன. இன்றும் அந்தச் சிலைக்கும் பூமாலை சாற்றி போற்றி வருகின்றனர்.

vallala

இந்து மதக் காவலன் வீர வல்லாளன்

வல்லாளன் புகழை,  14-ஆம் நூற்றாண்டுப் புலவர் எல்லப்ப நாயனார் பாடிய அருணாசல புரானத்தில் காணலாம். வல்லாளனைத் தீர்த்துக் கட்டீய மதுரை சுலதானை விஜய நகரப் பேரரசனின் படைத்தளபதி குமார கம்பண்ணன் வந்து நிர்மூலம் செய்தான். முஸ்லீகளால் சூறையடப்ப்பட்டு 40 ஆண்டுக்காலத்துக்கு மூடிக்கிடந்த மதுரை மீனாட்சி கோவிலையும் திறந்து வைத்தான். இத்தனையயும் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல அவன் மனவி கங்காதேவி மதுரா விஜயம் என்னும் அற்புதமான சம்ஸ்கிருத காவியத்தில் எழுதிவைத்துள்ளாள். உலகின் முதல் நேரடி வருணை செய்த (பத்திரிக்கை நிருபர்) பெண்மணி மகாராணி கங்காதேவி.

தென்னாட்டில் முஸ்லீம் ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்தவன் குமார கம்பண்ணன். அவன், அவர்களை வட நாட்டிற்கு விரட்டினான். அங்கு சுல்தான் ஆட்சி போய், மொகலாய ஆட்சி வந்து அட்டூழியங்களைத் தொடர்ந்தது. சிவாஜி என்னும் மாமன்னன், மலை ஜாதி மக்கள் இடையே தோன்றினான். உலகின் முதல் கெரில்லா யுத்தத்தை நடத்தி மொகலாய ஆட்சிக்கு சாவு மணி அடித்தான்.

வல்லாளனுக்கு குழந்தை இல்லை என்றும் இதுபற்றி அவன் அண்ணாமலையானிடம் முறையிட்டபோது நாமே உமக்குக் குழந்தையாக வருவோம் என்றும் சொன்னதாக ஒரு கதை உண்டு. ஆக ஒரு மாசி மாதத்தில் மன்னன் இப்படிக் கொடூரமாக இறந்த செய்தியை அர்ச்சகர்கள் சிவனிடம் அறிவிக்கவே அவர் நாமே அவனது இறுதிச் சடங்குககளை நடத்துவோம் என்று சிவன் சொன்னதாகவும் உடனே பள்ளிகொண்ட பட்டு என்னும் இடத்தில் அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்ததாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.

hoysala king

ஹோய்சாளமன்னன் சிலை

இதை ஒட்டி ஆண்டுதோறும் இப்போதும் அந்த இறுதிச் சடங்கை சிவ பெருமானே செய்துவருகிறார். இது ஒரு புறமிருக்க திருவண்ணா மலையில் ஆண்டுதோறும் நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் அர்ச்சகர்களும் ஊழியர்களும் சுவாமியை வல்லாளன் திருவாசல் வழியாகக் கொண்டு செல்ல முயன்றபோது அவ்வாயில் வழியாக போக முடியாமல் தடங்கல்கள் வந்தன. உடனே பத்து நாள் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் வேறு வழியாக சுவாமியையும் அம்மனையும் திரு உலா எடுத்துச் சென்றனர். வல்லாளன் மாபெரும் கோவில் கோபுரத்தைக் கட்டிவிட்டோம் என்று மமதை கொண்டிருந்ததால் இப்படி நடந்தது.

சுவாமியின் பல்லக்கு இப்படி செல்ல மறுப்பதை அறிந்த வல்லாள மாமன்னன் தாமே அங்கே வந்து இறைவனிடம் கண்ணீருடன் மன்றாட பத்தாம் நாளன்று அந்த சப்பரம் வல்லாளன் திருவாசல் வழியாக தடங்கல் இன்றிச் சென்றது. இதை நினைவு கூறும் விதத்தில் இன்றும் பத்தாம் நாளன்று மட்டும் வல்லாளன் திருவாசல் வழியாக சுவாமி ஊர்வலம் புறப்படும்.

இவ்விரு விநோத நிகழ்ச்ழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும் இரு விஷயங்கள்: 1)அம்மா அப்பா இல்லாதோருக்கு, தந்தை-தாய் ஆகிய எல்லாம் இறைவனே. மகன் இல்லார்க்கு தானே மகவாக வருபவனும் அவனே. 2)மமதை, அகந்தை (யான் எனது என்னும் செருக்கு) இருந்த எல்லோருக்கும் பாடம் கற்பித்து நல் வழிப்படுத்தி, உய்ய வைப்பதும் இறைவனே.

அண்ணாமலைக்கு அரோஹரா!!

கோவிலில் தமிழ் புத்தக அரங்கேற்றங்கள்!!

madurai-meenakshi-temple

Madurai Sri Meenakshi Temple

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1540; தேதி 2 January, 2015.

தமிழர்கள் தெய்வ பக்திமிக்கவர்கள். அவர்களுடைய முக்கிய நூல்கள் எல்லாம் கோவில்களில் கடவுள் சந்நிதியில் அரங்கேற்றப்பட்டன.

இதோ ஒரு சுவையான பட்டியல்:

சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேறியது.

கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம், காஞ்சீபுரம் குமர கோட்டத்தில் அரங்கேறியது.

கம்பர் எழுதிய கம்பராமாயாணம், ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கேறியது.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்,

திருவள்ளுவனின் திருக்குறள்,

குமரகுருபரரின் மீனாட்சி பிள்ளைத் தமிழ்

ஆகிய புனித நூல்கள் மதுரை மீனாட்சி திருக்கோவிலில் அரங்கேறின.

srirangam ranga gopuram

நாராயண பட்டதிரி வடமொழியில் எழுதிய நாராயணீயம் குருவாயூர் கோவிலில் அரங்கேறியது.

தொல்காப்பியம் இலக்கண நூல் என்பதால், நிலந்தரு திருவில் பாண்டியன் சபையில் நான்கு வேதங்களைப் படித்த பிராமணன் அதங்கோட்டு ஆச்சார்யர் தலைமையில் அரங்கேறியது.

பார்ப்பனர்களை இலக்கியங்கள் பூசுரர் என்று அழைக்கின்றன – அதாவது பூவுலகில் வசிக்கும் தேவர்கள். மேலே தேவலோகத்தில் வசிக்கும் தேவர்களுக்கு இணையாக, பூலோகத்தில் வாழும் புனிதர்கள் என்பதால் அவர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்றும் கொள்ள இடமுண்டு.

தேவாரப் பதிகங்கள் அனைத்தும் செல்லரித்த நிலையில் சிதம்பரம் கோவிலில் கண்டெடுக்கப்பட்டன. அதற்கு முன்னரே தேவாரங்கள் இருந்த போதிலும், எஞ்சியவற்றை அழியாமல் பாதுகாக்கும் முகத்தான், ராஜ ராஜ சோழன் அவைகளை யானை மீது ஏற்றி மரியாதையுடன் ஊர்வலம் விட்டான்.

Natraja_Temple

Chidambaram Sri Natarajar Temple.

தமிழ் வேதமாகிய தேவாரங்களுக்கு அவ்வளவு மதிப்பு. அரசனுக்கும் இறைவனுக்கும் என்ன மரியாதை உண்டோ அத்தனையையும் தேவாரத்துக்கு அளித்தான்.

இன்றும் சீக்கியர்கள் அவர்களுடைய புனித நூலான ஆதிக்கிரந்தத்துக்கு–ஒரு குருவுக்குக் கொடுக்கும் மரியாதையுடன், சாமரம் வீசி அந்த நூலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைக் காண்கிறோம்.

பாரதம் முழுதும் புனித நூல்களுக்கு எவ்வளவு மரியாதை!!! இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை!! வட நாட்டில் பாராயணம் செய்யப் பயன்படுத்தும் பகவத் கீதை, ராமாயணம் ஆகியவற்றைத் தரையில் வைக்காமல் பலகையில்தான் வைப்பர். எத்தனை மரியாதை!!

அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் அனைத்தும் திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் தாமிரப் பட்டயங்களில் கண்டெடுக்கப்பட்டன!!

கோவில்களே நமது கலாசாரப் பொக்கிஷங்களின் இருப்பிடம்.

Annamacharya

Sri Annamacharya, composer of Telugu Kritis.

இது தவிர சங்கீத மும்மூர்த்திகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தர்கள் ஆகியோர் ஒவ்வொவு கோவிலிலும் பாடிய ஒவ்வொரு பாடல் பறியும் தனிக் கட்டுரைகளே எழுதலாம். நேரம் கிடைக்கும் போது வைகளையும் காண்போம்.

சுபம்–

contact swami_48@yahoo.com

நமது உடலுக்கு ஒன்பது வாசல்! நவத்வார புரி!

7_main_chackra.svg

உடலில் உள்ள சக்ரங்கள் (விக்கிபீடியா படம்)

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1533; தேதி 31 டிசம்பர், 2014.

அதர்வண வேத காலம் முதல் அவ்வையார் காலம் வரை நமது உடலை இந்துக்கள் வருணித்த விதம் ஒரே மாதிரியாக உள்ளது!! இந்த விதமான வருணனைகளை வேறு எந்தப் பண்பாட்டிலும் காண முடியாது. ஆக பாரத நாட்டுப் பழங்குடி மக்கள் “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” – என்பதும் அவர்கள் இதே மண்ணில் தோன்றி இதே மண்ணில் வாழ்ந்தவர்கள் என்பதும் தெரிகிறது.

அவர்கள் வெளி நாட்டு “அறிஞர்கள்” எழுதியது போல வந்தேறு குடிகள் அல்ல, அல்லவே அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என தெள்ளத் தெளிவாகப் பளிச்சிடுகின்றது!

உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமூலர்) – என்று ஆன்றோர்கள் உடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதும், அடைய வேண்டியதை அடைந்தவுடன் அந்தப் பழைய உடலை, பழைய சட்டைக்குச் (வாசாம்ஸி ஜீரணானி—பகவத் கீதை)  சமமாக எண்ணி கழற்றி எறியவும் தயங்கவில்லை!

காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!! என்று பாடி மகிழ்ந்தனர்.

இதோ அதர்வண வேத மந்திரம்:

ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்தால் உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)

பகவத் கீதையில் கண்ண பிரானும் இதையே சொல்லுவார்:

இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)

tirumoolar

திருமூலர் படம்

கடோபநிஷத்திலும், ஸ்வேதஸ்வதார உபநிஷத்திலும் இதே கருத்துகள் உள்ளன. அதர்வண வேத மந்திரம் தொடர்ச்சியாக உபநிஷத் வழியாக கீதை (மஹாபாரதத்தில் உள்ளது) மூலம் பாரதம் மூலம் பரவியது. இதையே மாணிக்க வாசகர் அவரது திருவாசகத்திலும், திருமூலர் அவரது திருமந்திரத்திலும், பட்டினத்தார் அவரது பாடல்களிலும் அவ்வையார் அவரது விநாயகர் அகவலிலும் பாடினர். ஆழ்வார்கள், நாயன்மார்களின் திவ்யப் பிரபந்த தேவாரத்திலும் சித்தர் பாடல்களிலும் இக்கருத்துகள் உள.

ஆதிசங்கரர் மட்டும் விவேக சூடமணியில் இவ்வுடலை அஷ்ட புரி (எட்டு நகரம்) என்பார்.

காளிதாசனும் குமார சம்பவ காவியத்தில் (3-50) பகவத் கீதை என்ன சொன்னதோ அதே கருத்தை எதிரொலிக்கிறார்.

kanchi kovanandi

அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்

15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:

“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

நவத்வாரே சரீரே அஸ்மின் ஆயு: வசதி சந்ததம்

ஜீவததீ த்யத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.

—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957

yoga_sukhasana

பட்டினத்தார் பாடல்:

ஒன்பது வாய்த் தோற்பைக்கு ஒருநாளைப் போலவே

அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! – வன் கழுக்கள்

தத்தித் தத்திச் செட்டை தட்டிக்கட்டிப்பிட்டுக்

கத்திக்குத்தித் தின்னக் கண்டு …………

Having witnessed the cruel vultures hop and hop,

Adjust the feathers with their beaks

Tug and tear at the flesh, and eat it

In vociferous gaiety,

You have roamed about to foster always with love

The nine holed leathern bag, alas!

(Tamil: onpathu vaay thorpai…………… Translated by Dr T N Ramamachandran)

திருமூலர் சொல்வது……………….

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்

ஒன்பது நாடி உடையதோர் ஓர் இடம்

ஒன்பது நாடி ஒடுங்க வலார்கட்கு

ஒன்பது காட்சி யிலை பலவாமே (திருமந்திரம் 638)

ஒன்பது துளைகளையுடைய இப்பிண்டமாகிய உடம்பகத்து வீங்காற்று ஒழிந்த ஏனைய ஒன்பது காற்றும் புகும் ஒன்பது நாடிகளையும் ஒடுக்கவல்ல யோகப் பயிற்சி உடையார் வல்லாராவர். அவர்கள் இந்த நாடிகள் சேரும் நாற்சந்தி இடத்தை அருளால் காண்பர். இவர்கள் அகத்தே கேட்கப்படுவது பல்வேறு ஓசைகளாகும்.

ஒன்பது வாசல்கள் யாவை?

இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரண்டு துளைகள், வாய், மல ஜலம் கழிக்கும் இரு உறுப்புகள் ஆக ஒன்பது துளைகள்.

திருவாசகம் எனும் தேனில் மாணிக்கவாசகர் சொல்வது,

அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி

புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய … (சிவபுராணம்)

tamil-poetess-avvaiyar-

சங்க காலம் முதல் ஆறு பேர், — அவ்வையார் —- என்னும் பெயரில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிவுரைகள் பகன்றனர். அவர்களில் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அவ்வையார் பாடிய விநாயகர் அகவலில்,

தலம் ஒரு நன்கும் தந்து எனக்கருளி

மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறாதாரத்து அங்கிசை நிலையும் ……..

இவ்வாறு நூற்றுக் கணக்கான இடங்களில் ஒன்பது வாயில் குடில் பற்றி இமயம் முதல் குமரி வரை நம்மவர் பாடியது, இந்த நாடு ஏக பாரதம் என்பதையும், சொல் செயல் சிந்தனையால் இணைந்த ஒரே இனம் இது என்பதையும், இவர்களே இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்பதையும் ஐயமற விளக்கும்.

சுபம்- அனைவர்க்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக –

contact swami_48@yahoo.com

தமிழுக்கு எத்தனை பெயர்கள்?- பகுதி 2

sangam float

Sangam Age Tamils

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

கட்டுரை எண்- 1518; தேதி 26 டிசம்பர், 2014.

(compiled by Santanam Swaminathan)

இதன் முதற் பகுதி “தமிழுக்கு எத்தனை பெயர்கள்?” கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014 என்ற தலைப்பில் வெளியாகியது. இது இரண்டாம் பகுதி.

1.தமிழும் காயத்ரி மந்திரமும்

காயத்ரி மந்திரம் சூரிய ஒளி போல அறிவைப் பிரகாசிக்கச் செய்யும். அதை சூரியனை நோக்கி அனுதினமும் பார்ப்பனர்கள் மூன்று வேளைகளிலும் ஜபிப்பர். அதைப் போல தமிழும் அருள் புரிகிறது என்று தண்டிஅலங்காரம் சொல்லாமற் சொல்லும்:

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங் கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன் நேர் இலாத தமிழ் (தண்டி அலங்காரம்)

There are two things born from the mountains, shining so brilliantly that the great bow down, driving darkness from earth circled by roaring waters. One is the flaming sun, single wheel bright as lightning, the other is Tamil that has no like. (Tantiyalankaram)

pegan

Tamil Philanthropist Bekan and the peacock

  1. பரிபாடலில் (பாடல் 9) குன்றம்பூதனார் காந்தர்வ இன்பத்தை அனுபவிக்க உரியாரை

“ தள்ளாப் பொருள் இயல்பின்

தண் தமிழாய் வந்திலார்

கொள்ளார் இக்குன்று பயன்” என்பர்.

  1. “இன் தமிழ் இயற்கை இன்பம்” என்று கந்தருவ போகத்தை சிந்தாமணி (பாடல் 2063) கூறும்.

செந்தமிழ், பைந்தமிழ், தண்தமிழ்,இன் தமிழ் என புலவர்கள் வாழ்த்துகின்றனர்.

  1. தமிழ் இயல்பு இனிய சுகபோகங்களோடு உயர்வாய் உய்ர்வாய் மிளிர்கிறது

இமிழ் திரை வையத்து ஏயர் பெருமகன்

தமிழ் இயல் வழக்கினன் (பெருங்கதை 4-17)

 

thiruvalluvar logo

  1. காவீரி நதியை சீழ்தலைச் சாத்தனார் வாழ்த்தும் முறை:

கோன் நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண் தமிழ் பாவை (மணிமேகலை)

 

  1. காட்டில் மனைவியைப் பிரிந்த ராமன் , ஒரு தாமரை மலரை நோக்கி

“தன் பால தழுவும் குழல் வண்டு

தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே (கம்பன், கிட்கிந்தா, பம்பை 28)

 

  1. சீதை சொல் பற்றி கம்பன்

குழுவு நுண்தொளை வேயினும் குறி நரம்பௌ எறிவுற்று

எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொற் கிளியே!

sangam4

  1. தமிழ் என்னும் சொல்லை இனிமை, குளிர்ச்சி, உவகை முதலிய பொருளில் கவிகள் பயன்படுத்துவதைக் காண்கிறோம். தமிழ் பற்றி தொல்காப்பியப் பாயிரம் சொல்லுவது:–

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

——ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர்-பாயிரம்)

 

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

 

  1. இருபாற்றென்ப திரி சொற் கிளவி

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (தொல்காப்பியம்-எழுத்து)

 

sangam3

  1. கன்னித் தென்கரைக் கட்பழந்தீவம்

சிங்களம் கொல்லம் கூவிளமென்னும் (மயிலைநாதர்)

அகத்தியன் பற்றி………………..

  1. தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென

வானோர் ஏத்தும் வாய் மொழிப் பல் புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன் (பன்னிரு படலம்)

 

 

  1. உயர் மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைகள் (திருக்கோவையார்)

 

13.மூவறு மொழியுளும்

குணகடல் குமரி குடக வேங்கடம்

எனநான் கெல்லையி னிருந்தமிழ்

-நன்னூல் பாயிரச் சூத்திரம்

14.தேனுறை தமிழும் திருவுறை கூடலும் (கல்லாடம்)

sangam2

பாரதி பாடல்கள்

15.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;

பாமரராய்,விலங்குகளாய்,உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்.

16.யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம்;ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புது நூல்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகைமை இல்லை:

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்

17.வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி

வாழிய வாழியவே

வானம் அளந்தது அனைத்தும் அறிந்திடும்

வன்மொழி  வாழியவே

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி

இசை கொண்டு வாழியவே

எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி

என்றென்றும் வாழியவே

சூழ் கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்

துலங்குக வையகமே

தொல்லை வினை தரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ் நாடே!

வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி

வாழிய வாழியவே

வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து

வளர்மொழி  வாழியவே

18.தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா !

அமிழ்தில் இனியதடி பாப்பா !- நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா !

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா !

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்- அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா !

Aathi thamizhar peravai

Avvaiyar and Adhiyamaan

19.பாரதிதாசன் பாடல்கள்

தமிழுக்கும் அமுததென்று பேர் !- அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

தமிழுக்கு நிலவென்று பேர் !- இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !

தமிழுக்கு மணமென்று பேர்- இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !

தமிழுக்கு மதுவென்று பேர்- இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்- இன்பத்

தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் !

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் !- இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் !

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்-இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்- இன்பத்

தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

தமிழ் பற்றிய முக்கிய மேற்கோள்கள் அனைத்தையும் இந்த இரண்டு பகுதிக் கட்டுரையில் காணலாம்.

contact swami_48@yahoo.com

‘’ச’’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?

tol1

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1509; தேதி 23 டிசம்பர், 2014.

This article is available in English as well.
Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 2

தமிழ் அதிசயம் -6
தமிழ் மொழியில் சில எழுத்துக்களில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியம் தடை விதிக்கிறது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் தமிழர்கள் தங்கள் மொழியை வளர்க்க மூன்று தமிழ்ச் சங்கங்கள் வைத்தது அவர்களுக்குத் தெரியும்!

தமிழில் கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியம் என்று சான்றோர் கூறுவர். இதை எழுதியவர் “ஒல்காப் புகழ்” தொல்காப்பியன் ஆவார். இவர் விதித்த தடையையும் மீறி ச- என்னும் எழுத்தில் துவங்கும் சுமார் 14 சொற்கள் சங்க இலக்கியத்திலேயே உள்ளன. இவைகள் வடமொழிச் சொற்களே! சகடம், சங்கம், சடை, சமன், சரணம், சருமம், சலதாரி, சலம், சனம், சண்பகம் முதலியன அவை.

tol2

தமிழ் அதிசயம் -7
இதே போல “ஞ” என்னும் எழுத்திலும் சொற்கள் துவங்கக் கூடாது என விதி. ஏன் இப்படி விதித்தனர் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியும் சங்க இலக்கியத்தில் ஞமலி (நாய்), ஞமன் (யமன்) ஆகிய சொற்கள் உண்டு. ய, ர, ல ஆகிய எழுத்துக்களும் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாது என்பது விதி. இதற்கு என்ன காரணம் என்பது எங்கும் இல்லை.

‘’ச’’ என்பதன் மீது விதிக்கப்பட்ட தடைதான் வியப்பைத் தருகிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ‘’ச’’ சப்தத்துடன் துவங்கும் சொற்கள் ஏராளம். தமிழில் நாம் இன்றும் கூட சங்கு, சங்கம், சமம் முதலிய சொற்களைப் பயன்படுத்துகிறோம் இவை வட மொழிச் சொற்கள். ஒருவேளை வட மொழியுடன் வேறுபடுத்த இந்த விதியை வைத்தனரோ! ஏனெனில் வடமொழியில் ‘’ச’’ – வர்கத்தில் நான்கு விதம் உண்டு. இது தவிர ஆங்கிலத்திலுள்ள ஸ், ஷ் போன்று சப்தம் உடைய நான்கு வகைகள் வேறு வட மொழியில் இருக்கின்றன. வியாசர் என்னும் மாமுனிவர் அதிகமான ஸ்லோகங்களை ‘’ஸ’’ என்னும் எழுத்தில் துவங்கியதால் அவருக்கு சகாரகுக்ஷி என்று பெயர் எனவும் சான்றோர் கூறுவர். இதனால்தான் தமிழில் ச-வுக்குத் தடை விதித்தனரோ!

ய,ர,ல, ஞ – ஆகிய சில எழுத்துக்களுக்கும் தடை விதித்ததற்குக் காரணம் கூறப்படவில்லை!

06fr_Nagaswamy_boo_1134438g

தமிழ் அதிசயம் -8
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ அஹ்து அஃது, இஹ்து, இஃது

ஆய்த எழுத்தும் ஒரு விநோத எழுத்தே. இதை சங்க காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி நாம் அதிகம் பயன்படுத்தவில்லை. இந்த மூன்று புள்ளி உடைய எழுத்து கல்வெட்டுகளில் காணப்படாததால் தொல்காப்பியர் காலத்தை முதல் சில நூற்றாண்டுகளில் வைப்போரும் உளர்.

ஆய்த எழுத்தைக் கண்டு பிடித்ததே தொல்காப்பியரோ என்று எண்ணவும் சில காரணங்கள் உண்டு. வடமொழியில் விசர்க்கம் என்னும் இரண்டு புள்ளி எழுத்து போல இதைப் பயன்படுத்த அவர் எண்ணி இருக்கலாம். வடமொழியில் ராம என்பதற்குப் பின் விசர்க்கம் ‘’ : ’’ (ராம: ) வந்தால் ராமஹ என்பர். ஹரி எனபதற்குப் பின் ‘’ : ‘’ வந்தால் ஹரிஹி என்பர். ஆனால் இது போல தமிழில் ஆய்தம் பயன்படுத்தப்படவில்லை. ஃ என்பது அஹ் என்ற சப்தத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது இல்லாமலேயே தமிழ் மொழி வாழ முடியும் என்று அனைவரும் ஒப்புக் கொள்வர். ஒவ்வொரு மொழியிலும் சில விநோதங்கள் உண்டு. தமிழ் மொழியில் ஃ மற்றும் மொழி முதல் எழுத்துகள் பற்றிய விதிகள் எல்லாம் விநோதமாக உள்ளது.

தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்று பழைய உரைகாரர்கள் கூறுகின்றனர். புதிய புத்தங்களில் அவருடைய பூர்வீகத்தை இருட்டடிப்புச் செய்கின்றனர். அதை இருட்டடிப்பு செய்யாமல் அதை எழுதி அதற்கு மறுப்புரை எழுதினால் தவறில்லை. இவ்வளவு பீடிகை எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம்.

ஆரியதரங்கிணி என்ற புத்தகம் எழுதிய திரு கல்யாணராமன் இந்தோநேஷியாவில் ஒரு அகத்தியர் சிலை அருகே த்ருணபிந்து என்ற பெயரில் தொல்காப்பியர் சிலை இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால் இடத்தின் பெயர் இல்லை. அது சரியானால், அதையே- த்ரி பிந்து என்று படித்தால் முப்புள்ளி என்று ஆகும். இது ‘’ ஃ ’’ கண்டு பிடித்ததால் அவருக்கு இட்ட பெயரோ என்று நான் கருதுவதுண்டு. இது ஒரு கற்பனையே. மேலும் ஆதாரம் கிடைக்கும் வரை கற்பனையாகவே எண்ணல் வேண்டும்.

tolkappiyar

தமிழ் அதிசயம் -9
ஔ- கார மர்மம்
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உயிர் எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒன்று. குறில் எ, ஒ ஆகியன வடமொழியில் இல்லை. அதற்குப்பதில் க்ரு என்ற எழுத்து உண்டு. இருந்தபோதிலும் அரிதாகவே பயன்படுத்தப்படும் ஆனால் இரண்டு அரிச்சுவடியிலும் ‘’ஔ’’ என்னும் எழுத்து இருந்தும் யாரும் பயன்படுத்தவில்லை. சங்க காலப் புலவர் முதல் வள்ளுவன், பாரதி வரை ஔ—வில் பாட்டு துவங்கவில்லை. சங்கப் புலவர் எழுதிய 30,000 வரியிலும் வள்ளுவன் எழுதிய 2660 வரிகளிலும் ‘’ஔ’’ என்ற எழுத்தில் துவங்கும் சொல்லே இல்லை. ஔவையாரையும் அவ்வை என்றே எழுதினர். ஆனால் அங்கிலத்தில் ‘’ஔ’’ல் (ஆந்தை) போன்ற ஒலிகள், சொற்கள் உண்டு.

தமிழும் சம்ஸ்கிருதமும் வேற்றுமை (விபக்தி), அரிச்சுவடி போன்ற பல விஷயங்களில் ஒத்துப் போவதால் சிந்து சமவெளி ஒலிக் குறிப்புகளும், சொல் துவக்கமும் இதே போலத்தான் இருக்கவேண்டும். அதாவது 25 விழுக்காடு சொற்கள் உயிர் எழுத்தில்தான் துவங்கும். அ என்னும் எழுத்து அதிகமாக இருக்கும் ஆ என்பது குறைவாக இருக்கும். இ என்பது அதிகம் இருக்கும் ஈ என்பது அரிதாகவே இருக்கும். இப்படிப் பல அபூர்வ ஒற்றுமைகளை எனது ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனக்கு சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்க மான்ய உதவி கிடைத்தால் அதை நொடிப்பகுதியில் அலசி ஆராய இது போன்ற பல நூதன உத்திகள் என்னிடம் உள.

Tamil_Brahmi_Potsherd
Pot with Brahmi script near Vadalur (Script writing: Atiyakan)

தமிழ் அதிசயம் -10

அ என்னும் எழுத்தைக் கண்டு பிடித்தது யார்?
உலகில் எல்லா மொழிகளும் அ- வில்தான் துவங்க முடியும் என்ற மாபெரும் உண்மையை, முதல் (1) திருக்குறளில் வள்ளுவனும் வள்ளுவனுக்கு முன் கிருஷ்ண பரமாத்மா கீதையிலும் சொல்லி வைத்தனர். அதற்கு முன் ரிக் வேத முனிவர்கள் சொல்லி வைத்தனர்.

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் ‘’அக்னி மீளே புரோஹிதம்’’ என்ற செய்யுளுடன் துவங்கி அக்னி என்னும் செய்யுளுடன் 10,000-க்கு மேலான மந்திரங்களுடன் முடிவடைகின்றன. கிரேக்க மொழியானாலும் அராபிய மொழியானாலும் நம்மைத் தான் பின்பற்றுகின்றனர். வேத மந்திரங்கள் எல்லாம் ஓம் என்னும் மந்திரத்துடன் சொல்ல வேண்டும் என்பது விதி. அந்த ஓம் என்னும் ஏக அக்ஷரமும் ‘’அ+உ+ம’’ என்ற அ-வில்தான் துவங்கும். ஆக உலகிற்கு ‘’அ’’ என்னும் எழுத்தைக் கற்பித்து அரிச்சுவடியில் முதல் எழுத்தாக வைத்ததும் நாம் தான். இதை ஏசு பிரானும் பைபிளில் ‘’ஐ ஏம் தெ ஆல்பா அண்ட் ஒமேகா’’ என்று கூறுவதை உலகம் அறியும். அவர் இமயமலையில் முனிவர்களிடம் வேத உபநிஷத் பகவத் கீதையைக் கற்றுச் சென்றதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

kolam painting
Tamil’s wonderful ancient art KOLAM. Only Tamil girls in the whole wide world can draw perfect mathematical diagrams without any instruments!!

சிவ பெருமான், பாணினி என்னும் உலக மகா இலக்கண வித்தகனுக்கு வழங்கிய 14 மாஹேஸ்வர சூத்ரங்களில் முதல் சூத்திரமும் அ-வில் துவங்குவதே! பாணிணியின் உலக மஹாப் புலமையைக் கண்டு வியந்த பாரதி உலகம் நம்ப முடியாத திறன் (நம்பருந்திறல் பாணிணி) என்று பாடுகிறார்.

வாழ்க தமிழ் மொழி! வாழ்க நிரந்தரம்!