அதிசயத் தமிழ், அற்புதத் தமிழ், விந்தைத் தமிழ்

Tamil-annai
Mother Tamil- Tamil Annai

Research paper written by London Swaminathan
Research article No.1507; Dated 22 December 2014.

Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 1
தமிழ் ஒரு அற்புதமான மொழி. ஏராளமான அதிசயச் செய்திகள் நிறைந்த மொழி. படிக்கப் படிக்கத் தெவிட்டாத செய்திகள் உடைய மொழி. பழமொழிகளும் தனிப் பாடல்களும், நல்ல இலக்கியங்களும் ஆயிரக் கணக்கில் உடைய இம்மொழியை கற்று அனுபவிக்கப் பல பிறவிகள் எடுக்க வேண்டிவரும். இதன் சுவையை நுகர ஒரு சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தமிழ் அதிசயம் -1
எத்தனை மன்னர்கள் அடிபணிந்தனர்?
குலோத்துங்க சோழனின் (1070-1118) வெற்றிகளை எடுத்துரைப்பது ஜயம்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி என்னும் நூல். அதில் குலோத்துங்கன் வெற்றிகொண்ட நாடுகள், இனங்களின் பட்டியலைக் கேளுங்கள்:

தென்னவர் வில்லவர் கூபகர்
சாபகர் சேதியவர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர்
காடவர் காரிபர் கோசலரே
சங்கர் கராளர் கலிந்தர்
துமிந்தர் கடம்பர், துளும்பர்களே
வங்கர் இலாடர் மராடர்
விராடர் மயிந்தர் சயிந்தர்களே
சிங்களர் வங்களர் சேகுணரே
சேவணர் செய்யவர் ஐயணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர்
சவுந்திரர் குச்சரர் கச்சியரே
வத்தவர் மத்திரர் மாளுவர்
மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர்
துருக்கர் குருக்கர் வியத்தர்களே
அந்தக் காலத்தில் பாரத நாடு 56 தேசங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மன்னன் இவர்கள் எல்லோரையும் வெற்றிகண்டதைப் பட்டியல் கூறுகிறது.

tamil annai 2

தமிழ் அதிசயம் -2 வாய்மை,உண்மை,மெய்மை
இந்து மதம் சத்தியம் என்னும் மாபெரும் அஸ்திவாரத்தின் மீது அமைந்துள்ளது. கடவுளே ஆனாலும் சத்தியத்தை/ கொடுத்த வாக்கை மீறமுடியாது. இதை பஸ்மாசுரன் கதை முதலிய வேறு பல எடுத்துக்காட்டுகளால் என்னுடைய பல கட்டுரைகளில் விளக்கிவிட்டேன். ஆனால் தமிழர்கள் இந்த சத்தியத்தை விளக்குவது போல வேறு யாரும் அழகாக விளக்கவில்லை.

மனம், மொழி, மெய் (காயேன, மனசேன, இந்த்ரியைர்) ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு, சாஸ்திரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களைச் செய்தால், ஒருவர் சித்தராகி அற்புதங்களைச் செய்யலாம். இதற்கு தமிழர்கள் மட்டுமே மூன்று அற்புதமான சொற்களைத் தனித்தனியே சொல்லுகின்றனர்.

மனதால் (உள்ளம்) பின்பற்றப்படும் சத்தியம்= உண்மை
வாக்கால் (வாய்ச் சொல்) பின்பற்றப்படும் சத்தியம்= வாய்மை
உடம்பால் (மெய்) பின்பற்றப்படும் சத்தியம்=மெய்மை

தமிழ் அதிசயம் -3 உண்மையான தமிழ் வாழ்த்து
தமிழர்களின் உண்மையான தமிழ் வாழ்த்து இதுதான். பாரதியின் வாழ்க தமிழ் மொழி, சுந்தரம் பிள்ளையின் நீராரும் கடலுடுத்த ஆகிய இரண்டு பாக்களையும் விட தமிழின் சிறப்புகள் அத்தனையும் கொண்டது கவி யோகி சுத்தானந்த பாரதியாரின் காதொளிரும் குண்டலமும் பாடல். இது தமிழரின் இல்லம் தோறும் நாள்தோறும் முழங்க வேண்டிய பாடல்.
இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஐம் பெரும் காப்பியங்களில் பெயரும், தமிழுக்குத் தனிச் சிறப்பு சேர்க்கும் திருக்குறளும், நால்வர் மற்றும் ஆழ்வார் பெயரும், சேக்கிழார் கம்பன் பெயரும் இரண்டே பாக்களில் அடங்கிவிடுவதால் ஏறத் தாழ ஆயிரம் ஆண்டுத் தமிழ் வரலாற்றை அறிகிறோம்.

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

475px-Tamil_Culture

தமிழ் அதிசயம் -4
ஒரே அம்பில் ஐந்து
ராமனுடைய ஆற்றல் எவ்வளவுதான் பெரிதானாலும் அதைச் சோதிக்காமல் அவரை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சுக்ரீவனும் அனுமனௌம் முடிவு செய்கின்றனர். ஏழு மரா (சால்) மரங்கள் வரிசையாக நின்ற ஒரு இடத்தைத் தேந்தெடுத்து அம்பால் துளைக்கச் செய்தனர். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் எளிதில் துளைத்துச் சென்றது. இது போல தமிழ் இலக்கியத்திலும் ஒரு செய்தி வந்துள்ளது. கடை எழு வள்ளல்களில் ஒருவர் ஓரி. வருடைய பெருமையைப் வன் பரணர் பாடுகிறார்.

ஓரியின் வில் ஆற்றல் தமிழகம் எங்கும் பரவியதால் அவன் பெயரே வல் வில் ஓரி என்று ஆயிற்று. அவன் கையிலிருந்த வில்லில் இருந்து பாய்ந்த அம்பு ஒரு யானையைத் துளத்து ஒரு புலியைத் துளைத்து, மானை மாளச் செய்து, பன்றியின் உடம்பில் பாய்ந்து இறுதியில் ஒரு உடும்பின் உடலில் சென்று தைத்து நின்றதாம்.(புறம் 152)

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப்
புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல் தலைக்
கேழல் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்

தமிழ் அதிசயம் -5

பாரதிக்கு எத்தனை பெயர்கள், அடை மொழிகள்?
புரட்சிக் கவி பாரதிதாசனின் குரு மஹா கவி சுப்பிரமணிய பாரதியார். குருவின் மீது பாரதிதாசனுக்கு அபார பக்தி. இதோ அவர் பாரதி பற்றி எழுதிய புகழுரையைப் படியுங்கள். எத்தனை அடைமொழிகள்!

“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

அற்புத ஒற்றுமைகள்! தமிழும் சம்ஸ்ருதமும் ஒன்றே!!

Ashoka_Rock_Edict_at_Junagadh

ஜூனாகட் என்னும் இடத்தில் ஒரே பாறையில் அசோகன், ருத்ரதாமன், ஸ்கந்தகுப்தன் ஆகிய மூன்று மாபெரும் மன்னர்களின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1503; தேதி 21 டிசம்பர், 2014.

கட்டுரையின் முதல் பகுதி ‘’தமிழும் சம்ஸ்ருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்’’ — என்ற தலைப்பில் வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இந்த இரண்டாம் பகுதியைப் படிக்க வேண்டுகிறேன். இது எனது நாற்பது ஆண்டு மொழி ஆராய்ச்சியின் முடிவுகள்:

1.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த தமிழ் , சம்ஸ்கிருதக் கவிஞர்கள் ஒரே பாணியைப் பின்பற்றி கவிகள் இயற்றியிருப்பது உலக மகா அதிசயம்! எந்த ஒரு கவிஞனிடமும் நீ ‘’அ’’ என்னும் எழுத்தில் இவ்வளவு கவிகள் பாட வேண்டும் ‘’ஆ’’ என்னும் எழுத்தில் இவ்வளவு கவிகள்தான் பாட வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் கவிதைகள் எழுதவும் வராது. ஆனால் வியப்பிலும் வியப்பு இப்படித் தான் இரு மொழி கவிஞர்களும் பாடி இருக்கின்றனர். அது மட்டும் அல்ல. இதே உத்தியைப் பயன் படுத்தி சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்கலாம். மாணிக்கவாசகர் பொன்றோரின் காலத்தை உறுதியாக்ச் சொல்லலாம். நான் ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

முதலில் குறள், கீதை இரண்டை மட்டும் ஒப்பிட்டுக் காட்டினனேன். இதோ மேலும் சில எடுத்துக் காட்டுகள். ஒவ்வொரு எழுத்திலும் துவங்கும் கவிதைகளை/ செய்யுட்களைப் பாடற் முதற் குறிப்பு அகராதியில் இருந்து எடுத்துள்ளேன்:

நற்றிணை:–அ-35, ஆ-8, இ-26, ஈ-2, உ-20, ஊ-1, எ-9, ஏ-0, ஐ-3, ஒ-7, ஓ-4 ஔ-0
அககநனூறு:-அ-42 ஆ-6, இ-24, ஈ-2, உ-17, ஊ-2, எ-9, ஏ-1, ஐ-0, ஒ-4 ஓ-4 ஔ-0
புறநானூறு:–அ-32, ஆ-12, இ-22, ஈ-4, உ-11, ஊ-4, எ-14, ஏ-4, ஐ-1 ஒ-11 ஓ-4 ஔ-0
குறுந்தொகை:- அ-43, ஆ-7, இ-17 ஈ-2, உ15, ஊ-3 எ-13 ஏ-0, ஐ-1 ஒ-5 ஓ-2 ஔ-0
ஐங்குறு நூறு:- அ-107 ஆ-4, இ-11 ஈ-1 உ-7 ஊ-0 எ-20 ஏ-2, ஐ-1 ஒ-2 ஓ-1 ஔ-0
கலித்தொகை:- அ-18, ஆ-3, இ-7 ஈ-2, உ-4 ஊ-1 எ-6 ஏ-2 ஐ-0 ஒ-5 ஓ-0 ஔ-0
பதிற்றுப் பத்து:- அ-4 ஆ-2+1 இ-7+1 ஈ-0 உ-6 ஊ-0, எ-3+1 ஏ-0 ஐ-0, ஒ-1 ஓ-1 ஔ-0
junagadh-5

ஜூனாகட் அசோகன் பிராமிகல்வெட்டு

சங்க காலத்துக்குப் பிந்திய நூல்கள்
நாலடியார்:- அ-28 ஆ-11 இ-37 ஈ-4 உ-22 ஊ-5, எ-14 ஏ-4 ஐ-0 ஒ-5 ஓ-3 ஔ-0
பழமொழி:- அ-27 ஆ-18 இ-19 ஈ-2 உ-24 ஊ-2 எ-15, ஏ-1 ஐ-0 ஒ-10 ஓ-3 ஔ-0
திருக்குறள்:- அ-157 ஆ-23 இ-113, ஈ-8, உ-81 ஊ-21 எ-45 ஏ-9 ஐ-4 ஒ-40 ஓ-6 ஔ-0

இவற்றில் பெரும்பாலான நூல்கள் 400 பாடல்களையும் ஐங்குறு நூறு 500 பாடல்கலையும் திருக்குறள் 1330 குறள்களையும் பதிற்றுப் பத்து 80 பாடல்கள் + 8 பதிகங்களையும் உடையவை.

உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் சராசரியாக 28 விழுக்காடு வரும். குறளில் இது 38 விழுக்காடு வரை செல்வதால் காலத்தால் பிந்தியது என்று கொள்ளலாம். நாலடியார் பழமொழி ஆகியவற்றில் உயிர் எழுத்துப் பாடல்கள் 30 விழுக்காட்டைத் தாண்டுவதும் காலத்தின் தாக்கத்தைக் காட்டும். ‘’ஔ’’ என்னும் எழுத்தில் பாடல்கள் துவங்காமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் இதை ஒன்றை வைத்து மட்டும் காலத்தைக் கணக்கிடாமல் இதற்கு 50 மதிப்பெண்களும் எத்தனை வடசொற்கள் உள்ளன என்பதற்கு 50 மதிப்பெண்களும் கொடுத்தால் இன்னும் துல்லியமான முறையில் காலத்தைச் சொல்லலாம். இதற்கு சந்தானம் முறை என்று எனது தந்தையின் பெயரைச் சூட்டுவதற்கு ஆசை. அதை அறிஞர் உலகம் ஏற்றபின்னர் செய்வதே முறை.

suvadi_spl
தமிழ் ஓலைச் சுவடிகள்

இது போல ‘’க’’ முதல் ‘’ன’’ வரை தனிப் பட்டியல் உள்ளது. அதைத் தனியே காண்போம்.
இப்பொழுது இதை நான்கு வட மொழி நூல்களுடன் ஒப்பிடுவேன்:
பகவத் கீதை, ஆதி சங்கரரின் விவேக சூடாமணி, காளிதாசனின் குமார சம்பவம், சாகுந்தலம்:–

வடமொழியில் எ, ஒ ஆகிய குறில்கள் இல்லை. மேலும் க்ரு, க்லு என்பன உண்டு.
பகவத் கீதை:- அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-8, ஊ-2, ரு-1 , ஏ-21, ஐ ஓ-2 ஔ -0

விவேக சூடாமணி:- அ-105, ஆ-14, இ-8 ஈ-1 உ-7, ஊ-ஒ, ரு-1, ஏ-13 ஐ-0 ஓ-0 ஔ
குமார சம்பவம்:- அ-85 ஆ-14 இ-23 ஈ-2 உ-20 ஊ-1 ரு-1, ஏ-14 ஐ-0 ஓ–0 ஔ-0
சாகுந்தலம்: –அ-29 ஆ-6 இ-6 ஈ-1 உ-6 ஊ-0, ஏ 5, 0, ஐ-0 ஓ-0 ஔ-1

skt olai
சம்ஸ்கிருத ஓலைச் சுவடிகள்

இவைகளை நூற்றுக்கு எனக் கணக்குப் போட்டால் உயிர் எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் கீதையில் 24%, விவேக சூடாமணியில் 25-86%, குமார சம்பவத்தில் 25-68 % சாகுந்தலத்தில் 27-27 விழுக்காடு வரும். தமிழும் வடமொழியும் ஏறத்தாழ ஒரே விழுக்காடு உடையனவாக இருப்பதைக் காணலாம்.
இது போலவே ‘’க’’ — முதல் மெய்யெழுத்துக்களையும் ஒப்பிடலாம். அவைகளிலும் இரு மொழி ஒற்றுமையைக் காணமுடியும்.

contact swami_48@yahoo.com

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்!

tamil

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1500; தேதி 20 டிசம்பர், 2014.

இந்தியாவின் இரண்டு பழைய மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமும் ஆகும். இந்த இரண்டு மொழிகளும் சிவனிடமிருந்து தோன்றியவை என்றும் ஒன்றுக்கு பாணிணியையும் மற்றொன்றுக்குக்கு அகத்தியனையும் இலக்கணம் எழுத சிவ பெருமானே பணித்தான் என்றும் ஆன்றோர் கூறுவர். இதை எல்லாம் பிற்காலக் கதைகள் என்று சொல்லுவோரும் கூட வியந்து போற்றக்கூடிய சில மொழியியல் அம்சங்கள் இரு மொழிக்கும் பொதுவாக அமைந்துள்ளன.

எனது நாற்பது ஆண்டுக்கால மொழி ஆய்வில் கண்ட சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.

sanskrit-letters

இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.

சில சொற்கள் தமிழில் இருந்து வந்ததோ என்றும் சில சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்ததோ என்றும் எண்ண வைக்கும். தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் எப்படி உருவாயிற்று என்று பார்த்தால் கூட, வரலாறு, புவியியல், பிறமொழிப் படையெடுப்பாளர் ஆகியவற்றால் எல்லாம் எப்படி மொழிகள் உருவாகின்றன என்பது விளங்கும்

Devimahatmya_Sanskrit_MS_Nepal_11c

ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.

பெரிய ஆதாரம்
இவைகளை எல்லாம் விட பெரிய ஆதாரம் இரு மொழி இலக்கியங்களில் உள்ளன. தமிழுக்கு மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம்! இதே போல சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமான மொழி தமிழ். இரு மொழிகளிலும் உள்ள பழைய கவிதை நூல்களை எடுத்துக் கொண்டு கடைசி பக்கத்தில் உள்ள பாடல் முதற்குறிப்பு அகராதிக்குப் போங்கள். ஒவ்வொரு மொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.

‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.

இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது.

tamil 3

கீதையும் குறளும்
பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171
மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை

திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508
மொத்தம் உள்ள குறள்கள் 1330

ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.

குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம். இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.

மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.

டூத் + பவுடர் என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைத் தருகிறேன்.

தேமா பூமா மாபூமா தே : தமிழ் என்னும் விந்தை! -13

sarasvati_3

சருப்பதோபத்திரம் – 2
கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1496; தேதி 18 டிசம்பர், 2014.

சருப்பதோபத்திரம் இலக்கணத்தை விளக்கி மாறனலங்காரம் தந்த சூத்திரத்தைப் பார்த்தோம். இதற்கு உதாரணமாக அந்த நூல் தரும் செய்யுள் இது:

தேமாபூமாமாபூமாதே

மாதாகாவாவாகாதாமா

பூகாவாலாலாவாகாபூ

மாவாலாநீநீவாவாமா

இதை 64 அறைகளில் அடைத்துப் பார்த்தால் வரும் சித்திரம் இது:-

bandhamnew13

தே மா பூ மா மா பூ மா தே
மா தா கா வா வா கா தா மா
பூ கா வா லா லா வா கா பூ
மா வா லா நீ நீ வா வா மா
மா வா லா நீ நீ வா வா மா
பூ கா வா லா லா வா கா பூ
மா தா கா வா வா கா தா மா
தே மா பூ மா மா பூ மா தே

செய்யுளின் பொருளைப் பார்ப்போம்:

தேமாபூ – தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து
மாமா – பெரிய திருமகளும்

பூமாதேமாது – பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள்

ஆகாகாவாகா – (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும்
புயத்தினையுமுடையவனே!
தாமா – துளவ மாலிகையை உடையவனே!
பூகாவாலாலா – பூமியை எடுக்கப்பட்ட பிரளயத்தின் மேல்
ஆல் இலையில் துயிலப்பட்டவனே!
பூமாவாலா – பொலிவினோடும் கூடிய மிகுந்த
பாலத் தன்மையோனே!
நீலாவாமா – நீல நிறத்தினனே! வாமனரூபமானவனே!

மூன்றாம் அடியின் இறுதி வாகா நாலாம் அடியின் முந்த வந்த நீ என்னும் அவற்றோடு கூட்டி நீவா கா எனச் சேர்த்து நீ வந்து என்னைக் காப்பாயாக என்றவாறு.

திருமகளை மார்பிலே ஏந்திய விஷ்ணுவை நீ வந்து என்னைக் காப்பாயாக என்று துதிக்கும் துதிப் பாடல் இது.

இதனுள் ஏமம் ஏம் என நின்றது
உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமைபன்மை மயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருள் உரைத்தவாறு காண்க.

ஆல் – பிரளயம்; வா – வந்து; மாது – மாதர்கள்; பூ-தாமரை; பூ – பொலிவு
தமிழின் சிறப்பு அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பது தான்! இதனாலேயே இது போன்ற சித்திர் கவிகள் அழகுடனும் பொருளுடனும் மிளிர்கின்றன.

இந்தப் பாடலில் உள்ள எழுத்துக்கள் 64. இதில் ‘மா’ எட்டு முறையும் ‘வா’ ஏழு முறையும் தக்க பொருளுடன் வந்து அமைவதைப் பார்க்கலாம்!

எந்த வாயில் வழியே சென்றாலும் செய்யுளைக் காண முடிகிறது. அது தான் சருப்பதோபத்திரம்.

இனி, இன்னும் ஒரு செய்யுளைக் காண்போம்!
-தொடரும்

சதுரங்க பந்தம் – 11

saras

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1484; தேதி 14 டிசம்பர், 2014.

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் – 11

தமிழ் ஒரு அற்புதமான விந்தையான மொழி. சதுரங்க பந்தம் அமைப்பதே கடினமான காரியம். அதில் ஏராளமான விந்தைகளை அடக்க வழி காட்டும் மொழி தமிழ்!

குதிரையும் யானையுமாகப் பாய்த்துமாறு என்று யாப்பருங்கல விருத்தி உரை ஒரு இலக்கணத்தைக் கீழ்க்கண்ட செய்யுளில் தருகிறது:

“செங்கை யுந்திச் சீர்மலி யாரம்
கீழணி தாழ்பொழில் கண்ணகன் திண்ணிலஞ்
சகமலி யிருவினைச் சார மீரம்

சித்திர மத்திரங் கிளரொளி தளரகிற்
கார்மழை தீரணி நான்மறை மீனுரு
வாடை பீடை வித்தா பத்தா
நிலமும் மலையும் பிரமனு மவர்மணி
மிகவு நகுமதி மாரி நீரில்
பார வீரர் புள்ளி வெள்ளை
முத்தி நெய்த்த நூலோர் மேலோர்
பேரா வீழி பெரிய வுருவுடை
பூதிய வேதன் மூரி நோன்ற
மெய்மை நுண்மை தெள்ளிய குருபரன்
எந்தையன் சுந்தர நூரன் சேரன்
தூசன் கேசவன் சூழ்பொழி லேழணி
கூறிய நேர்வு கெழுமிய துத்தி
சீரிய கரிபரி “தெளிந்தனன் றெளிந்தே”

யானையும் குதிரையும் பாய்ந்து நடக்கும் விதத்தை தெளிந்தனன் தெளிந்தே என்று கவிஞர் கூறினாலும் நமக்கு விளக்குவார் இன்மையால் தெளிவு பிறக்கவில்லை. “வல்லார் வாய் கேட்க” என்று இலக்கண விளக்க நூல்கள் அறிவுறுத்தும் போது இதை விளக்கும் வல்லார் எங்குள்ளனர் இன்று என்பதும் தெரியவில்லை.

இனி இந்தப் பாட்டின் விளக்கவுரையாக வருவது;
இதன் அடைவே கரியும் பரியும் வேண்டியதோர் அறை முதலாகவும்,
வேண்டியதோர் அறை ஈறாகவும் துதித்து வரைய அறுபத்து நாலும் வரும்.

இனி, இவற்றைச் சிறுநுதல் கடிகமழ் பெருமதர் மழைக்கண்,
துதித்துச் செங்கை சீரிய கரிபரி என மாறியும் படிக்கக் கடிதின் உதவும்
அறைகட்கு எழுத்து நிறுத்துவதற்கு இலக்கணம்;

‘அன்னங் சுழிசங்கு தத்தை நகர் பறவை
மன்னன் வலம்புரியோ டெட்டு

“அன்னமொன்றாங் சுழியிரண்டா மணிநீர்ச் சங்க மொருமூன்றாந்

தண்ணந்தத்தை யீரண்டாந் தகைசா னகர மைந்தாகும்

பன்னும் பறவை யிருமூன்றாம் பழிதீர் மன்ன னோரேழாம்

மன்னு மொழியாய் வலம்புரியேன் மருடீ ரிருநான் காகுமே’

எனக் கொள்க.

இவற்றை நிரலே அ, க, ச த, ந, ப ம என அணிந்து அந்த அறைகளில் ஏகார வெழுத்தளவெதிர் நடாத்த அறுபத்து நாலறைக்கும் எழுத்துக்களாம்’

இப்படி தீர்க்கமாக விளக்கங்கள் தரப்பட்டாலும் எடுத்துக்காட்டுகள் இல்லாதிருப்பதால் நமக்குப் புரியவில்லை. அற்புதமான சொல்லடுக்கு உள்ள செய்யுளில் ஆழமான பொருள் இருப்பதை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

பாரசீகம், சம்ஸ்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சதுரங்க பந்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழிலோ பல்வேறு விந்தைகள் அதிகம் கொண்ட சதுரங்க பந்தங்களைப் பார்க்க முடிகிறது.

bandhamnew11
உதாரணத்திற்காக சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள ஒரு சதுரங்க பந்தம் மேலே தரப்பட்டுள்ளது. ஆனால் சதுரங்கத்தில் 64 கட்டங்கள் இல்லாமல், மேல் பாதியில் மட்டும் அதாவது 32 கட்டங்களில் மட்டும் வருமாறு இந்த ஸ்லோகம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் உள்ள சதுரங்க பந்தங்களில் சிலவற்றை மட்டும் கண்டோம். இலக்கண நூல்கள் எவ்வளவு ஆழமாக அமைந்துள்ளன என்பதையும் பார்த்தோம் நாம் இந்தத் தொடரில் குறிப்பிட்டுள்ள பல புரியாத புதிர்களுக்கு விடை காண விழைவோர் எதையும் ஏற்கும் தமிழின் நெகிழ்வுத் தன்மையை எளிதில் உணர முடியும்.

இனி அடுத்த விந்தையைக் காண்போம்

– தொடரும்

சங்க காலத்தில் வரதட்சணை!

அகம்1

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 4

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1482; தேதி 13 டிசம்பர், 2014.

முதல் மூன்று பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நலம்.

அதிசயம் 16
பாடல் 90 மருதன் இளநாகனார் பாடியது — முன் காலத்தில் திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ‘’விலை’’ (ஸ்ரீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இது தலை கீழாக மாறி ஆண்களுக்கு விலை பேசினர். டாக்டர் படிப்பு படித்திருந்தால் இவ்வளவு வரதட்சணை, இஞ்ஜினீயர் என்றால் இவ்வளவு என்று. இப்பொழுது பெண்கள் எண்ணிக்கை குறையவே பழைய கால நிலை திரும்பிவிட்டது. அதாவது பெண்களுக்கு பல விதமான ஊக்குவிப்புகளைக் காட்டி என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று ஆண்கள் கெஞ்சவேண்டிய நிலை! ஆதிகாலத்தில் பெண்களுக்கு ‘’விலை’’ கொடுத்ததை காளிதாசன் காவியங்களிலும் சங்க இலக்கியத்திலும் காணலாம். இந்தப் பாட்டில் செல்லூர் கோசர்களின் நியமம் என்ற ஊரையே நீ விலையாகக் கொடுத்தாலும் பெண்ணை அடைவது கஷ்டம் என்று தோழி கூறுகிறாள்:–

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே!
வரதட்சணை காலம் தோறும் மாறுவது வியப்பிலும் வியப்பே!!

அதிசயம் 17

பாடல் 342 மதுரை கணக்காயனார் பாடியது. இதில் குகைகளில் உறையும் தேவதைகள் பற்றிப் பாடுகிறார். ஏரி, குளம், காடு, மலை, தோட்டம், துறவு, குகை, அருவி, கடல் முதலிய பல இடங்களில் வசிக்கும் அணங்குகள் பற்றி சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் காணக்கிடக்கிறது. இது ஒரு நல்ல பி.எச்டி. ஆய்வுக்குரிய விஷயம்.

நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்
அவ் வரி அல்குல் அணையக் காலே
பொருள்: அருவி வீழும் பொய்கை உடைய மலைக் குகையில் மறைந்த வரையர மகளிர் போல காண்பதற்கு அரியவள் நம் தலைவி.

பழந்தமிழர்களும் ஏனைய மக்கள் குழாம் போல பல (மூட?) நம்பிக்கை உடையோரே!
(வரையரை மகளிர்= மலையில் வாழும் பெண் தெய்வம்; கல் அளை=குகை).

அகம்2

அதிசயம் 18

பாடல் 369 நக்கீரர் பாடியது. இதில் காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தின் தாக்கத்தைக் காணலாம். சகுந்தலை என்னும் கானகப் பேரழகி, கண்வ மகரிஷியின் ஆஸ்ரமத்தை விட்டுச் செல்லும்போது அவளால் வளர்க்கப்பட்ட தாவரங்களும் பிராணிகளும் இருந்த நிலையை காளிதாசன் அழகாக வருணிக்கிறான். இதோ நக்கீரர் சொல்வது:

அவள் வளர்த்த கிளிகள் பால் உண்ணவில்லை; தோழியர் கூட்டம் விளையாடவில்லை; பூஞ்செடிகள் மலரவில்லை; சுவரில் உள்ள பாவைகளும் பலி எதையும் கொள்ளவில்லை.

நக்கீரர் கூற்றில் மெலும் ஒரு விஷயமும் தெரிகிறது. வீடுகளில் சுவரில் தெய்வப் படங்களை வரைந்து அதற்கு தினமும் நைவேத்யம் செய்வது தமிழர் வழக்கம் என்பது உறுஹியாகிறது. இதே விஷயம் வேறு சில பாடல்களிலும் வருகிறது.

அதிசயம் 19

பாடல் 344 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது. இதில் தொளி என்னும் மகளிர் விளையாட்டு பற்றிக் குறிப்பிடுகிறார். இப்போது இந்தச் சொல்லும் விளையாட்டும் வழக்கில் இல்லை என்றே தோன்றுகிறது. மகளிரின் தொளி என்னும் விளையாட்டைப் போல மயில் கூட்டம் திரிகிறது என்று அவர் பாடுகிறார். பதவுரை விளக்கத்தில் மகளிர் பலர் கூடி ஆடும் வரிக் கூத்து தொளி என்று விளக்கப்படுகிறது. கோலாட்டம், கும்மி போல ஒரு கோஷ்டி ஆட்டமாக இருக்கலாம்.

அகம்3

அதிசயம் 20
பாடல் 398 இம்மென்கீரனார் பாடியது. இதில் பொற்கோட்டு இமயத்தைப் பாடுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கு இந்தியாவின் முழு சித்திரமும் தெரிந்திருந்தது. இமயம் வரை அவர்களுக்குத் தெரிந்ததிருந்தது. வெள்ளைக்காரன் நாடு முழுதும் சாலையும் ரயில் பாதையும் போட்டதால்தான் நாடு ஒற்றுமை ஆனது என்பது எல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது தமிழ் இலக்கியத்தைப் படிப்போருக்கு விளங்கும். ஆதி சங்கரர் பல முறை வலம் வந்து நாற்புறங்களிலும் மடங்களை நிறுவியதை அறிந்தும் வெள்ளைக்காரன் அவனையே புகழ்ந்து எழுதிய வரலாற்றை இன்று வரை நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம்.

அதிசயம் 21
காட்டில் வாழும் மறவர்கள் செய்த கொடிய செயலையும் பின்னர் அவர்களே அதற்கு வருந்தியதும் பாடல் 337ல் உள்ளது. இதைப் பாடியவர் பாலை பாடிய பெருங் கடுங்கோ. எலும்பும் தோலுமாக ஒரு பிராமணன் காட்டு வழியாக ஓலைச் சுவடியுடன் தூது போகிறான். அதை மழவர்கள் (மறவர்கள்) பார்த்தவுடன் இவன் தங்கத்தை வைத்திருந்தாலும் வைத்திருப்பான் என்று எண்ணி அவனைக் கொன்றுவிடுகின்றனர். அவனிடம் வெறும் ஓலைச் சுவடி மட்டுமே இருந்ததைக் கண்டு அடடா! தவறு செய்துவிட்டோமே ! என்று கையை நொடித்து அப்பாற் சென்றனர். அந்தப் பார்ப்பனனின் உடலை நரி தின்றது.

சம்ஸ்கிருத காவியங்களிலும், சிலப்பதிகாரம் முதலிய தமிழ் காவியங்களிலும் தூது செல்லும் பணி பார்ப்பனர்களுக்கே ஒதுக்கப்படதைக் காட்டும். இது 15 ஆம் நூற்றாண்டிலும் நீடித்தது. கேரள மன்னன் அனுப்பிய பார்ப்பன தூதுவனை கொடியவனான வாஸ்கோடகாமா தன் கப்பலிலேயே கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டான். அதை எல்லாம் சரித்திரப் புத்தகத்தில் எழுதாமல் – இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடித்த வாஸ்கோட காமா — என்று நம் குழந்தைகள் இன்னும் வரலாறு படிப்பது வெட்கக்கேடு.

வாஸ்கோட காமா கடற்வழியைக் கண்டுபிடித்த செய்தியும் தவறு. நாடு பிடிக்க வந்த வெள்ளைக்காரன், போர்ச்சுகீசியரும் தம் வகையறா என்று எழுதிய பொய்யுரை அவை.— வரலாற்றை உடனே திருத்தி எழுதுதல் அவசரப்பணியாகும்.

vaidehi herbert

அதிசயம் 22
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடிய பாடல் 320 ஓங்குதிரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ – என்று துவங்குவது மதுரைக் காஞ்சியின் முதல் வரியை நினைவுபடுத்தும். இதே சொற்றொடரைக் கல்வெட்டுகளும் பயன்படுத்தின.

அதிசயம் 23
வேறு பல அதிசயச் செய்திகளைத் தனித் தனி கட்டுரைகளில் கொடுத்துவிட்டதால் பாடல் குறிப்புகளை மட்டும் தருகிறேன்:

பாடல் 265—மாமூலனார்— கங்கை நதிக்கு அடியில் தங்கம்
பாடல்கள் 69, 251, 281 – மௌரியர் படை எடுப்பு— மௌரிய மன்னன் பிந்துசாரன் தென் இந்தியாவை வென்றதை திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாராநாத் குறிப்பிடுவதை ஒப்பிடுதல் பொருத்தம்.
அகம் 107, 381 வங்கர் பற்றிக் கூறும்.

பாடல் 296— மதுரைப் பேராலவாயார் பாடல் – பண்டம் மாற்று வணிகம் பற்றிய குறிப்பு— கடலில் எடுத்த சிப்பிகளைக் கொடுத்து அதற்கு விலையாக ‘’கள்’’ வாங்குகின்றனர்.
பல கலாசாரங்களில் சிப்பி, கிழிஞல், சங்கு, சோழி ஆகியன கரன்ஸியாக/ பணமாகவும் பயன்படுத்தப்பட்டன.

260- மோசிக் கரையனார் பாடல் – நள்ளிரவில் வரும் பேய்கள் பற்றிய குறிப்பு.
211- மாமுலனார் பாடல் – கதவில் பல் பதித்தல்
269- மதுரை மருதன் இளநாகனார்— பாவை நோன்பு
பாடல் 151, 155, 173 – நல்ல மேற்கோள்கள்/ தமிழர்களின் கொள்கைகள்.

பாடல் 220 — மதுரை மருதன் இளநாகனார் – பரசுராமன் பற்றிய குறிப்பு – மழுவாள் நெடியோன்
பாடல் 148 – ஆந்தைகள் ஏன் பகலில் வருவதில்லை – பரணரின் புதிய விளக்கம்

அகநானூறு அதிசயங்கள் நிறைவு. —-சுபம்—
contact swami_48@yahoo.com
Pictures are used from various websites;thanks.

சங்க காலத்தில் கோவில்கள் இருந்ததா?

akam tamil

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 3

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1479; தேதி 12 டிசம்பர், 2014.

முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்.

அதிசயம் 11
தமிழர்களின் அதிசய நம்பிக்கைகள் பற்றி நிறைய பாடல்கள் உண்டு. ஒரு சில எடுத்துக் காட்டுகள்:-
அகம்.158: ஆந்தைகள் பற்றி அச்சம் (கபிலர் பாடியது)
அகம்.36: -ஆந்தைகள் பொருள் தெரிந்து உரைக்கும் (இளங்கீரனா)
ஏனைய ஆந்தைப் பாடல்கள்: அகம்.19, 88, 356

சங்க காலத்தில் கோவில்கள் இருந்தனவா என்ற கேவிக்கு விடை சொல்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாடல் 99)

அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே, கானம் நயவரும் அம்ம—
என்கிறார். அதாவது வணங்குதற்குரிய தெய்வம் உடைய கோவிலில் கலந்து கிடக்கும் மலர்களைப் போல அவை மணம் கமழும் என்பது பொருள். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனின் குடை சிவபெருமான் கோவிலைச் சுற்றும் (நகர் வலம்) போது மட்டும்தான் தாழ்த்தப்படுமாம் என்று காரிகிழார் (புறம்.6) பாடுவதையும் ஒப்பிடுக.

இந்தப் பாடல்கள் பல சுவையான செய்திகளை வெளிப்படுத்துகின்றன. பூக்காரிகள் பற்றி நிறைய பாடல்கள் இருப்பதால், கோவில் வாசலில் இன்று போலவே 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் பூ விற்றதும், அதைத் தமிழர்கள் கோவில்களில் பூசித்ததும் இதனால் விளங்கும். கிருஷ்ணனும் பகவத் கீதையில் பத்ரம் புஷ்பம் பழம் தோயம் (இலை, பழம், பூகள், தண்ணீர்) எதை அர்ப்பணித்தாலும் நான் ஏற்கிறேன் என்கிறான். அதையே கபிலர் பாடுவதை புறநானூற்றில் பகவத் கீதை என்ற எனது கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன்.

akam tamil2

இதைவிட மிகச் சுவையான விஷயம்— மிலிட்டரி சல்யூட் – ஆகும்.. ராணுவ அணிவகுப்பில் தலைவர் அருகே வருகையில் அவரை நோக்கி முகத்தைத் திரும்புவதும் அவரைக் கடந்துசென்ற பின்னர் பார்வையை (ஐஸ் ப்ரன்ட்) நேராக்குவதும் உலகம் முழுதும் படைகளில் உண்டு. இப்படி முது குடுமிப் பெருவழுதியின் குடையும் கோவிலைச் சுற்றும் போது மட்டும் தாழ்த்தப்பட்டது. யாமார்க்கும் குடியல்லோம் என்று பாடியவர்களும் இறைவன் அருகே வருகையில் தான் ஒரு சிறு துளி என்று எண்ணி அகந்தையை விட்டது தமிழனின் ஆன்மீக உணர்வுக்கு சான்று பகரும்.

இன்று விண்வெளி ஆராய்ச்சிக்கெல்லாம் மூல காரணமாக விளங்கும் மூன்று அடிப்படை பௌதீக விதிகளைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டனும் பரந்த சமுத்திரத்தின் கரையில் கிடக்கும் கூழாங்க் கற்களைத்தான் கண்டு எடுத்திருக்கிறேன் — என்று பணிவுடன் கூறினார். பிரபஞ்சத்தின் மாபெரும் ரகசியங்களில் நாம் கண்டது வெறும் சில கற்களே.

கன்யாகுமரி கோவில்
பாடல் 370ல் அம்மூவனார் கன்யாகுமரி பகவதி அம்மன் கோவிலை குறிப்பால் உணர்த்துகிறார். தோழி சொல்கிறாள், “அடியே! நீ கடல் தெய்வம் வந்து கடற்கரையில் நின்றார் போல நில். நானும் கோவிலில் ஆடும் ஆடுமகள் போல உனக்குத் துணையாக நிற்பேன். இப்பாடலில் கன்யாகுமரி பகவதி அம்மன் போல கடற்கரைக் கோவில் இருந்ததும் அக்கோவில்களில் ஆடுவதற்கான பெண்கள் நியமிக்கப்பட்டதும் தெரிகிறது. ராஜ ராஜ சோழனின் தஞ்சைப் பெரியகோவிலைச் சுற்றி 400 பெண்கள் வசித்ததும் அவர்கள் பெயர்கள், வீட்டு முகவரி (டோர் நம்பர்) என்ன என்பதையும் கல்வெட்டுகளில் அறிகிறோம். சில பெண்களின் பெயர்கள் அழகிய அற்புதமான தமிழ்ப் பெயர்கள்

akanan4

பிராமி கல்வெட்டு
ஆலம்பேரிச் சாத்தனார் என்பவர் பாடல்கள் 47, 81, 143, 175 ஆகியவற்றைப் பாடி இருக்கிறார். பாடல் 81ல் கடலன் என்பவன் பெயர் வருகிறது. இதே புலவர் நெடுஞ்செழியனையும் பாடியுள்ளார். பிராமி கல்வெட்டுகளிலும் இப்பெயர்கள் வருகின்றன. ஆகையால் அக் கல்வெட்டுகள் சங்க காலத்தை ஒட்டியே இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

எகிப்தும் தமிழர்களும்
எகிப்துக்குச் சென்றோர் பாண்டியர்கள் என்று ஏ.சி.தாஸ் என்பவர் புத்தகம் எழுதினார். இதோ மேலும் ஒரு சான்று:
அகம்.101 ல் வானம் என்னும் கடலில் சூரியன் என்னும் தோணி செல்வதாக மாமூலனார் பாடுகிறார். எகிப்தியர்களும் சூரியனை இப்படித்தான் வருணிக்கின்றனர். வேதத்தில் அவன் ஏழு குதிரைகள் பூட்டிய ரத்தில் வருவதாகப் படி இருக்கின்றனர். ஆக தமிழர்கள் சொன்னதையே எகிபதியர்கள் சொன்னார்கள். ஏற்கனவே குட்டுவன், பொறையன், ஆதன் என்ற பெயர்கள் எகிப்திய மன்னர் பெயர்களில் பின்னோட்டாக வருவதை எழுதி இருக்கிறேன்.

கண்ணன் – கோபியர் லீலை

பாடல் 59 மருதன் இளநாகன் பாடியது. இதில் கண்ண பிரானின் லீலைகள் சித்தரிக்கப்படுகின்றன. வடக்குத் திக்கில் உள்ள நீர்வளம் பொருந்திய தொழுநை (யமுனை) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஆயர் மகளிர் தழை உடை உடுத்திக் கொள்ள கிருஷணன் எப்படி குருந்த மரத்தை வளைத்தானோ அது போல ஆண் யானை பெண் யானைக்கு யா மரத்தை வளைத்துக் கொடுத்தது. அதனுடைய இளம் தளிர்களை உண்ண இப்படி உதவியது – என்று புலவர் பாடுகிறார். கிருஷ்ணனின் லீலைகள் சங்க காலத்தில் மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் என்பதும் பிராணிகளின் அன்பும் இப்பாட்டில் வெளிப்படுகிறது. ஆயினும் யமுனா, ஜமுனா என்ற பெயர் எப்படி தொழுநை என்று தமிழில் மாறியது என்பது தெரியவில்லை.

அகநானூற்று அதிசயங்கள் தொடரும்…………………………

contact swami_48@yahoo.com

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 2

roman karur
Dr R Nagasamy ,an eminent archaeologist, historian and a Tamil-Sanskrit scholar has written several books on Tamil culture.

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1469; தேதி 9 டிசம்பர், 2014.

முதல் பகுதி நேற்று வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்.

அதிசயம் 5
அகநானூற்றில் பல காடுகளின் பெயர்கள் வருகின்றன. அவை அழும்பிற்காடு, ஆஅய்ஆனம், ஆலங்கானம், உம்பற்பெருங்காடு, உறந்தைப் புறங்காடு, ஓரிக்கானம், குடவாயின் மிளை, சாய்க்கானம், முள்ளூர்க் கானம், வலத்துப்புறமிளை முதலியன. (மிளை என்பது சின்னக் காடு; கானம் என்பதும் காடு)

இந்துக்கள் புனித நதிகள், புனித மலைகள், புனித கற்புக்கரசிகள், சிரஞ்சீவியாக வாழும் ஏழு மனிதர்கள், புனித நகரங்கள் என்று எல்லாவற்றையும் ஏழு ஏழாகப் பிரித்து ஸ்லோக வடிவத்தில் சிறுவர்களுக்குக் கற்பிப்பது வழக்கம் (அந்தக் காலத்தில்). இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் மட்டும் இதைக் கற்பிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பூகோளம், சரித்திரம், புராணம், இதிஹாசம் எல்லாம் அத்துபடியாகிவிடும். சாகும் வரை இந்தப் பாடல்கள் மறக்காது. தமிழ்நாட்டில் வேதாரண்யம் (திருமறைக்காடு) போன்ற காடுகள் புனிதம் மிக்கவை. இப்பொழுது காடு எல்லாம் நாடு ஆக மாறிவிட்டது.

அதிசயம் 6
பல விழாக்களின் பெயர்களையும் அகநானூற்றில் காணலாம். சங்க காலத்தில் விழா என்று சொல்லாமல் விழவு என்பர். சங்க இலக்கியச் சொற்களில் குறில் ஒலியில் இருந்த சொற்கள் எல்லாம் இப்பொழுது நெடில் ஒலியில் ஒலிக்கப்படும். புறவு என்று இருப்பதை நாம் புறா என்று நெடிலாக உச்சரிப்போம். அதே போல விழவு என்பதை இப்பொழுது விழா என்போம். சங்க கால விழாக்கள்:-
உள்ளி விழவு, உறந்தை விழவு, கழார்ப் புதுப்புனல் விழவு, கார்த்திகை விழவு, கூடல் விழவு, பங்குனி விழவு, பரங்குன்ற விழவு, பூந்தொடை விழவு, யாழ் விழவு, வேல் விழவு முதலியன.

இதில் கார்த்திகை விழா, பங்குனி உத்திரம், கூடல்—பரங்குன்ற (சித்திரைத் திருவிழா) விழாக்கள் இன்றும் பெருமளவில் கொண்டாடப்படுகின்றன. எல்லாப் பௌர்ணமி நாட்களும் இந்துக்களுக்கு திருவிழா நாட்கள். திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் எல்லா விழாக்களையும் ஒரு சேரப் பட்டியல் இடுகிறார். படித்து இன்புறுக.

(உள்ளி விழவு- சுமேரிய பூருள்ளி விழவு- வட இந்திய ஹோலி விழவு தொடர்பு பற்றி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன்)
arta culture

அதிசயம் 7
தமிழ் நாட்டிலும் சங்க காலத்தில் ஜாதிகள் இருந்தன. பெரும்பாலும் அந்தந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அந்தந்தத் தொழில்களையே செய்து வந்தனர். அவை அண்டர் (இடையர்), அத்தக் கள்வர், அந்தணர், உமணர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பழையர், பாணர், யானைப் பாகர், வேளாப் பார்ப்பார் முதலியோர்.

உலகம் முழுதுமே ஜாதிகள் இருந்தன. எல்லா நாட்டு சரித்திரத்தைப் படிப்போருக்கும் ஓருண்மை புலப்படும். ராஜா மகன்தான் ராஜாவானான். அப்படி மாறுபட்டு இருந்தால் அது வன்முறைப் புரட்சியில்—கிளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதலாக இருக்கும். படைத் தலைவன் மகன் படைத் தலைவன் ஆனான்.

அதிசயம் 7
பிராணிகள் பற்றி பல குறிப்புகள் உள. அவற்றில் ஒலி கேட்டால் இறந்துவிடும் அசுணமா என்னும் அதிசய மிருகம் பற்றி நான் ஏற்கனவே எழுதி விட்டேன். சிலர் இதை பறவை என்பர். சிலர் இதை மலைப் பாம்பு என்பர். இன்னும் சிலர் இப்பொழுது அழிந்து போய்விட்ட ஒரு மிருகம் என்பர்.

அதிசயம் 8
பறந்தலை என்ற சொல்லை நாம் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. சங்க காலத்தில் பாழ்பட்ட இடத்தையும் போர்களத்தையும் இச் சொல் குறித்தது. இதன் மூலம் தமிழர்கள் நடத்திய போர்களையும் போர்க் களங்களையும் நாம் அறிய முடிகிறது.

அகநானூற்றில் இடம் பெறும் சங்க இலக்கியப் போர்களங்கள்:-
ஆமூர்ப் பறந்தலை, கழுமலப் பறந்தலை, குறுக்கைப் பறந்தலை, கூடற் பறந்தலை, தலையாலங்கானப் பறந்தலை, பருவூர்ப் பறந்தலை, பாழிப் பறந்தலை, பெருந்துறைப் பறந்தலை, மணவாயிலுறத்தூர்ப் பறந்தலை, முசிறிப் பறந்தலை, வல்லப் பறந்தலை, வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந்தலை.
உலகிலேயே நீண்ட காலத்துக்கு உட்சண்டை—கோஷ்டிப் பூசல் போட்ட ‘’பெருமை’’ தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. சங்க காலம் துவங்கி (கி.மு. முதல் நூற்றாண்டு) முஸ்லீம் மன்னர்களும் வெள்ளைக்காரனும் தமிழர்களைத் துண்டாடும் வரையில் ஏறத்தாழ 1600 ஆண்டுகளுக்கு சேர, சோழ, பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தார்கள். இது போல யாங்கனும் கண்டதில்லை. அண்மைக் காலத்தில் இலங்கையிலும் இதையே கண்டோம்.

03FRNAGASWAMY_1_214265e

அதிசயம் 8
பல அரிய வழக்குகளும் அகநானூற்றில் இடம் பெறும்.
வேளாப் பார்ப்பனர்கள்— பிராமணர்களில் ஒரு சாரார் — சங்குகளை அறுத்து வளையல் செய்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனர். இவர்கள் வேள்வி முதலிய அறுதொழில்களைச் செய்யாமையால் வேளாப் பார்ப்பார் என்று அழைக்கப்பட்டனர்.
சிவபெருமானையே உனக்கு குலம் கோத்திரம் ஏதேனும் உண்டா? என்று கேள்வி கேட்ட நக்கீரனார் ஒரு வேளாப் பார்ப்பார் என்பர்.

சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்.
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே
என்று சொன்னதாக வரலாறு.

ஏனைய வழக்குகள்:
தொல்காப்பியத்தில் வேத காலக் கடவுளரான இந்திரன், வருணன் ஆகியோரை தமிழர் வழிபடும் தெய்வங்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். சிலர் இதை இடைச் செருகல் என்று பிதற்றுவர். அவர்கள் சொல்வது தவறு என்பதற்கு அகநானூற்றில் உள்ள வருண வழிபாடு ஒரு சான்று ஆகும். நுளைச்சியர் சுறா மீனின் கொம்பை நட்டு வருண பகவானுக்கு பரவுக் கடன் கொடுத்த செய்தி இங்கே உள்ளது.
கழங்குக் குறி பார்த்தல், பல்லி சகுனம் கேட்டல், நிமித்தம் பார்த்தல், நடு கல்லைப் பூசித்தல் போன்ற விஷயங்களும்,

குட ஓலை எடுத்துப் பிரமாணம் செய்தல், மணமகளைப் புதல்வர்களை ஈன்றெடுத்த நால்வர் குளிப்பாட்டல், சுவரில் கோடு கிழித்து நாள் எண்ணுதல் முதலிய விஷயங்களும் குறிப்பிடத் தக்கவை.

15FRNAGASWAMY_LD_693654f

அதிசயம் 9
பெண்களும் அக்காலத்தில் சிறந்த கவிஞர்களாக விளங்கினர். ஏறத் தாழ 12 பெண் புலவர்களின் பாடல்கள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
அஞ்சில் ஆந்தை மகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கழார்க் கீரன் எயிற்றியார், குமிழிஞாழார் நப்பசலையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப்பூதியார், வெள்ளிவீதியார், வெறி பாடிய காமக்கண்ணியார்.
இவர்களில் காமக்கண்ணி என்பது காஞ்சீபுரம் உறை காமாக்ஷியின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும். இதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும், உ.வே.சாமிநாத அய்யரும் உறுதி செய்துள்ளனர்.

இன்னும் ஒரு அதிசயம் பெண்களின் பெயர்கள் ‘’ஐ’’ அல்லது ‘’இ’’ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதாகும். வடமொழியில் உள்ள பெண்கள் பெயர்களும் இப்படித்தான் இருக்கும். இது இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த மக்கள் ஒரே இனத்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று.
வடமொழியில் ‘’ஆ’’ என்னும் உயிர் எழுத்தில் முடிந்த பெயர்களைத் தமிழர்கள் ‘’ஐ’’ என்பதில் முடிப்பர்: எடுத்துக்காட்டு: சீதா=சீதை, கீதா=கீதை, அபலா=அபலை
உலகம் முழுதும் உள்ள பெரிய மொழிகளில் தமிழ், சம்ஸ்கிருதம் இவைகளின் தாக்கத்தைக் காணலாம். சுருங்கச் சொல்லின் எல்லாப் பெயர்களையும் சொற்களையும் இவ்விரு மொழிகளில் அடக்கிவிடலாம்.

அதிசயம் 10
சில புலவர்களின் பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர்களின் சிறப்பு காரணமாகவோ, அந்த சொற்றொடர்களின் பெயர்களே அவர்கள் பெயராக சங்க இலக்கிய நூல்களில் காணப்படுகிறது. குறுந்தொகையில் இத்தகைய 13 பெயர்களை ஏற்கனவே கண்டோம். இந்நூலில் ஐந்து பெயர்கள் உள்ளன:

அந்தி இளங்கீரனார், இம்மென்கீரனார், ஊட்டியார், நோய்பாடியார் வண்ணப்புறக் கந்தரத்தனார்.
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இம்முறை கையாளப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மவரின் சொல், செயல், சிந்தனை ஆகியன ஒரே மாதிரியானவை எனபதற்கு இது மேலும் ஒரு சான்று.
அகநானூற்று அதிசயங்கள் தொடரும்…………………………

அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1

akanan1

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1466; தேதி 8 டிசம்பர், 2014.

ஏற்கனவே இவ்வரிசையில்,
புறநானூறு அதிசயங்கள்
நற்றிணை அதிசயங்கள்
பதிற்றுப்பத்து அதிசயங்கள்
குறுந்தொகை அதிசயங்கள்
என்று நான் எழுதிய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.
எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் காதல், குடும்ப வாழ்வு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் உள.

அதிசயம் 1
அகநானூற்றில் மிகப்பெரிய அதிசயம் பாடலின் தொகுப்பு முறையாகும். தமிழர்கள் கணிதத்தில் எவ்வளவு ஆர்வமும் கவனமும் செலுத்தினர் என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும். 400 பாடல்களையும் 1,2,3,4,5,6……. என்று எழுதுங்கள். அதில் ஒற்றைப்படை எண்கள் உடைய பாடல்கள் எல்லாம் பாலைத் திணையாகவும் பத்து தொடர்ந்தனவெல்லாம் நெய்தலாகவும், நாலு தொடர்ந்தனவெல்லாம் முல்லையாகவும் இரண்டும் எட்டும் தொடர்ந்தனவெலாம் குறிஞ்சியாகவும், ஆறு தொடர்ந்தன வெல்லாம் மருதமாகவும் நூல் முழுதும் தொகுக்கப்பட்டுள்ளது.

இதைத் ‘’தமிழ் இலக்கியத்தில் எண்கள்’’ என்ற எனது 1995 தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டேன். இப்பொழுது சிறிது விளக்கமாகவே கூறுகிறேன்:–

பாலை
1,3,5,7,9,11…………………………….. இப்படி 397,399 வரை எல்லா ஒற்றைப்படை எண்ணுள்ள பாடல்களும் பாலைத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
நெய்தல்
10, 20, 30, 40, இப்படி ……………….390, 400 வரை பத்தில் முடியும் எண் பாடல்கள் அனைத்தும் நெய்தல் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
முல்லை
4,14,24,34,44,54……………………. 394 வரை இவ்வாறு நாலு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் முல்லைத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
குறிஞ்சி
2,12,22,32,42…………………….. 8, 18, 28, 38……………………. 392, 398 வரை இவ்வாறு இரண்டு எட்டு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
மருதம்
6,16,26,36……………………………..396 என்ற வரை இவ்வாறு ஆறு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் மருதத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.

akanan2

இப்படிச் செய்வதால் புத்தகத்தைப் படி (பிரதி) எடுப்போர் தவறு செய்யும் வாய்ப்புகள் குறைவாகும். யாரேனும் ஒருவர் தவறு செய்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்துத் திருத்தி விடலாம். இப்படிப் பிரித்ததிலும் கூட 200+40+40+80+40 என்ற அழகைக் காணலாம்.

பிராமணர்கள் வாய்மொழியாகவே வேதத்தைப் பரப்பவேண்டும் என்ற கொள்கையினை உடையோராதாலால் அதில் இடைச் செருகல் வரக்கூடாது என்பதற்காக, பல்லாயிரம் வருடங்களாக, அதை

1.வாக்கிய பாடம்,
2.கிரம பாடம்,
3.கண பாடம்,
4.ஜடா பாடம்
என்று சொற்களைக் கணித அடிப்படையில் கூட்டிக் கூட்டிச் சொல்லுவர்.

மனப்பாட சக்தியுள்ள ஒருவரைப் புகழும்போது, ‘’அவரா? அவர் அதைத் தலைகீழாகச் சொல்லச் சொன்னாலும் சொல்வாரே, அந்த அளவுக்குப் புலமை’’ என்போம். இது போல பிராமணர்கள் பெரிய புலமை பெறும் போது அவர்களுக்கு ‘கனபாடி’கள் என்ற பட்டமும் கிடைக்கும். இதே போல தமிழர்களும் எண் அடிப்படையில் பாடல்களை வகுத்தது அவர்களின் திறமைக்கு ஒரு சான்றெனில் அது மிகையாகாது.

Akananuru graph
அதிசயம் 2
அகநானூற்றில் 108 ஊர்களின் பெயர்கள் உள்ளன. 2000 ஆண்டுப் பழமையான ஊர்களை அறிய இது பெரிதும் உதவுகிறது. தமிழர்கள் மிகவும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ஆகையால் அலைவாய் (திருச்செந்தூர்), அரங்கம் (ஸ்ரீரங்கம்), கோடி (தனுஷ்கோடி), மதுரை, வேங்கடம் (திருப்பதி) முதலிய பல புண்ய க்ஷேத்திரங்களைக் குறிக்கத் தவறவில்லை.

அதிசயம் 3
அகநானூற்றில் குறைந்தது 14 நாட்டுப் பிரிவுகள் வருகின்றன. இப்போது நாம் நாடு என்றால் பெரிய நிலப்பரப்புடைய அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் என்போம். 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இதைச் சிறு நிலப்பரப் பிற்கே பயன்படுத்தினர். எல்லா மொழிகளிலும் காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறும். ஆங்கிலத்திலும் கூட 400 ஆண்டுகளுக்கு முன் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய சொற்கள் இன்று பொருள் மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.
இடையநாடு, குடநாடு, கொங்குநாடு, கோசர் நாடு, துளுநாடு, தொண்டைநாடு, பாணன் நாடு, புகார் நாடு, பூழி நாடு, மழவர் நாடு, மாறோக்கநாடு, வடுகர்நாடு, வேம்பிநாடு, வேளிர்நாடு முதலியன.

‘’நாடு’’ என்னும் சொல் பொருள் மாறியது பற்றி எழுதியவுடன் வேறு ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது.

பல வெளிநாட்டுக்காரர்கள் ரிக் வேதத்தை மொழி பெயர்க்கிறேன் என்ற பெயரில் தத்துப்பித்து என்று உளறி வைத்துள்ளனர். இதை உளறல் என்று கண்டுபிடிக்க நீங்கள் பெரிய சம்ஸ்கிருத அறிஞராக இருக்க வேண்டாம். 20 வெளிநாட்டுக்காரர்கள் ரிக் வேதப் பாடல்களை மொழிபெயர்த்ததைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தா சம்பந்தமே இராது.

திருக்குறளிலும் பதின்மர் உரை என்று பத்துப் பேர் எழுதிய உரைகள் உண்டு. அதில் பெரிய வேற்றுமைகளையோ கலாசார எதிர்மறை விளக்கங்களையோ காணமுடியாது. ஆனால் வேதத்துக்குப் பொருள் எழுத வந்தோருக்கு நம் கலாசாரம் தெரியாது என்பதைவிட அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதைப் பார்க்கையில் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும். சாயம் வெளுத்துப்போகும்!

akanan3

அதிசயம் 4
அகநானூறு குறிப்பிடும் தமிழர்களின் தெய்வங்கள்:
அருந்ததி, இராமன், இல்லுறை கடவுள், உமை, கண்ணபிரான், கவிர மலைத் தெய்வம், குபேரன், கொல்லித் தெய்வம், சந்திரன், சிவபெருமான், சூரியன், செல்லூர்த் தெய்வம், நடுகற் கடவுள், நள்ளியடுக்கத்துச் சூர்,
புகார்த் தெய்வம், பாழி அணங்கு, பொதியில் தெய்வம், மழுவாள் நெடியோன், முருகன், வேம்பினடிக் கடவுள், வேளூர்வாய்த் தெய்வம்.
இது தவிர ஏரி, குளம், காடு, மலை, குன்று, மரங்களில் உறையும் அணங்குகள் பற்றிய குறிப்புகளும் நிறைய உண்டு.

தமிழர்களைப் பற்றி சில அரசியல் கட்சிகள் தவறான பிரச்சாரத்தைச் செய்ததால் தற்கால இளைஞர்களுக்கு தமிழர்கள் என்போர் ஏதோ தனிப்பட்ட ஒரு இனம், அவர்கள் ஆகாசத்தில் இருந்து குதித்த உலக மஹாப் பழங்குடி மக்கள், அவர்களுக்கு வேறு ஒரு கலாசாரம் உண்டு என்ற எண்ணம் உண்டாகும் இவை எல்லாம் மஹா அபத்தம் என்பதை அறிய நீங்கள் மிகப்பெரிய தமிழ் அறிஞராக இருக்க வேண்டும் என்பது இல்லை.

வர்த்தமானன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்ட சங்க இலக்கிய மேல் கணக்கு நூல்கள் 18 ஐயும் எடுத்துக் கொண்டு பத்துப்பாட்டையும் (10 நூல்கள்) எட்டுத்தொகையையும் ( எட்டு நூல்கள்) படியுங்கள். இமயம் முதல் குமரி வரை எல்லாம் ஒரே பண்பாடே என்று நீங்களே கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். திருநெல்வேலி பெட்டி வெல்லம், நெல்லை லாலகடை அல்வா, மணப்பாறை முறுக்கு, மானாமதுரை சாம்பார் சாதம், மதுரை நாகப்பட்டிணம் கடை காராச்சேவை, ஐயங்கார் மெஸ் புளியோதரை என்பது போல சில ‘’ஸ்பெஷல்கள்’’ ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இது உலகம் முழுதும் உண்டு.
ஐயர் வீட்டுக் கல்யாணங்களில் கூட திருநெல்வேலி வழக்கம், மதுரை சம்பிரதாயம், தஞ்சாவூர் பார்ப்பனர் வழக்கம், ஆற்காட்டு ஐயர் சம்பிரதாயம் என வேறுபடும் ஆனால் அவர்கள் எலோரும் பிராமணர்களே. செட்டியார் வீட்டுக் கல்யாணங்களிலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் மாறுபடும். அவர்கள் அனைவரும் வடநாட்டு ஷ்ரேஷ்டிகளே=செட்டி=ஷெட்டி.

கோவில் வாஹன அலங்கராத்தில் கூட சூர்யப்பிரபை, சந்திரப்பிரபை என்ற வாஹனங்களைத் தென் தமிழ்நாட்டுக் கோவில்களில் காணமுடியாது. அதற்கேன வட அற்காடு விஷ்ணுவை ஆரியர் என்றும் தென் தமிழ்நாட்டுப் பெருமாளைத் திராவிடன் என்றும் சொல்லும் மடைமை ஈங்கு இல்லை. ஆயினும் வெள்ளைகாரன் போல பி.எச்டி. பட்டம் வாங்க விரும்பினால், உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை கிடைக்க வேண்டுமானால் நீங்களும் பிரித்தாளும் சூட்சியில் இறங்கலாம்.

அகநானூற்று அதிசயங்கள் தொடரும்…………………………

குறுந்தொகை அதிசயங்கள்

kannaki cooking

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1449; தேதி 1 டிசம்பர், 2014.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் உண்டு எனவும் அதில் பத்துப் (10) பாட்டு+ எட்டு (8)த்தொகை அடக்கம் எனவும் கண்டோம். சங்க காலத்துக்குப் பின்னர் திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றியதையும் அறிவோம். எட்டுத்தொகை நூலில் ஒன்றான பதிற்றுப்பத்து அதிசயங்களைக் கண்டோம். பின்னர் புறநானூற்று அதிசயங்களைக் கண்டோம். இன்று எட்டுத் தொகை நூலில் மேலும் ஒரு நூலான குறுந்தொகை என்னும் நூலின் அதிசயங்களைக் காண்போம்.
குறுந்தொகையில் குடும்ப உறவு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் இருக்கின்றன. இவை குறுகிய அடிகளைக் கொண்ட சின்னச் சின்ன பாடல்கள்.

தமிழர்கள் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் என்றால் நீண்ட பட்டியலையே தரலாம். பெரும்பாணாற்றுபடையில் எந்தெந்த ஜாதியினர் வீட்டுக்குப் போனால் என்னென்ன உணவு கிடைக்கும் என்று அழகாகப் பாடி வைத்துள்ளனர். ஆயினும் குறுந்தொகை உணவு பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

வற்றல் குழம்பும் தயிர் சாதமும்

ஒரு தோழி அவள் நண்பி நடத்தும் திருமண வாழ்வை அறிய அவள் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாள்– பின்னர் திரும்பி வந்து அப்பெண்ணின் தாயிடம் சொன்னாள்,
“அடியே! உன் மகள் வீட்டுக்குச் சாப்பிடப் போனேன். நல்ல அருமையான தயிர் சாதமும் வற்றல் குழம்பும் சமைத்து வைத்திருந்தாள். நல்ல வாசனை! தாளித்துக் கொட்டியிருந்தாள். அடுப்பின் புகை தாளாமல் எல்லாவற்றையும் புடவையிலேயே துடைத்துக்கொண்டாள்; கணவனோ அதை ரசித்து, ருசித்து சுவைத்து சாப்பிட்டான். அவள் முகம் மலர்ந்தது:–
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
……………………………….
தான் துழந்து இட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின் – (கூடலூர்க் கிழார், 167)

பாடல் 277ல் ஓரில் பிச்சையார் வேறு ஒரு உணவு பற்றிப் பாடுகிறார். அதோ ! நாய்கள் நுழைய முடியாத (அந்தணர்) தெருவில் நெய் கலந்து வெண்சோறு போடுவர். உன் செம்பில் வெந்நீரும் தருவர். அதைப் பெறும் துறவியாரே என் கணவர் எப்போது வருவார்? வாடைக் காலம் வந்துவிட்டதா? என்று ஒரு த்ரிகால ஞானியிடம் ஒரு பெண் வினவுகிறாள். துறவிகள் முக்காலம் உணரும் த்ரிகால ஞானிகள் என்று தொல்காப்பியம் செப்பும் (தொல்.புறத்.20). ஐயர்கள் வசிக்கும் தெருவில் நாய்களோ கோழிகளோ போகக் கூடாது என்று பெரும்பாணாற்றுப்படையும் செப்பும் (வரிகள் 298-301).

குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திகள் என்ற கட்டுரையில் ஒரு குரங்கு, கணவன் உயிர் இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை எழுதி இருந்தேன். அதுவும் பொறுப்புடன் தன் குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்புவித்துவிட்டு மலை முகட்டில் இருந்து விழ்ந்து இறந்தது. இது கணவனுடன் உடன் கட்டை ஏறும் ‘’சதி’’ போன்றது (பாடல் 69)

கார்க்கியர் என்று உபநிஷதத்தில் ஒருரிஷியின் பெயர் உண்டு. எப்படி புறநானூற்றில் வால்மீகி, மார்க்கண்டேயன் போன்ற பெயர்கள் உளதோ அதே போல குறுந்தொகையில் கார்ர்கியர் என்ற ரிஷி பெயரில் ஒரு புலவர் இருக்கிறார். சாண்டில்யன் , மஹாபாரத சல்லியன் பெயரிலும் புலவர்கள் இருக்கின்றனர். தமிழைக் கிண்டல் செய்து பின்னர் கபிலரிடம் தமிழ் கற்று ஒரு தமிழ்ப் பாட்டும் பாடிய வட நாட்டு ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன் என்பவனும் குறுந்தொகைப் புலவனே!!
dhenupureeswar, chennai
Dhenupureeswar Temple, Chennai

சம்ஸ்கிருதச் சொற்கள்
குறுந்தொகையில் பல புலவர்கள் தயக்கமின்றி பல சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாளுவர். அவையாவன:–

அகில், அச்சிரம், அமயம், அமிழ்தம், அரசன், அவை, இமயம், ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கமண்டலம், கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், நேமி, பக்கம், பணிலம், பருவம், பலி, பவழம், பிச்சை, மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம், வாசம் (உ.வே.சாமிநாத அய்யர் தந்த பட்டியல்)

தமிழ்ப் பெண்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையவர்கள். அடுத்த பிறப்பிலும் நீயே கணவனாக வரவேண்டும் என்று விரும்பினர் என்று அம்மூவனார் பாடுகிறார் (பாடல் 49)
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை

பழந்தமிழ் வழக்கங்கள்

பறையும் சங்கும் ஊதி திருமணம் செய்தல் (ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரத்திலும் உண்டு), திருமணம் செய்த பின்னர் பெண்ணின் சிலம்பைக் கழித்தல், சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுதல், முதியோர் சென்று திருமணம் பேசுதல், பிறையைத் தொழுதல் ஆகியவற்றைக் குறுந்தொகை நமக்கு அளிக்கிறது.

dance,odisi

குறுந்தொகை அளிக்கும் தமிழ் பொன்மொழிகள்

பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே (பாடல் 115)
பெரிய நன்மையைச் செய்தால் போற்றாதோர் உண்டோ

நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற் குரியதன்று (143)
புகழையே விரும்பும் நல்ல மனிதனிடம் உள்ள பொருள் அவனிடம் தங்காது எல்லோருக்கும் பயன்படுவது போல

திறவோர் செய்வினை அறவது ஆகும் (247)
திறமையுள்ளோர் செய்யும் காரியம் அறத்துடன் பொருந்தியது — (தர்மம் உடையது)

சன்றோர் புகழும் முன்னர் நாணுப;
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே (252)
பெரியார், தம்மைப் புகழ்வதற்கு முன்னரே வெட்கப்படுவர். அப்படிப்பட்டவர்கள் பழிச் சொல்லைக் கூறினால் பொறுத்துக் கொள்வரோ?

புலவர்களின் விநோதப் பெயர்கள்
சில புலவர்களின் பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சிறப்பு சொற்றொடர் காரணமாகவோ அதையே அவர்களுக்குப் பெயராக வைத்துள்ளனர். இது போல ரிக்வேத முனிவர்கள் பெயரிலும் பல பெயர்கள் இருக்கின்றனர்!!

செம்புலப்பெயல் நீரார், கயமனார், அணிலாடு முன்றிலார், நெடு வெண் நிலவினார், மீன் எறி தூண்டிலார், விட்ட குதிரையார், ஓரேர் உழவனார், கூவன் மைந்தன், காலெறி கடிகையார், ஓரில் பிச்சையார், கல் பொரு சிறு நுரையார், கள்ளில் ஆத்திரையனார், குப்பைக் கோழியார், பதடி வைகலார், கவை மகன், கங்குல் வெள்ளத்தார், குறியிரையார். — இவர்களில் 13 பேரின் பெயர்கள் அவர்கள் பாடிய பாடல்களில் வரும் சொற்கள்!!

_HY29BONALU-2__1533282g
Bonalu festival

இன்னும் சில சுவையான செய்திகள் இதோ:–

பாடல் 61: சிறுவர் இழுத்துச் செல்லும் குதிரை வண்டி பொம்மை
பாடல் 156: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! என்று துவங்கும் பாடலில் வேதத்தை எழுதாக் கற்பு என்ற மிக அழகிய சொல்லால் வருணித்துவிட்டு கணவன் மனைவியைச் சேர்த்துவைக்கும் மந்திரம் ஏதேனும் வேதத்தில் உண்டா என்று கேட்கிறார் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.

பாடல் 300: கடல் சூழ் மண்டிலம் என்ற சொற்கள் இந்தப் பூமி உருண்டையானது என்பது தமிழர்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டும். கோப்பர்நிகசுக்கு முன்னரே இந்தியருக்குத் தெரிந்த சாதாரண விஷயம் இது.

பாடல் 135: வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் = “தோழி! வேலைதான் ஆடவர்க்கு உயிர், மனைவியர்க்கு கணவன் தான் உயிர்!”
பாடல் 1: பெண்களுக்கு பூ கொடுக்கும் வழக்கம்

குறுந்தொகையில் வரும் கடவுளர்

பாடல் 1:முருகன்
பாடல் 362: முருகனுக்கு ஆட்டுக் குட்டி பலி
பாடல் 218: சூலி என்னும் துர்க்கையை வணங்குதல், தமிழ் பெண்கள் காப்பு நூல் அணியும் வழக்கம், சோதிடம் கேட்கும் வழக்கம்
பாடல் 267:யமன்
பாடல் 87:மரா மரக் கடவுள்
பாடல் 89, 100: கொல்லி மலைப் பாவை
பாடல் 372: சுனாமி, நில அதிர்ச்சி, கடல் எல்லை மாறுதல் (இவை பற்றி நற்றிணை, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுபத்திலும் உண்டு)
பாடல் 361: காதலன் வாழும் மலைப் பகுதியில் வெள்ளத்தில் அடித்து வந்த காந்தள் கிழங்கைக் கொஞ்சி அதை நட்டு வைத்துக் கணவன் போல எண்ணி மகிழ்தல்
பாடல் 151: இப்பாடலில் வரும் வங்கா என்ற பறவை மடகாஸ்கர் தீவிலும் உண்டு.
பாடல் 119: யானையைப் படாத படுத்தும் வெள்ளைப் பாம்பு (இது என்ன பாம்பு என்பது ஆய்வுக்குரியது)

400 பாடல்களிலும் நனி சுவை சொட்டும்; படித்து இன்புறுக!
–சுபம்–