
WRITTEN BY S NAGARAJAN
Date: 4 August 2018
Time uploaded in London – 6-50 AM (British Summer Time)
Post No. 5286
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாக்யா வார இதழில் 3-8-18 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தியிரண்டாம்) கட்டுரை
வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 2
ச.நாகராஜன்
ஏராளமான நவீன் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் அவற்றுடன் இணைந்தே நம் வாழ்க்கை கழிகிறது. இ மெயில், வாட்ஸ் ஆப், எஸ் எம் எஸ், மொபைல் போன், ட்விட்டர், ஃபேஸ்புக் இன்ன பிற தொழில்நுட்பங்கள் நம்மைக் கவ்விக் கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் உதறி விட்டு நம்மால் இன்று வாழ முடியவில்லை. இதில் எவ்வளவு நேரத்தை அனாவசியமாகக் கழிக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட நேரம் இல்லை. வாழ்க்கை ஓடுகிறது; ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஒரு வழி தான் ‘திங்க் வீக்’! (Think Week)
மைக்ரோ சாஃப்டின் பில் கேட்ஸ் தான் இந்த ‘சிந்தனை வாரம்’ என்னும் புது வழியைக் கண்டு பிடித்து அதைக் கடைப்பிடித்தார்; முன்னேறினார். வருடத்திற்கு இருமுறை பரபரப்பான தன் வாழ்க்கைச் சூழலிலிருந்து அவர் விடுபட்டுத் தனியிடம் ஒன்றை நாடுவார். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட யாருடனும் தொடர்பு அறவே இருக்காது. அந்த ஒரு வாரத்தில் படிக்க வேண்டிய அனைத்தையும் படிப்பார். தனது அடுத்த கட்ட நடவடிக்கையை சிந்தனை செய்து நன்கு ஆலோசித்து முடிவெடுப்பார். இணையதளம் ஒரு பெரிய நிலைக்களமாக ஆகப் போகிறது என்பதை இந்த சிந்தனை வாரத்தில் தான் அவர் உணர்ந்தார்; அதற்காக தனது கம்பெனியை ஆயத்தப் படுத்தி முடுக்கி விட்டார். விளைவு பெரிய லாபத்தையும் பெயரையும் சம்பாதித்தார். இதேபோல ஸ்கில்ஷேர் கம்பெனியை நிறுவிய மைக்கேல் காஞ்சனப்ரகோர்ன் (Skillshare – Michael Karnjanaprakorn) பில் கேட்ஸின் இந்த வழியைத் தானும் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். சிந்தனை வாரத்தில் புது ஐடியாக்களை அவர் அலசுவார். பல பத்திரிகைகள், புத்தகங்களைப் படிப்பார். ஆழ்ந்து யோசிப்பார். தனது நிறுவனத்தில் உள்ள அனைவரிடமும் தங்கள் தங்கள் யோசனைகளை அனுப்பக் கூறுவார். இது தனது முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். தியானத்தின் ஒரு சின்ன வழிமுறை தான் சிந்தனை வாரம். ஒரு வாரம் இப்படிக் குடும்பம், சுற்றம், நட்பை விட்டுப் பிரிந்திருக்க முடியாதவர்கள் ஒரு நாளை சிந்தனை நாளாக ஒதுக்கலாம்; முன்னேறலாம். பெரிய முதலை சும்மா இருந்ததைப் போல குறிக்கோளுடன் கூடிய பொழுதாக இதைக் கழிக்கலாம். தினமும் வாட்ஸ் ஆப்பில் வரும் அனாவசிய வம்புச் செய்திகள் எத்தனை எத்தனை; மெயில்கள் எத்தனை எத்தனை; இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இப்போதைய ட்ரெண்ட்!
இந்தியாவில் வழி வழியாக வழங்கி வரும் ஆப்பில் அகப்பட்ட குரங்குக் கதையும் பொருள் பொதிந்த ஒன்று! குரங்கைப் பிடிக்க நினைப்பவர்கள் ஒரு மரத்தைப் பிளந்து அதில் வாய் குறுகிய குவளை ஒன்றை வைத்து வாழைப்பழத்தை நன்கு தெரிகிறார்போல வைப்பார்கள். பழத்திற்கு ஆசைப்பட்ட குரங்கு குறுகிய வாயின் உள்ளே கையை விட்டு வாழைப்பழத்தை எடுக்கும். வாழைப்பழம் கையில் இருக்கும் போது அதன் கை வெளியே வராது. அதை விட்டு விட்டால் அதன் கை எளிதில் வெளியே வந்து விடும். ஆனால் பழத்தை விட அதற்கு மனம் வராது. அந்தச் சமயம் பார்த்து அருகிலிருக்கும் குரங்கு பிடிப்போர் அதைப் பிடிப்பார்கள். நமக்கு வேண்டாத வம்புச் செய்திகளைப் பிடித்துக் கொண்டபோது நாம் விடுபட முடியாது. நம்மைப் பிடிக்க வேண்டிய துரதிர்ஷ்டம் காத்திருந்து நம்மைப் பிடிக்கும்.

ஜென் பிரிவில் ஒரு அழகிய குட்டிக் கதை உண்டு. குதிரையில் அமர்ந்த ஒரு மனிதன் மிக வேகமாக குதிரையில் வந்து கொண்டிருந்தான். அவனது வேகத்தைப் பார்த்து பயந்து சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன் அவனை நோக்கிக் கத்தினான்: “எங்கே போகிறாய், இவ்வளவு வேகமாக!” அதற்கு ஓடும் குதிரையில் இருந்த மனிதன் கத்தி பதில் சொன்னான்: “எனக்குத் தெரியாது, குதிரையைக் கேள்” ஆழ்ந்த பொருள் கொண்டது இந்த ஜென் கதை. குதிரை என்பது நமது பழக்க வழக்கங்கள். நம்மை மீறி நமது பழக்க வழக்கங்கள் அதன் போக்கில் வேகமாக நம்மை இழுத்துச் செல்கின்றன. போகுமிடம் நமக்கு எப்படித் தெரியும். குதிரைக்குத் தான் – பழக்க வழக்கங்களுக்குத் தான் – போகுமிடம் (விளைவு) தெரியும்; ஆகவே குதிரையைச் சற்று நிறுத்தி யோசிக்க வேண்டும்.
ஆக முதலைக் கதை, குரங்குக் கதை, குதிரைக் கதை வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உதவும். நவீன கால சொற்றொடரின் படி திங்க் வீக் என்று இதைச் சொன்னாலும் சரி அல்லது புத்தமத விளக்கமான மைண்ட்ஃபுல்னெஸ் (Mindfulness) என்று சொன்னாலும் சரி அர்த்தம் ஒன்று தான். உன்னிலிருந்து நீ விலகி உன்னைக் கவனி என்பதே இதன் சுருக்கமான அர்த்தம்.
மைண்ட்ஃபுல்னெஸ் என்பதைச் சுருக்கமாக விளக்க வேண்டுமெனில்,”உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, எங்கே நீ போய்க்கொண்டிருக்கிறாய், எந்த வழியில் எந்த விதத்தில் நீ சென்று கொண்டிருக்கிறாய்” என்பதை சிந்தித்து நன்கு உணர்வதே ஆகும். இந்த விழிப்புணர்ச்சியைத் தருபவையே மைண்ட்ஃபுல்னெஸ் தியான வழி முறைகள். ஏராளமான வெற்றிக் கலை உத்திகளைக் கையாண்ட மேலை உலகம் இப்போது மைண்ட்ஃபுல்னெஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. ‘சும்மா இருந்து சுகம் கண்டு, யோசித்து, வெற்றி பெறு’ என்கிறது இப்போதைய மேலை உலகம். காலம்காலமாக கையாளப்பட்டு வெற்றி தரும் வழி முறை இதுவே என்பதில் ஐயமில்லை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஃப்ரான்ஸிஸ்கோ வரேலா (பிறப்பு 7-9-1946 மறைவு 28-5-2001) சிலியைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி. சிலியில் நடந்த அரசியல் புரட்சி காரணமாக அவர் அமெரிக்கா சென்று சில காலம் தங்கினார். பின்னர் சிலிக்குத் திரும்பி வந்து சிலி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். புத்தமதம், அறிவியல் ஆகிய இரண்டின் நடமாடும் களஞ்சியம் என்ற பெயரைப் பெற்ற இவர் உயிரியலைப் படிக்கும் மாணவனாக இருந்த போது பேராசிரியர் ஹம்பரோ மடுரானா என்பவரின் அறைக்குள் வேகமாக நுழைந்து கத்தினார்:” பிரபஞ்சத்தில் மனித மனதின் பங்கு என்ன என்பதை நான் அறிய வேண்டும்.”
மடுரானா புன்முறுவலுடன் பதில் சொன்னார்:”பையா! சரியான இடத்திற்குத் தான் நீ வந்திருக்கிறாய்!”
அன்றிலிருந்து வரேலாவுக்கு மடுரானா வழிகாட்டியானார். வரேலாவின் நண்பரான விஞ்ஞானி ஜெர்மி ஹேவேர்ட் (Jeremy Hayward) தனது வழிகாட்டியான புத்தமத துறவி ட்ரங்பா ரின்போச்சேயை அறிமுகப்படுத்த, அவர் வரேலாவுக்கு “ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதை” சொல்லித் தந்தார். புத்த மதத்தை நன்கு அறிந்து கொண்ட வரேலா நோபல் பரிசு பெற்ற தலாய்லாமாவைச் சந்தித்து அறிவியலும் புத்தமதமும் பற்றிய மாநாட்டை இந்தியாவில் தர்மஸ்தலாவில் நடத்தினார். பின்னர் இமயமலைக் காடுகளிலும் குகைகளிலும் தனியே இருந்து தியானம் பயின்று மைண்ட்ஃபுல்னெஸ் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்.
அவரது வழியில் சகவிஞ்ஞானிகள் புத்த துறவிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து வந்து அவர்கள் தலையில் 256 சென்ஸர்கள் வரை மாட்டி தியானத்தின் போது மூளையில் ஏற்படும் ஆய்வு பற்றி சோதனை நடத்தினர். சோதனை முடிவில், தியானத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் கவன சக்தி பிரம்மாண்டமான அளவில் கூடுகிறது என்றும், மூளை வியக்கத்தக்க விதத்தில் நல்ல மாறுதலை அடைகிறது என்றும் கண்டுபிடித்தனர். வரேலா இறுதி வரை புத்தமத தியான முறைகளை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து முடிவுகளை அதிகாரபூர்வமாக உலகிற்கு அறிவித்து வந்தார். சுவை நிரம்பிய வாழ்க்கை வரலாறு கொண்ட விஞ்ஞானி வரேலா மதத்தையும் அறிவியலையும் இணைத்தவராவார்!
***