அதிசய புத்த துறவி ஸு யுன்! – 22 (Post No.3453)

Article written by S NAGARAJAN

 

Date: 16 December 2016

 

Time uploaded in London:- 6-30 AM

 

Post No.3453

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 22

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 82.

வசந்த காலம் வந்தது. யூனான் மாகாணத்திற்கு ஜு பின் ஜென் என்பவர் கவர்னராக ஆனார்.

 

 

ஆண்டின் இரண்டாம் மாதத்திலிருந்து ஏழாம் மாதம் முடிய மழை. மழையோ மழை. ஒவ்வொரு நாளும் நகரின் பிரதான வாயிலுள்ள கோபுரத்திலிருந்து பலமான குண்டுகள் மேகத்தை நோக்கி அதைக் கலைக்க வீசப்பட்டன. ஆனால் பயனில்லை.

ஏழாம் மாதம் முதல் ஒரு பஞ்சம் வந்து ஆட்கொண்டது. ஆகவே குளிர்காலத்தில் நதியிலிருந்து தூசு கிளம்பி நகரை ஆக்ரமித்தது.

 

 

தொடர்ந்து உருவாகிய டிப்தீரியா வியாதிக்கு பல்லாயிரக் கணக்கானோர் பலி ஆகினர்.

ஸு யுன் ஹூவா டிங்  மடாலயத்தில் அப்போது தங்கி இருந்தார்.

 

ஒரு நாள் நகருக்குச் சென்ற ஸு யுன், திரும்பி வரும் போது  ஒரு மர நிழலில் இளைப்பாற அமர்ந்தார்.

மரத்தின் அருகே ஒரு மூட்டை கிடந்தது. யாரும் அருகில் இல்லை.ஆகவே அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார் ஸு யுன்.

உள்ளே  தங்கம் மற்றும் மரகத்தத்திலான ப்ரேஸ்லெட், தங்க கொண்டை ஊசிகள், காதணிகள், ஒரு வாட்ச், 8000 யூனான் டாலர்கள், பத்தாயிரம் சீன பியாஸ்டர் (எனப்படும் நோட்டுகள்) இருந்தன.

 

இதை விட்டுவிட்டுப் போன உரிமையாளருக்காக நெடுநேரம் காத்திருந்த ஸு யுன், யாரும் வராமல் இருககவே, அதைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார். மறு நாள் பேப்பரில் விளம்பரம் கொடுத்து உரியவரிடம் ஒப்படைத்து விடலாம் என்று அவர் எண்ணினார்.

 

 

மவுண்டனின் அடிவாரத்தை அடைந்த சமயம் அங்குள்ள ஏரியைக் கடக்க் முயன்ற ஸு யுன், ஒரு இளம் பெண் ஏரியில் குதிப்பதைக் கண்டார்.

 

உடனே அவளைக் காப்பாற்ற ஸு யுன் முயன்றார். அவளோ மூழ்க ஆரம்பித்தாள். உடனே தண்ணீரில் குதித்த ஸு யுன் அவளைக் காப்பாற்ற நீந்திச் சென்றார். அவளோ தன்னைக் காப்பாற்ற விடவில்லை. ஆகவே அவளை வலுக் கட்டாயமாக இழுத்துக் கொண்டு கரை சேர்ந்தார் ஸு யுன்.

 

அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்வதிலேயே குறியாய் இருந்ததை உணர்ந்த ஸு யுன் அவளைத் தன்னுடன் மடாலயத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

இரவு நெருங்கி விட்டது. அந்தப் பெண்ணிற்கு ஆடைகளைக் கொடுத்து பின்னர் உணவையும் கொடுக்கப் பணித்தார் ஸு யுன்.

பின்னர் அவளுக்குத் தேறுதல் வார்த்தைகள் கூறி அவள் யார் என்ற விவரத்தை அவர் கேட்டார்.

 

அவள் தன் கதையைக் கூறலானாள்.

அவள் பெயர் ஜூ. அவளுக்கு வயது 18. சங்ஷா என்ற இடத்தைச் சேர்ந்தவள். அந்த நகரில் புசான் தெருவில் மருந்து வியாபாரம் செய்து வந்த ஒரு வியாபாரியின் மகள் அவள்.

சன் என்ற டிவிஷனல் கமாண்டர் ஒரு நாள் அவளைப் பார்த்தான். உடனே அவளைத் தன் மாளிகைக்கு அழைத்தான். அங்கு அவளிடம் அவளை  மணந்து கொள்ள விருப்பப்படுவதாகக் கூறிய சன், அவளது பெற்றோரையும் அழைத்துத் தன் எண்ணத்தைக் கூறினான்.

 

 

திருமணம் முடிந்தது. பின்னர் தான் தெரிந்தது ஜுவுக்கு, அந்த கமாண்டருக்கு ஏற்கனவே மண்மாகி விட்டிருந்தது என்று. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அந்த வீட்டில் புகுந்த ஜூவை கமாண்டரின் முதல் மனைவி அடி அடி என்று அடிக்க ஆரம்பித்தாள். ஜூவைக் காப்பாற்ற பலர் முயன்றும் பலன் இல்லாமல் போய் விட்டது. பெற்றோரோ கமாண்டரின் படை பலத்திற்கு பயந்து நடுங்கினர்.

 

ஒரு நாள் விரக்தியின் விளிம்பிற்கு வந்த ஜூ தன்னுடைய உடைமைகளை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தாள். அவள்து எண்ணம் மாஸ்டர் ஸு யுன்னைச் சந்த்தித்து ஒரு பிட்சுணியாக ஆக வேண்டும் என்பது தான்.

 

 

ஆனால் காக்ஃபுட் மவுண்டன் செல்லும் வழி அவளுக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் அலைந்தாள். கமாண்டரின் படைவீரர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதில் குறியாக் இருந்ததில் வழியில் அவளது மூட்டையையும் இழ்ந்தாள்.

இனி வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த அவள் ஏரியில் குதித்து உயிரை மாய்க்கத் துணிந்தாள்.

 

 

ஸு யுன் அவள் மூட்டையில் இருந்த பொருள்களின் விவரத்தைக் கேட்டார். பின்னர் அவளிடம் அது தன்னிடம் பத்திரமாக இருக்கிறது என்று கூறி அதை அவளிடம் சேர்ப்பித்தார்.

 

பின்னர் சரணாகதி சூத்ரங்களைச் சொல்லி அதை அவளுக்கு விளக்கினார்.

மறுநாள் காலை ஜூ குடும்பத்தினரையும் சன் குடும்பத்தினரையும் ஆலயத்திற்கு வரவழைத்தார். பேச்சு வார்த்தை ஆரம்பமானது ஸு யுன் தர்ம சூத்திரங்களை அவர்களுக்கு விளக்கினார்.

 

அதைக் கேட்டவுடன் கமாண்டர் சன்னும் அவரது முதல் மனைவியும் ஸு யுன் கால்களில் பணிவாக விழுந்து வணங்கினர்.

 

பின்னர் புத்த தர்மத்தை ஸு யுன் விளக்கலானார். கமாண்டரும் அவர் முதல் மனைவியும் புத்தரின் திரு உருவச் சிலைக்கு முன்னர் விழுந்து வணங்கினர். தங்கள் செயலுக்கு  மனமார அவர்கள் வருந்தினர்.

 

 

கமாண்டரின் மனைவி ஜூவைக் கட்டித் தழுவிக் கண்ணீர் வடித்துத் தேம்பித் தேம்பி அழுதாள்.

இரு குடும்ப உறுப்பினர்களும் இந்தக் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து மனம் உருகினர்.

 

முப்பதுக்கும் மேற்பட்ட அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மூன்று நாட்கள் ஆலயத்தில் தங்கி இருந்தனர். அவர்களிடையே இருந்த மனக்கசப்பு, வெறுப்பு எல்லாம் போயே போயின.

அனைவரும் புத்த தர்மத்தில் சேர்ந்தனர்.

 

புத்தரின் அருள் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு பிரிய மனமில்லாமல் அவர்கள் அனைவரும் பின்னர் திரும்பிச் சென்றனர். புத்தரின் போதனைகளையும் எடுத்துச் செல்ல அவர்கள்  மறக்கவில்லை!

*********.