Article Written by S NAGARAJAN
Date: 5 November 2015
Post No:2301
Time uploaded in London :– 8-06 AM
(Thanks for the pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை
கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!
ச.நாகராஜன்
“வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் நீங்கள் இளமையோடு இருக்க முடியும். ஆனால் மனமுதிர்ச்சி இன்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்” –ஆக்டன் நாஷ்
திருமணமாக இருக்கும் கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் இலவச ஆலோசனை – டிப்ஸ் தர முன் வந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்குமே இளம் பெண்களின் எதிர்பார்ப்புகளும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
இளமையாக, மிக அழகாக இருக்க வேண்டும், உயரமோ அதிகமாக இருக்க வேண்டும். வருடாந்திர வருமானம் பல லகரமாக இருக்க வேண்டும், வீடு மற்றும் இதர சொத்துகள் தன் பெயரிலேயே இருக்கும் டாகுமெண்டைக் காண்பிக்க வேண்டும், முக்கியமாக லக்கேஜுகள் (மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட மூட்டைகள்) எதுவும் இருக்கக் கூடாது.. இத்யாதி, இத்யாதி நிபந்தனைகளை கன்னியர்கள் விதிக்கும் போது பெண்ணின் வீடியோ புரொஃபைலை பார்த்தால் தான் தங்களால் முடிவே எடுக்க முடியும் என்கின்றனர் இளைஞர்கள்!
எல்லா பத்திரிக்கைகளும், இணையதளங்களும், ஜோதிட மற்றும் மேட்ச்–மேகிங் நிலையங்களும் அலறுகின்றன – இந்த கண்டிஷன்களைப் பார்த்து. “எங்கள் வருட வருமானம் எவ்வளவு தெரியுமா? நாங்கள் எவ்வளவு படித்திருக்கிறோம் தெரியுமா? இப்போதே எங்கள் பெயரிலேயே த்ரீ பெட்ரூம் அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறோமே” என்று புன்னகைக்கின்றனர், இளம் கன்னியர்கள்!! இளைஞர்களும் சளைக்கவில்லை, அவர்கள் இவ்வளவு எதிர்பார்க்கும்போது நாங்களும் அவர்களுடன் சாட் செய்து தானே முடிவெடுக்க முடியும் என்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்களை உளவியலாளர் ஜெஃப்ரி ஜென்ஸன் ஆர்னெட் (Jeffrey Jensen Arnett) அழகாகத் தெரிவிக்கிறார்:” ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பெண்கள் வேலை பார்க்க அவ்வளவாகச் செல்லவில்லை; பெரும் பணமும் வருமானமாகச் சம்பாதிக்கவில்லை; இன்றைய நிலையோ மாறுபட்ட ஒன்று. பொருளாதார மற்றும் உத்யோக அந்தஸ்து ரீதியாகவும் இளம் பெண்கள் இன்று மிக உயர்நிலையை அடைந்து விட்டனர். ஆகவே அவர்கள் மனைவி, தாய் என்ற நிலைகளோடு தனக்கென ஒரு அடையாளம் இருப்பதை விரும்புகின்றனர். இந்த அடையாளம் தேடும் முயற்சியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன” என்கிறார் அவர்!
Picture of Jeffrey Jensen Arnett
இவர்கள் இப்படி எதிர்பார்த்து தங்களின் திருமணத்தைத் தள்ளிக் கொண்டே போவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது விஞ்ஞானிகள் களத்தில் இறங்கி ஆய்வு நடத்தி முடிவுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
தன்னுடையவனாக ஒருவனை ஏற்றுக் கொள்வதற்கு மிஸ்டர் பெர்ஃபெக்டை (Mr Perfect) எதிர்பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வின் முடிவு ஒன்று வலியுறுத்துகிறது. மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி பரிணாம தத்துவத்தின் படியும் கூட இது முடியாத ஒன்று என்பது தெரிய வருகிறது!
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் ஒரு கணினி மாடலை உருவாக்கினர். இந்த மாடல் அமைப்பு ஆயிரம் தலைமுறைகள் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. அபாயமுள்ள சூதாட்டம் போன்றவற்றில் அதிக ஆதாயம் தரும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இந்த அமைப்பை தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலையைச் செய்யும்படி பணித்தனர்!
ஆரம்பகால மனிதர்களை இந்த கணினி மூலமாகத் தங்களின் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கும்படி செய்து பார்த்து அவர்கள் மிக மிக அருமையான துணைவன் அல்லது துணைவியைத் தேர்ந்தெடுத்தனரா என்பதே கேள்வி!
ஆய்வை நடத்திய, மைக்ரோபயாலஜிஸ்டான கிறிஸ் அடாமி ((Chris Adami), “குறைந்த எதிர்பார்ப்புள்ள பார்ட்னரை அவர்கள் மணந்து கொள்ளலாம் அல்லது காத்திருந்து ‘பெர்ஃபெக்டான பார்ட்னரைத்” தேர்ந்தெடுக்கலாம் என்ற படி மாடல் அமைப்பு உருவாக்கப்பட்டது. மிஸ்டர் அல்லது மிஸ் பெர்ஃபெக்டை
விரும்பியோருக்கு அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே முடியவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவருகிறது” என்கிறார்.
வாழ்க்கையில் ஒரே ஒரு முறை எடுக்கும் முக்கிய முடிவு தனது கணவரை அல்லது மனைவியைத் தேர்ந்தெடுப்பது. இதில் எந்த சூழ்நிலைகள் அவர்களின் முடிவைப் பாதிக்கிறது என்பதையும் பார்த்து விட்டோம் என்கிறார் அடாமி.
ஒரு ஆணோ, பெண்ணோ எந்த சூழலில் அவர்கள் வளர்க்கப்பட்டார்கள் என்பது முடிவை மேற்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறதாம்! 150 பேருக்கு மேல் உள்ள சமுகச் சூழலில் வளர்க்கப்பட்டோர் உடனடி முடிவை மேற்கொள்கின்றனர். மிகச் சிறிய குழுவினருடன் இருப்பவர்கள் மிக மிக அதிக எதிர்பார்ப்புகளைக் கொள்கின்றனர். இவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழியில்லாமல் போய்விடுகிறது.
ஆகவே இந்த ஆய்வின் முடிவின் படி இளம் பெண்கள் மிஸ்டர் ஓகேயை உடனடியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் அவர்களின் குழந்தை பாக்கியம் உள்ளிட அம்சங்கள் சிறந்து விளங்கும். மிஸ்டர் பெர்ஃபெக்ட் தான் வேண்டுமெனில் அப்படிப்பட்டவர் கிடைக்க வாய்ப்பு மிகவும் அரிதே! இதே முடிவு
இளைஞர்களுக்கும் பொருந்தும். அவர்களும் மிஸ் பெர்பெக்டை எதிர்பார்க்காமல் மிஸ் ஓகேக்கு ஓகே சொல்ல வேண்டும் என்கிறது ஆய்வின் முடிவு.
இந்த சமயத்தில் பழைய கால ஜோக் ஒன்றை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நினைத்துப் பார்த்துச் சற்று சிந்திக்கலாம்.
ஒரு இளைஞன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். ஏன் என்று அனைவரும் கேட்ட போது, ‘தான் மிஸ் பெர்ஃபெக்டை மட்டுமே எதிர்பார்ப்பதாகக்’ கூறினான்.
ஒரு நாள், அவன் சந்தோஷத்தால் துள்ளிக் குதிப்பதைக் கண்ட அவனது நண்பர்கள் சந்தோஷத்திற்கான காரணத்தைக் கேட்டனர்.
“மிஸ் பெர்ஃபெக்டைக் கண்டு விட்டேன்!” என்றான் அவன்.
மறுநாள் அவன் மிகவும் சோகமாக இருப்பதைக் கண்ட அவனது நண்பர்கள், அவனிடம்,”என்ன, இன்னுமா மிஸ் பெர்ஃபெக்டிடம் பேசவில்லை!” என்று கேட்டனர். அதற்கு அவன் சொன்னான்:”நேற்றே பார்த்துப் பேசி விட்டேன். ஆனால் அவள் மிஸ்டர் பெர்ஃபெக்டை எதிர்பார்க்கிறாளாம்!”
இந்த ஜோக் இன்று நடைமுறை ஆகி விடக்கூடாது!
உரிய இளம் வயதில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்றன அனைத்து அற நூல்களும் !இதையே இன்று அறிவியலும் வற்புறுத்துகிறது!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
சர் ஐஸக் நியூட்டன் தன் ஆராய்ச்சியில் மூழ்கி விட்டால் அவருக்கு வெளி உலகமோ அல்லது தன்னைப் பற்றிய நினைவோ சிறிதும் இருக்காது. இதை விளக்கும் சம்பவங்களுள் ஒன்று இது.
ஒருநாள் டாக்டர் ஸ்டக்லி (Doctor Stukely) என்ற நண்பர் ஒருவர் ஐஸக் நியூட்டனைப் பார்க்க முன்கூட்டியே அவரிடம் நேரம் நிர்ணயித்து விட்டு குறித்த நேரத்தில் அவரைச் சந்திக்க வந்தார். நியூட்டனின் வேலையாள் அவர் ஆராய்ச்சிகூடத்தில் இருப்பதாகவும் தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அது இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிடும் நேரமானதால் அந்த வேலைக்காரர் ஒரு சிக்கனைத் தயார் செய்து அவர் டேபிளின் மீது வைத்து அதை ஒரு மூடியால் மூடி வைத்தார். ஒரு மணி நேரம் ஆனது. நியூட்டன் வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டாக்டர் ஸ்டக்லி சிக்கனை எடுத்துச் சாப்பிட்டார். காலி பாத்திரத்தின் மீது மூடியைக் கவிழ்த்து வைத்தார். வேலையாளிடம் இன்னொரு சிக்கனைத் தயார் செய்யுமாறும் கூறி விட்டார். அது தயாராவதற்குள் நியூட்டன் டைனிங் டேபிளுக்கு வந்து விட்டார்.
ஸ்டக்லியை நோக்கி, “ தாமதம் ஆகி விட்டது. மன்னியுங்கள். களைப்பாக இருக்கிறது. ஒரே நிமிடத்தில் உணவை முடித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லியவாறே மூடியைத் திறந்தார். தட்டில் ஒன்றுமே இல்லை. ஸ்டக்லியைப் பார்த்த நியூட்டன், “நான் எப்படிப்பட்ட ஆள் பாருங்கள்! சாப்பிட்டு விட்டேன் என்பதையே மறந்துபோய் மறுபடியும் சாப்பிடுவதற்கு உட்கார்ந்து விட்டேன்!” என்று புன்னகை செய்தவாறே கூறினார்.
நடந்ததை ஸ்டக்லி சொன்னது தனிக் கதை!
ஆராய்ச்சியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் நியூட்டன்!
*******





You must be logged in to post a comment.