எது வேண்டும்? – 1 (Post No.6136)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com


Date: 1 March 2019


GMT Time uploaded in London – 8-34 am


Post No. 6136

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

எது வேண்டும்? – 1

ச.நாகராஜன்

அருளாளர்களும் மகான்களும், கவிஞர்களும், அறிஞர்களும் எதை எதை வேண்டும் என்று கூறியுள்ளார்கள்?

சரி, பார்ப்போமே என்று உள்ளே இறங்கினால் சுரங்கம் போல வேண்டும் என்பது பற்றிய பட்டியல் வருகிறது, வருகிறது, வந்து கொண்டே இருக்கிறது.

சில ‘வேண்டும்’-களை இங்கு பார்ப்போம்.

முதலில் நினைவுக்கு வருபவர் வள்ளலார். அவரது ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்பது மனதைக் கவரும், மனதிற்கு இதமளிக்கும், உத்வேகமூட்டும், அறிவுரை ஊட்டும் ஒரு பாடல்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்றஉத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மைபேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனைமறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்றவாழ்வுனான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே

எத்தனை அற்புதமான பாடல். மிகத் தெளிவாக ஒரு மனிதனுக்கு வேண்டியவற்றைப் பட்டியலிட்டுத் தந்து விடுகிறார் வள்ளலார் பெருமான்.

இந்தப் பாடலை சாவித்திரி பாடும்படியான காட்சி இடம் பெறும் படம் கொஞ்சும் சலங்கை. சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் இது. தொடர்ந்து அதே காட்சியில் ஜெமினிகணேசன் நாகஸ்வரம் வாசிக்கிறார். பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசை நம்மை மயக்கும்.

தொடுப்பு:

அடுத்து வள்ளலாரின் இன்னொரு பாடல்:

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

சரி, பாரதியார் என்ன வேண்டுகிறார் என்று பார்த்தால் அது ஒரு பெரிய பட்டியலாக நீளுகிறது.

காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் பாடல் இடம் பெறும் படம் அந்தமான் கைதி.

2.33 நிமிடம் நீடிக்கும் பாடலை எம்.ஜி.ஆரும் கதாநாயகியும் பாடும் காட்சி இடம் பெறுகிறது.1951ஆம் ஆண்டு வெளியான அந்தமான் கைதி படத்தில் இடம் பெறுகிறது. பாடலைப் பாடிய்வர்கள் சிதம்பரம் ஜெயராமனும் எம் எல் வசந்தகுமாரியும்.

பாரதியார் வேண்டுவன:
காணி நிலம் வேண்டும்-பராசக்தி 
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்


பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.


பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

அடுத்து பாரதியாரின் இன்னொரு ‘வேண்டும்’ பாடல்:

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!

அடுத்து அவரது இன்னொரு ‘வேண்டும்’ பாடல் இது:

[பல்லவி]

வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா;

[சரணங்கள்]

தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்

சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்

ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ

நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம்

 அனைத்தும் உதவ    (வேண்டுமடி)

விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,

விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே

பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர

வருத்த மழிய வறுமை யொழிய வழுதும் வண்மை பொழிய   (வேண்டுமடி)

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்

பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,

நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள

வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகைதுள்ள. (வேண்டுமடி)

இன்னும் பல பாடல்களில் அவரது வேண்டுதல் பட்டியல் நீளுகிறது.

மணிவாசகரோ

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே.

என்கிறார்.

அப்பர் பிரான் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்று சொல்லி மகிழ்கிறார். பாடல் இதோ:

குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடன் எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.

இந்த வேண்டும் பட்டியல் மிக நீண்ட ஒன்றாக இருப்பதால் இன்னும் சில ‘வேண்டும்’களையும் பார்ப்போம்!

****