
Ice Floes on the Southern Ocean
WRITTEN BY S NAGARAJAN
Date: 20 March 2016
Post No. 2648
Time uploaded in London :– 6-29 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா 4-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை
உருகும் பனிப்பாறைகள்; உயரும் உஷ்ணநிலை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
ச.நாகராஜன்

“பூமி வெப்பமயமாதல் என்பது ஏதோ ஒரு கணிப்பு அல்ல; அது இப்போது நடக்கின்ற ஒரு உண்மை நிகழ்வு” ஜேம்ஸ் ஹான்ஸன்
பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஸியஸ் உய்ரந்து விட்டதாக பிரிட்டனின் விஞ்ஞானிகள் கவலையுடன் எச்சரித்துள்ளனர்..பூமியில் நான்கு டிகிரி செல்ஸியஸ் உயர்ந்தால் என்னென்ன நடக்கும் என்ற விஞ்ஞானிகளின் அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து நவம்பர் 2015இல் முடிந்த இவர்களின் ஆய்வு முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. விளைவுகள் என்ன? பூமியில் உள்ள அனைத்துக் கடல்களும் பொங்கி எழும்!66 கோடி மக்கள் வாழ்கின்ற பரப்பை நீரினுள் மூழ்கடித்து பல கோடி பேரை விழுங்கும்.
இரண்டே இரண்டு டிகிரி உஷ்ணநிலை உயர்வு கூட 28 கோடி பேருக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இது ஒரு புறம் இருக்க, பூமியின் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்தி வருகின்றன. இதனால் நமக்கென்ன என்று சும்மா இருக்க முடியாது.இந்த உயர்வு பூமியின் சுழற்சியைச் சற்று மெதுவாக ஆக்கி இருக்கிறது. பூமி சற்று மெதுவாகச் சுழன்றால் பூமியில் பகல் நேரம் சற்று அதிகமாக ஆகும்.
விஞ்ஞானிகள் கடந்த கால சரித்திரத்தில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நிலைகளைச் சரியாகக் கணித்துக் கூற முடியும்.பூமியின் உட்பகுதியையும் அவர்கள் கவனித்து வருகின்றனர்.
இயற்பியல் பேராசிரியரான மாத்யூ டம்பெர்ரி (Mathieu Dumberry),” கடந்த நூற்றாண்டில் கடல் மட்ட மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள, பூமியின் உட்பகுதியை நன்கு ஆராய வேண்டியிருக்கிறது.” என்கிறார்.

பனிப்பாறைகள் உருகுவதால் துருவத்தின் அருகே வசிக்கும் மக்கள் கூட்ட்ம் இடம் பெயர்ந்து பூமத்திய ரேகைப் பகுதியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இது மட்டுமின்றி சந்திரனின் ஆகர்ஷணமும் பூமியின் சுழற்சியில் தாக்கம் ஏற்படுத்தி அதை மெதுவாகச் சுழல வைக்கிறது. இந்தக் காரணங்களினால் பூமியின் பகல் நேரம் சற்று அதிகரித்துள்ளது. எவ்வளவு என்று கேட்டு தெரிந்து கொண்டால் ‘பூ’ இதற்கா இவ்வள்வு ஆர்ப்பாட்டம் என்று சாமானிய மனிதன் விமரிக்கக் கூடும்.
பகல் நேரத்தின் அதிகரிப்பு அடுத்த நூற்றாண்டில் 1.7மில்லி செகண்டாக இருக்கும்.
இந்த உஷ்ண நிலை உயர்வும் பனிப்பாறை உருகுதலும் ஏன் ஏற்படுகின்றன?
நாம் அன்றாடம் உபயோகிக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் கக்கும் நச்சுப் புகை தான் காரணம். இவை சுற்றுப்புறத்தை மாசு படுத்தி நாம் சுவாசிக்கும் காற்றையும் அசுத்தமாக்குகின்றன. இதனால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள் பல! சுவாசக் கோளாறுகளில் ஆரம்பித்து மாரடைப்பு வரை அனைத்து வியாதிகளையும் இன்றைய மோசமான சுற்றுப்புறச் சூழ்நிலை ஏறபடுத்துகிறது.
நல்ல காற்றை கிராமங்களில் மட்டுமே சிறிது சுவாசிக்க முடிகிறது.

பழைய காலங்களில், பாட்டில் வாட்டர், கேன் வாட்டர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆனால் இன்றோ அவை அன்றாட நடைமுறை ஆகி விட்டது!
அடுத்து வரப்போவது பாட்டில் காற்று அல்லது கேன் காற்று! நல்ல காற்றை நகரங்களில் சுவாசிக்க முடியவில்லை என்பதால் நீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது போல காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப் போகிறார்கள்.
சிரிப்புக்கான செய்தி அல்ல இது. உண்மையிலேயே நடைமுறைக்கு வந்து விட்ட உண்மை இது.
சீனாவில் சுற்றுப்புறச் சூழல் மிக அதிக அளவில் கெட்டு விட்டது. லட்சக் கணக்கான வாகனங்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் காற்று மாசின் அளவு எல்லை மீறிப் போய்விட்டது.

இதைப் பார்த்த கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ‘சுத்தக் காற்றை’ பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்துள்ளது.மலைக் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 28 டாலர்கள் தான் – அதாவது சுமார் 1680 ரூபாய்! கனடிய சுத்தக் காற்று இடங்களான பான்ஃப் மற்றும் லேக் லூஸியிலிருந்து பிடிக்கப்படும் காற்று சீனாவில் இப்போது அமோக விற்பனையைக் கண்டுள்ளது. ‘ப்ரீமியம் ஆக்ஸிஜன்’ – அதாவது முதல் தர ஆக்ஸிஜன் என்ற பெயரில் கிடைக்கப் பெறும் இதை 1680 ரூபாய் கொடுத்து வாங்க சீன மக்கள் தயார். இந்த நிறுவனத்தின் பெயர் வைடாலிடி ஏர் (Vitality Air) இந்த நிறுவனத்தின் சீன பிரதிநிதியான ஹாரிஸன் வேங் என்பவர் இண்டர்நெட்டில் இது விற்பனைக்கு வந்த செய்தி தெரிவிக்கப்பட்ட உடனேயே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.
நமது நாட்டில் தலைநகர் டில்லியின் காற்று நீதிபதிகளையே கவலையுறச் செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூற வைத்திருக்கிறது. அடுத்த கவலைக்குரிய நகரம் சென்னை! இங்கும் பாட்டில் காற்று வர நீண்ட காலம் ஆகாது.
இதைத் தவிர்க்க வாகனப் பயன்பாட்டை அனைத்து மக்களும் கட்டுப்படுத்த வேண்டும். இது ஒன்றே வழி. நடக்க முடிந்த இடங்களில் நடக்கலாம். ஒவ்வொருவரும் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்வதைத் தவிர்த்து நிறைய பேர் அமரக்கூடிய பஸ்களில் பயணிக்கலாம். நவீன மாசைக் கட்டுப்படுத்தும் எஞ்சின் உள்ள வாகனங்களையே வாங்கலாம். அரசின் வற்புறுத்தலோ அல்லது சட்டமோ இல்லாமல் தாமாகவே வாகனங்களின் புகைக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை அவ்வப்பொழுது மேற்கொள்ளலாம். மரங்களை வளர்ப்பதன் மூலம் உயிர்க்காற்றான ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்க வழி வகுக்கலாம்.

மக்கள் மனம் வைத்தால் நம் சந்ததியினருக்கு சுத்தக் காற்றையும் சுத்த நீரையும் நிச்சயமாக வழங்க முடியும்!
விஞ்ஞானிகள் எச்சரித்து விட்டார்கள்; விழிக்க வேண்டியது மக்கள் கடமை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
1893ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. கப்பல் ஒன்றில் ஸ்வாமி விவேகானந்தருடன் சக பயணியாக பிரபல தொழிலதிபரான ஜாம்ஷெட்ஜி டாட்டா ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். கப்பலில் பயணித்ததால் பலமுறை ஸ்வாமிஜியுடன் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.இந்தியாவை ஆன்மீக உணர்வினால் தட்டி எழுப்ப விழைந்த வீரத்துறவி விஞ்ஞானத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததை எண்ணி அவர் அதிசயித்தார். ஸ்வாமிஜியின் திட்டங்களை எல்லாம் கேட்ட அவருக்கு பெரும் உத்வேகம் ஏற்பட்டது.இந்தியாவில் முதல் எஃகு உருக்காலையை அவர் ஆரம்பித்தார். ஆரம்பித்தவுடன் ஸ்வாமிஜிக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார் இப்படி: “ ஐந்து வருடங்களுக்கு முன்னர் உங்களுடன் சக பயணியாக நான் பயணித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் பேசிக்கொண்டிருந்த படி இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நான் ஆரம்பித்துள்ளதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.”

ஸ்வாமிஜியால் உத்வேகம் ஊட்டப்பட்ட டாட்டா அவர் தன்னை வழி நடத்த வேண்டும் என்று விரும்பினார். அவரை தனது ஆய்வு நிறுவனத்திற்கு முதல் டைரக்டராக ஆக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் இருந்தது.
ஆனால் ஸ்வாமிஜி பல துறையினரையும் தட்டி எழுப்பி ஊக்குவித்து இந்தியாவின் மொத்த எழுச்சியில் கவனம் செலுத்தியதால் தனிப் பொறுப்புகளை ஏற்கவில்லை.
ஒரு சிறிய கப்பல் சந்திப்பு இந்திய ஆலை வரலாற்றிலும் விஞ்ஞான ஆய்வுக் கூட வரலாற்றிலும் ஒரு பெரிய விதையை விதைத்தது அதிசயம் தானே!
**************

You must be logged in to post a comment.