
Written by London Swaminathan
Date: 19 November 2016
Time uploaded in London: 7-23 am
Post No.3369
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
சம்பாதி யார்?
கழுகுகளின் அரசன். ஜடாயுவின் அண்ணன்.
கம்பராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு அரிய செய்தி வருகிறது. எப்போது?
ராவணன் வீசிய வாளால் இறக்கைகள் அறுந்து ஜடாயு என்னும் கழுகுகளின் தலைவன் இறக்கிறான். இது கேட்டு ஜடாயுவின் அண்ணனான சம்பாதி அங்கே வருகிறான். அருகேயிருந்த வானரக் கூட்டம் பயந்து ஓடி விடுகிறது. ஆனால் மதியூகியான அனுமன் மட்டும் அங்கேயிருந்து அவனை யார் என வினவ அவன் ஜடாயுவின் தமையன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பின்னர் எல்லா வானரங்களும் வந்து குழுமின.

எல்லீரும் இராம நாமம் சொல்லீர்!
சம்பாதி அங்கே குழுமி இருந்த வானர வீரர்களை நோக்கி நீங்கள் எல்லோரும் இராம நாமம் சொல்லுங்கள் அவ்வாறு சொன்னால் என் சிறகுகள் வளரும் அந்த ராமனின் அருளும் எனக்குக் கிட்டும் என்று சொல்லுகிறான்:
எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர் சொல்ல எனக்கோர் சோர்விலா
நல்லீரப் பயன் நண்ணும் நல்ல சொல்
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர்
அதுகேட்ட வானர வீரர்களுக்கு ஒரு சந்தேகம். ராம நாமம் சொன்னால் இறக்கை வளருமா? — எங்கே நாம் ஆராய்ச்சி செய்து பார்ப்போம். என்று எண்ணி இராமனின் திரு நாமத்தைச் சொல்லத் துவங்கின.. அப்போது சம்பாதியின் இறக்கைகள் வானளாவ வளர்ந்தன. வலிமையாக பெரிதாக வளர்ந்தன.
என்றான் அன்னது காண்டும் யாம் எனா
நின்றார் நின்றுழி நீல மேனியான்
நன்றாம் நாமம் நவின்று நல்கினார்
வன்றோளான் சிறை வானம் தோயவே
(சிறை- இறக்கை, சிறகு)
எல்லா குரங்குகளுக்கும் ஒரே வியப்பு. சம்பாதி அங்கே வந்தபோது அவனது இறக்கைகள் கருகித் தேய்ந்திருந்தன. இப்போது அவை பளபளவென மின்னத்துவங்கின என்பான் கம்பன்:-
இந்தப் பாட்டின் மூலம் கம்பன், நமக்கு வேறு இரண்டு செய்திகளையும் அளிக்கிறான்:-

முதல் செய்தி:-
பிற்காலத்தில் இந்த வானர சேனைதான் இராமனுக்காக இலங்கை வரை அணைகட்டித் தரப்போகின்றன. இப்போதே ராம நாமத்தின் மகிமையை அவைகளின் மனதில் வேரூன்ற வைக்கிறான் சம்பாதி மூலமாக. பிற்காலத்தில் அவை ஒவ்வொரு பாறை பீதும் இராம, இராம என்று எழுதியவுடன் அவை மிதக்கத்துவங்கி பாலம் எழுந்த்ததை நாம் படிக்கிறோம்.
இரண்டாவது செய்தி மனிதர்களுக்கானது.
மானிடர்களே! இராம நாமத்தின் மகிமையை நான் பால காண்டத்திலேயே சொல்லி இருக்கிறேன். ஒருவேளை, மறந்து போயிருந்தால் இராம நாம மகிமையை இப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் என்கிறான்.
பால காண்டத்தில் கம்பன் என்ன சொன்னான் நினைவு இருக்கிறதா?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.
இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜனன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.
—SUBHAM—