
Written by London Swaminathan
Date: 17 September 2018
Time uploaded in London – 13-37 (British Summer Time)
Post No. 5440
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஒரு சாமியாரிடம் ஊரிலுள்ள பிரபல டாக்டர் வந்தார். வழக்கமான நமஸ்காரங்கள், பிரஸாத விநியோகம் முடிந்தது. பெரிய டாக்டர் என்பதால் அவர் விருப்பப்படி ஒரு இன்டெர்வியூ(INTERVIEW) ஏற்பாடாகி இருந்தது.
இதோ பேட்டி
டாக்டர்:
சுவமிகளே; நமஸ்காரம்; நாங்கள் டாக்டர்கள்; மிகவும் ‘பிஸி’யான ஆட்கள்; ஆகையினால் ஒரு கேள்வி. நிறைய இணைய தளங்கள், ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’பிலும் ‘யூ ட்யூபி’லும் நிறைய மந்திரங்கள் வருகின்றன. அவற்றை நாங்களும் கற்கலாமா?
சாமியார்:–
கூடவே கூடாது
(டாக்டர் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம்)
எல்லா மந்திரங்களையும் எல்லோரும் கற்கலாமா?
கூடவே கூடாது
(டாக்டருக்கு மேலும் ஏமாற்றம்!)
இந்த சாமியாரிடமிருந்து ஒரு (YES) யெஸ் பதிலாவாது வாங்கி விடலாம் என்று கருதி டாக்டர் கேட்டார்:
அது சரி, ஏற்கனவே ஒருவர் முறையாகக் கற்ற மந்திரங்களையாவது அவர், ஏனையோருக்குச் சொல்லித்தரலாமா?
‘கட்டாயம் கூடாது’
டாக்டருக்குப் பெருத்த ஏமாற்றம்.
என்ன சுவாமிகளே, எதுவுமே கூடாது என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் எல்லாம் மக்களுக்கு நல்ல விஷயங்களைப் பரப்பவே கூடாது என்று முடிவு செய்து விட்டீர்களா?
சரி, நாளைக்கு நானும் உங்களைப் போல ஒரு காவித் துண்டைப் போர்த்திக்கொண்டு மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் செய்யலாமா?
சாமியார் பதில்-
கூடாது (அழுத்தம் திருத்தமாக)

சாமியார் ஒரு அருமையான புன் சிரிப்புடன் இடைமறித்தார்,
‘சரி, நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்’:
டாக்டருக்கு மஹா சந்தோஷம். அப்பாடா! இப்போதுதான் இந்த மனிதர் நம்மையும் ஒரு பொருட்டாக நினைத்திருக்கிறார் என்ற குதூகலத்துடன் காதுகளைத் தீட்டினார்; வெகு அருகில் நீட்டினார்.
சாமியார்:–
நான் ‘கூகிள்’ (GOOGLE) செய்து பார்த்தேன்; அதை எல்லாம் படித்துவிட்டு, நான் எங்கள் மடத்திலுள்ள நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கலாமா?
டாக்டர் அதிர்ச்சியுடன் பதில் தந்தார்:
‘ஐயய்யோ! கூடவே கூடாது.
சுவாமிஜி, இது ஆபத்தானது; அது மட்டுமல்ல சட்ட விரோதமானது’–என்றார் டாக்டர்.
அட! நீங்கள் சொன்ன சமூக ஊடகங்களில் வரும் எல்லாவற்றையும் படித்துவிட்டு நான் எங்கள் மடத்திலுள்ள நோய்வாய்ப்பட்டோருக்கு மருந்து தரலாமா?
‘மருத்துவப் படிப்பு படித்த ஒருவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை வேண்டுமானால் நீங்கள் வாங்கி, டாக்டர் சொன்னபடி சாப்பிடச் செய்யலாம். வேறு எதுவும் செய்யும் தகுதி யாருக்கும் இல்லை. நீங்கள் சொல்லும்படி செய்ய முடியுமானால் தோழான், துருத்தி எல்லாம் டாக்டர் ஆய் விடலாமே!’–என்றார் டாக்டர்.
சாமியார் விடவில்லை. அடுத்த கொக்கி போட்டார்.
ஏன்? சொல்லுங்கள் பார்ப்போம்.
டாக்டர் அதி பயங்கரப் பெருமிதத்துடன் பேசலானார்;
‘நாங்கள் எல்லோரும் முறையாக ஐந்து ஆண்டு மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும்; அதில் ‘பாஸ்’ ஆக வேண்டும். பின்னர் ‘ஹவுஸ் சர்ஜன்கள் முதலிய பயிற்சிகளையும் செய்கிறோம். அது மட்டுமல்ல; முறையான ஸீனியர் டாக்டர்களின் கண்காணிப்பில் வேலை செய்வோம்; பெரிய தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது அவர்கள் பொறுப்பு.

இவ்வளவு தெரிந்த பின்னரும் ஒவ்வொரு நோயாளியும் வெவ்வேறு உடல்வாகு கொண்டவர்கள்;
ஒரு நோயாளியின் வயது, உயரம், ஆணா, பெண்ணா, பெண்ணாக இருந்தால் அவர் கர்ப்பவதியா, மற்றும் நோயாளிக்கு பென்ஸிலின் முதலிய மருந்து அலர்ஜி ஏதேனும் உண்டா, அந்தக் குடும்பத்தில் ஏதேனும் பரம்பரை நோய் உண்டா? அவருடைய தற்போதைய நோயின் ஸிம்ப்டம் (SYMPTOMS) என்ன, அவர் தற்போது வேறு என்ன மருத்து சாப்பிடுகிறார். இது போன்ற ஏராளமான விஷயங்களைக் கணக்கிற் கொண்டு ஒரு டாக்டர் சிகிச்சை தருகிறார். இதெல்லாம் சுவாமிகளுக்குத் தெரியாதா? இப்படி அசட்டுத் தனமாக கேள்விகளைக் கேட்கிறீர்களே! என்று டாக்டர் ஒரு நீண்ட லெக்சர் (LECTURE) கொடுத்தார்.
இப்போது சாமியாருக்கு மஹா மகிழ்ச்சி; ‘மெகா’ மகிழ்ச்சி.
தான் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் டாக்டரே கக்கி விட்டதால் ஒரே குதூகலம்.
‘அன்பரே! நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் ஒரு சந்யாசிக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதன் டாக்டர் போல நடித்தாலும், அவர் போல உடை அணிந்தாலும், டாக்டர் ஆகிவிட முடியாது. நீங்கள் சொன்னபடியே ஒருவனின் குடும்ப வரலாறு, நோயாளி வரலாறு அறிந்து, தகுதி பெற்ற ஒருவர் மருந்து கொடுப்பது போல நாங்களும் ஆளின் பக்குவத்தைப் பார்த்து மந்திரம் தருகிறோம்.
மருந்து டப்பாக்களிலும் பாட்டில்களிலும் ஒரு சீட்டில் நிறைய விசயங்கள் அச்சடிக்கப்பட்டது போலவே மந்திரங்களுக்கும் கட்டு திட்டங்கள் உண்டு; இரண்டு பேருக்கு சர்க்கரை வியாதியோ இருதய நோயோ இருந்தால் இருவருக்கும் நீங்கள் ஒரே மருந்தை, ஒரே அளவைக் கொடுப்பதில்லை; இது போலவே மந்திரங்களும் ஆளுக்கும் தேவைக்கும் ஏற்ப மாறுபடும்
சில மருந்துகளுக்கு பத்தியம் சொல்லுவது போல சில மந்திரங்களுக்கு ஆசார அனுஷ்டானங்கள் உண்டு என்று சொல்லி முடித்தார்.
இதைக் கேட்ட டாக்டருக்கு புத்தருக்குப் போதி மரத்து அடியில் கிடைத்தது போல ஞானோதயம் எற்பட்டது. ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு நைஸாக நழுவினார்.
–சுபம்–