
Written by S NAGARAJAN
Date: 6 August 2018
Time uploaded in London – 6-09 AM (British Summer Time)
Post No. 5292
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சூரி நாகம்மா!
ச.நாகராஜன்
ஒரு பெரிய அவதாரம் நிகழும் போது அது ஆற்ற வேண்டிய பணிக்காக கூடவே சீடர்களும் பல்வேறு விதங்களில் பிறக்கின்றனர்.
மஹரிஷி ரமணர் திருவண்ணாமலையில் இருந்த போது அவரது வாழ்க்கை நிகழ்வுகளையும் உபதேசங்களையும் பல பக்தர்கள் பதிவு செய்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் சூரி நாகம்மா.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கு அருகில் இருக்கும் கொலனுகொண்டா என்ற கிராமத்தில் 1902 ஆகஸ்ட் மாதம் பிறந்தார். நான்கு வயதில் அவரது தகப்பனாரும் பத்து வயதில் அவரது தாயாரும் காலமாகி விட்டார்கள். அந்தக் கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் கல்யாணம் நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரே வருடத்தில் அவர் கணவனை இழந்தார்.
வாழ்நாள் முழுவ்தும் விதவையாக வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். அதை இறை நினைப்பில் ஈடுபடுத்தி தன்னை அதில் அர்ப்பணித்து வாழ்வை சிறக்க வைத்துக் கொண்டார் அவர்.
தனக்கான குருவாக ரமணரை வரித்தார். ஆசிரமத்திலேயே வசிக்க ஆரம்பித்தார். அவரது அண்ணன் சாஸ்திரி அவரை ஆசிரமத்தில் நிகழும் நிகழ்வுகளையும் மஹரிஷியின் உபதேசங்களையும் எழுதுமாறு கூறினார்.
இயல்பாகவே தெலுங்கில் கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால் ஆசிரம நிகழ்வுகளை எழுதலாமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அந்த நிகழ்வுகளைத் தனக்குக் கடிதமாக எழுதி அனுப்பலாமே என்ற சிறிய சகோதரரின் யோசனை அவருக்குப் பிடிக்கவே அவர் கடிதங்களை எழுதலானார்.
இன்று நமக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கும் ‘லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாச்ரமம்’ இப்படிப் பிறந்தது தான்!
சூரி நாகம்மா ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்னர் முனகால வெங்கடராமய்யா ஆங்கிலத்தில் ஆசிரமத்தில் நடப்பனவற்றை டைரியாக எழுதத் தொடங்கினார். சில காலம் எழுதிய பின்னர் டைரி நின்று விட்டது.
இன்னொரு அணுக்க பக்தரான தேவராஜ முதலியாரும் ஆசிரம நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
இன்று நமக்கு ரமண உபதேசமாக கிடைப்பவை இவர்களது அரும் பதிவுகளினால் தான்.
1945ஆம் வருடம் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தனது கடிதம் எழுதும் பணியை சூரி நாகம்மா தொடங்கினார்.
எந்த நல்ல காரியமும் விக்கினம் இல்லாமல் முன்னேறாது என்பது உலக நியதி போலும்!

ஆசிரமத்திலும் கூட பொறாமை பிடித்தவர்கள் இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றது.
ஆசிரமம் அமைந்தவுடன் அதன் நிர்வாகப் பொறுப்பை சர்வாதிகாரியாக ஏற்றார் ரமண மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரர். நிரஞ்ஜனானந்த ஸ்வாமி என்ற பெயருடன் அவர் நிர்வாகத்தை நடத்தி வந்தார். சின்ன ஸ்வாமிகள் என்று அவரை அனைவரும் அழைப்பது வழக்கம்.
ஒரு நாள் அவர் சூரி நாகம்மாவை அழைத்து . “ இனி இத்துடன் நிறுத்து’ என்றார். அப்போது அவரது கடிதங்கள் புத்தகமாக அச்சிடப்பட்டு வந்ததை ரமணரின் முன்னால் படித்து வர ஏராளமான பக்தர்கள் அதைக் கேட்டு மகிழ்ந்து வந்தனர்.
நாகம்மா படிப்பதை நிறுத்தினார். ஏன் என்று மஹரிஷி கேட்க சின்ன ஸ்வாமி கூடாது என்று சொல்லி விட்டார் என்றார் அவர்.
அப்படியா என்ற அவர் அருகிலிருந்த ராஜகோபாலய்யங்கார் என்பவரைப் பார்த்து, “நாம் படிக்கச் சொல்லுவது.அவர் கூடாதென்கிறது. இதெல்லாம் நன்றாயிருக்கு. இனி நாம் யாரையும் படிக்கச் சொல்லக் கூடாது போல இருக்கிறது! என்றார்.
இதை ராஜகோபாலய்யங்கார் அலுவலகத்தில் சொல்ல, படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எழுதுவதைத் தான் நிறுத்தச் சொன்னேன்” என்றார் சின்ன ஸ்வாமி.
மறுபடியும் படிக்கத் தொடங்கிய நாகம்மா மூன்று நாட்களில் கடிதங்களைப் படித்து முடித்தார்.
சின்ன ஸ்வாமியின் சொல்படி தனது கடிதங்களை ஆசிரமத்தின் வசம் ஒப்படைத்தார்.
சில நாட்கள் கடிதங்கள் எழுதுவதை நிறுத்திய அவர் பின்னர் மீண்டும் எழுதத் தொடங்கினார்.
அவை பின்னால் ரமணாசிரமக் கடிதங்கள் என்ற பெயரில் ஆசிரமத்திலிருந்தே அச்சிடப்பட்டு வெளி வந்தன.
கடிதங்கள் படிப்பதற்குச் சுவையாக இருப்பதுடன் ஆசிரம நிகழ்வுகளையும் பகவானின் பல உபதேசங்களையும் தருவதாக அமைந்துள்ளன.
இன்று ரமணரைப் பற்றி அதன் மூலம் அறிந்து கொள்வோர் அவருக்கு நன்றி பாராட்டாமல் இருக்க முடியாது.
சிறு வயதில் சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சொல்லவொண்ணா துக்கத்தைச் சுமந்தாலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு ரமண உபதேசங்களை வழங்கிய பெறும் பேற்றைப் பெற்றார் அவர்.
சூரி நாகம்மாவின் கடிதங்கள் ரமண பக்தர்களுக்கு ஒரு பொக்கிஷம்!
***