நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

OP-Bottle-Gourd-PSPL

Written by S Nagarajan

Article No. 1683; Dated 1st March 2015.

ம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

18. நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

 

by ச.நாகராஜன்

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

जलतुंबिकान्यायः

jalatumbika nyayah

ஜல தும்பிகா நியாயம்

ஜலத்தில் இருக்கும் சுரைக்காய் பற்றிய நியாயம் இது.

bottlegourd

சுரைக்காய் ஒன்று நீரில் விழுந்து விட்ட போது அதைச் சுற்றி சேறும் சகதியும் படிந்தமையால் தனது மிதக்கும் தன்மையை இழந்து அது நீரினுள் அமிழ்ந்து விடுகிறது. ஆனால் மெதுவாக சேறும் சகதியும் அகலும் போது அது பழையபடி தனது இயல்பான தன்மையை அடைந்து மிதக்க ஆரம்பிக்கிறது.

திகம்பர ஜைனர்கள் இதை ஆன்மா உடல் தளையிலிருந்து விடுபடுவதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர்.

இது இன்னொரு விஷயத்தை எடுத்துக் காட்டவும் பயன்படும். பாண்டித்தியம் இல்லாத சாமானியன் ஒருவனை ஆழமான விஷயத்தில் ஈடுபடுத்த முடியாது என்பதற்கும் எடுத்துக் காட்டாக இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.


water puried

जलकतकरेणुन्यायः

jalakatarenu nyayah

ஜலகதகரேணு நியாயம்

 

சகதி நிறைந்த ஜலம் பற்றிய நியாயம் இது

கதக பொடி என்பது அருமையான ஒரு விதையின் பொடி ஆகும். அழுக்கு அல்லது சகதி நிறைந்த நீரை நாம் பருகவோ அல்லது சமைப்பதற்கு உபயோகிக்கவோ முடியாது. ஆனால் கதகப் பொடியை தண்ணீரில் கலந்து விட்டால் சகதியும் அழுக்கும் கீழே படிந்து விடும். தெளிந்த நீர் மேலே இருக்கும். மேலே இருக்கும் நீரை மட்டும் எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.சாதாரணமாக கதக விதைகளை கிணறில் போடுவது நமது பழக்கம். அழுக்குகள் கீழே படிந்து விட, தெளிந்த நீரை வாளியிலோ அல்லது குடத்திலோ எடுத்துப் பயன்படுத்தலாம். இதே போன்ற விதை பற்றிய நியாயங்களைப் பல காலமாக பல நல்ல விஷயங்களுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டி வருகிறோம்.

Strychnos_potatorum_5

தண்ணீரைச் சுத்தப் படுத்தும் தேற்றாங்கொட்டையின் படம்

ஶ்ரீ சத்ய சாயி பாபா சேவைக்கான உதாரணமாக இதை அருமையாக எடுத்துக் காட்டியுள்ளார். எப்படி இந்த விதை அழுக்குகளை அடியில் தங்க வைத்து நல்லதை மட்டும் வெளிக் கொணருகிறதோ அதே போல சேவை புரிய விழையும் ஒருவர் சமுதாயத்தில் கலந்து அழுக்குகளை அப்புறப்படுத்தி நல்லனவற்றை மேலே கொண்டு வரச் செய்ய வேண்டும் என்பார். இத்துடன் இன்னும் ஒரு விஷயத்தையும் அவர் அற்புதமாகத் தெளிவு படுத்தியுள்ளார். இந்த விதையானது நீரில் கலந்த பின்னர் முற்றிலுமாக மறைந்து விடும். அது தான் இந்தச் செயலைச் செய்தது என்பது யாருக்கும் தெரியாது. அதே போல சேவை செய்தவர் விளம்பரம் எதையும் விரும்பாமல் தான் தான் அந்த அரிய காரியத்தைச் செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்காது ஒதுங்கி விட வேண்டும் என்று அவர் அருளுரை பகர்ந்துள்ளார்.

 

யாருடன் நாம் சேர்கிறோம் என்பதைப் பொறுத்து விளைவுகள் அமையும் என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான நியாயம் இது.

சகவாசத்தைப் பொறுத்து நல்லது அமையும்!

 

சேருமிடம் அறிந்து சேர் என்பது பழமொழி. சாதுக்களுடனும், அருளாளர்களுடனும், மகான்களுடனும், ஞானிகளுடனும் இணக்கம் கொண்டால் நமது பாவங்கள் பொசுங்கி நல்லன நம் மனதில் ஊறி சிறப்பான வாழ்க்கையை வாழ ஆரம்பிப்போம்.இப்படி ஒரு மாற்றத்தை நமக்கு ஏற்படுத்தி உள்ளோம் என்பதையும் அவர்கள் விளம்பரப்படுத்த மாட்டார்கள்.

 

சிறிய நியாயம் தான்; ஆனால் அறிவுறுத்தும் விஷயமோ மிகவும் பெரிது!

**************