
Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam
Written by S Nagarajan
Date: 15 August 2018
Time uploaded in London – 6-15 AM (British Summer Time)
Post No. 5322
Pictures shown here are taken from various sources saved by my brothers S Srinivasan, S Suryanarayanan, S.Meenakshisundaram and articles written by S Nagarajan (posted by S Swaminathan)
நல்லவருக்கு அஞ்சலி
நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்!
ச.நாகராஜன்

நடுநிலை நாளிதழ் என்று போட்டுக் கொண்டு ஒரு பக்கமாய் சார்ந்து எழுதுவது ஊடகங்களின் இன்றைய போக்காக மாறி விட்டது.
ஆனால் நடுநிலை நாளிதழான தினமணியின் மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய எனது தந்தையார் திரு வெ.சந்தானம் நடுநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
அலுவலகப் பணியில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அவர் கடைப்பிடித்த எள்ளளவும் பிசகாத, தராசு நுனி போன்ற நடுநிலை வியக்க வைக்கும் ஒன்றாகும்.
வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உரிய முறையில் உரிய விஷயத்தில் நடுநிலையுடன் நடக்கும் பாங்கு அவருக்கு இயல்பாகவே இருந்தது.
நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மனதில் நிழலாடினாலும் சில சம்பவங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
அரசியல் கட்சியில் எல்லா அணிகளையும் சம நோக்குடன் பார்ப்பார் அவர்.

With Swamiji Krishna of Aykkudi, near Tenkasi
காமராஜர் முதல் அமைச்சர்.
சுதந்திர தியாகிகளை அங்கீகரிக்க அவர்களுடன் சிறையில் கூட இருந்த ஒருவர் யாரேனும் அப்படி கூட இருந்ததைக் குறிப்பிட வேண்டுமென்ற விதி வந்தது.
இப்படி ஒருவரிடம் கடிதம் வாங்க வேண்டுமென்ற ஆசையோ அல்லது நினைவோ கூட இல்லாமல் இருந்தார் என் தந்தை.
ஆனால் பல தியாகிகளும் இதை ஏன் இன்னும் வாங்கவில்லை என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.
மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மாநாடு தமுக்கம் மைதானதில் நடந்தது. இரவு நேரம்.
தினமணி நிருபராக வெகு காலம் பணியாற்றியவரும் என் தந்தையின் பால் மிக்க மரியாதையும அன்பும் கொண்டவரான திரு திருமலை மைதானத்தில் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த காமராஜரிடம் இந்தக் கடிதம் பற்றிக் குறிப்பிட்டார்.
இப்படி யார் வேண்டுமென்கிறார்கள் என்று கேட்டார் திரு காமராஜர். இது அரசால் கொண்டுவ்ரப்பட்ட ஆணை என்றவுடன் சிரித்தவாறே அந்த மைதானத்திலேயே அந்தக் கணமே ஒரு டைப்ரட்டரைக் கொண்டுவரச் சொல்லி அதில் ஒரே ஒரு வரி ஆங்கிலத்தில் அடிக்கச் சொன்னார்.
திரு வெ.சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார் என்பதே அந்த ஒரு வரி.
என் தந்தை அந்தக் கணமே அரசின் கணக்கின் படி ‘சுதந்திரப் போர் தியாகி’ ஆனார்.

ராஜாஜிக்கு என் தந்தை பால் பரிவும அன்பும் உண்டு. கல்யாண ரிஸப்ஷனில் என் தந்தையும் தாயும் நாற்காலியில் அமர்ந்திருக்க அந்தப் பெரிய்வர் பின்னால் நிற்கும் காட்சியைக் காண்பிக்கும் அதிசய போட்டோ எங்கள் இல்லத்தில் இன்றும் இருக்கும் ஒரு பொக்கிஷம்.
முத்துராமலிங்கத் தேவரின் தேச பக்தியும் தெய்வ பக்தியும் நாடறிந்த விஷயம். அவரது கூட்டங்களுக்கு மதுரையில் என் தந்தையார் தலைமை வகிப்பதுண்டு. அவர் என் தந்தையிடன் கொண்டிருந்த பேரன்பும் மரியாதையும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
அரசியலில் மட்டுமல்ல காஞ்சி பெரியவாள், சிருங்கேரி ஆசார்யாள் உரைகளை அவ்வப்பொழுது தினமணி ஏடு தாங்கி வரும்.
சிருங்கேரி ஆசார்யாளின் பக்தர்கள் எழுத்தை எண்ணிக் கொண்டு வருவார்கள். ஏன் காஞ்சி பெரியவருக்கு மட்டும் இரண்டு காலம் இருக்கிறது, ஏன் இத்தனை எழுத்துக்கள் சிருங்கேரி பெரியவரின் உரைக்கு குறைந்திருக்கிறது என்றெல்லாம் தீவிர பக்தியில் கேட்பார்கள்.



அவர்களுக்கு முக்கியத்திற்கு முதலிடம், விஷயத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் மனத்தை மகிழ்விப்பார். நடுநிலையுடன் எதையும் அணுகும் மனப்பாங்கை நாளடைவில் அனைவரும் புரிந்து கொண்டு வெகுவாகப் பாராட்ட ஆரம்பித்தனர். இரு ஆசார்யர்களின் அனுக்ரஹமும் எங்கள் குடும்பத்திற்கு ஏராளம் உண்டு.
சிருங்கேரி ஆசார்யர் வீட்டிற்கே வந்து அனுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சி மிக சுவாரசியமான ஒன்று.
ஸ்ரீ சத்ய சாயிபாபா என் தந்தையார் மீது மிகுந்த அன்பு கொண்டு அனுக்ரஹம் புரிந்தார். ஆபஸ்ட்பரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற பிரத்யேகமாக அழைப்பு விடுத்தார்.
அரசியல், ஆன்மீகம் மட்டுமல்ல, அன்றாடப் பொழுது போக்குகளுக்கும் கூட அவர் உரிய இடத்தைத் தருவார்.
இசை நிகழ்ச்சிகள் தவறாமல் தினமணியில் இடம் பெறும். இசைக் கலைஞர்கள் வெகுவாக மதிக்கப்படுவர் தினமணியில்.
கிங்காங் மல்யுதத நிகழ்ச்சிக்கென மதுரை வந்தவர் என் தந்தையைப் பார்க்க நேரில் வந்தார். அவருக்கு ஒரு பிரம்பு நாற்காலி போட அதில் உட்கார ஆரம்பித்தவுடன் அந்த நாற்காலி முறிந்து போக உடனே ஸ்ட்ராங்கான கட்டிலில் சிரித்தவாறே அமர்ந்து உரையாட ஆரம்பித்தார்.
தினமணியில் சென்னை ஆபீஸில் ஸ்ட்ரைக். சென்னைப் பதிப்பு சித்தூரிலிருந்து சில காலம் வந்தது.
எழுத்தாளர்களின் கதை, கட்டுரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மதுரைக்கு வந்தது.
அந்தக் கால கட்டத்தில் ஏராளமான புது எழுத்தாளர்கள் அறிமுகமாயினர்.

Kanchi Paramacharya in Madurai Dinamani office.
யார் எழுதினார்கள் என்று பார்க்காமல் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பார் என் தந்தை.
ஜியாவுடீன் என்ற இஸ்லாமிய இளைஞர் ஃபாரஸ்ட் ரேஞ்சராகப் பணியாற்றி வந்தார். அழகுற கதைகள் எழுதுவார். அவர் எழுத்து பிரசுரிக்கப்ப்ட்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. பொங்கிய மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து தந்தையிடன் தன் வியப்பையும் அன்பையும் ம்கிழ்ச்சியையும் தெரிவித்தார்.இதே போல அலுவலகம் ஒன்றில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய சங்கர ராம் என்பவர் புனைபெயரில் நல்ல எழுத்தாளரானார். சேதுபதி பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய திரு ராமகிருஷ்ணன் அற்புதக் கவிஞர் ஆனார்.
நா.பார்த்தசாரதி அவருடன் கூடவே வரும் பட்டாபிராமன் ஆகியோரின் படைப்புகள் வெளி வரலாயின.
சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் எங்கள் இல்லத்தில் அமர்ந்து தினமணி பட்டிமன்றம் தலைப்பு குறித்து விவாதிப்பர். தினமணி பட்டிமன்றம் என்பது பட்டிமன்றத்திற்கான ‘ஸ்டாண்டர்ட்’ ஆனது!

Kanchi Shankaracharya Sri Jayendra Swamikal with Dinamani Team
இப்படி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பட்டி மன்றப் பேச்சாளர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட அனைவருமே இறுதி வரை தந்தையின் பால் நேசத்தையும் பாசத்தையும் கொட்டினர்.
ஒரு பெரியவருடன் கூடப் பழகும் போது நாளுக்கு நாள் அது மெருகேறி வளர்பிறை போல வளர்ந்து கொண்டே போகும் என்பதை பற்பல ஆண்டுகள் பழகிய அனைவரும் அனுபவத்தில் கண்டு மகிழ்ந்தனர்.
அவரின் நினவைப் போற்றும் நாள் ஆகஸ்ட் 15.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், 1998ஆம் ஆண்டு., ஆகஸ்ட் 15ஆம் தேதி.
மதுரை எல்லிஸ் நகரில் கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்ட பின் தன் இன்னுயிரை விண்ணுலகம் நோக்கி ஏக விட்டார்.
அவரை நினைத்து அஞ்சலி செய்வதில் ஒரு தனி அர்த்தம் இருக்கத்தானே செய்யும்?!
ARTICLES ON SANTANAM POSTED EARLIER:-
tamilandvedas.com/tag/திரு-வெ…
Posts about திரு வெ.சந்தானம் written by Tamil and Vedas
tamilandvedas.com/tag/வெ…
Posts about வெ.சந்தானம் written by Tamil and Vedas
–subham—
***

