ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 3 (Post No.4159)

Written by S.NAGARAJAN

 

Date: 25 August 2017

 

Time uploaded in London- 4-53 am

 

Post No. 4159

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

      

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 18-8-2017 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 26வது) கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 3

 ச.நாகராஜன்

 

“ரஸவாதக் கல்லை எப்படிச் செய்வது என்பதைச் சத்தியமாகக் கூறி விடுகிறேன். எனக்கு வார்த்தை ஜாலம் தெரியாது. சில எளிய, நேரடியான வார்த்தைகளிலேயே இதைச் சொல்லி விடுகிறேன்.– பேஸிலியஸ் வாலெண்டினஸ் (Basilius Valentinus)

    

       கெபரின் எண்ணம் கந்தகத்தை எடுத்து விட்டு பாதரஸத்தைச் சேர்த்தால் தங்கமாக மாற்றி விடலாம் என்பது தான். அவர் மனித ரத்தம் மூலம் தங்கத்தை உருவாக்கலாம் என்ற கருத்தை எள்ளி நகையாடினார்.

 

     பூமிக்கு அடியில் இயற்கை உருவாக்கிய உலோகங்களில் மனித ரத்தம் கலந்திருக்கிறதா என்ன என்று அவர் தர்க்கரீதியான கேள்வியை எழுப்பினார். இதை அனைவரும் ஆதரித்தனர்.

 

     இடைக்காலத்தில் வாழ்ந்த ரஸவாத நிபுணர்கள் பாதரஸத்தை வடிகட்டி பல்வேறு உலோகங்களைச் சேர்த்து ரஸவாதக் கல்லை உருவாக்க முயன்றனர்.

 

    15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பாதரஸத்தை வடிகட்டுவதில் மட்டும் ஈடுபடவில்லை. மேட்டர் எனப்படும் மூலப் பொருள் பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

 

       மத்திய ஐரோப்பாவில் வெள்ளியையும் தாமிரத்தையும் வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் தாதுப் பொருள்கள் மரம் போல வளர்வதாகவும் அதைத் தாங்கள் நேரடியாகப் பார்த்ததாகவும் கூறவே இந்தப் பரபரப்புச் செய்தி எங்கும் பரவியது.

 

    சில மரங்களுக்கும் தாதுப் பொருள்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் ஆராய்ச்சியாளர்களைக் கவர்ந்தது.

இந்த தாதுப் பொருள்களை நீண்ட காலம் பூமியிலேயே இருக்க விட்டால் அவை “வளர்ந்து: தங்கமாக ஆகி விடும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

 

 

     எப்படி ஒரு செடியிலிருந்து மலரை எடுத்தவுடன் அது வளராமல் “இறந்து விடுகிறதோ அது போல தாதுப் பொருள்களை எடுத்து விட்டால் அவை தங்கமாக மாறாமல் “இறந்து விடுவதாக சில ரஸவாத நிபுணர்கள் கூறலாயினர்.

 

     ஆகவே சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றை திரும்பி தங்கமாக மாற்றுவது சுலபம் தான் என்ற கருத்து பரவவே கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

     நன்கு பயிற்சி பெற்ற ரஸவாத நிபுணர்கள் பெரும் செல்வந்தர்களுக்கு ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி என்பதைச் சொல்லித் தர முன்வந்தனர். இதனால் எங்கும் தங்கம் என்பதே பேச்சு என்ற நிலை உருவானது.

    சாமானியர்களும் இந்த ‘கலிபோர்னியா கோல்ட் ரஷ் எனப்படும் தங்க வேட்டையில் ஈடுபடவே இப்போது நமது நாட்டில் டீக்கடைகள் இருப்பது போல ஆங்காங்கே சிறு சிறு சமையலறை போன்ற லாபரட்டரிகள்  உருவாகின. ஈயத்தைத் தங்கமாக்க அனைத்து குட்டி லாபரட்டரிகளும் முயன்றன!

     இந்தக் காலகட்டத்தில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ஃ மர்மமான ஒரு யோகியும் ரஸவாத நிபுணருமான இரேனஸ் பிலாலெதெஸ் (Eirenaeus Philalethes) என்பவரின் நூல் ஐரோப்பா முழுவதும் பரவியது. அனைவரும் அதை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தனர்.

 

 

         இன்னொரு குறிப்பிடத்தகுந்த ரஸவாத நிபுணர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்டார்கி (George Starkey) என்பவர்.  தான் ஒருவர் மட்டுமே நிஜமாக பிலாலதெஸைப் பார்த்ததாகக் அவர் கூறினார், அத்துடன் அவர் விஞ்ஞானியான ராபர்ட் பாயிலை நேரில் சென்று சந்தித்தார்; ரஸவாதக் கல்லை எப்படிச் செய்வது என்ற ரகசியத்தை தன்னிடம் மட்டுமே பிலாலதெஸ் கூறியிருப்பதாகச் சொன்னார்.

1651ஆம் ஆண்டில் ஸ்டார்கியிடம் தனக்கு ரசாயன ரகசியங்களைக் கற்பிக்குமாறு பாயில் வேண்டினார்.

உண்மையில் நவீன அறிவியல் ரசாயத்துறையின் தந்தை என்று கருதப்படும் ராபர்ட் பாயிலுக்கு ரசாயனம் பற்றி எதுவுமே தெரியாது என்றும் அவர் ஸ்டார்கியிடம் தான் ரசாயனம் பற்றிச் சிறிது தெரிந்து கொண்டார் என்றும் அறிஞர்கள் வட்டாரத்தில் இன்றளவும் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.

 

 

      பாயில் தனது நோட்டுப்புத்தகத்தில் தான் நாடோடியாக அலையும் ரஸவாதி ஒருவரைச்  சந்தித்ததாகவும அவர் தன் கண் முன்னேயே ஈயத்தைத் தங்கமாக ஆக்கிக் காட்டியதாகவும் எழுதி வைத்துள்ளார். அந்த தங்கத்தின் எடை அரை அவுன்ஸ் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நேரடி நிரூபணத்தால் அவர் ஈயத்தைத் தங்கமாக மாற்றுவது சாத்தியமே என்று உறுதியாக நம்பினார்.

 விஞ்ஞானி நியூமென்னின் நண்பரான பிரின்ஸிப் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதே அவருக்கு ஈயத்தைத் தங்கமாக்கும் அபூர்வ கலை மீது கவனம் திரும்பியது. அவருக்கு இப்படி ஒரு ஆர்வம் உருவாகக் காரணம் அவர் படித்த ஒரு புத்தகம் தான். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி ட்வெல்வ் கீஸ் (The Twelve Keys) என்பதாகும். இது ஒரு மர்மமான நூல். சங்கேத பாஷையில் எழுதப்பட்ட நூலும் கூட. 15ஆம் நூற்றாண்டில் இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதியவர் பேஸிலியஸ் வாலெண்டினஸ். இவர் கத்தோலிக்க பிரிவில் ஒன்றான பெனிடிக்டின் பிரிவைச் சேர்ந்த ஒரு துறவி.

இவர் எழுதிய நூலை வாசக அன்பர்கள் இணையதளத்தில் படிக்க்லாம். 24 பக்கங்களே கொண்ட இந்த நூல் தங்க ரகசியத்தைத் தரும் நூல்!

                         (தங்கமான ரகசியம் தொடரும்)

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் நடந்த சம்பவம் இது  கம்ப்யூட்டர் முழுவதுமாக உருவாகாத காலம். பிரம்மாண்டமான அறையில் வயர்களும் டியூப்களும் தொங்க ஏராளமான தகடுகள் அவற்றை மூட கருவியானது ஒரே களேபரமாக இருக்கும்.

 

 

ஜான் வான் நியூமேன் (John Von Neumann) என்ற பிரபல விஞ்ஞானி தனது இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி தான் இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்க ஏதுவாக இருக்கும் என்று நினைத்தார்.

பலரிடம் விசாரித்ததில் இப்படிப்பட்ட தகடு வேலை செய்வதில் பெரிய நிபுணர் ஜூலியன் பிஜ்ளோ (Julian Bigelow) என்பவர் தான் என்பதை அறிந்து கொண்டார். அவரைத் தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.

 

 

பிஜ்ளோவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார்.

குறித்த நேரத்தில் அறைக் கதவு தட்டப்படும் சந்தத்தைக் கேட்டவுடன் ஆர்வத்துடன் நியூமேன் வந்து கதவைத் திறந்தார்.

உள்ளே பிரம்மாண்டமான ஒரு நாய் மிக்க அன்புடன் வாலைக் குழைத்தவாறே உள்ளே நுழைந்தது. நாயைத் தொடர்ந்து பிஜ்ளோவும் உள்ளே வந்தார்.

 

 

ஒரு மணி நேரம் எப்படி தங்களது அமைப்பை உருவாக்குவது என்று தீவிரமாக இருவரும் விவாதித்தனர்.

நியூமேன் காலடியில் அமர்ந்து  கொண்டிருந்த நாய் இடைவிடாமல் ஒரு மணி நேரமும் குலைத்துக் கொண்டே இருந்தது.

 

 

தொந்தரவைச் சகித்தவாறு ஒருவாறு நிபுணர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது.

 

 

பிஜ்ளோ விடைபெற்று எழுந்தார். தனது காரை நோக்கி நடக்கலானார்.

 

ஒரு நிமிஷம் என்ற நியூமேன், “உங்கள் நாயை அழைத்துச் செல்லவில்லையே!” என்றார், அவர் மறந்து விட்டார் என்று எண்ணி!

என் நாயா!? அது உங்களுடைய நாய் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றாரே பார்க்கலாம் பிஜ்ளோ!

 

நியூமேன் திடுக்கிட்டார்.

யாருடைய நாயோ ஜாலியாக வந்து அறிஞர்களின்டிஸ்கஷனில் கலந்து கொண்டது!

****