
Written by S NAGARAJAN
Date: 22 JULY 2018
Time uploaded in London – 9-36 AM (British Summer Time)
Post No. 5245
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 54
ப.ஜீவானந்தம் அவர்களின் ‘பாரதி வழி’
ச.நாகராஜன்
நாடறிந்த தோழர் – நல்லவர் – ப.ஜீவானந்தம் பாரதியில் தோய்ந்தவர். பாரதியைப் பரப்பியவர். அவரது உரை மற்றும் கட்டுரைகளை ‘பாரதி வழி’ என்ற நூலாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடட், சென்னை – 98 வெளியிட்டுள்ளது. நான்கு கட்டுரைகள் கொண்ட இந்த நூலின் பக்கங்கள் 128. முதல் பதிப்பு 1964 ஜனவரியில் வெளியானது. ஆறாம் பதிப்பு 1993 மே மாதம் வெளியானது.
1947 அக்டோபர் மாதம் எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவன்று ஜனசக்தி பிரசுராலயம் வெளியிட்ட ‘பாரதி வழி’ நூலின் முதல் கட்டுரையாக அமைகிறது.தேசிய இயக்கத்தின் சகல அம்சங்களையும் அறிந்தவர்களே பாரதியைப் பற்றி முற்றிலுமாக அறிய முடியும் என்று கூறுகின்ற ஜீவா பாரதியை அறிய வைக்க அனைத்து அம்சங்களையும் இந்தக் கட்டுரையில் அழகுற எடுத்துக் காட்டுகிறார் – பாரதியின் பாடல் வரிகளுடன்.
பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டியதன் அவசியத்தையும் இதில் அவர் வலியுறுத்துகிறார். இப்படிப்பட்ட பலரது வலுவான வேண்டுகோள்களால் தான் பாரதியின் பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.
1955ஆம் ஆண்டில் காரைக்குடி கம்பன் விழாவில் ‘கம்பனும் பாரதியும்’ என்ற தலைப்பில் ஜீவா ஆற்றிய உரை அடுத்த கட்டுரையாக மலர்கிறது.
கம்பனின் பெருமைகளை பாரதியார் சுட்டிக் காட்டிய விதத்தையும் அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த அர்த்தத்தையும் அழகுற விளக்கும் ஜீவா ஏராளமான மேற்கோள்களை கம்பனின் பாடல்களிலிருந்தும் பாரதியின் பாடல்களிலிருந்தும் தருகிறார்.
‘கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்’ என்று பாரதி கம்பனை மானுடனாகச் சித்தரிப்பது ஏன் என்பதை விளக்கும் ஜீவா சுக்ரீவன் ,”வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா” என்று பரவசப்பட்டுக் கூறியதை எடுத்துக் காட்டுகிறார்.
இராமனின் மாண்பையும் புகழையும் ஜீவா விளக்குவது நம்மை பரவசத்திற்குள்ளாக்கும்.
அவரது சொற்கள் இதோ:
“இத்தகைய இராவணனை ‘இன்று போய் நாளை வா என்று சொல்கிறான் மகா மானுடனாகிய இராமன்.
ஹிட்லர் ஆயுதங்களிழந்து தனியாக வந்து, அகப்பட்டுக் கொண்டான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்த்து, “ஹிட்லர் ஐயா, இன்று போய் நாளை வாருங்கள்” என்று சொல்வார்களா; அப்படிச் சொன்னால் அதைக் கேட்டுச் சிரிக்க மாட்டார்களா? ஹிட்லர் அப்படி முற்ற முற்ற வலுக்குன்றி நின்றால், அப்பொழுதே, அங்கேயே அவனை எமலோகம் அனுப்பிவிட்டுத் தானே மறு காரியம் பார்ப்பார்கள்? அதைத் தானே மிகச் சிறந்த போர்த்தந்திரம் என்று கூறுவார்கள்?
கம்பன் காவியத்தில் இராமன் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற ‘இராவணேஸ்வரனை’ மறத்தின் மகா மேருவை ‘இன்று போய் நாளை வா’ என்கிறானே, இத்தகைய பேராண்மைப் பாத்திரத்தை எந்தக் காவியத்திலேனும் சரித்திரத்திலேனும் பிரத்தியட்ச வாழ்விலேனும் உலகில் எங்கேனும், என்றேனும் கண்டதுண்டோ?
‘கம்பன் என்றொரு மானுடன்’ என்று பாரதி கூறியது எத்துணை மெய்!கம்பன் – ஒரு மானுடன் – அவன் – காவியம் – மானிட மகா காவியம். ஐயமில்லை.”
ஜீவாவின் வலுவான வார்த்தைகளுக்கு அப்பீல் உண்டா என்ன?
அடுத்து 1958ஆம் ஆண்டில் பாரதி தினத்தை யொட்டி ‘ஜனசக்தி’யில் ஜீவா எழுதிய ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.
‘பாரதியின் தத்துவ ஞானம்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் ஜீவா பாரதியின் பன்முகப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு பொருள் பற்றிப் பல்வேறு இடங்களில் அவன் கூறிய கருத்துக்களை ஜீவா தொகுத்துத் தருவது மிக அழகு.
இறுதிக் கட்டுரையாக அமைவது – ‘பாஞ்சாலி சபதம் புதுமை நயங்கள்’.
இதில், “எளிய பதங்கள், எளிய நடை,எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றை உடைய காவியம் ஒன்றைத் தருவோன் நமது தாய்மொழிக்குப் புத்துயர் தருவோனாகிறான்” என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதி குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி, ஜீவா அப்படி ஒரு காவியத்தை புதுமை நயங்களுடன் பாரதியார் தருவதை அருமையான உதாரணங்களுடன் தருகிறார்.
மொத்தத்தில் பாரதி வழி – பாரதி விருந்து.
பாரதி அன்பர்கள் விரும்பிச் சுவைக்கும் நல்ல புத்தகமாக இது மலர்கிறது!
***