அனுமார் பற்றிய விநோதக் கதை (Post No.4991)

Written by London Swaminathan 

 

Date: 8 May 2018

 

Time uploaded in London – 20-12 (British Summer Time)

 

Post No. 4991

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தாய்லாந்து, கம்போடியா, இந்தோ நேஷியா போன்ற நாடுகளில் ராமாயணம் தேசீய காவியமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டிலேயே ராமாயணம் நடந்ததாக ஒவ்வொரு தலத்திலும் கதை சொல்லுவர். அந்த அளவுக்கு அவர்களின் ரத்தத்தில் ஊறிவிட்டது ராமாயணம்; இதற்கு அடுத்த நிலையில் அவர்களைக் கவர்ந்தது மஹாபாரதம்.

 

நாடகம், ஓவியம், கற்சிலைகள், ஊர்ப் பெயர்கள், மனிதர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும் இவ்விரு இதி ஹாசங்களையும் காணலாம்.

 

சங்க இலக்கியத்திலும் ஆழ்வார் பாடல்களிலும் கூட வால்மீகியும் கம்பனும் கூறாத கதைகள் இருக்கும்போது, கடல் கடந்த நாடுகளில் புது ராமாயணக் கதை இருப்பதில் வியப்பில்லை.

 

தாய்லாந்து மன்னர்கள் ‘ராமா’ என்று பெயர் சூட்டிக்கொண்டனர். அயோத்யா என்று தலை நகருக்குப் பெயர் வைத்தனர். என்னே ராம பக்தி!

 

10,000 பாடல்களில் ராமாயணத்தை ராமக்யான் என்ற பெயரில் எழுதி வைத்தனர்.

 

இதோ ஒரு சுவையான கதை

 

ராவண ஸம்ஹாரம் முடிந்தது; அரக்கனை விழுத்தாட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் ஏதேனும் கைம்மாறு செய்ய ராமபிரான் எண்ணினார். இலங்கையை விபீஷணனுக்கு வழங்கினார். கிஷ்கிந்தையை சுக்ரீவனுக்கு அளித்தார். பாதாளத்தை ஜாம்பவானுக்குக் கொடுத்தார்.குஹனுக்கு பூரிராம் (ராமபுரி) என்னும் இடத்தைத் தந்தார்.

 

அடக் கடவுளே! எல்லோருக்கும் அளித்தாகிவிட்டது நெஞ்சிலே குடி இருக்கும் அனுமனுக்கு எதை நல்குவது என்று ஒரே சிந்தனை! ராமன் ஏதாவது ஒரு பணியைக் கொடுக்க மாட்டானா; அவனுக்குச் சேவை செய்வதில் கிடைக்கும் ஆனந்தம்வேறு எதிலும் கிடைக்காதே என்று அனுமன் எண்ணும் வேலையில் ராமன் செப்பினார்:

 

“ஆருயிர்த்தோழா! நான் ஒரு அம்பு விடப்போகிறேன்; அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்தப் பகுதி முழுவதும் உனக்கே சொந்தம்”– ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ஒரே மகிழ்ச்சி.

அம்பும் பறந்தது; அதன் பின்னால் அனுமனும் பறந்தான். ஒரு இடத்தில் அது போய் விழுந்தது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் (Lop Buri Kingdom) லோப்பூரி (லவ புரி).

ராமனின் அம்பு தீ கக்கியதால் அந்த இடம் எல்லாம் கருகியது; ஆனால் ராமனின் அம்பு கீழே விழுந்த பட்ட இடம் மட்டும் பச்சைப் பசேல் என்று பசுமையாக விளங்கியது. அது மட்டுமல்ல; அம்பு விழுந்த இடம் கரடு முரடான மலைப் பகுதி வேறு! அனுமந்த வீரன் தன் வால் மூலம் அதை சமதளப் பூமியாகச் செய்வித்தான்.

 

இன்றும் கூட அந்த லவபுரியை மக்கள் புனிதமாகக் கருதுவதால் அங்குள்ள பொருள்களை எல்லாம் புனிதம் என்று கருதி எடுத்துச் செல்ல ஆயினர். அது முழு மொட்டை ஆகி விடுமோ என்று பயந்த தாய் அரசு அதை பாதுக்ககப்பட்ட இடமாக அறிவித்தது. அந்த இடத்தைச் சுற்றி வேலியும் போட்டது.

 

புவியியல் ரீதியில் அங்கு சுண்ணாம்புக் கல் கிடைப்பதால் அரசு ஏற்றுமதியும் செய்து வருகிறது.

இந்தக் கதையில் தெரியும் உண்மை என்ன?

ராமன் அம்பு பட்ட இடம் கூடப் புனித மானது.

ராமன் அம்பு பட்ட இடம் பொன் விளையும் பூமியாக மாறும்.

ராமாயணம் , தாய்லாந்திலேயே நடந்தது போல லவ புரியை உண்மை என்றே கருதுகின்றனர் மக்கள்.

ராமனின் புதல்வன் லவன் பெயரில் அந்த ஊரும் அருகில் லாவோஸ் என்ற நாடும் உளது.

 

வாழ்க ராமன் புகழ்! வளர்க அனுமன் பக்தி!!