
Written by S.NAGARAJAN
Date: 17 September 2017
Time uploaded in London- 5-01 am
Post No. 4219
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மஹாபாரதம்
விதுரர் கூறும் விதுர நீதி – 1
ச.நாகராஜன்
மஹாபாரதம் ஒரு பெரிய நீதிக் களஞ்சியம்.
அதில் அற்புதமான ஒரு பகுதியாக அமைகிறது விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறும் நீதி உபதேசம்.
இந்த இருவருக்கும் இடையேயான உரையாடல் விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது; காலம் காலமாக பெரியோர்களால் வாழ்வாங்கு வாழும் வழியாக விதுர நீதி உபதேசிக்கப்பட்டு வருகிறது.
உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருவது விதுர நீதி.
எந்த விதமான உடன்பாட்டிற்கும் வர முடியாது என்ற தன் உறுதியான நிலைப்பாட்டை துரியோதனன் எடுத்து, ஊசி அளவு இடம் கூட உங்களுக்குத் தர மாட்டேன் என்று பாண்டவர்களிடம் கூறி விடுகிறான்.
பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை.
உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான்.
அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.
புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது.
காலம் காலமாக உரையாசிரியர்கள் இதற்குத் தகுந்த விளக்கம் சொல்லி வந்துள்ளதால் நாம் விதுரர் கூறியதை உணர முடிகிறது.
எடுத்துக் காட்டாக ஒரு சுலோகத்தை இங்கே பார்க்கலாம்.
ஏகயா த்வே விநிச்சித்ய த்ரீந் சதுர்பிந் வசே குரு I
பஞ்ச ஜித்வா விதி த்வா ஷட் சப்த ஹித்வா சுகீ பவ II
இதன் பொருள்:
ஒன்றால் இரண்டை ஜயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.

இங்கு ஒன்று, இரண்டு, மூன்று போன்றவற்றிற்கான பொருள் விளங்கவில்லை.
ஆனால் உரையாசிரியர்கள் தக்க விளக்கத்தைத் தந்துள்ளனர்.
ஒன்றால் – ஒரே உறுதியான புத்தியால்
இரண்டை – செய்யத் தகுந்தது, செய்யத் தகாதது இவ்விரண்டையும் ஆய்ந்து தீர்மானித்து’
மூன்றை – நண்பர், விரோதி, நட்பும் பகையும் இன்றி நடு நிலையில் இருப்போர் ஆகியோரை
நான்கினால் – சாம், தான, பேத, தண்டத்தால்
ஐந்தை ஜயித்து – ஐந்து புலன்களை ஜயித்து
ஆறை – சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம்,த்வைதீ பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜ நீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து
ஏழை – பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாக செலவழித்தல், ஆகிய ஏழு குற்றங்களையும்
அறிந்து சுகமாக இரு.
இப்போது நன்கு பொருள் விளங்குகிறது.
இது போன்ற ஏராளமான நீதி மொழிகளை விதுரர் மனித குலத்தின் நன்மைக்காகத் தருகிறார்.
அதாவது மஹாபாரதத்தை இயற்றிய வியாசர் தருகிறார்.
இன்னும் சில விதுர நீதிகளை ப் பார்ப்போம்
****