தன்னைத் தானே புகழாதே-குறள் கதை (Post No.5611)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 7-03 am

Post No. 5611

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. இதை அவ்வையார், மநு, வள்ளுவர், அதிவீரராம பாண்டியன் முதலிய பல அறிஞர்கள் சொன்னதைக் கீழே கொடுத்துள்ளேன். இதை விளக்க ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துரைப்பேன்.

கல்கத்தா நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்தது. அந்தக் காலத்தில் கடுமையான குற்றம் புரிந்தோரை அந்தமான் தீவிலுள்ள தனிமைச் சிறைக்கு அனுப்பி விடுவர். மனித வாடையே இல்ல்லாமல், புழுத்த கஞ்சியைச் சாப்பிட்டுக்கொண்டு வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும். இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோரையும் பிரிட்டிஷார் இப்படிக் கடும் குற்றம் இழைத்ததாகக் கருதி அனுப்பினர். சாவர்க்கர் போன்றோர் இப்படி அனுப்பப் பட்டனர். அது வேறு கதை. நான் சொல்வது உண்மைக் குற்றவாளி கதை.

வத்தலும் தொத்தலுமாக இருந்த ஒருவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி போலீஸார் சொன்னார்கள்:- இவன் அதி பயங்கரக் குற்றவாளி. இவனுக்கு ஜீவாந்தர சிக்ஷை கொடுத்து அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்.

நீதிபதி சொன்னார்-

ஐயோ பாவம்! காற்றடித்தால் பறந்துவிடுவான் போல் இருக்கிறதே. இவன் என்ன அப்படிக் குற்றம் புரிய முடியும்? இவனைப் போய் அந்தமானுக்கு அனுப்பச் சொல்லுவது நியாயமா?

இதைக் கேட்டதுதான் தாமதம்! அந்தக் குற்றவாளி, அனுமார் போல ஒரே தாவாகத் தாவி, கூண்டுக்கு வெளியே குதித்தான்.

“என்ன நினைத்தீர்கள் என்னை? நான் காற்றடித்தால் பறப்பவன் அல்ல. என்னால் எதுவும் செய்ய முடியும்” என்று மாரைத் தட்டி வீர வசனம் பேசினான்.

 

ஜட்ஜ் சொன்னார்:

யார் அங்கே? அவனை மீண்டும் கூண்டுக்குள் ஏற்றுங்கள். இந்த ஆள் எதையும் செய்ய வல்லவன். நோஞ்சான் அல்ல. அந்தமானுக்கு அனுப்புங்கள். இவனுக்குக் கடுங்காவல் தண்டனை.

தன்னைத் தானே புகழ்வது எவ்வளவு அபாயம்!

நுணலும் தன் வாயால் கெடும், எங்கப்பன் குதிருக்குள் இல்லை — என்ற பழமொழிகளும் நினைவுக்கு வரும்.

From my old post:–

இதோ அறிஞர்கள் சொன்னது என்ன என்று படியுங்கள்:–

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே), வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில்  அவ்வையார்  அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

பொருள்:

தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

 

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம்

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

–SUBHAM–

 

Leave a comment

Leave a comment