வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -2

jung-red-book

Post No.1053; Dated: 20 May 2014.
ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரையில் இது இரண்டாம் பகுதி
((குறிப்பு: ஆங்கிலத்தில் ஜங் என்று எழுதியபோதிலும் சரியான உச்சரிப்பு யுங்)).

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -2
ச.நாகராஜன்

நிறை வாழ்வு வாழ்ந்தவரான யுங் 1957ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஒரு நாள் தனது வாழ்க்கை வரலாற்றை தனது சகா ஒருவரிடமும் அனீலா ஜஃபே என்ற பெண்மணியிடமும் சொல்லலானார். சில சமயம் சில அத்தியாயங்களை அவரே தன் கைப்பட எழுதிக் கொடுத்தார். அவர் 1961ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி மரணமடைந்தார். அது வரை தனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொல்லி வந்தார். மிக சுவாரசியமான சம்பவங்கள் அடங்கிய அவரது வரலாறு மெமொரீஸ், ட்ரீம்ஸ், ரெஃப்ளக் ஷன்ஸ் (Memories Dreams Reflections ) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

யுங் தனது ஹிப்நாடிஸ மருத்துவ முறையை ஆரம்பித்த காலத்தில் நடந்தது இது;
ஒரு நாள் 58 வயதான பெண்மணி ஒருத்தி ஊன்று கோலை ஊன்றிக் கொண்டு அவரிடம் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். அவருக்குக் கடந்த 17 வருடங்களாக பக்க வாதம். இடது காலை அசைக்கக் கூட முடியாது. யுங் அவரை வசதியாக ஒரு நாற்காலியில் அமர வைத்தார்.

அவரிடம் என்ன விஷயம் என்று மெதுவாக விசாரித்தார். அவ்வளவு தான், அந்தப் பெண்மணி கடகடவென்று நிறுத்தாமல் பேச ஆரம்பித்தார். தனது நோயைப் பற்றிப் புலம்பினார். ஜங்,”போதும். நான் இப்போது உங்களை ஹிப்நாடைஸ் செய்ய்யப் போகிறேன்”, என்றார். அவர் சொல்லியவுடன் அந்தப் பெண்மணி கண்களை மூடினார். யுங் ஒன்றும் செய்யாமலேயே ஆழ்ந்த ஹிப்நாடிஸ நிலைக்குச் சென்று விட்டார். அத்தோடு தனது கனவுகளை விவரிக்க ஆரம்பித்தார். அப்போது யுங்கிற்கு அதன் அர்த்தம் புரியவில்லை.பின்னால் பல ஆண்டுகள் கழித்து அவருக்கு அந்தப் பெண்மணி சொன்ன கனவுகள் புரிந்தன. அப்போது அந்தப் பெண்மணி ஏதோ உளறுகிறார் என்று நினைத்துக் கொண்டார்.

சற்று நேரம் கழிந்தது. நிலைமை சற்று தர்மசங்கடமாக ஆனது. ஏனெனில் ஜங் என்ன செய்கிறார் என்பதை அங்கிருந்த இருபது மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்..அரை மணி நேரம் கழிந்தது. மாணவர்கள் முன்னர் தனது நடுக்கத்தைக் காண்பிக்காமல் யுங் அந்தப் பெண்மணியை எழுப்ப ஆரம்பித்தார். பத்து நிமிடங்கள் கழிந்தன. திடீரென்று விழிப்பு நிலைக்கு வந்த அந்தப் பெண்மணி பெரிதாகக் கத்த ஆரம்பித்தார்.

“ஆஹா! இப்போது என் வியாதி குணமாகி விட்டது”! என்று கூவிய அவர் ஊன்றுகோல்களைத் தூக்கி எறிந்தார். நடக்க ஆரம்பித்தார். அங்கிருந்த அனைவரும் அசந்து போய் பிரமித்து விட்டனர்!
“பார்த்தீர்களா! இது தான் ஹிப்நாடிஸம் ஏற்படுத்தும் நல்ல விளைவு “ என்று மாணவர்களை நோக்கிக் கூறிய ஜங் உள்ளுக்குள் குழம்பினார். தான் ஒன்றுமே செய்யாமல் இருந்த போது எப்படி அந்தப் பெண்மணி குணமானார்? அவருக்குப் புரியவே இல்லை.

“சரி, இது நீடித்து நிலைக்காது. சீக்கிரமே அவர் பழைய நிலைக்குச் சென்று விடுவார்” என்று நினைத்தார் யுங். ஆனால் அந்தப் பெண்மணி குணமானது நிலைத்திருந்தது.அடுத்த ஆண்டு கோடைக்கால லெக்சர்களை ஜங் ஆரம்பித்தார். அதற்கான அறிவிப்புகள் செய்தித் தாள்களில் வெளியாயின.

முதல் லெக்சர் ஆரம்பிக்கும் நாளன்று அந்தப் பெண்மணி மீண்டும் வந்து யுங்கைப் பார்த்தார். தனக்கு முதுகு வலி என்றார். வலி தாளவில்லை என்று அலறிய அவரைப் பார்த்த ஜங் எப்போது எப்படி அந்த வலி ஆரம்பித்தது என்று கேட்டார். அவருக்கு இப்போது நன்கு புரிந்து விட்டது. தனது லெக்சர் ஆரம்பம் என்று செய்தித் தாளில் படித்த அந்தக் கணம் தான் அவருக்கு வலி ஆரம்பித்திருந்தது.

“சரி,உங்களை ஹிப்நாடைஸ் செய்கிறேன்” என்று சொன்ன அந்தக் கணமே அந்தப் பெண்மணி ஆழ்ந்த உறக்க நிலைக்குத் தானாகவே சென்று விட்டார்! சிறிது நேரத்தில் அவரது வலி போயே போய் விட்டது.

அவரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தார் யுங்.

ஜங்கின் பிரிவிலேயே அந்தப் பெண்மணியின் மனவளர்ச்சி குன்றிய மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். பெண்மணியின் முதல் கணவனுக்குப் பிறந்திருந்ததால் அவனது பெயரை இந்தப் பெண்மணியின் பெயருடன் சேர்த்துப் பார்க்க முடியாமல் இருந்தது. அவனைப் பெரிய ஹீரோவாக ஆக்க நினைத்திருந்த அந்தப் பெண்மணி அது முடியாமல் போனதால் ஜங்கைத் தன் அபிமான புத்திரனாக எண்ணிக் கொண்டாள். அவரைப் பார்த்தவுடன் அவருக்கு 17 வருட வியாதி குணமாகி விட்டது! அதை ஊர் முழுவதும் பரப்பி யுங்கிற்குப் பெரும் புகழை அவர் சேர்த்து விட்டார்.

carl jung

யுங் பின்னால் சொன்னார் இப்படி:” எனது உளவியல் சிகிச்சையின் முதல் கேஸ் இப்படி ஆச்சரியகரமாக் அமைந்தது.தனது தாய்ப்பாசத்தால் தன் மனவளர்ச்சி குன்றிய மகனுக்குப் பதில் என்னை தன் மகனாக பாவித்து தத்து எடுத்துக் கொண்டதால் அந்தப் பெண்மணி குணம் அடைந்தாள்”

யுங் ஹிப்நாடிஸ சிகிச்சை செய்வதைப் பின்னர் விட்டு விட்டார். ஏனெனில் அந்த சிகிச்சை தரும் குணம் எத்தனை காலம் நீடித்திருக்கும் என்பதை அவரால் உறுதி செய்ய முடியவில்லை.

.
பின்னர் யுங் கனவுகளைப் பற்றித் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார். ஏராளமான சுவாரசியமான கேஸ்களை அன்றாடம் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. ஒரு சுவையான கேஸ் இது:

ஒரு பெண்மணி அவரிடம் சிகிச்சைக்காக வந்தார். அபாரமான புத்திசாலிப் பெண் அவர்.தனது கனவுகளை யுங்கிடம் விவரிக்க ஆரம்பித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டார் ஜங்.
ஆனால் அவரிடம் பேசுவதிலிருந்து உருப்படியாக ஒன்றையும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கனவுகளுக்கு அவரால் விளக்கமும் கண்டு பிடிக்க முடியவில்லை. ‘சம்திங் ராங்.ஒரு வெறுமை இருக்கிறது’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ஜங் இப்படிப் புரிந்து கொண்டதை அந்தப் புத்திசாலிப் பெண்மணியும் புரிந்து கொண்டார்.

இதைப் பற்றிப் பேசி விட வேண்டியது தான் என்று யுங் தீர்மானித்தார். பேச வேண்டிய தினத்திற்கு முந்தைய நாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவு ……

சின்ன உண்மை!
உளவியல் ரீதியாக மனிதரில் இரு வகை உண்டு என்பதை முதலில் சொன்னவர் யுங் தான்! தன்னைப் பற்றியும் தன் உணர்சிகளைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் உள்முகச் சிந்தனையாளர்
(introvert) ஒரு வகை. பரந்த மனம் கொண்டவர் (extrovert) இன்னொரு
வகை. இவை இரண்டும் கலந்தே மனிதர்கள் இருந்தாலும் ஒரு வகை
அவ்வப்பொழுது அவர்களிடம் வெளிப்படுகிறது. Introvert, Extrovert ஆகிய
இரு வார்த்தைகளை முதலில் உருவாக்கியவர் யுங் தான்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணித மேதையான பாஸ்கல் (1623-1662)
ஹைட்ராலிக் ப்ரஸ்ஸைக் கண்டு பிடித்தவர். குறைந்த விசை மூலம் அதிக கனமான பொருள்களைத் தூக்க வழி வகுத்தவர் அவர். அழுத்தம் பற்றிய அளவீடான பாஸ்கல் அவர் பெயரால் தான்
அழைக்கப்படுகிறது.

ஒரு நாள் இரவு வெகு நேரம் கழித்துத் தன் வீட்டிற்கு வந்த பாஸ்கல் கதவைத் தட்டினார். அரைத் தூக்கத்தில் இருந்த அவரது பணியாளர் கதவைத் திறந்து தூக்கக் கலக்கத்தில் பாஸ்கலை நோக்கி,’ நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார்.

மறதி மன்னரான பாஸ்கல்,”மிஸ்டர் பாஸ்கலைப் பார்க்க வேண்டும்!” என்றார்.

“அவர் இல்லையே! வெளியே போயிருக்கிறார்” என்றார் பணியாளர்.
“சரி, அப்புறம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு பாஸ்கல் நடையைக் கட்டினார்.

விஞ்ஞானிகளுக்கும் மறதிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு போலும்!

contact swami _ 48 @yahoo.com
*****

Leave a comment

Leave a comment