ஆராய்ச்சிக் கட்டுரையாளர் – லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண் – 1572; தேதி- 14 ஜனவரி 2015
ஆளும் கட்சியின் நடவடிக்கைகளைக் கண்டிக்க எதிர்க் கட்சிகள் உபயோகப்படுத்தும் சொல் ‘’அராஜகம்’’. இந்த ஆட்சியின் அராஜகச் செயல்களைக் கண்டித்து மக்கள் கொதித்தெழுவர் என்றெல்லாம் அடிக்கடி எதிர்க் கட்சியினரின் முழக்கங்களைக் கேட்கிறோம். பத்திரிக்கைகளில் படிக்கிறோம்.
அது என்ன ‘அராஜகம்’?
அராஜகம் என்பது வடமொழிச் சொல். இந்த சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் அ+ராஜகம்= அதாவது அரசன் அற்ற நாடு அல்லது ஆட்சி. பிற்காலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெடும்போது ஏற்படும் குழப்ப நிலைக்கும் இதைப் பயன்படுத்தத் துவங்கினர்.
ஒரு நாட்டிற்கு அரசன் என்பவன் எவ்வளவு முக்கியம் என்பதையும், அரசன் இல்லாத நாடு எப்படிச் சீரழியும் என்றும் இந்துக்கள் நன்கு கணக்குப் போட்டு வைத்தனர். வால்மீகி ராமயனத்தில் தசரதன் இறந்தவுடன் பரதனுக்கோ அல்லது இட்ச்வாகு வம்சத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருக்கோ உடனே முடிசூட்ட வேண்டும் என்று சொல்லும் இடத்து, அராஜகம் பற்றி நீண்ட சொற்பொழிவு வருகிறது..
இது மிகவும் படித்துச் சுவைக்க வேண்டிய பகுதி — .காரணம் என்னவென்னில் இதையே திருப்பிப் பார்த்தால், அரசன் நேர்மையாக ஆண்டால், என்ன என்ன கிடைக்கும் என்பதை ஊகித்து அறியலாம்.
ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால் — அதாவது அராஜகம் — ஏற்பட்டால் என்ன நடக்கும்?
வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது:
1.தேவையான அளவு மழை பெய்யாது
2.கைப்பிடி விதை கூட கிடைக்காது
3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான்
4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள்
5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள்
6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது.
7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள்.
8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது.
9.அம்புப் பயிற்சியால் எழும் சப்தம் எங்க்கும் கேட்காது
10.மக்கள் விரதங்களைப் பின்பற்றார். கடவுளுக்குப் படைப்பதற்கு மோதகம், மாலைகள் செய்யப்பட மாட்டா.
11.அரச குமாரர்கள் சந்தனம், அகிலுடன் பூசித் திரியமாட்டார்கள்.
12.சாஸ்திரப் பயிற்சி உடையார் வனங்களிலும் உப வனங்களிலும் அமர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
நீரில்லாத நதிகள் போல புல்லற்ற காடுபோல இடையரற்ற பசுக்கள் போல அரசனற்ற ராஜ்யம் இருக்கும்
தேர் இருப்பதைக் காட்டுவது அதன் கொடி
தீ இருப்பதைக் காட்டுவது அதன் புகை
தெய்வத் தன்மை இருப்பதைக் காட்டுவது அரசர்.
அப்பேற்பட்ட அரசர் (தசரதர்) தெய்வத் தமன்மை அடைந்து விட்டார்.
அரசனற்ற ராஜ்யத்தில் யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை. பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவது போல ஒருவர் ஒருவரை அழிப்பார்கள்.
நாஸ்தீகர்கள், தர்ம விதிகளை மீறுவோர், தண்டணைக்குப் பயந்து சும்மா இருந்தவர்கள் எல்லோரும் துணிந்து நடப்பார்கள். நாஸ்தீகர் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தத் துணிவார்கள்.
அரசன் தான் தாயும் தந்தையும்
அரசந்தான் தர்மமும் சத்தியமும்
அவனே நற் குடிப் பிறந்தோருக்குத் தலைவன்
அரசன் இல்லாத நாடு இருளில் மூழ்கும்
எவ்வாறு கடல் அதன் எல்லையைத் தாண்டாதோ அவ்வாறே நாங்கள் உங்ககள் உத்தரவை சிரமேற் கொண்டு நடந்தோம். பிராமண உத்தமரே ! உடனே இட்சுவாகு குலத்தவன் ஒருவனை அரசனாக நியமியுங்கள்.
இவ்வாறு 67 ஆவது ஸர்கம் முடிவடைகிறது.
அரசனே தந்தை என்று புற நானூறும் கூறும். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்றும் சங்க இலக்கியம் செப்பும்.
சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கும் உவமையை மஹாபாரதமும், கௌடில்யரின் — சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் கூறுகிறது
வால்மீகி சொன்னதை அப்படியே திருவள்ளுவரும் சொல்வதைக் கேளுங்கள்:
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும் — குறள் 388
பொருள்: –நல்ல ஆட்சி நடத்தும் மன்னன் கடவுள் போன்றவன்
அரசன் முறை செய்யாவிடில்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவாது எனின்
1.ஆபயன் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர்= பசு பால் தராது; பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவார்கள்– குறள் 560
2.உறைகோடி ஒல்லாது வானம் பெயல் = மன்னன் சரியாக ஆளாவிட்டால் மழை பெய்யாது குறள் 559
3.மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி = உலகம் மழையை நம்பி இருக்கும், மக்கள் மன்னன் பாதுகாப்பை நம்பி வாழ்வர் –குறள் 542
4.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி = பிராமணர்கள் ஒழுங்காக வேதம் ஓதுவதற்கு மன்னன் ஆட்சியே காரணம் – குறள் 543
5.கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் = கொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் -குறள் 550
6.மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புற நானூறு
55- 9
7.நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும்
தாயென இனிது பேணத் தாங்குதி — கம்ப– அரசியல் –34
- குடி புறம் காத்து ஓம்பும் செங்கோலான் – கலித்தொகை 130-19
வள்ளுவர் தனது குறளில் அராஜகம் என்று கூறாமல் அரசன் இருந்தால் என்ன என்ன கிடைக்கும் (பாஸிட்டிவாக) என்று சொல்கிறார்.
–சுபம்–
contact swami_48@yahoo.com



You must be logged in to post a comment.