Written by S Nagarajan
Article No 1699; Dated 8th march 2015
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 9
by ச.நாகராஜன்
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!
காதலர் எதிர்பார்ப்பு
காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பி எதிர்பார்ப்பதைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் உலக மொழிகள் அனைத்திலுமே உண்டு. இதற்குத் தமிழ் திரைப்படங்கள் மட்டும் விதி விலக்கு அல்ல!
ராமர் விஷ்ணுவின் அவதாரம்; சீதையோ ராம பத்தினி. விஷ்ணுவின் மார்பில் இடம் கொண்டவள். ஆகவே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை எப்படி எதிர்பார்த்தனர் என்பதைக் கம்பன் அழகுற மிதிலைக் காட்சிப் படலத்தில் சித்தரித்துள்ளான். இது போன்ற ஒரு கவிதையை உலக இலக்கியத்திலேயே அப்படிப்பட்ட நயத்துடன் பார்க்க முடியாது (இதை அத்தியாயம் 3-இல் பார்த்தோம்)
“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!”
இதை தற்காலத்திற்கு ஏற்றவாறு தர நினைத்தார் கவிஞர் கண்ணதாசன்; பிறந்தது பாட்டு.
1962ஆம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இடம் பெற்ற பாட்டிற்கு இசை அமைத்தவர் சுதர்ஸனம். பாடலைப் பாடியவர்கள் பி.பி.ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா.
பி.பி. ஶ்ரீனிவாஸின் குரலே மிகவும் அபூர்வமான மென்மையான குரல்; அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே அற்புதமானவை என்பதை ரசிகர்கள் அவர் பாடலைக் கேட்க இன்றும் விரும்புகிறார்கள் என்பதிலிருந்தே அறிய முடியும்.
ஆக, அன்னை படத்தில் இடம் பெற்ற அழகிய இந்தப் பாடலையும் இன்றும் விரும்பிக் கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள்!
கூடுதல் போனஸாக வீடியோ காட்சியில் பழைய சென்னையையும் கூட ஒரு ‘ரவுண்ட்’ அடித்து விடலாம்.
பாடலைப் பார்ப்போம்:-
மிதிலை நகரில் யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள் (அழகிய)
காவியக் கண்ணகி இதயத்திலே .. ஆ ஆ
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊரறியும்
கோவலன் என்பதை ஊரறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும் (அழகிய)
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் (ஆஹ்ஹா, ஓஹோ, ஓஹோ, ஆஹாஹா)
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
முதியவரென்றால் பாசம் வரும்
ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்
குமாரி சச்சுவும் புதுமுக ஹீரோ ஹரநாத்தும் (ஹரநாத்ராஜு – தெலுங்கு நடிகர்)) கார் ஓட்டிக் கொண்டே பாடும் கேள்வி- பதில் பாட்டான இதில் அழகான அம்சங்கள் ஏராளம் உள்ளன. இளையவர் என்றால் ஆசை வரும்; முதியவர் என்றால் பாசம் வரும் என்ற பதில் ‘இன்டெலிஜெண்ட் பதில்’, இல்லையா!
ஜனகனின் மகளான ஜானகி, ராமனை எதிர்பார்த்துக் காத்திருந்ததை காதலி காதலனின் கேள்விக்குப் பதிலாகத் தருவது, “கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!” (பழகிடும் ராமன் வரவை எண்ணி!)
என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
கடைசி சரணத்தில், இடம் பெறும்,
“ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்
என்ற வரிகளோ
“ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்” என்ற கம்பனின் காவிய வரியை சுருக்கமாக நவீன வடிவில் தந்ததை அல்லவா காட்டுகிறது.
ஜானகி, மிதிலை நகர் என பாரம்பரிய சொற்களைக் கையாண்டதால் அதன் பின்னணியில் வரும் கருத்துக்களையும் அல்லவா கவிஞர் பாடலில் கலந்து தருகிறார்!
Ramar Sayanam, Vengadampettai, Cuddalore District
கவிதை வண்ணம் கம்பன் வண்ணமே!
கம்பனில் மனதைப் பறி கொடுத்த கவிஞர் கண்ணதாசன் கம்பனின் கருத்துக்களை மட்டும் அவ்வப்பொழுது திரப்படங்களில் தரவில்லை; கம்பனின் ஓசை நயம் வார்த்தை நயத்தைக் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் தந்து விடுவார்;
கம்ப பக்தி! அதனால் கூடவே வரும் ராம பக்தி!!
எடுத்துக் காட்டாக கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:
“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்!”
(பாலகாண்டம்-அகலிகைப் படலம் பாடல் 24)
அற்புதமான கருத்து நயம்; ஓசை நயம், எழுத்து நயம், வார்த்தை நயம் உள்ள இதற்கு இணையான இன்னொரு பாடலை எந்த இலக்கியத்திலுமே காண முடியாது என்பது மட்டும்; உண்மை!
ராமனின் கை வண்ணத்தை அரக்கி தாடகை அழிவில் கண்ட மஹரிஷி விஸ்வாமித்திரர் அவன் கால் ஒரு கல்லில் பட அகலிகை சாப விமோசனம் பெற்று எழும் போது கால் வண்ணத்தையும் கண்டு கூறிய வார்த்தைகள் இவை!
இந்த கவிதையின் தாக்கத்தை கவிஞர் 1962ஆம் ஆண்டு ‘பாசம்’ படத்திற்காக எழுதிய பாடலில் காணலாம். இது எம்,ஜி.ஆரும் அன்றைய அழகிய கதாநாயகியான சரோஜாதேவியும் மலர் மஞ்சத்தைச் சுற்றி வந்து பாடும் அழகிய பாடல். பி.பி, ஶ்ரீனிவாஸும் பி.சுசீலாவும் எம்ஜிஆர்-சரோஜாதேவிக்காக பாடிய அரிய சில பாடல்களுள் இது முக்கியமான ஒன்று. இசை அமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி
Rama Abishek
பாடல் இது தான்:
பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண்வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணமில்லையா
மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா
நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா என்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா!
ராமரின் தாக்கம் பெற்ற, கவிஞன் கம்பனின் தாக்கம் பெற்ற, கவிஞரின் தாக்கம் பெற்ற, பாடலின் சிறப்பை விவரிக்கத் தேவையே இல்லையே!
கம்பனின் பாடல்களை ஆழ்ந்து சிந்தித்து மகிழ கண்ணதாசன் பெரிதும் உதவுகிறார், இல்லையா!
***************
swami_48@yahoo.com




You must be logged in to post a comment.