மரத்தில் மாம்பழங்கள்
Article written by S NAGARAJAN
Post No. 1785; Date 8th April 2015
Uploaded from London at 8-21 am
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
29. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் இறுதி அத்தியாயத்திற்கு வந்து விட்டோம். மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
फलवत्सहकारन्यायः
phalavatsahakara nyayah
பலவத்ஸஹகார நியாயம்
பழுத்துக் குலுங்கும் பழங்களுடன் கூடிய ஒரு மாமரம் பற்றிய நியாயம் இது.
மாம்பழங்கள் பழுத்துக் குலுங்க இருக்கும் ஒரு மாமரத்தின் நிழலில் ஒருவன் தங்கினால் நிழல் மட்டுமா அவனுக்குக் கிடைக்கும். கூடவே பசியாற மாம்பழங்களும் கூடவே கிடைக்கும் அல்லவா! அது போல நிஜமான ஒரு பெரிய மனிதரை அண்டினால், கேட்காமலேயே அறிவு உட்பட அனைத்தும் அல்லவா கிடைக்கும்!
வில்வ மரம்; வில்வம் பழம்
बिल्वखल्वाटन्यायः
bilvakhalvata nyayah
பில்வ கல்வாட நியாயம்
வில்வ மரத்தின் அடியில் அமர்ந்த ஒரு வழுக்கைத் தலையர் பற்றிய நியாயம் இது. இதற்கான கதை ஒன்று உண்டு. ஒரு வழுக்கைத் தலையர் வில்வ மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார். அப்போது வில்வப் பழம் ஒன்று அவர் தலை மீது விழ, அவர் மண்டை உடைபட்டது. அது தற்செயலாக நடந்து விட்ட ஒன்று. இப்படித் தற்செயலாக நடக்கும் சம்பவங்களைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.
बीजांकुरन्यायः
bijankura nyayah
பீஜாங்குர நியாயம்
பீஜம் – விதை
விதையும் முளையும் பற்றிய நியாயம் இது.
விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்பது பழமொழி.
எது விதைத்தாயோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு உண்மை. விதைப்பது தான் முளைப்பதற்கு காரணம். முளைத்து வருவதிலிருந்தே மீண்டும் விதை உருவாகிறது. இப்படி காரணமும் காரியமும் ஒன்றையொன்று பற்றி இருப்பதைக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.
விதையும் முளையும்
भुलिन्गपक्षिन्यायः
bhulingapaksi nyayah
பூலிங்க பக்ஷி நியாயம்
பூலிங்கம் என்ற பறவை பற்றிய நியாயம் இது.
பூலிங்கம் என்ற அபூர்வமான பறவை ஒன்று எப்போதும் “மா சாஹஸம்” – சாகஸ செயல்களில் ஈடுபடாதே – என்று சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனால் அது எப்போதும் தான் சாகஸ செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். சிங்கத்தின் வாயில் புகுந்து அங்கிருக்கும் மாமிசத் துணுக்குகளை தனக்கு உணவாக அது எடுத்துக் கொண்டு வரும்!
அசாதாரணமான சாகஸங்களைச் செய்வோர் பற்றி இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
(‘மஹாபாரதத்தில் பூலிங்கப் பறவை’, ‘கலியுக அறிகுறிகள்: குருமார்கள் குலிங்கப் பக்ஷி…. ‘என்ற இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முழு விவரம் காண்க)
भ्रमरन्यायः
bhramara nyayah
ப்ரமர நியாயம்
ப்ரமரம் – கருவண்டு
கருவண்டு பற்றிய நியாயம் இது.
கருவண்டு எப்போதும் மலர்களில் உள்ள தேனையே அருந்தும். வேறு எந்த வித சாறையும், அது எவ்வளவு இனிமையாக இருந்தாலும் அருந்தாது.
ஒரு பெரிய மனிதர் எப்போதும் மற்றவரின் நல்ல குணங்களையே எடுத்துக் கொள்வார். கெட்ட குணங்களைப் பெரிது படுத்த மாட்டார்.
அப்படிப்பட்ட அரும் மனிதர்களைச் சுட்டிக் காட்ட ப்ரமர நியாயம் பயன்படும்.
இத்துடன் இந்த நியாய வரிசைத் தொடர் தற்போதைக்கு நிறைவு பெறுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போது மேலும் பல நியாயங்களை அறியலாம்.
பூவில் வண்டுகள்
நாளை முடிவுரை வெளியாகும்.
**************** முற்றும்






You must be logged in to post a comment.